Thursday, May 9, 2024

TEACHER—TO PROCEED TOWARD SUCCESS-3

 TEACHER—TO PROCEED TOWARD SUCCESS-3   

ஆசிரியர் -வெற்றி நோக்கி பயணிக்க -3

சென்ற பதிப்பில் ...

இதற்குத்தான் ஒவ்வொரு நிலையையும் [STAGE] விட 3, 4 படிகளாவது அதிகம் பயின்று வந்தால் தான் சிறப்பாக பயிற்றுவிக்க இயலும்.                  

மறைமுகமாக சொல்வதெனில் எந்நாளும் அடிப்படை தகவல்களை புதுப்பித்துக்கொண்டே இருத்தல் பெரும் உதவி புரியும். இவ்விடத்தில் மிகவும் எச்சரிக்கை உணர்வோடு   இயங்குதல் ஆசிரியரின் மானம் காக்கும். ஒரு சில மாணவ மாணவியர் வளமான குடும்பச்சூழல் அல்லது சைனிக் ஸ்கூல் போன்ற ராணுவ பள்ளிகள்/ மேல்நாட்டு பணிகளில் இருந்து தாயகம் திரும்பிய பெற்றோரின் குழந்தைகள் சக மாணவர்களை விட கூடுதலாக அறிந்து வைத்திருப்பர். எந்த தகவலையும் அறிந்திருப்பதால், ஒருவித ஈகோ உந்துதல் [ Ego drive/ exuberance ] அவர்களிடம் தூக்கலாக இருக்கும். அவர்களை கட்டுக்குள் வைக்க ஆசிரியன் பல படிகள் கடந்து நிற்பவர் என்பதை உணர்த்தும் விதமாகஅவ்வப்போது  நுணுக்கமான தகவல்களையும், சிறப்பான மொழி ஆளுமையையும் வெளிப்படுத்துதல்  நல்ல பலன் தரும். போகிற போக்கில் இவற்றை வெளிப்படுத்தினால் அவ்வகை ஈகோ கொண்டவர்கள் நிச்சயம் பின் வாங்குவர். இவையெல்லாம் ஏன் எனில், வகுப்பறையில் ஆசிரியன் சர்க்கஸ் கூண்டில் மிருகங்களுக்கு மத்தியில் நிற்கும் ரிங் மாஸ்டர் போன்றவர். பல திசைகளில் இருந்தும் உறுமும் விலங்குகள் போல 'ஆசிரியரை எப்படி கவன ஈர்ப்பு / கேள்விகளால் குழப்பலாம் என்று ஒரு MOB PSYCHOLOGY உத்தியாகக்கொண்டு  செயல் படுவர். அறிவையும் ஆளுமையையும் சரியாக வெளிப்படுத்தாத ஆசிரியர்கள் இது போன்ற அறிவுப்பூர்வ வம்பிழுப்பு ' [INTELLECTUAL /BRAINY TEASING ].   களுக்கு ஆட்பட வேண்டி வரலாம்.

இவ்விடத்தில் மீண்டும் ஒன்றை நினைவுகொள்ளுதல் நல்லது. மிகவும் வலுவாக தன்னை வெளிப்படுத்தாத எந்த ஆசிரியரும்  , மாணவ  மாணவியர் பார்வையில் , கேலிப்பொருளே [butt of  a ridicule ]. இது இளம் வயதினருக்கு இயல்பாகவே பெரியவர்கள் குறித்த ஒரு ஏளனப்பார்வை எனில் மிகை அல்ல. ஆனால் ஒரு ஆசிரியன் எந்த நிலையிலும் சொல்லிலும் தகவலிலும் தளர்ச்சி இன்றி சண்டமாருதம் போல் இயங்கி, திகிலூட்டுபவர் எனில், அத்துனை டாம்பீக கம்பீரங்களையும் அவ்வாசிரியரின் காலடியில் கிடத்தி சரண் அடைய மாணவ மாணவியர் தயங்கமாட்டார்கள்  . சண்டமாருத செயல் பாடு யாது ?அதை நிர்வகிக்க வழிமுறைகள் யாவை. ?

