Teacher –Beyond your Image- 4
ஆசியர் -- உங்கள் பிம்பத்தை தாண்டி -4,
2 செயல் வடிவம்
பெயர் உணர்த்தும் பொருள் போலவே இது செயல் என்னும் பணி சார்ந்தது. இதையும் இரு முக்கிய பகுதிகளாக பிரித்து புரிந்து கொள்ளலாம்.
செயல் வடிவம்-I [அறிவு சார் கட்டமைப்பு ],
செயல் வடிவம் -II [ வகுப்பறை செயல் சார் நுணுக்கங்கள் ]
செயல் வடிவம் -I
இதன் ஆழ பரிமாணங்கள் வெளியே புலப்படாதவை. ஆனால், இதன் வலிமையில் தான் ஆசிரியரின் செயல் திறன் பளிச்சிடும். எனவே செயல் வடிவம் -II என்பது செயல் வடிவம் -I இன் வெளிப்பாடே . செயல் வடிவம் 1 தனி மனித அறிவின் பரிமாணங்களை மேம்படுத்தும். செயல் வடிவம்-2 பயில்வோர் மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும். ஆகவே நல்ல திறன் கொண்ட ஆசிரியன் அடிப்படையில் நல்ல ஞான வேட்கையும், தளராத தேடல் முயற்சியும் கொண்டவனாக இருப்பான் .
சரி நல்ல ஞான வேட்கை கொண்டவன் நல்ல ஆசிரியனா ? எனில் பல நேரங்களில் இல்லை என்றே சொல்லலாம். இதனால் தான் மிகச்சிறந்த மதிப்பெண் ஈட்டி , பதக்கம் பெற்ற பலர் ஆசிரியப்பணியில் அதலபாதாளத்தோல்விகள் ஆனதை நாம் அறிவோம். இந்த விசித்திரத்தை எப்படி விளக்குவது?
தான் புரிந்து கொண்டு பதக்கம் வாங்கிய திறமையாளன், பிறர்க்கு புரிய வைக்கும் திறன் நோக்கி தன்னை கட்டமைத்துக்கொள்ளாதவன் ;எனவே மெடல் வாங்கியும் மாணவர்களிடம் "வசவு"
வாங்குகிறான்
கற்றல் வேறு , கற்பித்தல் வேறு . இப்போது புரிகிறதா ? "இருக்கவே இருக்கு வாத்தியார் வேலை என்று வீர வசனம் பேசிய எவனும் ஆசிரியப்பணியின் உள்ளார்ந்த -பிறர்க்குரைக்கும் நளினம் குறித்து எள்ளளவும் அறியாதவன் என்பது?
அது மட்டுமல்ல, ஆசிரியப்பணியின் பரிமாணம் உணர்ந்தவன் அர்ப்பணிப்பை நோக்கி பயணிப்பான் அற்ப விளம்பரம் நோக்கி அல்ல. செயல் வடிவம் ஒன்றின் பண்புஎன்பது " தன்னை முற்றாக ஆசிரியப்பணிக்கு ஏற்ப அர்ப்பணித்து, விடா முயற்சியால் மென்மேலும் தகவல் சேகரித்து , சரியான அளவில் மாணாக்கருக்கு வழங்கி , தொடர்ந்து தன்னையும் மேம்படுத்தி க்கொள்ளும் -வேள்வி" என்றே அடையாளப்படுத்தலாம்
மேம்படுத்துதல்
இது ஒவ்வொரு ஆசிரியரும் தான் போதிக்க இருக்கும் பாடப்பகுதிகள் பற்றிய விரிவான/ தெளிவான கண்ணோட்டம் சார்ந்தது.இதில் சமரசம் செய்வோர் பெரும்பாலும் முன்னேற்றம் பெறுவதில்லை, மாறாக தேக்க நிலையில் தங்கிவிடுவது வெகு இயல்பான ஒன்று. முன்னேற்றம் என்பது எப்போதும் தேவைக்கு அதிகமான தகவல் சேகரிக்கும் உத்தி சார்ந்தது.
இவ்வகை ஆசிரியர்கள், பாடத்திட்ட விரிவாக்கங்கள் /மேம்பாடுகள் குறித்து ஐயம் , அச்சம் , தயக்கம் இன்றி முன்னேற எப்போதும் தயார் நிலையில் இருப்போர். ஏனெனில் பொதுவாகவே சமகால வளர்ச்சிகளோடு [contemporary development ] பயணிப்பவர்கள். இதனால் வகுப்புகளில் கூடுதல் தகவல், விளக்கம் மற்றும் அவற்றின் விரிவாக்கம் பற்றி தெளிவாக விவாதிக்கும் வல்லமை கொண்டவர்கள். மேம்பாடு கொள்ளுதல் இவர்களின் அன்றாட வாழ்முறை.
ஆகவே சிலபஸ் [syllabus] தேவைகளுக்கு விரைவாக ஈடு கொடுக்கும் நிலையில் இருக்கும் "updated " டீச்சர்ஸ். இதுபோல் உயரம் தொட நல்ல நூல்களை படிப்பது, ஒன்றுக்கு மேற்பட்ட உயர்தர புத்தகங்களை ஊன்றி படித்தால் பல தரப்பட்ட பார்வைகளும் விளக்கங்களும் கிடைக்கும் . எனவே நமது கருத்தியல் அடிப்படை ஆழமும் வலுவும் பெற்று , வகுப்பறை வாதங்கள் வெகு நேர்த்தியாக பயணிக்கும். மாணவர்களும் ஒரு பொருளை எவ்வாறு ஆழ்ந்து விவாதிக்க வேண்டும் என நேரடி அனுபவமாக உணர்வர்."பல நூல் படித்து நீ அறியும் கல்வி" என்று கண்ணதாசன் பாடலில் வரும் ."பல நூல் படித்து " என்று வெவ்வேறு நூல் வழியே கற்றலை உயர்த்தி சொல்வதை பார்த்தால் ஏன் 2 புத்தகத்தை நம்பி போதிக்க முயலக்கூடாது என்று விளங்கும்.
தொடர்புடைய சஞ்சிகைகளை [journals ] படிக்க உலக அரங்கில் உலவும் கருத்துகளையும் உள்வாங்கி நமது பார்வை விரிவடையும். அவற்றுள் வரும் விளக்கப்படங்கள் கொண்டு கருத்துகளை விளக்கும் பாங்கினையும் நன்கறியலாம். இவை அனைத்தையும் "நாம் விளங்கிக்கொள்ள" குறிப்பெடுங்கள்
அதையே நோட் ஸாக பயன் படுத்தாதீர்கள்.அவற்றில் இருந்து பெற்ற கருத்தை உங்கள் புரிதலுக்கேற்ப விளக்குங்கள். இவ்வாறு செய்ய செய்ய காகிதம் பார்த்து படிக்கும் அவலம் நீங்கி , விரிவான விளக்கம் தரும் ஆற்றல் நம்மிடம் குடியேறும் . அது உங்களை மென்மேலும் படித்து அறிவு மேம்பாடு நோக்கி பயணிக்க உதவும்.
இவ்வாறு ஆசிரியர் தனது அறிவின் கட்டமைப்பை பேணி வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வகை தொடர் முயற்சிகளால், உங்களின் மொழி ஆளுமையும் வாதத்திறனும் மெருகுஏறி உங்களின் ஆளுமை பலரையும் கவரும் .
தொடரும்
அன்பன்ராமன்
No comments:
Post a Comment