Saturday, June 15, 2024

TEACHER—BEYOND YOUR IMAGE …

 TEACHER—BEYOND YOUR IMAGE …

ஆசிரியர் -- உங்கள்  பிம்பத்தை தாண்டி..

சிரியரின் பிம்பம் மிக அவசியமென வலியுறுத்தி வந்ததால் பிம்பம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு எந்த ஆசிரியனும் தரம் இழத்தல் கூடாது . ஆசிரிய பிம்பம் என்பது போதித்தல் பணிக்கு வலுசேர்ப்பதாக அமைய வேண்டிய பிற உடல்/உருவ/ பண்பாடு சார்ந்த கட்டமைப்புகள். எனவே இவை மாத்திரமே ஆசிரியரின் பெருமையையோ செயல் திறனையையோ உயர்த்துமா எனில் --நிச்சயம் இல்லை  என்று ஆணித்தரமாக சொல்லலாம். ஆசிரிய பிம்பத்தின் உயிர் நாடியே செயல் பாடுதான் .ஆசிரியர் வெளிப்படுத்தும் வகுப்பறை செயல் பாடுகள் கொண்டே தன்னை உயர் பீடத்தில் நிறுவிட .இயலும் என்ற அடிப்படை உண்மையை எப்போதும் நினைவில் கொள்ளுதல் அவசியம் அப்படி எனில் செயல் குறித்த தேவைகள் என்ன என்று பேசுவோம்.

1 போதித்தல்

போதித்தல் என்பது புத்தகத்தையோ /எழுதிவைத்த கருத்தையோ செய்தி வாசிப்பவர் போல வாசிப்பதல்ல. இன்றைய கால கட்டத்தில் பல கல்லூரி ஆசிரியர்கள் வகுப்பறையில்வாசித்தல்   தான் போதித்தல் என்று அதை மேற்கொள்கின்றனர் .அதாவது படிக்கின்றனர். விளக்குவதோ, பொருள் குறித்த தெளிவு ஏற்படுத்தலோ இன்றி முன்னரே எழுதிவைத்ததைபடிக்க, அதை பயில்வோர் கர்மசிரத்தையாக எழுதி [சிறிதும் புரிதல் இன்றிதமது நோட் புத்தகத்தின் பக்கங்களை நிரப்புகின்றனர்.  

இந்த அணுகுமுறையில் கற்ற மாணவ மாணவியர் , அவர் எழுதிவைத்த நோட்டை இப்போது வகுப்பறையில் வாசிக்க , இன்றைய பயில்வோர் அதை எழுதிகொண்டு கற்றுக்கொண்டதாக ஒரு மாயையில் உலவி வருகின்றனர். அதாவது இவர்கள் கைகளில் தவழும் நோட்ஸ் சுமார் 18- 20 ஆண்டுகள் பழமையானது

அதைவிட கொடுமை -எந்த சொல்லுக்கும் பொருளோ பயன்பாடு என்ன என்றோ உணராமல் நான் PG பாஸ் , M.Phil  பாஸ் என்று பெரும் உவகை கொள்கின்றனர். இந்த அளவே பயிற்சி பெற்றவர்கள் நல்ல ஆசிரியராக செயல் படுவது வெறும் கனவு. எனவே  கனவைக்கலைத்துவிட்டு வெளியே வாருங்கள். அனைத்தையும் புதிதாக பயிலுங்கள் . என்ன புதிதாகவா ? என்று பொங்காதீர்கள். பழைய பிழைகளையும் ஒவ்வாத கருத்துகளையும் அகற்றாமல் நல்ல ஆசிரியர் என்ற இலக்கை எட்ட முடியாது.

ஆகச்சிறந்த நூலாசிரியர்கள் ஆக்கங்கங்களை ஆழ்ந்து படியுங்கள். ஒவ்வொரு சொல்லையும் புரிந்து படியுங்கள். ஒரு பகுதியை பலமுறை படியுங்கள் .மெல்ல மெல்ல தெளிவு பிறப்பதை உணர்வீர்கள் . ஐயோ இந்தக்கருத்தை எவ்வளவு தவறாகப்புரிந்து வைத்திருந்தேன் என்று சஞ்சலம் கொள்வீர்கள். ஆம், எதையும் சரியாகப்புரிந்து கொள்ளவேண்டும் என்ற தேடுதலை நோக்கி பயணிப்பீர்கள்.

ஆம்-- உங்கள் அகக்கண் திறந்து விட்டது ; நீங்கள் ஆசிரியன் என்ற அவதாரம் நோக்கி பயணிக்க தயார் ஆகிவிட்டீர்கள். இந்த மலர்ச்சிதான் ஆசிரியன் என்பவனது உள்ளத்தில் பெரும் தீச்சுவாலையாக விஸ்வரூபம் கொண்டு கற்பித்தல் கலையின் நுணுக்கங்களை நோக்கி அவனை நகர்த்தும் . இது சர்வ நிச்சயம்.  .

எனவே ஆசிரியன் என்ற பெரும் அங்கீகாரம் வாய்த்திட , தனி மனித திறன் [கற்பித்தல் பணியில்] எந்த அளவுக்கு உச்சம் தொடுகிறதோ அதற்கேற்ப , அவர் நினைத்திராத உயரத்திற்கு பயில்வோர் அவ்வாசிரியரை உயர்த்தி பெருமைப்படுத்தி உவகை கொள்வதை இன்றும் காணலாம். ஆனால் இந்த வகை புகழை மனதில் தாங்கிக்கொண்டு பணியில் பயணிப்பது உதவாது. ஏனெனில் ஆசிரியர் தன்னை தனது ஆசிரியப்பணிகுறித்த  எல்லைகளுக்குள் நின்றுகொண்டு சிறப்பாக போதிக்கும் போது , அவரது பிம்பம் பன்மடங்கு உயர்கிறது.

