Sunday, August 4, 2024

TEACHER- BEYOND YOUR IMAGE-8

 TEACHER- BEYOND YOUR IMAGE-8

ஆசிரியர்- உங்கள் பிம்பத்தை தாண்டி- .  8

ஆசிரியன் என்ற பெருமையை அடையவும் தக்கவைத்துக்கொள்ளவும் செயல் முறைகள் யாவை.?  பேசுவோம்.

சொந்தக்காலில் நிற்பது

முன்னம் ஒரு பதிவில் மாணவர் சொந்தக்காலில் நிற்பது குறித்து பேசி இருந்தேன் . அந்நிலை ஏற்பட, ஆசிரியர்கள் முன்னெடுப்பு பேருதவி புரியும். ஆம் ஆசிரியர் சொந்தக்காலில் நிற்பது சரியான முன் உதாரணம் எனில் தவறாகுமோ?.

சொல்லப்போனால், அதுதான் ஊக்குவிப்பு உத்தி மற்றும் மந்திரம். எனவே அது குறித்து சில செயல் முறைகளை அறிதல் நலம்

அம்முயற்சியில் முதல் படி-- முக்கிய விவரங்களை திரட்டி, முறையாக வரிசைப்படுத்தி வைப்பது. அவ்வரிசையை, பிறழாமல் நினைவு படுத்தி பேசும் பயிற்சியை மேற்கொள்வது. அவ்வாறு பயிற்சி செய்யும்போது எண்ணற்ற தகவல்களை செழிப்பாகவும் சிறப்பாகவும் பேசும் வல்லமை நம் வசப்படும். இதில் ஒரு முக்கிய அணுகுமுறை -அனைத்தையும் எழுதி எழுதி ப்பார்த்து அவற்றின் மீது ஈர்ப்பும் ஏற்பும் உருவாகி அதன் விளைவாக தன்னம்பிக்கை மேம்படும்.

தன்னம்பிக்கை இல்லாத எவரும் ஆசிரியப்பணியில் ஆளுமைமிக்க பெருமானாக உலவ இயலாது. தகவல் செழுமையும் சொல்லாட்சியும் ஆசிரியனை பெரும் திறமையாளராக சிறப்பான அங்கீகாரம் கிடைக்க செய்யும்.. இதில் அடிப்படை --தகவலின் செழுமையும், தொகுப்பின் முழுமையும் ஒருவரிடம் . ஒரு சேர அமைந்தால், அவரே கொண்டாடப்படுவார். இது சத்தியம். 

எழுதி எழுதி பார்ப்பது ஒரு நினைவாற்றல் மேம்பாடு உத்தி. படித்த எதையும் விட ஓரிருமுறை எழுதிய எதுவும் நினைவில் நீண்ட குடியிருப்பு கொள்ளும். சிலர் 3 முறை எழுதுதல் 5,6 முறை படிப்பதற்கு சமம் என்று அனுபவமாக சொல்லக்காணலாம். எழுதும்போது கவனச்சிதறல் வெகுவாக குறைந்துவிடும். அதுவும் ஒரு நினைவாற்றல் வலிமைக்கு உறுதுணை ஆகும்.

இவை பொதுவாக சுயசார்பு /சொந்தக்காலில் நிற்கும் பயிற்சி முறைகள்.ஆரம்பத்தில் இதன் வீரியம் புரியாது. இவற்றை செயல்படுத்தி பலன் அறிந்தால், இது தான் ஆகச்- சிறந்த நம்பகமான அணுகுமுறை என்று உணர்வீர்.  மிகப்பெரிய மாற்றம் யாதெனில், சரியான வலுவான தன்னம்பிக்கை. ஏன் எனில் அனைத்து தகவல்களும் முறையாக புரிந்துகொள்ளப்பட்டு உரிய சீரான வரிசையில் தொகுக்கப்பட்டு, மனம் தயார் நிலையில் இருக்க வகுப்பில் உங்களின் கம்பீரம் எவரையும் ஆட்கொள்ளும்.

அறிந்தவன் சொல்லுக்கும் பாசாங்கு மொழிக்கும் மிடையே உள்ளவேறுபாடு குழந்தைக்கும் தெரியும்; அவ்வாறிருக்க உயர் பயில் நிலை மாணவ, மாணவியர், எளிதில் ஆசிரிய திறன் எவ்வளவு என புரிந்துகொள்வர். திறமையற்ற ஆசிரியர் முன்னிலையில் அவர்கள் பேசுவதில்லை: எனவே நமது செயல்பாடுகளை ஏற்றுக்கொள்கின்றனர் என எண்ணுதல் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளுதல் என்பதே.

