Sunday, May 19, 2024

TEACHER IMAGE- AN ENDOWMENT

 

TEACHER IMAGE- AN ENDOWMENT

ஆசிரியர்  பிம்பம்-- ஒரு மூலதனம் [சொத்து ]

ஆசிரியர் --பிம்பம்

பிற பணிகளுக்கு இல்லாத ஒரு தேவை ஆசிரியருக்கு [ஆசிரியப்பணிக்கு] எந்தக்காலத்திலும் உண்டு. அது ஆசிரியரின் பிம்பம் .  ஒரு ஆசிரியர் தனது தகுதி திறமைகள் குறித்து என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பதை விட , அந்தஆசிரியர் குறித்து சமுதாயம் என்ன நினைக்கிறது என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதுவே, ஆசிரியர் குறித்த மதிப்பீடு அல்லது பிம்பம் என்றழைக்கப்படுகிறது.

இந்த பிம்பத்திற்கு பன்முகங்கள் உண்டு. அவை

1 கல்வித்தகுதி , 2 அவர் பின்பற்றும் ஒழுக்கம், 3தனது புறத்தோற்றம் பற்றிய அவரது கவனம்   4 வாழும் பகுதியில் அவர் பின்பற்றும் செயல் முறைகள் [ செய்தித்தாள் /பிற பொருட்களை இரவல் வாங்கினால் திருப்பித்தருவதில் காட்டும் அக்கறை [பொருளை சிதைக்காமல் திருப்பித்தருதல் ] 4 பொது இடங்களில் அதிர்ந்து பேசாமல் மென்குரலில் பேசுதல் , 5 பெண்கள் குழுமி உள்ள இடங்களில் நின்றுகொண்டிராமல் கடந்து போவது , தெருவில் உள்ள சிறார்களை பயன்படுத்தி வேலை வாங்குவதை தவிர்த்தல் என்பன இதில் அடங்கும்.

இவற்றிற்கு இணையாக பிறிதொரு சமுதாயப்பார்வையாக இயங்குவது கல்விநிலையத்தில் ஆசிரியரின் பிம்பம். இது வெகு விரைவாக, மாணவ மாணவியரிடையே 'காட்டுத்தீ" எனப்பரவும் பெரும் பேராபத்து நிறைந்தது.

ஆசிரியர் குறித்த பயம் நிறைந்த மரியாதை தான், மாணவ மாணவியரை கட்டுக்குள் வைக்க உதவும். ஆசிரியரின் தனி மனித ஒழுக்கம் எப்போதுமே மாணவ    மாணவியர் இடையே பேசுபொருளாக உலா வரும் பேராற்றல் உடையது. இதில் நாம் [ஆசிரியர்கள்] சிறிதும் கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாது. . 

இதில் முற்றிலும் உணர்ந்துகொள்ளப்படவேண்டிய நுணுக்கம் யாதெனில் நாம் சந்தித்திராத மாணவ மாணவியர் கூட நம்மைப்பற்றி புரிந்துகொள்ளவும்,  கணித்து வைக்கவும் அக்கறை கொள்வர்.

இப்படித்தான் ஆசிரியர்களுக்கு வைக்கப்படும் குறிப்புகள் [பட்டப்பெயர் ] சங்கேத அடையாளங்கள், [ கழுகு, எலி, ஆந்தை , கொக்கு போன்ற உருவ/ செயல் தொடர்பான குறியீடுகள்] கல்வி நிலையம் முழுவதிலும் பரப்பப்பட்டு அனைவரும் அறிந்த அடையாளம் ஆகிறது.

இவ்வகை 'கவனிப்புகள்" கீழ்மட்ட ஊழியர்கள், அலுவலகப்பணியாளர்கள் , உடற்பயிற்சி உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் மறவாமல் பெயரிட்டு அகமகிழ்தல் மாணவ வயதில் கிடைக்கும் பேரின்பம்.

நாம் [ஆசிரியர்] செய்யும் சில வினோத செயல்கள்/ சொல்லாடல் இவைகூட நாமகரண உத்திகளை செயல்படுத்த உதவுவன.

