Sunday, April 28, 2024

TEACHER- PROCEED TOWARD SUCCESS

 TEACHER- PROCEED TOWARD SUCCESS

ஆசிரியர் -வெற்றி நோக்கி பயணிப்பீர்

நமது கண்ணோட்டம் [ஆசிரியப்பணி குறித்து ] என்னவாக இருக்கிறது.? நமது பொதுவான அணுகுமுறை இப்படித்தான்  வடிவு எடுக்கிறது.                  சரி என்ன வேலைக்கு போக முடிவு செய்துள்ளீர்கள் என்று கேட்டால் , 3, 4 வாய்ப்புகளை [அரசுப்பணி/தனியார் பணி /சொந்தத்தொழில் / இன்ன பிற சில வற்றை] பட்டியலிட்டு முடிவில்--- இல்லாவிட்டல் என்ன? இருக்கவே இருக்கிறது வாத்தியார் வேலை என்று முடிப்பார்கள். இதில் வெளிப்படும் ஆழ்ந்த நம்பிக்கையும் மனோபாவமு ம் நாம் ஊன்றிகவனிக்க வேண்டியன.            

 சூளுரைப்பதைப்பாருங்கள்

இல்லாவிட்டால் என்ன ?               இருக்கவே இருக்கிறது     வாத்தியார் வேலை.

ஆழ்ந்த நம்பிக்கை =இருக்கவே இருக்கிறது     .

மனோபாவம் = வேறு வேலை    இல்லாது போனால் =வாத்தியார் வேலை                                                                 மிக கவனமாக மேலே உள்ள உரையாடலை கவனியுங்கள் ; அதை செய்வேன், இதை செய்வேன், வேறு சிலவற்றை பெறமுயற்சி செய்வேன்

இவ்வளவும் கைகூட வில்லையெனில் , இருக்கவே இருக்கிறது வாத்தியார் வேலை.. இந்த இருக்கவே இருக்கிறது வாத்தியார் வேலை என்பது [நான் முயற்சி செய்து பெறப்போவது அல்ல , ஆனால் வழிப்போக்கனாய் சென்று ஆசிரியன் ஆவேன் என்பதே அவர் காட்டும் ஈடுபாடு. வேறு எதுவும் எட்டாக்கனியானா லும்   , ஆசிரியப்பணி வந்தோரையெல்லாம் வாரீர் வாரீர் என்று சாமரம் வீசிக்காத்திருப்பதாகவும் , அதை மிக எளிதாக செய்துவிட முடியும் என்றும் பலர்   ஆழமாக நம்புகிறார்கள். அவர்களைச்சொல்லி குற்றமில்லை. மாணவர் நிலையில் அவர்கள் சந்தித்த ஆசிரியர்கள் வழிப்போக்கர்களாய் அமைந்து விட --இதுவே ஆசிரியப்பணி யின் தன்மை என்று சிந்தனையே செய்யாமல் நம்புகிறார்கள். 

எனவே இந்த மனநிலை கொண்டு வகுப்புகளை அணுகுகிறார்கள். அதாவது விளக்குவது எனது பணி என்பதை   மறந்து அல்லது மறுத்து, விளங்கிக்கொள்வது 'அவர்கள்' தேவை ; நான் எதையாவது பார்த்து செய்தி வாசிப்பவர் போல வாசிப்பேன். [செய்தி வாசிப்பவர் எந்த செய்தியையாவது விளக்குவது உண்டா?] கேட்பதும் எழுதுவதும் மாணவர் தேவை சார்ந்தது --என்றே ஆசிரியப்பணி குறித்த பார்வை கொண்ட பலர் இன்றைய தமிழகத்தில் எல்லா மட்டங்களிலும் -குறிப்பாக உயர் கல்வி +2 மற்றும் அதற்கு மேலும் பணியில் உள்ளனர். கல்வி நிலைய பொறுப்பாளர்கள் வெற்றி சதவீதம் தான் [% பாஸ்] என்பதையே அளவுகோலாகப்பார்க்கின்றனர் . உண்மையான அளவுகோல் நமது நிறுவன தயாரிப்புகள் [PRODUCTS ] போட்டிகள் நிறைந்த உயர் கல்வி வழங்கும் புகழ்  வாய்ந்த நிறுவனங்களில் ஒவ்வோர் ஆண்டும் எத்துணை  பேர்களால் சோபிக்க முடிகிறது என்று பார்க்கும் நிலை வராத வரையில் -"இருக்கவே இருக்கிறது" என்போர் ஆசிரியப்பணியில் அமர்ந்து சீரிய பணிக்கு பதில்  சிறிய பணியாற்றி --ஆ-'சிறியர் ' களாக வலம் வருவர் அதோடு ட்யூஷன் மூலம் வளம் கொழிப்பர் .

