Friday, March 22, 2024

IS LEARNING BITTER ?- 3

 IS LEARNING BITTER?- 3

கல்வி கற்றல் கசப்பானதா?  -3

ஒரு ஆசானின் சிறப்பு அம்சங்களாக உணரப்படுபவை மூன்று திறன்கள் என்று சென்ற பதிவில் தெரிவித்திருந்தேன்  அவை :1. தகவல், 2 தெளிவு 3 ஒருங்கிணைத்தல்[அதாவது ஒரு குறிப்பிட்ட பாடப்பகுதிக்கான அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்துக்காட்டுதல்].  .

இவை மூன்றுமே கல்வியின் அனைத்துநிலைகளுக்கும் பொருந்துமா எனில் - நிச்சயம் பொருந்தும். கல்வியின் நிலை [பள்ளி, கல்லூரி பல்கலை] வேறுபட்டாலும் கற்பதும் கற்பிப்பதும் மனித மனங்களை உறவாடச்செய்யும் உன்னத முயற்சி. இவை பயில்வோரின் வயது காரணமாக கவனமின்மை, விளையாட்டு , கேலி கிண்டல் என்கிற வெவ்வேறு நிலைப்பாடுகளாக ஆரம்பத்தில் இருந்தாலும் படி நிலை உயரஉயர , இவை மறைந்து, ஆசானின் ஆளுமையை வியந்து , அந்த மயக்கத்தில் வீழ்ந்து, ஆசானின் உடல் / முகக் கோணல்கள் ஒரு பொருட்டே அல்ல என்னும் மனமாற்றம் பயில்வோரிடம் வேரூன்றி  நிற்பதைக் காணலாம். அதிலும் குறிப்பாக கல்வியை நிறைவு செய்து [எந்த படி நிலை ஆயினும்] தனக்கென ஒரு வேலை யில் அமரும் யாரையும் விசாரியுங்கள் -அப்போது சொல்வார்கள் -இருந்தால் அவர் போல இருக்க வேண்டும் , என்ன புரிதல், எவ்வளவு அனாயாசம், எப்போது எதைக்கேட்டாலும் தெளிவாக சொல்லுகிறார் , வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரை சந்திக்க வேண்டும், அவரிடம் ஆசி பெற வேண்டும் என்று ஏங்கி தவிப்பது நல் ஆசானிடம் தன்னை அர்ப்பணித்துவிட்ட அனைவரும் சொல்லி வைத்தார் போல் நடப்பதை மற்றும் பேசுவதைக்காணலாம். ஆசி வழங்கும் நிலைக்கு நான் இல்லை என்றே எந்த ஆசானும் உறுதியாக நம்புகிறார்.ஆகவே பயின்றோர் அடையும் உன்னதம், தான் அடைந்த உன்னதம் போல பெருமை கொள்வோர் உண்டெனில் அவர்கள் ஆசான்களே. ஆகவே ஆசான்கள் பொறாமை கொள்ளாதவர்கள் மாறாக பெருமை கொள்பவர்கள். இதையும் கூட இந்த சமுதாயம் கேலி பேசி மகிழ்கிறது;இதை கண் கூடாகக்காணலாம் "அப்துல் கலாம் இவரிடம் படித்தாராம் பார்ப்போரிடம் எல்லாம் சொல்லிக்கொண்டே திரிகிறார். அவ்வளவு திறமை இருந்தால் இவர் ஏன் அப்துல் கலாம் போல் உயரவில்லை -பாவம் அல்ப சந்தோஷம், இன்னும் வாடகை வீட்டில் தான் குடி இருக்கிறார் என்று பொருளாதார அளவுகோலை ஆசான் மீது வைத்து உயரஉயரப்பறந்தாலும் குருவி குருவிதான் அது வல்லூறு ஆகுமா என்று மதிப்பீடு செய்து -கிடக்கிறான் வாத்தி என்று ஏகவசனத்தில் ஏகப்பட்ட விமரிசனம் கிளம்புகிறது, குறிப்பாக கல்வியில் சொல்லிக்கொள்ளும்    உயரம் எட்டாத  பலரின் மனங்களில்.இதைக்காணலாம் இவ்வகை விமரிசனங்களை மிக எளிதாகக்கடந்தால்  அன்றி  ஆசான் தன் பணி ஆற்றுதல் இயலாத ஒன்றாகிவிடும். சரி இது குறித்து  ஏன் இவ்வளவு விளக்கம் என்போர் கவனிக்க:

ஆசானுக்கு மிக நன்றாகத்தெரியும் , வெறெந்தப்பணியிலும் , இதைவிட வசதிகளும், அதிகாரமும் , அரசியல் தொடர்புகளும் அதிகம்.  முக்கியமான போட்டித்தேர்வுகளை சிறப்பாக எதிர்கொள்ள இயலும். ஆயினும் கற்பித்தலில் உள்ள நாட்டமும் மென்மேலும் கற்க கிடைக்கும் வாய்ப்பும் சூழலும் ஆசானுக்கு மிக மிக விருப்பம் . எனவே தான் ஆசான்கள் பொருளாதாரக்கணக்குகளை கணக்கில் கொள்வதில்லை; ஒரு ஆத்ம திருப்தி இந்தப்பணியில் எப்போதும் ஏற்படும். எனவே ஆசான்கள் பிறர் பார்வையில் எப்படித்தெரிந்தாலும் பயில்வோருக்குத்தெரியும் எவ்வளவு நேர்த்தியாக நுணுக்கங்களை கற்பிக்கின்றனர்.என்று . சரி இவை அனைத்தும் இனி நான் விவரிக்க இருக்கும் சில அணுகுமுறைகளுக்கு பூர்வபீடிகை மாத்திரமே. ஏன் எனில் கல்வி கற்றல் கசப்பது,   ஒரு வகையில் வினைப்பயன் தான் என எண்ணத்தோன்றுகிறது. .ஆசான்கள் குறைவு ஆசிரியர்கள் அநேகம். .சம்பளத்துக்கு இயங்குபவன் ஆசிரியன், தன் பலத்தில் நிற்பவன் ஆசான். நிறைவாகப்  பயிற்றுவிப்போர் ஆசான்கள் , பாடம் சொல்லித்தருவோர் ஆசிரியர் .இதை மேலும் புரிந்து கொள்வோம்.

