STRATEGIES IN TEACHING
கற்பிக்கும் உத்திகள்
இந்த பகுதி முற்றிலும் -ஆசிரியர்கள் தங்களை
[அதாவது செயல்களை] கட்டமைப்பது குறித்த சில நுணுக்கங்கள் / அணுகுமுறைகள் குறித்தது எனவே , அடப்போய்யா எனக்கு எல்லாம் தெரியும் என்பவர்கள் நேரடியாக
வித்தையைக்காட்டுங்கள் -யார் உங்களை தடுக்கிறார்கள்? ஆசிரியரில் இரு பெரும் இனங்கள் உண்டு அவை
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என்றறியப்படுகின்ற்னர்.
ஓட்டுநர் :நேரத்தை
ஓட்டுபவர், ஏதாவது
வெட்டிப்பேச்சுப்பேசி ஏதேதோ கதைகளை அவிழ்த்துவிட்டு காலத்தை ஓட்டுபவர்கள்; வர வர
ஆசிரியர்கள் . மத்தியில் இது போன்ற வெட்டிப்பேச்சு பேசும் கூட்டம் அதிகரித்து
வருவது கவலை தருவதாக அமைந்துள்ளது. இவர்கள் தங்களது திறமையின்மையை மூடி மறைக்க , “வெறும் பாடம்
பாடம் னு போனா இன்ட்ரஸ்ட்
இருக்காது; உலக விஷயங்களைப்பேசி
அவர்களை கவருபவன் தான் வெற்றி ஈட்டமுடியும்” என்று ஒரு லேம் லாஜிக் [நொண்டி வாதம்]
முன்னெடுப்பார்கள். ஆனால் கள யதார்த்தம்
யாதெனில் ஆகச்சிறந்த ஆசிரியர்கள் நொடிப்பொழுதையும் வீணாக்காமல்,கிட்டத்தட்ட 98-99% நேரத்தை முற்றாக பாடம்குறித்த விளக்கங்களிலேயே
செலவிடுகின்ற்னர். அவர்கள் வகுப்பில் மாணவர்கள் இம்மிகூட கவனம் தவறாமல், வேறு எதையும்
செவிமடுக்காமல் அதியற்புதமான கல்வி பயில்கின்றதை எப்படி சாத்தியமாக்குகின்றனர் இவ்வகை
ஆசிரியர்கள் ? இவ்வகை
ஆசிரியர்கள் முக்கியமான பாடப்பகுதிகளை சிறப்பாக போதித்து மாணவர்களின் ஏகோபித்த
பாராட்டுகளை வெல்கின்றனரே -அவர்கள் ஏன் பாடத்திற்கு தொடர்பில்லாதவற்றை பேசுவதே
இல்லை? அவர்கள்
வகுப்புகளில் எப்படி ஈர்ப்புதனை நிறுவுகின்றனர்.? ஒரே வரியில் எனது
பதில்
ஒவ்வொரு ஆசிரியரும்
தனக்கு தெரிந்ததை களப்படுத்துகின்றனர் . சிலர் நுணுக்கங்களை சொல்லித்தர பலர் துணுக்குகளை
ப்பேசி -செயல் புரிய=பாடம்
நடத்துவோர் - நடத்துனர் , காலம் கடத்துவோர்
ஓட்டுநர் [காலத்தை ஓட்டுநர்] என்பதாக பெயர் பெறுகின்றனர். இவற்றிற்கான
முன்னேரேபாடுகள் யாவை என்று பார்க்கலாம்
ஓட்டுநர் நிலைக்கு எந்த
முன்னேற்பாடும் தேவை இல்லை,
சூடு சொரணை
தன் மானம் இவற்றை கைவிட்டுவிட்டால் போதும்
எளிதில் [காலத்தை] ஓட்டுநர் நிலையை
எய்தலாம் . அது எனது இலக்கு அல்ல.
நமது முயற்சியும்
இலக்கும் -நடத்துனர் நிலையை எட்டுவதே ,எனவே அது குறித்து கவனம் செலுத்துவோம்..
1 . நான் மிகச்சிறந்த
ஆசிரியர் என்ற நிலையை அடைவேன் என்ற தீராத வேட்கை கொள்ளுதல்
மிகச்சிறந்த விளையாட்டு
வீரர்கள் எப்போதும் ஒரே சிந்தனையில் இயங்குவதைப்போலவே ஆசிரியப் பணியின் மீது ஆழ்ந்த பற்று ஏற்படுத்திக்கொள்ள
வேண்டும். அது அவ்வளவு எளிதானதல்ல --ஏன்? அந்த வெறி
கிட்டத்தட்ட வேறுசில வெறிகளுக்கு நிகரானது . ஒரு மிகச்சிறந்த ஆசான் உங்கள்
வாழ்வில் இடம்பெற்றிருந்தால் அது உங்கள் மீது மிகப்பெரும் ஆளுமையை செலுத்தி
வயப்படுத்தும். அந்தக் கனல் உங்களை வாட்டும் போது , நீங்கள்
ஆசிரியப்பணி மீது பிடிப்பும் பீடிப்பும் அடைந்து பந்தயக்குதிரைபோல துடிப்புடன்
கிளர்ந்து எழ வெகு விரைவில் ஆளுமை மிக்க ஆசிரியர் என்ற உவகையும் பெருமையும் கொண்டு
மாணவரிடத்து நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தி கற்பிக்க தொடங்குவீர்கள்.