இங்கே டியூஷனுக்கு சாமரம் வீசாத மக்கள் உண்டோ ? எவருக்காவது கல்வியின் உள்ளார்ந்த தரம்/ தேவை /மன வள மேம்பாடு அவற்றை மதிப்பீடு செய்யும் வழிமுறைகள் ஏதேனும் தெரியுமா? இவர்கள் இப்படி இருந்தால் வழிப்போக்கன் ஆசிரியர் ஆவது நிச்சயம் நடந்தேறும் ;ஏனெனில் 'இருக்கவே இருக்கு" தானே நமது தாரக மந்திரம் .                           ஆசிரியப்பணி என்பது மன வளம், புலமை , கருத்துவிளக்கும் திறன் சார்ந்தது. இவை இருக்கவே இருக்கிற வகையில் வருவன அல்ல

சரி உண்மையான ஆசிரியனுக்கு எது வழி முறை?

உண்மையான ஆசிரியன் என்போன் 'போதிக்க வேண்டும்'. செய்தி வாசிப்பவர் அல்லர் அவர் .அப்படி  என்றால் அவர் தன்னை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும்.? அதில் பெரும்பகுதி மன நிலை வடிவமைப்பில் இருந்து துவங்குவது  இதை பார்த்து என் மீது கோபம் ஏற்படலாம் ;ஆனால் உண்மை கசப்பது இயல்பன்றோ ? மனதளவில் நன்றாக பதிய வையுங்கள்.

1 ஆசிரியர் என்பவரும் பயில்பவரே. ஆம் முதலில் அவர் பயில்கிறார் ;பின்னர் பிறரை பயிற்றுவிக்கிறார்.

2 நன்றாக மனதில் கொள்ளுங்கள். எவ்வளவு கல்வித்தகுதி பெற்றிருந்தாலும், பட்டம் பெற . பயின்ற கல்வி முயற்சி , பயிற்றுவிக்க உதவாது.               மாறாக பிறருக்கு பயிற்றுவிக்க , ஒருவர் ஆழ்ந்து பயில வேண்டும். . இது வரை கற்றதை வெறும் அடித்தளம் என்று கொள்க . இனிமேல் நாம் கற்பது/ கற்க இருப்பது வேறு வகையானது. முன்பு கற்றது பொருள் விளங்காமல் விடை எழுதி மதிப்பெண் பெற உதவி இருக்கக்கூடும். அதை வைத்துக்கொண்டு வகுப்பறை செயல்களை நிறைவேற்றலாம் என்றெண்ணினால் , நாம் பணியின் தன்மையையும் வீரியத்தையும் உணரவே இல்லை என்பது பொருள்.. இவ்விரண்டையும் உணராத எவரும் சிறப்பாக பணி புரிவேன் என்று நினைப்பது ஏட்டுச்சுரைக்காயாய் போய்விட க்கூடிய அபாயம் நிறைந்தது.

ஆகவே ஆசிரியர் என்ற நிலையை அடைய நமது புரிதல் செம்மைப்படவேண்டும். இவை எதுவுமின்றி. .நான் சாதிப்பேன்  என்று நினைப்பவர்   ஒருநாளும் ஆசிரியர் என்ற அங்கீகாரம் கொள்ளப்போவதில்லை.