அவ்வகை ஆசிரியர்கள் பொதுவெளிகளில், சினிமா அரங்குகளில் மைதானங்களில், காய்கறி சந்தைகளில் நார் நாராக கிழிக்கப்பட்டு மிகக்கேவலமாக விமரிசிக்கப்படுவதை நேரில் அறிந்தால் ஒன்று தங்களை திருத்திக்கொள்வர் இன்றேல் வேறு வேலை தேடத்துவங்குவர். அந்த வகை அவமானம் எவர்க்கும் நிகழக்கூடாது .ஆனால் அதை [அவமானத்தை]   பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்பது.-தொழில் மாட்சிமை இல்லாத தகுதியற்ற ஆசிரியர்களே என்பதை பார்க்கும் போது இவர்களை உதைக்காமல் விட்டுவைத்திருக்கிரறார்கள் என்பதே சிறு ஆறுதல் தான். ஆசிரியப்பணி வழங்கும் விளைவு பல தலைமுறையினரின் எதிர்கால முன்னேற்றம்/ மேம்பாடு தொடர்பானது என ஆசிரியர் ஒவ்வொருவரும் உணர்தல் சீரிய பயணத்துக்கு உதவும்

ஆசிரியப்பணியின் பெரும் அங்கம் தன்னை அன்றாட வகுப்புத்தேவைகளுக்கென ஒவ்வொருநாளும் கட்டமைத்துக்கொள்ளுதல் ஆகும் . அநேக பிற பணிகள் பணியிடத்தில் .மட்டுமே துவங்கும். ஆனால், ஆசிரியப்பணியிலிரண்டு பகுதிகள் 1 பணிக்கென அறிந்துகொண்டு தயார் செய்துகொள்ளுதல்

2 செயல் களம் [வகுப்பறை] அறிந்தவற்றை சுவை குன்றாது விளக்குதல் . இரண்டாம் கட்ட வெற்றி முதல் கட்டத்தின் வலிமை சார்ந்தது ; அதைப்போன்றே எவ்வளவு நேர்த்தியான தயார்நிலையும், இரண்டாம் கட்டம் ஈட்டும் வெற்றியின் தரம் கொண்டே நிர்ணயமாகும்.ஆக ஒன்றில்லாமல் மற்றது இல்லை என்பதே ஆசிரியப்பணியின் அடிப்படை நுணுக்கம் . எனவே ஆசிரியப்பணியில் தன்னை பெரும் ஆளுமை என பெருமை சேர்க்க விரும்புவோர் , ஒவ்வொரு செயல் சார்ந்த .அணுகுமுறையையும் சிறப்பாக புரிந்துகொண்டு , கடுமையான உழைப்பின் மூலம் உன்னத செயல்திறன் ஏற்படுத்திக்கொண்டுஅதன் பின்னரே  வகுப்பறைகளை சந்திப்பது என்று கடைபிடித்தால், தடுமாற்றங்கள் உளறல்கள் , முன் பின் முரண்கள் இன்றி வெகு இயல்பாக வகுப்புகளை கையாள இயலும். இவ்வளவு செயல் முயற்சிகளும் தனி மனித உழைப்பு என்று உணர்ந்தால் "preparation for class”  என்பது மரியாதைக்குரிய முயற்சி, எனவே அது கேலிப்பொருள் அல்ல என்றுணர முடியும். முன்னெடுத்த ஆசிரியன் தனது உழைப்பை பொக்கிஷப்படுத்த வேண்டும்.

ஆம் அனைத்து கருத்துகளையும் சீராகத்தொகுத்து, நேர்த்தியான மொழியில் முழு கட்டுரைகளாக எழுதி வைத்துகொள்ள, படிப்படியாக ஒரு பறந்து விரிந்த  ஞானம்  கொண்டு பல பகுதிகளை நேர்த்தியாக விளக்கும் அளவுக்கு புரிந்து கொண்ட ஆசிரியன் என்ற உயர்நிலை எய்துவர். அந்த சூழலில், இந்த நெடிய கட்டுரைத்தொகுப்பில் இருந்து சிறு குறிப்புகளாக பிரித்து வைத்துக்கொள்ள ஆசிரியன் பெரும் போர் வீரன் போல அனைத்து கருவிகளையும் இயக்கும்  தளபதி ஆகிறார். இவ்வளவு தயார் நிலையை எட்டிய ஆசிரியன் எப்படி தோல்வியுறுவான்.? மாறாக அவன் களம் காணும் அழகு அனைவரையும் வசீகரித்து பணிவு கொள்ள வைக்கும்

வளரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

OLD MOVIE SONGS -4

  OLD MOVIE SONGS -4 பழைய திரைப்படப் பாடல்கள்-4 சென்ற பதிவில் கலைக்கோயில் படத்தில் " நான் உன்னை சேர்ந்த செல்வம் " பாட...