Tuesday, July 2, 2024

AFFECTION / REGULATION

AFFECTION / REGULATION

கனிவும், கட்டுப்பாடும்   

கனிவு , கண்டிப்பு --இவ்விரண்டு சொற்களும் பொருளளவில் வேறுபட்டாலும், செயல் விளைவில் நெருக்கமானவை. ஏனெனில் , தனியே  கனிவோ, கண்டிப்போ முற்றிலும் பின்பற்ற இயலாது.

ஆம், கனிவு மட்டுமே அறிந்தோர் துணிச்சலும், முயன்று முன்னேற  முயற்சியும் இன்றி குன்றிப்போய்   வாலிப வயதிலும் தாயாரின் முகம் காண ஏங்கிக்கொண்டே வளர்ந்து வேலைக்குப்போய் 10-12 நாட்களில் என்று அழுதுகொண்டு வேலையை விட்டு விட்டு திடீரென்று அம்மா என்று வீட்டு வாசலில் வந்து நிற்பதை என்ன சொல்ல?

இவர்கள் மனதளவில் கோழைகள், குறிப்பிட்ட உறவுகள் அருகில் இருக்க வேண்டும்இன்றேல் எதையோ பறிகொடுத்தது  போல் பித்து கொண்டவன் போல் வெற்றிடத்தை நோக்கி அமர்ந்துகொண்டு எந்த முன்னெடுப்பும் இன்றி அமர்ந்திருப்பவர்கள்.

இவர்களுக்கு திருமணம் செய்துவைத்து விட , அந்தப்பெண்ணின் நிலை சொல்லவொண்ணாப் பரிதாபம் ; அளவுக்கு மீறிய தாய்ப்பாசம்இவர்களின்  கண்ணை மறைக்க , திகைத்து நிற்பவர்கள். வெளியூரில் வேலைக்கு போகாதவர்கள் .வேளைக்கு, தாயின் கையால் மட்டுமே சாப்பிடவேண்டும் என்று ஒரு மன நோயாளியாகவே இருக்கும் சிலரை நீங்களே பார்த்திருக்கக்கூடும்.

நான் சொல்லியிருப்பதில், எள்ளளவும் கற்பனை இல்லை.

 இதன் அடித்தளம் தான், எப்போதும் கனிவையே அறிந்த மனம். கண்டிப்பை அறியாததால், கண்டிப்பாய் ,துண்டிப்பை தாங்காத மனம் -அதுதான் வேலையைக்கூட உதறிவிட்டு வீடு திரும்ப வைக்கிறது.

எதற்கெடுத்தாலும் குழந்தைக்கு வக்காலத்து வாங்கும் தாய்மார்களே ஒன்றை உணரிவீர் 'உங்களையும் அறியாமல் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை நீங்களே குழிதோண்டி புதைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.. 

ஆம், பாசம் பாயசம் போன்றது.  அளவோடு இருக்கவேண்டும். கண்டிப்பு ஊறுகாய் போன்றது சுரீர் என்று உரைத்தாலும் [உறைத்தாலும்], அது மிக எளிதாக நிலைமையை மாற்ற வல்லது.    ஆகவே தான், கனிவு ஒரு புறம் கண்டிப்பு மறுபுறம் என்றே  செயல் பட வேண்டும்..

மிகச்சிறு வயதில் குழந்தைகளுக்கு,  கனிவும் அரவணைப்பும் தேவை . போகப்போக கனிவை அளவாகவும் கண்டிப்பை  விரைந்தும் வெளிப்படுத்தினால் , குழந்தை புரிந்து கொள்ளும் -எது ஏற்றுக்கொள்வர் எதை வெறுப்பர் இரண்டையும் புரிந்து. அதற்கேற்றார்  போல் நடந்து கொள்ளும் .

தன் வேலைகளை தானே செய்துகொள்ளப்பழக்குங்கள். வயது ஏறஏற தான் தனது , பிறர் அவரது என்ற வேற்றுமைகளை நன்கு உணர. சூழல் ஏற்படும்.

இதனால் எதற்கும் போட்டி போடும் . போட்டி போடட்டும் ; தண்டிக்காதீர்கள் கண்டியுங்கள் -புரிந்து கொள்ளும். இவ்வனைத்தையும் விட தன்னை பிறர் புறக்கணிக்க முடியாதபடி பேசும், வாதிடும் , எதிர்வாதம் புரியும் , ரசியுங்கள், தட்டிக்கொடுத்து தவறெனில் சுட்டிக்காட்டுங்கள்

குழந்தை தானே என்று செல்லம் கொடுத்து முன்னிலைப்படுத்தாதீர்கள். போராடித்தான் வாழவேண்டும் என குழந்தை  புரிந்து கொண்டு , எதற்கும் தன்னை வலுப்படுத்திக்கொள்ளும்

இந்த வகை போராட்ட சூழலில் வளரும் குழந்தைகள் 'தோல்விகளுக்கு' துவளவோ அஞ்சவோ மாட்டார்கள். அடி , உதை வாதம் விவாதம் எதுவும் அவர்களை அந்நியப்படுத்தாது  . மாறாக இது எனதுரிமை என்று எவரோடும் போட்டியிடும்.. இதுதான் மனதில் 'சூழலை சமாளிக்கும்" உத்திகளை கற்பிக்கு ம் .

மார்க் குறைவு என்று துன்புறுத்தாதீர்கள். எதற்கும் போட்டிக்கு வருவாயே, அதுபோல் படிப்பிலும் போட்டி போடு என்று உசுப்பேத்துங்கள் . கேலி பேசி அசிங்கப்படுத்தாதீர்கள்.

குழந்தைகள் அபார அறியும் திறனும் நினைவாற்றலும் உடையவர்கள். அன்றொன்று , இன்றொன்று என்று பேச்சை மாற்றினால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்

மாறாக பெரியவர்கள் பொய் பேசுகிறார்கள்; நாமும் பேசினால் என்ன என்று மனம் எண்ணம் கொள்ளும்.   இப்படித்தான் துன்பத்திற்கு பதில் பொய் சொல்லி தப்பித்துவிடலாம் என்று திட்டமிடும் குழந்தைகள்

அவர்களை 'பாவம்" என்ன தெரியும் என்று கணக்கு போடாதீர்கள். அவர்களுக்கு எப்போது எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று தெரியும். அப்படி கிளம்பினால்  அவர்களை பேசி சமாளிப்பது   கடினம் . அதற்காக உடல்ரீதியாக அடித்து திருத்த நினைக்காதீர்கள்

இவை தான் ஒரு குழந்தையை செம்மைப்படுத்தி முன்னேறவும், முட்டுக்கட்டைகளை எதிர்த்து முன்னேறவும் வளப்படுத்தும். எனவே கனிவும், கண்டிப்பும் உரிய நேரங்களில் சரியான அளவில் வெளிப்பட்டால், நல்ல பிரஜைகளாக குழந்தைகள் வளர்ந்து பெற்றோருக்கு பெருமையையும் அமைதியையும்  .ஈட்டித்தரும்.

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

SALEM SUNDARI- 29

  SALEM SUNDARI- 29 சேலம் சுந்தரி -29 உங்கள தெரியாம திருச்சியில் யார் இருப்பாங்க அல்லது உங்களுக்கு தெரியாதவங்க திருச்சியில் இ...