எனவே பிம்பம் ஒரு முக்கிய பண்பு என நாம் உணர்தல் நலம். எனவே மிகுந்த கவனமுடன் நமது செயல் பாடுகள் இருந்தால், ஆசிரிய பிம்பம்     மரியாதைக்குரிய ஒன்றாக அமையும்.                                                                                                                        ஆயினும், ஆசிரியர் அறிஞனோ, மூடனோ பட்டப்பெயர் நிச்சயம் உண்டு.             ஒரு சிலர் தனது "நாமகரணம்" எது என்றறிவார்கள் , வேறுசிலர் தெரிந்துகொள்ளாமல் இருப்பர், சிலரோ தெரியாதது போல் 'அப்பாவி வேடம்' புனைவர். அப்பாவி, பாவி அனைவர்க்கும் பெயர் உண்டு. இந்தப்பெயர்கள் சுவர்களில் எழுதப்பட்டு பிரபலப்படுத்தப்படும் . இவ்வனைத்தையும் தாங்கிக்கொண்டு தான் பணியாற்ற வேண்டியுள்ளது

கல்வித்தகுதி என நான் முதலில் குறிப்பிட்ட பண்பு QUALIFICATION மட்டும் அன்று ; அது படிப்பு [பட்டம்] + பயிற்றுவிக்கும் திறனையும் கணக்கில் கொண்டே மாணவர்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது. . சொல்லப்போனால் போதிக்கும் திறன் முதலிடமும் , கல்வி இரண்டாம் இடமும் வகிப்பது எனில் மிகை அன்று.

ஏனைய, பிற குறியீடுகள், நாம் ஏற்படுத்திக்கொள்ளும் அடையாளங்கள். அவற்றில் முக்கியமானவை  யாவை? 

1.       நேரம் தவறாமை  இதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலிலும் கடைபிடிப்போர் பெரும் ஆளுமைகளாக ஏற்றுக்கொள்ளப்படுவதை ஆணித்தரமாக சொல்ல முடியும். அந்த ஒரு பண்பு நமது தீவிர நாட்டம் [seriousness] என்பதன் அடையாளமாகவே ஏற்கப்படுகிறது. எனவே அதுபோன்ற ஆசிரியர்கள் குறித்து ஏளனப்பார்வை எழுவதில்லை என்பதும் ஒரு வலுவான ஆசிரியன் என்ற அங்கீகாரம் தான்.

2.       2  வகுப்பில் பேச வேண்டிய பாடப்பகுதிகளை முக்கியத்துவம் கொடுத்து விவாதித்தல் பெரும் ஆளுமையின் குறியீடு . மேலே கூறிய இவ்விரு அடையாளங்களும் கல்வி சார்ந்த தொழில் குறியீடுகள்.

3 பாடம் தவிர்த்து பிற வற்றைப்பேசும் ஆசிரியர் [ தகுதி மற்றும் தி றனற்றவர்/   மாணவர் நலம் விரும்பாதவர் என்றே  மறைமுகமாக வேனும்] கடும் விமரிசனங்களைப்  பெருகின்றவர்

4 மாணவ மாணவியரிடையே பாகுபாடு பாராட்டாது இருத்தல் -மிக மிக முக்கியமான ஆசிரியச்சின்னம். இதில் குறைபாடு இருந்தால் பிற அனைத்துப்பண்புகளும் கூட குறைத்தே மதிப்பிடப்படும் என்பதை ஆசிரியப்பணியில் உயரம் எட்ட விழைவோர் மனதில் செம்மையாக பதித்துக்கொள்வீர்.

 இவை நீங்கலாக இன்னும் சில நுணுக்கமான தகவல்கள் குறிப்பாக கல்லூரிகளில் UG /PG நிலைகளில் பேராசிரியராக கோலோச்ச விரும்புவோர் கடைப்பிடிக்க வேண்டிய செயல் முறைகள் உள்ளன. அவற்றை பின்னர் காண்போம் .

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...