சண்ட மாருத செயல்பாடு

ஒரு ஆசிரியர் சண்ட மாருதமென இயங்க 3 முக்கியமான திறமைகளை கொண்டிருத்தல் நலம்; இல்லையேல் காலப்போக்கிலாவது இவற்றைத், 'தனதாக்கி'  பிறர் கவனத்தை தன்பால் ஈரத்தல் -அடிப்படைத்தேவை.

1 முறையான வரிசையை பின் பற்றுதல்

ஒவ்வொரு பாடப்பகுதியிலும் அமைந்த பாட விவரங்களை அடிப்படை தொடங்கி மென்மேலும் நுணுக்கமான தகவல்களை சீராக தொகுத்துச்சொல்லுதல். இதுதான் எந்த தகவலையும் குழப்பாமல் சொல்வதற்கான எளிய மற்றும் வலுவான அணுகுமுறை. இதன் உள்ளமைப்பாக , தகவலை தொகுக்கும் மொழியின் வலிமையை மெல்ல அதிகரித்துக்கொண்டே பேசப்பேச , கேட்பவர் மனதில் ஒருசிறுநடுக்கம் ஏற்படுத்தும். ஊன்றிக்கவனிக்க வில்லை என்றால் முறையாகப்புரிந்துகொள்ள இயலாது போல் இருக்கிறதே என்று பயம் கவ்வும்.. தொடர்ந்து கவனம் விலகாமல் ஆசிரியரின் கருத்துகளை பின் தொடர்வதே நல்லது / எளிது என்ற புரிதல் வந்த எவரும் வேறெந்த கவனச்சிதறலையும் வளர்த்துக்கொள்ள மாட்டார்கள். இதுதான் வெற்றி நோக்கி முன்னேற விழையும் இளம் ஆசிரியர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்பு.

மீண்டும் மீண்டும் மொழிகுறித்து நான்  முன் வைக்கும் அனைத்து தகவல்களுக்கும் ஒரே அடிப்படை தான்; இவ்வாசிரியர் மொழியை நன்றாக அறிந்தவர் எனவே தயக்கமின்றி மழைபோல் பொழிவார் இவரிடம் சிறுபிள்ளை விளையாட்டுகள் செல்லாது , உடைத்தெறிந்து விடுவார் என்ற ஒரு தார்மீக தயக்கம் எந்த கொம்பனையும் முடக்கி அமர வைத்துவிடும்  ஒருஆசிரியர் பிறர்க்கு கேலிப்பொருளாக ஆகாமல் சுதந்திரமாக இயங்க , இடையூறு ஏற்படுத்த நினைக்கும் யாரும் இவரிடம் வம்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற நிலையை அடைய , ஆசிரியரின் செயல் தெளிவும் வேகமும் தரவல்ல  ஆளுமை ஒன்றே கேடயம். எனவே ஆளுமையின் பிரதிபலிப்பாக தகவலின் ஆழம், வேகம், மொழியின் ஆதிக்கம் இவற்றை கைக்கொள்ளுதல் ஆசிரியர் எந்த வகுப்பிலும் தலைமைப்பீடத்தை விட்டுவிடாமல் இயங்க மாபெரும் தளவாடம் போன்றது. அதை ஏன் வடிவமைத்துக்கொள்ளக்கூடாது?