ஒன்றை கவனியுங்கள் "சொல்லித்தெரிவதில்லை மன்மதக்கலை " என்று உரைத்த சான்றோர் ஏனைய கலைகள் பயிற்றுவிக்கப்பட்ட வேண்டியவை என்று சொல்லாமல் சொல்லியிருக்கின்றனர் எனவே உலக இயக்கத்தில் குருவும் சீடனும் மனித வாழ்வில் இயங்கும் வழிகாட்டுதலும் , வணங்கிக்கற்றலும் என்று இயங்கும் மனித குல நடைமுறை. எனவே கலாச்சார மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தாலும் குருவும் சீடனும் என்ற உறவு முறை நீண்ட நெடிய வரலாறு கொண்டது. அப்படி எனில் குரு என்பவர் யார்? சீடன் என்பவர் யார்? தாற்காலிக மாகவேனும் குருவும் சீடனும் மாற்றுப்பணி செய்ய [சீடன் குரு நிலையிலும், குரு சீடன் நிலையிலும்]இடம் பெற நேரிடலாம். இதன் விளக்கம் என்னவெனில் , குரு ,தான் என்ற அகம்பாவம் இல்லாது எப்போதும் எவரிடத்தும் கேட்டு அறியும் திறந்த மனம் கொண்டு இயங்குதல் அவரின் தெளிந்த ஞானத்தின் அடையாளம்..அதை அடைய எவரிடத்தும் கேட்டு ஞானம் பெற பூரண மனம் கொண்டவராக இருப்பவனே குரு என்ற மேன் நிலையை அடைய இயலும் .

குரு-சீட உறவில் வயது ஒரு பொருட்டல்ல ; சிறு வயது என்பதை விட, அதிக ஞானம் என்பதே குருவின் தகுதி. ஞான த்தகுதி குறைந்தோர்  , சீடர் . இந்த அடிப்படை தான் குருகுல முறையின் அமைப்பு. எனவே குரு என்ற நிலை, வயது காரணமாக நிர்ணயிக்கப்படுவதன்று

முறையாக தகுதிகளை அடைய வளர்த்துக்கொள்ளவேண்டியன எவை எவை?  

நல் ஆசானுக்குரிய மூன்று பண்புகள்

1 எதையும் முற்றாக அறிந்து கொண்டு வகுப்புகளுக்கு செல்லுதல் . இந்த பண்பு முதல் நாள் முதல் அமைந்துவிட்டால் , வகுப்பு சோடை  போகாது. ஒவ்வொரு வகுப்பும் கருத்துச்செறிவுடன் இருந்தால் மாணவர்கள் பெரிதும் போற்றுதலையும் கௌரவத்தையும் ஆசிரியருக்கு வழங்குவர்.மாணவப்பருவத்தினருக்கு என்ன தெரியும் என்று   ஒருபோதும் குறைத்து  மதிப்பிடாதீர்கள். சில குழந்தைகள் நல்ல பாரம்பரியம் மிக்க சூழலில் உயர் கல்வி பெற்ற பெற்றோர் கண் காணிப்பில் நன்றாக தகவல் தெரிந்து வருவர். எனவே எவரையும் குறைவாக மதிப்பீடு செய்தல் ஆசிரியப்பணியில் தொய்வையும் கௌரவக்குறைவையும் ஏற்படுத்திவிடும்.

2 எந்த தகவலையும் நிதானமாக விளக்க , பெரும்பாலானோர் புரிந்து கொள்வர் . மேலும் போதித்தலில் .  திறமை மிக்கவர் என்ற பெருமையை ஆசிரியர் அடைய உதவும், நிதானமாக விளக்கும் போது கவனச்சிதறல் அதிகம் ஏற்படாது .ஆசிரியரை பின் பற்றும் பண்பு மாணவரிடையே வேரூன்றும்

3 ஒவ்வொரு வகுப்பு முடிவிலும், அடுத்த வகுப்பு துவக்கத்திலும் , இதுவரை உள்ள தகவல்களை சுருக்கமாக சொல்லும்    . வழி முறையை பின் பற்றினால், மாணவர் கல்வியில் ஆசிரியர் செலுத்தும் அக்கறை என்பதாக மாணவர் உணர்வர்.

இம்மூன்று சிறப்புகளையும் பெற்று பயன் அடைய செய்ய வேண்டிய சில முயற்சிகள் பற்றி வரும் நாட்களில் பேசுவோம்.

தொடரும்

,நன்றி  அன்பன் ராமன்  

1 comment:

  1. One should have the mind to learn
    Otherwise learning becomes bitter

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...