Sunday, April 21, 2024

TEACHER –UNDERSTAND SELF AND PERFORM FOR CONSUMERS

 TEACHER –UNDERSTAND SELF AND PERFORM FOR CONSUMERS

ஆசிரியரின் தன்  புரிதலும்,  பிறர்க்கென ஆசிரியம் புரிதலும்

ஆசிரியர் பலர் சுணங்கிக்கிடக்க , சிலர் 'ஆச்சரியர் ' என்று வியக்கும் அளவிற்கு தெளிவான செயல் பாடுகளை அரங்கேற்றுதல் எவ்வாறு அமைகிறது?

நான் முன்னம் தெரிவித்திருந்த கல்வியில் சமநிலை த் தகுதி பெறுதல் வேறு     செயலில் மேம்பாடு அடைதல் வேறு என்ற,   முறையே [தகுதிக்கும் திறமைக்கும் உள்ள  இடைவெளியெ] ஆசிரியர்களை வெகுவாக வேறுபடுத்துவது.

அன்பு வார்த்தை பேசி மாணவர்களை கவர்ந்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கும் சில ஆசிரியர்களை விமரிசிக்கும் விதமாக ஆசிரியர்களையே வாத்தி என்றும் வாத்தியான் என்றும் கொச்சையாக அழைப்பதைக்காணலாம். உலகில் எந்தப்பணி குறித்த விமரிசனம் இருந்தாலும் இல்லாது போயினும் ஆசிரியன் விமரிசனத்திலிருந்தும் பட்டப்பெயர் என்னும் பிரத்தியேக மாணவ நாமகரண த்திலிருந்தும் தப்ப முடியாது அநேகமாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் 'சிறப்பு'பெயர் உண்டு; அந்தந்த கல்வி நிலையங்களில் அவ்வாசிரியர்கள்  அவ்வாறே அறியப்படுவது கண்கூடு.ஒவ்வொரு ஆசிரியனுக்கும் இந்த ட்ரீட்மெண்ட்  உண்டு. இதில் ஒருவன்  ஆசிரியப்பணியில் நல்ல திறமையாளன் எனினும் அவனுக்கும் அது உண்டு அவை பெரும்பாலும் ஏதோ ஒரு விலங்கின் பெயராகவோ அல்லது அவதாரங்களின் பெயராகவோ  அல்லது கொடுங்கோல் அரசர்களின் பெயராகவோ தொடர்ந்து இருந்துவருகிறது. இனியும் தொடரும் .

இளம் வயதினருக்கு ஆசிரியன் ஒரு கேலிப்பொருள் அவ்வளவே . இதனால் எந்த ஆசிரியனும் கோபமோ, கொந்தளிப்போ கொள்வதில்லை. அவனும் இதை எல்லாம் செய்துவிட்டு தானே இப்போது ஆசிரியன் நிலையில் இருக்கிறான். அதுவல்ல நமது களப்பொருள் ;

நீ ஆசிரியன் என்ற உன்னதத்தை எட்டப்போகிறாயா ? அல்லது ஆ --'சிறியன்'  என்று அடங்கி முடங்கப்போகிறாயா? என்பதே கேள்வியின் பொருள் எதுவாயினும் இந்த நிலை எட்டுதல் என்பது ஆசிரியனின் செயலில் வெளிப்பட வேண்டிய மகோன்னதமே அன்றி , கற்பனையாக நானும் நல்ல ஆசிரியர் தான் என்று மனதளவில் நம்புவது அல்ல.

மாறாக பயில்வோர் முற்றாக ஏற்றும்கொள்ளும் வகையில் ஆசிரியத்திறமை வெளிப்படுவது ஒன்றே அங்கீகாரம் பெறும் மற்றும் பெருக்கும்.  வெறும் வாய்ச்சொல் அல்ல.  

