Sunday, April 14, 2024

WHY DOES EDUCATION TURN BITTER?

 WHY DOES EDUCATION TURN BITTER?

கல்வி கசப்பதேன் ?

சென்ற பதிவில் பயாலஜி- பற்றிய தயக்கம் என்ன, ஏன் என்று உணர முயற்சித்தேன். இப்போது அதே போன்ற ஒரு நிலை கல்வி குறித்தே சுமார் 40% பயில்வோரிடம் காண்கிறேன். கிட்டத்தட்ட அநேக கல்விநிலைகளிலும் இந்த விகிதாச்சாரம் இருப்பதாக உணருகிறேன். இல்லை எனில் அரும்பாடுபட்டு தொழிற்கல்வி துறைகளில் 3 ஆண்டு, 4 ஆண்டு நிலைகளில் கூட உயிரை மாய்த்துக்கொள்ள துணிவது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. அதுபோன்ற நிலைப்பாடுகளை ஒட்டுமொத்தமாக கல்வியின் மீது சுமத்துவது தவறென்று அறிவேன் .ஆயினும் வேறு ஏதோ ஒரு அழுத்தம் தற்கொலைக்கு தூண்டுகிறது என்றால் அந்த நபர் தான் பெற இருக்கும் சமூக பொருளாதார அங்கீகாரங்களைக்கடந்து வேறு ஏதோ ஒன்றை உயர்வாக கருதுகிறார் என்றால் , அவர் கல்வியை எந்த இடத்தில் வைத்துப்பார்க்கிறார்?  வேறு ஏதோ ஒன்றை கல்வியைவிட உயர்வாகவோ விலை மதிப்பானதாகவோ கருதுகிறார் அது கிடைக்கவில்லை எனில் இந்த உயிர் எதற்கு என்று விபரீத மதிப்பீட்டில் சிக்கி மாய்கிறார்; அப்படி எனில் இத்துணை காலம் என்ன கற்றார் ?           

 எதைப்புரிந்து கொண்டார், ? வாழ்வில் அவரின் இலக்கு தான் என்ன? இதுபோன்ற வினாக்களுக்கு விடை தேடி பலனில்லாமல் இந்த முடிவுக்கு வந்தாரா எனில் பெரும்பாலும் இல்லை என்பதே நிதர்சனம்.

இறப்பதே மேல் என்ற நிலைப்பாடு கொள்பவர் வாழத்தகுதியற்றவர் என்று பிறர் நினைத்தால் தவறில்லை.

எதற்கு எப்போது எந்த அளவு போராடுவது என்ற அடிப்படைதயார்நிலை [preparedness] ஒருவருக்கு இல்லை எனில் அவர்களால் எவருக்கும் உபயோகம் இல்லை. சொல்லப்போனால் கல்வி ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தவேண்டிய நிலை -தன்னம்பிக்கை/ போராடும் குணம் இவ்விரண்டும். இவற்றின் அளவுகள் தனிநபர் சார்ந்த வேறுபாடுகள் கொண்டதாக இருக்கலாம். இவ்விரண்டும் முற்றாக ஒருவரிடம் ஏற்படவே இல்லை எனில் அவர் கற்கவில்லை தேர்வுகளில் பாஸ் ஆனார் என்பது தான் கசப்பான உண்மை. இங்குதான் கற்றல், தேர்ச்சி பெறுதல், மதிப்பெண்பெறுதல், இவ்வனைத்தையும் கடந்து மதிப்புப்பெறுதல்என்ற தனி நபர் மேம்பாடு கல்வியின் விளைவாகாக்கைகூடுவது என்று நாம் உணர வேண்டும். .

இவற்றை முறையாக உணர , கற்றல் என்னும் செயல் மனிதனின் மனம் கடந்து ஆன்மா வரையும் வியாபிக்கவல்லது என்ற உண்மையை அனுபவமாக உணர்தல் தேவை. இது எல்லோருக்கும் சித்திக்குமா என்றால் , ஆழ்ந்து சிந்திப்பவர்க்கே வயப்படும். அப்படி எனில் ஒரே  அளவு கல்வித்தகுதி பெற்ற இருவரில் ஒருவர் ஓங்கி உயர்ந்து நிற்பதும் இன்னொருவர் அதே அளவிற்கு திறன் இல்லாதது போல் தோன்றுவதும் எப்படி நிகழ்கிறது ? இதன் ஆதாரப்புள்ளி 'புரிதல்/புரிதல் திறன்' என்ற ஒன்றையொன்று சார்ந்து இயங்கும் மனிதப்பண்பு. கல்வி ஒரே மாதிரி தான் ஒரே வகுப்பில் உள்ளோருக்கு வழங்கப்படுகிறது. சிலர் பாய்ந்து  பற்றிக்கொள்ள , பிறர் ஏதோ நடக்கிறது என்று சற்று விலகி நிற்பதும் அன்றாடம் நிகழ்கிறதே. அது உணர்த்துவது யாது? புரிந்தவர்  மேலும் புரிந்துகொள்ள முயல்கின்றனர்  , புரியாதவர் மெல்ல மெல்ல பின் தங்கிவிட ஒரே வகை கல்விபெற்ரோர் ஒரே வகை திறன் பெறுவதில்லை. இந்த 'பின் தங்கிய' புரிதல் திறன் உடையோர் சில அடிப்படை உத்திகளை வைத்துக்கொண்டு தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர். எனவே இறுதியில் ஒரே தகுதியினர் என்ற இருவரில் ஒருவர் ஓங்கி நிற்பது இன்னொருவர் மங்கலாக இருப்பதும் புரிதல் என்ற திறன் அடிப்படையில் விளையும் பலன் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தபுரிதல் திறன் அளவில் உள்ள வேறுபாடுகள் ஆர்வத்தையோ /கசப்பையோ அதிகரிக்க வல்லவை..