2 படிப்படியாக வேகமெடுத்தல்

இது ஒரு நுணுக்கமான உத்தி . அதாவது ஒரு வகுப்பு துவங்கும் போது , அப்போது தான் கிளம்பும் ரயில் போல மெல்ல ஊர்ந்து படிப்படியாக விரைவது போன்றதே, போதித்தல் சார்ந்த செயல் முறையும்..               எப்போதும் ஊர்ந்துகொண்டிருந்தால் , கவனச்சிதறல் ஏற்படும், மேலும் போதிப்பில்  இருக்க வேண்டிய அக்கறை ஆசிரியருக்கே இல்லாதது போன்ற தோற்றம் ஏற்படும். வகுப்பு துவங்கிய 2 , 21/2 நிமிடத்தில் முற்றான வேகத்தை எட்டிவிட வேண்டும். அதன் பின்னர் மென் மேலும் பேசும் வேகத்தை அதிகரிக்கக்கூடாது. மென்மேலும் அதிகரித்தால் தொடர்ந்து பின்பற்ற இயலாமல் மாணவர் துன்பம் எதிர்கொள்வர்.ஆரம்பத்தில் எவ்வளவு நிதானமாக பேசினாலும் மாணவர்கள் மெதுவாகப்பேசுங்கள் என்பதுபோல் பார்ப்பார்கள். அதற்கு இடம் கொடாமல் அவர்கள் எதிர்நோக்குவதைவிட  சற்று அதிகமான வேகத்தில் ஆசிரியர் பேச ப்பேச மெல்லமெல்லப்பின் தொடர்ந்து வருவார்கள் .இப்போது அவர்களின் பின்பற்றும் திறன் மேம்பட்டுள்ளது என்பதே ஆசிரியனுக்கு ஊக்கம் தரவல்ல நிகழ்வு,. இந்த இடத்தில் தேக்கம் /தூக்கம் இரண்டுமில்லாமல் மென்மேலும் அதிக தகவல் , செயல் வேகம் இரண்டும் மேம்பட ஆசிரியரை தொடர்ந்து மனதளவில் பின் தொடர்வது அனைத்து மாணவருக்கும் வசப்படும். இந்தப்புள்ளி தான் ஆசிரியர்-மாணவர் மனம் ஒன்றும் புள்ளி. எந்த புதிய மாணவர்  நிறைந்த வகுப்பு எனினும் ஒரு 4 வாரங்களில் மனம் ஒன்றுதல் நிலையை எட்டி வெற்றிக்கு வழி வகுத்தல் நலம்

3 அவ்வப்போது நினைவு படுத்துதல் [ RECAPPING ]

இது ஒரு இடைநிலை தொகுப்பு [INTERIM SUMMING UP ] என்று கொள்க. இதுதான் தகவலின் சுமையை குறைத்துக்காட்டும் ஆசிரிய உத்தி.

ஒரு குறிப்பிட்ட களத்தொகுப்பில் [ASSEMBLY]  20 முக்கிய தகவல்கள் இருப்பின் ஒவ்வொரு 4, 5 நிலைகள் முடிந்ததும் இதுவரை அமைந்த 7, 8 நிலைகளை நினைவுபடுத்திவிட்டு அடுத்தமுறை 12 , பின்னர் 16 என்று முன்னும் பின்னும் இருப்பனவற்றை நினைவூட்டிக்கொண்டே முன்னேறும் போது , வகுப்பில் கவனித்தல் நினைவூட்டலுக்கு எளிய மற்றும் முறையான உத்தி என்றுபயில்வோர் அனைவரும் உணர்வர். .

இதை எல்லாம் செய்துகொண்டிருக்கவேண்டுமா ? எனில் இது தான் பயிற்றுவிக்கும் முறை. என்று நான் தெய்வீகமாக நம்புகிறேன் இந்த முறையில் பயின்ற எவரும் , ஏனைய ஆசிரியர் விளக்கும் பாடங்களிலும் இதுபோல தாங்களாகவே முன்னெடுத்து தங்களை வடிவமைத்து விடுவர் . இதை செய்யும் மாணவனோ, மாணவியோ அந்த குறிப்பிட்ட வழிமுறையை செய்து அறிவூட்டிய ஆசிரியரை அணுகி "சார்" கொஞ்சம் டௌட் [doubt ] இருக்கு சொல்லித்தறீங்களா என்று அடங்கி ஒடுங்கி நல்லாசிரியர் பின் அணி வகுப்பர்.

ஆசிரியர் கேலிப்பொருள் அல்ல , உயர் நிலை கல்வியில் அவரை பயன்படுத்திக்கொள்ளாவிடில்  நஷ்டமும் தோல்வியும் நமக்கே என்று உணர்ந்து , அவ்வகை ஆசிரியர்களை நன்றிப்பெருக்கோடு நினைவுகொள்வர். ஆசிரியப்பணியின் ஈடிணை  இல்லா மகத்துவம் இதுவே.. இவற்றை புறக்கணித்து ஆசிரியப்பணியில் என்ன செய்ய நினைக்கிறோம்? சிந்திப்பீர்

நன்றி

அன்பன் ராமன்  

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...