3 செய்ய வேண்டியது என்ன.?

எந்த பாடத்தகவலையும் நான் முன்பே அறிவேன் என்று நினைக்காமல் பலமுறை தொடர்ந்து கூர்ந்து படிக்கப்படிக்க , புதுப்புது பரிமாணங்களும் விளக்கங்களும் [dimensions  and  explanations ] நம் மனதில் ஏற்பட அந்த பொருள் குறித்த நமது பார்வை  விரிவடையும். அந்த பார்வை வேறு பல தொடர்புகளை புரிந்துகொள்ளவும் , அவ்வித தொடர்புகளை மிக எளிதாக விக்கும் ஆளுமையையும் நமக்குள் விதைக்கும் . இது சர்வ நிச்ச்கயம் .

4 இவ்வாறு பல வித பொருள்களை தெளிவாக புரிந்துகொண்டபின், நாம் விளக்க முற்படும் கருத்துகளை   வெவ்வேறு வகைகளில் விளக்கமுற்படும் அணுகுமுறைகள் நமது செயலில் தோன்றும். இதைத்தான் மாணவர்கள் இவ்வாசிரியர் வேறு மாதிரியாக கற்றுத்தருகிறார் என்றுபோற்றி மகிழ்ந்து  மாணவ சமுதாயம் அவ்வகை ஆசிரியர்களை  நன்றியுடனும் ஆச்சரியத்துடனும் நன்றி மறவாமல் போற்றும்.

5 இவை அனைத்தும் நாம் எவ்வளுக்குஎவ்வளவு முனைந்து பயில்கிறோமோ அதற்கேற்ப நமது ஆசிரியத்    திறனை மேம்படுத்தும்

6. இதற்கென நாம் பல புத்தகங்களையும் நூல்களையும் பயன்படுத்துவதால், நமது மொழி ஆளுமை மேம்படும்.. நமது மொழி ஏற்படுத்தும் தாக்கம் மிக வலிமையானது. வலுவான தாக்கம் விளைவிக்க வளமான மொழி ஒரு சிறப்பான கருவி  -அல்ல அல்ல  பலமான ஆயுதம்.

இவ்வனைத்தும் ஒரு ஆசிரியர் தனது முக்கியத்துவத்தை பிறர் புரிந்துகொள்ள ஏதுவாக வடிவமைத்துக்கொள்ளவேண்டிய எளிய ஆனால் தொடர் முயற்சியின் பலனாக கைகூடுவது..

7 என்னை யார் என்ன செய்ய முடியும்”? என்றெண்ணாமல், என்னை நானே செம்மைப்படுத்திக்கொள்வேன்-- என்பவர் மிகப்பெரும் ஆளுமையாக ஆசிரியப்பணியில் விஸ்வரூபம் கொள்வார்.

அவ்வகை ஆசிரியர்கள் ஆசான்கள் என்ற உயரம் தொடுவர் . ஆசான்கள் மறைவதில்லை குறைந்தது கடைசி மாணவர் மறையும் வரையோ அதன் பின்னும் செவிவழிச்செய்தியாக பலகாலம் இத்திருநாட்டில் பேசப்படுவர்.

இவை அனைத்தும் ஆசிரியர் தன் மீது கொள்ளும் அக்கறையும், பிறர் என்னை தவறாக விமரிசிக்க இடம் கொடேன் என்ற சுயமரியாதையின் வெளிப்பாடாகவே அமைந்து பிறர்க்கு எட்டாத உயரத்தை விரைந்து எட்டுகிறார்கள் .                                                                        எனவே,  "இருக்கவே இருக்கு" என்பதல்ல ஆசிரியப்பணி.

தொடர்ந்தும் கற்பேன்,  துவள மாட்டேன் என்போருக்கு மட்டுமே வயப்படும் "ஆசிரியம்" என்னும் ஆளுமை.

                       முயற்சி தன்  மெய்வருத்தக்கூலி தரும் .

தொடரும்            நன்றி                              அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...