புரிதல் திறன்

இது ஒரு  நுணுக்கமான பண்பு.

நுணுக்கம் என்ன எனில் இது இரு காரணிகளால் கட்டமைக்கப்படுகிறது.     1. தனிமனித திறன் 2. கற்பிக்கும் உத்தியின் வலிமை அல்லது நளினம். இதில் தனி மனித திறன் என்பது அடிப்படையில் பாரம்பரியம் சார்ந்தது ; எனினும், ஆரம்ப நிலையில் புரிந்துகொள்ளப்படவேண்டிய அடிப்படை களை  நிதானமாக போதித்து , அதன் வழியே பயின்று, முறையாகக்கற்றுக்கொண்டோர்க்கு , புரிதலும் புரிதலின் மீது நாட்டமும் ஏற்படுதல் இயல்பு.

புரிதல் திறன் மெல்லமெல்ல வடிவமைக்கப்படும் ஒரு உள்ள [த்தின்]. மேம்பாடு. இது ஒரு அளவிடவொண்ணா ஆற்றல் எனில் மிகை அன்று. அடிப்படைப்புரிதல் வலுவாகக்கட்டமைக்கப்பட்டால், பின்னர் அது தற்காத்துக்கொள்வதுடன் மென்மேலும் விரிந்து மிகப்பெரும் ஆளுமை என்ற உச்சத்தைத்தொடும்.  இவ்விடத்தில் தான் ஆசிரியர் என்ற பணி மகத்தான முக்கியத்துவம் பெறுகிறது.

இதை ஒற்றை வாக்கியத்தில் "எழுத்தறிவித்தவன்   இறைவன் ஆகும்" என்ற சுருங்கச்சொல்லுகிறோம். எழுத்தறிவித்தவன் என்ற சொல் ஆழ்ந்த பொருள் கொண்டது. [அதாவது "எழுத்தறிவித்தவன்   புரிதலின் வன்மையை கட்டமைத்தவன் என்று கொள்க ]. வலிமையான புரிதலை முறையாக வேரூன்ற வைக்க பயிற்றுவிக்கும் திறன் மிக மிக அவசியம்.              உரிய பட்டம் வாங்கியோர் எல்லோரும் ஆசிரியர் பணிக்கு தகுதிபெற்றவரே அன்றி தகுதியான ஆசிரியர் அல்லர். தகுதிக்கு அளவுகோல் பட்டம், தகுதியின் அளவுகோல் செயல் திறன். முன்னது ஒருஅடையாளம் பின்னது ஒரு அங்கீகாரம். அங்கீகாரம் பெற்றோர் புரிதல் திறனை மேம்படுத்துவர்.அடையாளம் பெற்றோர் என்பது துவக்க நிலை. பலர் துவக்க நிலையிலேயே தங்கி விட சிலர் தாங்களும் உயர்ந்து பிறரையும் மேம்படுத்தி ஆசான் என்ற பெரும் இலக்கை எட்டுகின்றனர். எனவே புரிதலில் குழப்பம் விளைவிப்பவன்[ள்] ஆசிரியப்பணிக்கு உகந்தோர் அல்லர். ஏனெனில் புரிதல் திறனை உயிர்ப்பிக்க மற்றும் உய்விக்கும் திறன் அற்றோர் சமுதாய குற்றவாளிகள் என்பது தான் உண்மை. கற்றலில் கசப்பை விதைத்தவன் /விதைப்பவர் யாராயினும் பிறர் வாழ்வில் ஊரு விளைப்பவர் என்பதாக அல்லாமல் வேறு என்ன பெயரால் அடையாளப்படுத்த முடியும்?  ஆசிரியப் பெருமக்கள் அமைதியாக தங்களை புரிந்து கொண்டால் உரிய செயல் மேம்பாடுகள் கண்டு முன்னேற்றப்பாதையில் பயணிக்க இயலும்.

தொடரும்                                அன்பன் ராமன்   

1 comment:

  1. மாணவர்களுக்கு புரியும்படி சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரை இறைவனுடன் ஒப்பிடலாம்
    எழுத்தறிவித்தவன் இறைவன்தான்.

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...