ஆசிரியர் என்பவர் தனது திறமையை களப்படுத்துவதும் /களங்கப்படுத்துவதும் அவரவர் செயல் அடிப்படையில் உருவாக்கப்படும்பெருமை அல்லது இழிவு என்ற  சமுதாய அங்கீகாரம். இந்த அங்கீகாரம். முறையாக பெறப்படவேண்டும்  என்பதை ஆசிரியர்கள் உணர்வது மிக மிகக்குறைவே. பலரும் மாணவனுக்கு என்ன தெரியும் "நான் போதித்தது  தானே அவன் பெற்ற அறிவு" என்று தன்னை மிக உயர்வாக மதிப்பீடு செய்து கொண்டு உலா வருதலே ஆசிரியனின் அதலபாதாள வீழ்ச்சிக்கு வலுவான அடித்தளம். இப்படி கூட உண்டா என்று நீங்கள் நினைக்கலாம். எந்த வீழ்ச்சிக்கும் [நீர்வீழ்ச்சி நீங்கலாக] தான் என்னும் அகப் பெருமை   இயல்பான ஆரம்பப்புள்ளி. இந்தப்புள்ளி விஸ்வரூபம் கொள்ளும் வேகத்திற்கு ஈடான வேகம் சில வகை கேன்சர் நோய்களுக்கே சாத்தியம் --இது சத்தியம்.

இந்த சூழலில் ஆசிரியர் ஏன் சிக்கிக்கொள்கிறார் ? இது சற்று விருப்புவெறுப்பின்றி [dispassionate ]அலசப்பட்டு அறியப்பட வேண்டிய பகுதி.

குறிப்பாக ஆசிரியப்பணியின் வளர் நிலைகளில் இருப்போர் மிக நிதானமாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகுப்பிலும் 3 அடிப்படை கேள்விகளுக்கு விடைகாண முயலுதல் மிகுந்த நற்பயன் தரும். 

1. நான் வகுப்பில் நுழைந்ததும் [a] நிசப்தம் ஏற்படுகிறதா ? அல்லது [b ]  ஒரு சிலரேனும் ஆங்காங்கே குருவிகள் போல பேசிக்கொண்டுள்ளனரா?  விடை [a] ] எனில் உங்கள் தகவலுக்கு மாணவர்கள் வரவேற்பு தருகின்றனர் ; [b ] எனில் உங்கள் ஆளுமையில் குறைபாடு உள்ளது , நீங்கள் வந்தபின்னும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.  2 . நான் போதிக்கும் போது [ c ] தடங்கல் இன்றி பேசுகிறேனா ? அல்லது [d] தட்டுத்தடுமாறுகிறேனா ?  c எனில் முறையான பாதையில் பயணிக்கிறோம் , [d ]எனில் மிக விரைவில் இந்த தடுமாற்றத்தை சரி செய்யவில்லை எனில் "தோல்வி" நம்மைத்தழுவி விடும்: பின்னர் மீள்வது எளிதல்ல.

3] எனது வகுப்பிற்கு வரும் மாணவர் எண்ணிக்கை [ e ] சீராக உள்ளதா ? அல்லது [ f ]போகப்போக எண்ணிக்கை குறைவதாக தெரிகிறதா? e எனில் உங்களின் போதிக்கும் திறன் மாணவர்களுக்கு நம்பிக்கை தருகிறது அல்லது f எனில் உங்கள் மீது இருந்த ஆரம்பகால அச்சம் நீங்கி விட்டது மற்றும் உங்கள் ஆசிரியத்திறன் ஈர்ப்பு குறைவானது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஆசிரியப்பணியில் இருப்போர் ஒன்றை ஆயுட்கால புரிதலாக ஏற்பது அவசியம் ;

அது என்னவெனில் சிறப்பான ஆசிரியப்பண்புகள் பெரும்பாலும் பேசி விவாதிக்கப் படுபவை அல்ல. அதாவது நல்ல ஆளுமை கொண்ட ஆசிரியர்கள் எப்போதாவது நினைகூறப்படுவது இயல்பு. அவ்வளவுதான்