இந்த இடம் தான் உங்கள்
வாழ்வில் ஒரு திருப்பு முனை என்று என்னால் ஆணித்தரமாக சொல்ல முடியும். இந்த திருப்புமுனைப்
புள்ளியின் தாக்கம் உங்களுக்கு ஒன்றை உணர்த்தும். "நான் கல்லூரியில் அதிகம்
பயிலவில்லை போலிருக்கிறதே , கருத்துகளை
எளிதாக விளக்க என்ன வழி" என்று சிந்திக்க வைக்கும். இப்போது சோர்வடையாதீர்கள் .மாறாக மென்மேலும்
படியுங்கள். அனைத்தும் அறிந்த விவரங்கள் தான் எனினும் தெரிந்த நிலையை தாண்டி
புரிந்த நிலை நோக்கி உங்கள் மனம் நகர வேண்டும். தெரிந்த தகவலுக்கும் புரிந்த
தகவலுக்கும் இடையில் செயல் புரிவது தான் ஆசிரியப்பணி. தெரிந்தது என்பது உங்களுக்கு
கிடைத்த அறிமுகம்; புரிந்தது என்பது
உங்கள் கையில் வாய்த்த ஆயுதம். தெரிந்ததை வைத்து விளக்க முயல்வதைவிட புரிந்ததை
வைத்து விளக்குவது எளிது. வெறுமனே தெரிந்துகொண்டு ஆசிரியப்பணியில்
இறங்கினால் இடர்ப்பாடுகள் அதிகம்.. புரிந்து கொண்டு
விளக்கும் ஆசிரியன் வெற்றிகொள்வான் அவ்வகை ஆசிரியர்கள் . தோல்வி காண்பதில்லை .
இவ்விடத்தில் மூன்று நிலைகளை
பார்ப்போம் . நாய், குதிரை ,யானை மூன்றையும் மனிதன் கையாள்வதை அறிவோம். இத்தகைய நிலைக்கும்
ஆசிரியப்பணிக்கும் நிறைய ஒற்றுமைகளும் நிலைப்பாடுகளும் இருப்பதைப்பார்ப்போம்..
நாய் சிறிய குட்டி நிலையில் வளர்த்து நம்முடனே ஒன்றிக்கலப்பது போன்றது ஆசிரியப்பணி
. அடிப்படை பரிச்சயம் நாய் வளர்ப்பில்
உதவிடுகிறது. நன்கு வளர்ந்த நாயை புதிதாக நெருங்கி நம் கட்டுக்குள் வைக்க இயலாது.
அது போன்றே திடீரென்று நான் ஆசிரியனாக கட்டமைத்துக்கொள்வேன் என்று கனவு காண
வேண்டாம் . நீங்கள் பணி தொடங்கும் நாள்
முதல் உங்கள் கவனம் நல்லாசிரியர் ஆவது
என்ற வேட்கையுடன் இருந்தால் நாய் வளர்ப்பில் அடையும் வெற்றிக்கு இணையான வெற்றி
/பெருமை இரண்டையும் அடையலாம். சிறிது ஆரம்பகால தவறுகளுக்குப்பின் தன்னை
திருத்திக்கொண்டு மேம்பாடடைய இயலாதா எனில் இயலும். ஆனால் பல மடங்கு உழைப்பை
செலுத்தி உங்களின் பிம்பத்தை த்திருத்திக்கொள்ள
.போராட வேண்டியிருக்கும். ஏனெனில் மாணவ சமுதாயம் உங்களை ஒரு குறிப்பிட்ட பிரிவில்
[நல்ல / கெட்ட] வைத்துப்பார்த்து பழகி அதை
புதியமாணவர்களுக்கும் தலையில் ஏற்றிக்கொண்டு வந்திருக்கும்.. அதை உடைக்க பெருமளவு
செயல் மாற்றம் உங்களிடம் ஏற்பட வேண்டும். அதைத்தான் 'FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION " என்று வழிவழியாக
சொல்லப்பட்டு வந்துள்ளது.. முதலில் சிதைந்துவிட்ட பெருமையை மீட்டெடுத்து எதிர்
திசையில் பயணிக்க கடும் போராட்டமும் செயல் முனைப்பும் உங்களின் அன்றாட இயல்பாக மாற
வேண்டும்.
முயன்றால் முடியாதது
உண்டா ? முடியும் ஆனால் சற்றும் தளரா வெறியுடன் இலக்கு நோக்கி நகர
பரிபூரண ஈடுபாடு தேவை. இப்படியெல்லாம் வருத்திக்கொண்டிருக்க வேண்டுமா என்றால், முயற்சி தான்
திருவினையாக்கும். வெற்றி என்பது போகிறபோக்கில் தட்டிப்பறிக்கும் கனி அல்ல .
உங்களின் அனைத்து அறிவுசார் புலன்களும் ஒன்றிக்கலந்தால் அன்றி வெற்றி எளிதன்று.
ஆசிரியப்பணியில் வெற்றி என்பது உழைப்பின் மகத்துவம் மட்டுமே . அந்தவகை
ஆசிரியர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் வேறு செயல்களில் கிடைக்குமா ? நான் அறியேன்; ஏனெனில்
ஏற்கப்பட்ட ஆசிரியனை ஓட்டுமொத்த மாணவ சமுதாயமும் ஏற்கும். அந்நிலை அடைய மனம் ஒன்றி
செயல் படுதல் அவசியம்
தொடரும்
அன்பன் ராமன்
Teaching is an art and for some it is an inherent capacity
ReplyDelete