அதாவது செயல் வடிவம் ஆசிரியனின் பங்களிப்பு, பிம்பக்கட்டமைப்பு /வடிவமைப்பு சமூக அங்கீகாரம்.. 

எந்த பணியாளரும்,  சமூகஅங்கீகாரத்தை தனது இலக்காக கொள்ள இயலாது. மாறாக செயல் திறனை மென்மேலும் அதிகரிக்க வேண்டியவற்றிற்கான நுணுக்கங்களை பின்பற்றி முன்னேறும் போது அங்கீகாரம் அந்தப்பணியாளர் மீது இயற்கை வழங்கிய கொடையாகப் படரும்.   எனவே, செயல் திறன் / தனிமனித ஒழுக்கம் இவ்விரண்டிலும் ஆசிரியர் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம் என்பதையும் கடந்து மிகப்பெரும் பண்பாளர் என்ற பெருமையும் சேரும்.

செயல் திறன் மேம்பாடு

ஆசிரியப்பணியில்,செயல் திறன் என்பது பெரும்பாலும் [90%] போதிக்கும் திறன்/ அக்கறை இவ்விரண்டின் தொகுப்பே எனில் மிகை அல்ல.

எளிய மொழியில் சொல்வதானால் , போதிக்கும் திறன் என்பது குறைந்த நேரத்தில் தகவலை பயில்வோர் புரிந்துகொள்ள ஏற்ற வகையில் பேசுவது. ஆசிரியன் வாய் வழிச்செய்தி யாக வே கற்பிக்கிறார். எனவே அவர் பேச, பிறர் புரிந்துகொள்ள என்ற செயல் முறை தான் கற்பித்தல் எனப்படுகிறது. ஒரு ஆசிரியன் நன்கு கற்பிக்கிறான் என்றால் அது என்ன?

அவன் சொல்வது பெரும்பாலான பயில்வோருக்கு குழப்பம் ஏற்படுத்தாமல் இருக்கிறது /மற்றும் நன்கு "புரிகிறது".

பலருக்கும் "புரிகிறது" என்பது ஆசிரிய முயற்சியின் பலன். இந்த முயற்சி பலன் தருகிறது என்றால் என்ன பொருள்? பயில்வோர் பெற்ற பலன் மட்டும் தான் வெளியே தெரியவேண்டும். அதற்கு ஆசிரியன் எடுத்த முயற்சி வெளியே தெரிவது வெற்றியல்ல.. ஆசிரியன் உழைப்பு பேசு பொருள் ஆகாமல் அவரின் மாணவர் பெரும் வெற்றி பேசுபொருள் ஆவதும் தான்ஆசிரியரின்  திறமையான செயல்பாட்டுக்கு அடையாளம்.

மாணவர்கள் சிலாகித்து சொல்வது அவர் மிக எளிதாக கற்பிப்பார் , அவர் வகுப்பில் பாடம் கேட்டால் போதும் , நன்றாக விளங்கிக்கொள்ள முடியும்.

இந்தப்பாராட்டு, எத்துணை பேருக்கு கிடைக்கிறது? அப்படி உழைப்பவருக்குத்தான் கிடைக்கும்.  ஆசிரியப்பணியில் சேர்ந்தவனுக்கெல்லாம்   அல்ல.

மாணவனுக்கென்ன தெரியும் என்று ஏகடீயம்   பேசும் ஆசிரியர்களே, நன்கு உணருங்கள்--எவ்வளவு தெளிவாக ஆசிரியர்களை மாணவர்கள் மதிப்பிடுகிறார்கக்ள்.

பயனீட்டாளர் தரும் மதிப்பீடு நீடித்துநிலைக்கவல்லது. அது உண்மையான திறமைக்கே கிடைக்கும் 

சரி அந்த நிலையை எட்டுவது எப்படி?

அது உண்மையிலேயே அடைய நினைப்பவருக்கே கைகூடும் . ஆம்  ஆசிரியன் போதிப்பது எப்படி என்று கற்க வேண்டும் . நான் எப்போதோ எல்லா பட்டங்களும் பெற்றுவிட்டேன் இன்னும் படிக்க என்ன இருக்கிறது என்றொருவர் இறுமாப்பு கொள்வாரெனில் அவர் ஆசிரியப்பணியில் உயரம் எட்ட இயலாது. மாறாக ஜவாடால் பேச்சு பேசி பிறரிடம் அவப்பெயர் பெறப்போகிறார் என்பதை இப்போதே சொல்லலாம். போதிப்பவன் தன்னை மாணவன் நிலைக்கு இறக்கிக்கொள்ள வேண்டும் . ஒரு மாணவன் இந்தப்பாடத்தை எப்படி  பார்த்து புரிந்து கொள்வான் என தீவிர மாக யோசித்தால் -பெரும் பாலும் எல்லாவற்றையும் விளக்கிச்சொல்ல வேண்டிய கட்டாயம் 'தனக்கு இருப்பதாக' ஆசிரியர் உணர்வார். அவ்வகை ஆசிரியர் இது தான் தெரியுமே அதை பின்னர் பார்க்கலாம் என்று கடந்து போகாமல் உரிய விளக்கங்கள் தந்து பலரையும் தன்பால் ஈர்ப்பார்.. இது தான் வெற்றியின் முதல்படிக்கு அருகில் செல்லும் முயற்சி.

தொடரும்

அன்பன் ராமன்   

No comments:

Post a Comment

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...