ஆனால், திறனற்ற /உதவாக்கரை ஆசிரியன் பற்றி அநேகமாக அமோகமாக ஒவ்வொரு நாளும் சல்லி சல்லியாக பொதுவெளிகளில் கிழிக்கப்படுகிறது. இவனுகளை/ இவளுகளை யார் இந்தவேலை க்கு  தேர்வு செய்தது  என்று ஆசிரியருக்கும், நிர்வாகத்துக்கும் சொல்லொணா சொற்களால் படு கேவலமாக அர்ச்சனை செய்து பேசப்படுகிறது. அவ்வகை ஆசிரியர்கள் பெரும்பாலும் ஏக வசன    அவ [ன் ], இவ [ன்], அந்த [பய , சனியன் ] என்ற அளவில் தான் சர்வ அலட்சியமாகபார்க்கும்  மாணவர்கள் உள்ளக்குமுறலை வெளியிடுகிறார்கள். அத்தகைய பணித்திறன் குன்றிய ஆசிரியர்கள் பற்றிய கேவல விமரிசனங்கள் கோயில் மண்டபங்களில் பஸ் ஸ்டாப் சுவற்றில் நீண்ட நெடிய விமரிசனமாக ஊருக்கே பறை சாற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இதில் ஒரு வினோதம் யாது எனில் உண்மையில் வருந்த வேண்டிய அந்த ஆசிரியர் எதுவுமே நடவாதது போல் அதியற்புத நடிப்புத்திறன் காட்டி இந்த அவலங்களை கடந்து போவது அனைவருக்கும் தெரியும். இது உணர்த்துவது யாதெனில் இவ்வகை ஆசிரியர்களில் பலர் சொரணை அற்றவர்கள், ஏனெனில் ஆடுகளத்தில் துவண்டவன் ஹி ஹி ஹீ என்று அசடு வழிவதைத்தவிர வேறு வழியே இல்லை. இதில் தோன்றும் அவலம் யாதெனில் தன்னிலும் இளைய மற்றும் தகுதி திறமைகளில் கீழ் நிலையில் இருக்கும் மாணவரிடம் ஹி ஹி ஹீ என்று அசடு வழிந்து    தப்பிக்கப்பார்க்கும் இவர்கள் தான் சக ஆசிரியர்களிடம் ஆ ஊ என்று வீரவசனம் பேசி தான் மிகப்பெரும் ஆளுமை என்பதாக படம் காட்டிக்கொண்டிருப்பார்கள். அன்றாட வாழ்வில் இவர்களால் அடிப்படை கட்டுப்பாடு எனும் basic discipline ஐ க்கூட செயல் படுத்த இயலாது. எனவே மாணவர்களிடம் கூழைக்கும்பிடு போடவேண்டிய பிச்சைக்காரர்கள் நிலையில் இருப்போர் இவ்வகை திறன் குன்றிய incompetent  inept ஆசிரியர்கள்.

நாம் நம்மை பற்றி கொள்ளும் உயர் மதிப்பீடு திறமை அல்ல. திறமை என்பது பிறர் நமது செயல் தனை புரிந்து சிலாகித்து நமக்கு தரும் மரியாதையும் மதிப்பும். இவை தான் திறமையின் அங்கீகாரம். எனவே சமுதாயம் நம்மை ஏற்பதே நமது வெற்றியின் துவக்கப்புள்ளி. அதை நோக்கி பயணிக்காமல் கூடிக்குலாவி நட்பு பாராட்டி மாணவரின் நன்மதிப்பை பெறலாம் என்போர் திரை மறைவில் எள்ளி நகையாடப்படுகிறீர்கள் அல்லது நிச்சயம் நகையாடப்படுவீர்கள்.

திறமையை ஒதுக்கிவிட்டு வெற்றி பெறுவேன் என்போர் பகல் கனவு அல்ல அல்ல நடந்துகொண்டே கனவு காண்போர் நிகர்த்தவர்கள் . வெற்றி நோக்கி பயணிக்க   என்ன செய்ய வேண்டும் ? பின்னர் காண்போம்.

நன்றி

அன்பன் ராமன்

1 comment:

  1. இன்று பல பேர். ஆ. சிரியர்கள்
    சில பேர் ஆசிரியர்கள

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...