Sunday, June 2, 2024

TEACHER IMAGE- AN ENDOWMENT-3

TEACHER IMAGE- AN ENDOWMENT-3                                 

ஆசிரியர்  பிம்பம்-- ஒரு மூலதனம் [சொத்து]-3

இந்தப்பகுதியில், மேலும் சில விவரங்களைக்காண்போம்.  உயர்கல்விப்பணியில் ஆசிரியர் என்ற பட்டம் பெற விழைவோர், தங்களை மிக வலுவாக கட்டமைத்தல் அடிப்படைத்தேவை. அதில்-- சில குறிப்பிட்ட பண்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1 ஆசிரியரின் பொது அறிவு  2 ]எதையும் எளிதில் நினைவுகூர்தல் 3] உயர் நிலை விளக்கங்களை பயில்வோருக்கு விளக்குவதற்காக எப்போதும் updated நிலையில் இருத்தல்.

இவை தொழில் சார்ந்த அமைப்புகள். இந்த மூன்றிலும், ஒவ்வொரு ஆசிரியரும் ஒரே சீராக தங்களை பராமரித்துக்கொள்கின்றனரா எனில் --இல்லை என்பதே கசப்பான உண்மை.

இதைச்சொன்னதும் 'வந்துவிட்டான் 'இவன்தான் பெரிய மெக்காலே என்று நினைப்பு' என பொங்குகிறார்கள்.. மெக்காலேயோ, முக்காலியோ அவரவர் என்ன தொகுதி/ தகுதியினர் என்பதை மாணவர் கூட்டம் என்றோ சீர்தூக்கி அனைவரையும் வகைப்படுத்திவிட்டுத்தான் வகுப்பறையில் ஏதுமறியாச்சிறுவர் போல் அமைதியாய் அமர்ந்து ஏராளமாய் எள்ளி நகையாடிக்கொண்டிருக்கின்றனர் -இதை உணராமல் "என்னைக்கண்டால் அனைவருக்கும் பயம்' என்று தனக்குத்தானே சான்றிதழ் வழங்கிக்கொள்ளும் எந்த ஆசிரியராலும்,  இம்மியும் பலன் இல்லை--. இதனை,  தொடர்புடைய ஆசிரியன் தவிர ஏனைய பிறர் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்.

இனியும் வீர வசனம் பேசுதலை விடுத்து , முறையான முயற்சி எடுத்து முன்னேற்றம் காண முயற்சித்தால் மீதமிருக்கும் காலத்தில் பயனுள்ள ஆசிரியர் என்ற அடிப்படை பண்பினையாவது பெற முடியும்.

உழைப்பின்றி உயர்தல் என்பது உண்ணாமல் உயிர் வாழ்தல் போன்றதே . உயர்தல் மீது நாட்டம் உண்டு , உழைப்பின் மீது நாட்டம் இல்லை இந்த முரண்பாடு தான் ஆசிரியரை கேலிப்பொருள் ஆக்குவது.

நாம் கற்றுணர்ந்தவர்கள் , மாணவனுக்கு என்ன தெரியும் ? என்றொரு  பார்வை கொள்வோர் அநேகர். ஆனால் மாணவனுக்கு என்ன தெரியும் என நாம் புரிந்து கொள்ள விழைந்தால், களம் நமதன்று அது போர்க்களம் என்பது தெளிவாகும். இப்போது கேள்விக்கு வருவோம் .

 மாணவனுக்கு என்ன தெரியும் ?

நாம் நினைப்பது ஒரு குறிப்பிட்ட தலைப்பில் உள்ள தகவல் அவற்றின் நுணுக்கங்கள் , அவை சார்ந்த பெரும் விளக்கங்கள் இவை எதுவும் தெரியாதவர் தானே மாணவர்?   ஆம் தெரியாதவர் தான். ஆனால் அதே மாணவர் இயற்கையிலேயே ' வரம் பெற்ற மனிதர்கள் '.. 

என்ன? ' வரம் பெற்ற மனிதர்கள்' என்றா சொல்கிறீர் என்போர் பின் வரும் தகவலை நினைவு கொள்வீர்

உங்களின் மகள் 3 வயது ; பள்ளியில் இருந்து வந்ததும் இன்னிக்கு ஒரு டீச்சர் வந்தாங்க அதுக்கு ஒண்ணுமே சொல்லித்தர தெரியல ; சும்மா "பேசாதீங்க டோண்ட் டாக் ' னு தான் சொல்றாங்க.

நேத்து வந்த மிஸ் சூப்பரா சொல்லித்தராங்க.' இதை சொல்லும் மழலைக்கு என்ன தெரியும் , எழுத்து தெரியுமா? எண் தெரியுமா? நிறங்களின் பெயர் தெரியுமா? பிற குழந்தைகளின் பெயராவது தெரியுமா? எதுவும் தெரியாது ஆனால் எதுவும் தெரியாத 3 வயது மழலையின்  கூற்று 'பொய் ' என்று சொல்வோமா? சொல்லத்தான் இயலுமா?  அது கூறும் உண்மை "உள்ளார்ந்த உணர்திறன் என்னும் ஜட்ஜ்மென்ட் என்ற சீர் தூக்கும் இயல்பினால் விளைந்த புரிதல்.

சரி, 18 வயது மாணவ/ மாணவி க்கு என்ன தெரியும்? என கல்லூரி ஆசிரியர் நினைத்தால் - பிழை எங்கே உள்ளது ?  விடை தேடுங்கள். அவருக்கென்ன தெரியும் இவருக்கென்ன தெரியும் என பேசிக்கொண்டிருப்போர்  தனக்கென்ன தெரியும் அல்லது குறைந்தது பிறரைவிட தனக்கென்ன தெரியும் என்றாவது ஒப்பீடு  செய்துகொண்டதுண்டா? அத்தகையோர் முற்றிலும் நம்புவது தங்களது QUALIFICATION என்ற பட்டம் தரும் பெருமையைத்தான். QUALIFICATION என்பது ஒருவர் அடைந்துவிட்டதாக சொல்லப்படும் கல்வி நிலை குறித்தது . உண்மையிலேயே அது கல்வித்தகுதி தானா? இல்லை. தகுதி என்பது இனிமேல் வளர்த்துக்கொள்ளப்பட வேண்டிய, முழுமையான புரிதல் சார்ந்தது. சரியான புரிதல் இன்றி தேர்வுகளை பாஸ் செய்துள்ளோம் என்று புரிந்து கொண்டால், தகுதியை இனிமேல் வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என்பது விளங்கும்.

ஆக, கல்வியில் 3 முக்கிய நிலைகளை உணரலாம்

1 QUALIFIED        2  EDUCATED   3  EQUPPED   

 ஆசிரியர் அனைவரும் QUALIFIED [கல்வி பெற்றோரே ] அவர்களில் சிலர் EDUCATED [கல்வியின் பலனை புரிந்து கொண்டோர்] . 3 ஆசிரியரில்  வெகு சிலரே EQUIPPED [ஆசிரியப்பணிக்கு வேண்டிய பெரும்பாலான செயல் திறன்களை வடிவமைத்துக்கொண்டோர்]. அதனால் கொண்டாடப்படும் ஆசிரியர் [EQUPPED] எண்ணிக்கை குறைவாகவும் , திண்டாடும் ஆசிரியர்களின் [QUALIFIED]  எண்ணிக்கை மிகுந்தும் உள்ளது.  இவற்றின் இடையே ஆசிரியர் என ஏற்றுக்கொள்ளப்பட்டோர் [EDUCATED] எண்ணிக்கை சுமார் 12-15% அளவில் இருப்பதைக்காணலாம். இந்த மூன்று பிரிவினரும் ஆசிரிய நிலையில் கடைப்பிடிக்கும் தொழில் திறன் மேம்பாடு அடிப்படையிலேயே மாணவர் இடையே ஈர்ப்பும், ஏற்பும் , அன்பும் பாராட்டும் , கேட்காமலேயே பெறுகின்றனர். எனவே, திறன் மேம்பாடு எந்த நிலையிலும் கைவிட்டுவிடக்கூடிய 'தாற்காலிகம்' அல்ல. உங்களுக்கு நற்பெயர் இலக்கு என்றால் அதற்கான செயல் வடிவம் தான் செயல் மேம்பாடு. அது-- தகவல் மற்றும் அதனை பிறர் விளங்கிக்கொள்ளும் வடிவில் எடுத்து ச்சொல்லும் திறன் வடிவமைப்பும். நாம் அறிந்தது என்ன என்பதை கடந்து , நம்மால் பிறரை அறியவைக்கும் திறன் வலிமை யாது என்பதே உங்களின் ஆசிரிய பிம்பத்தின் வடிவமும் அடையாளமும்.

ஏனைய எந்த விருதும் உங்களின் ஆசிரியப் பெருமையை இம்மியும் உயர்த்தாது.. எனவே தொழில் திறன் சார்ந்த பிம்பம் எந்த தாக்குதலுக்கும் சிதையாது ஏனெனில் அது மாணவ   /மாணவியர் மனங்களில்  குடியுறையும் தெய்வீக பிம்பம். அதை எட்ட முயலுவது ஆசிரியரின் தொழில் முன்னேற்றத்தின் முறையான முதல் முயற்சி .

தொடரும்                            அன்பன் ராமன்

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...