Sunday, August 11, 2024

TEACHER- BEYOND YOUR IMAGE-9

 TEACHER- BEYOND YOUR IMAGE-9

ஆசிரியர்- உங்கள் பிம்பத்தை தாண்டி- .9

நான் ஏதோ கற்பனை கோபுரத்தில் இருந்து கருத்துகளை சொல்வதாக எண்ண   வேண்டாம். ஏனெனில் நான் குறிப்பிடும் அணுகுமுறைகளை செயல்வடிவில் கடைப்பிடித்து அதன் பலன்களை நேரடியாக துய்த்தவன். ஆகவே , இவை ஏட்டு சுரைக்காய் என்றெண்ணவும்  வேண்டாம் . . நான் வலியுறுத்துவது ஒன்றே தான். ஆம் வெற்றி என்ற இலக்கை பெரிதாக நினைக்கும் எவரும் முயற்சியை துறந்துவிட்டு நானும் ஆசிரியனாக வெற்றி காண்பேன் என்பது பேதைமை மட்டும் அன்று வேதனையும் கூட.

சற்று யோசியுங்கள் உலக அரங்கில் பலவித போட்டிகளில் [விளையாட்டுகளில் கூட] வெற்றி அடைந்தோர் முழு முனைப்பின்றி வெற்றி கண்டதாக செய்தி உண்டா? ஒரு நாளும் இல்லை. ஏன் , ஒவ்வொரு விளையாட்டிலும் தனி மனித செயல் நுணுக்கங்கள் வெளிப்படும் போது பலரையும் திரும்ப வைக்கும். அவ்வாறிருக்க ஆசிரியன் மட்டும் விதிவிலக்காக இருக்கமுடியுமா?. இந்த கருத்தை உள்வாங்குங்கள்..        

திடீரென்று  உங்கள் மதிப்பிற்குரிய ஆசிரியரை நினைவு கூறுங்கள் என்ற கோரிக்கை வந்தால் உங்கள் மனம் யாரை நினைவுகொள்ளும்?                             நன்கு பயிற்று வித்த ஆசானையா? அன்றி, வெட்டிக்கதை பேசி நேர விரயம் செய்த நபர்களையா?

அடுத்த கேள்வி:  உங்கள் மாணவப்பருவத்தில் பள்ளியிலோ/கல்லூரியிலோ/ பல்கலையிலோ பயிற்று வித்த மிகச்சிறந்த ஆசிரியர்கள் 3 அல்லது நால்வர் செயல்களை நினைவுபடுத்திப்பாருங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் களங்களில் மாவீரர்கள்; ஆனால் அவர்கள் அணுகுமுறைகள் ? ஒவ்வொன்றும் தனித்துவமானவை அன்றோ- ஏன்?  போதிப்பதற்கு rules book என்ற சட்ட விதிகள் எதுவும் கிடையாது..

அதனால், நீங்கள் சர்வ சுதந்திரமாக உங்களின் அணுகுமுறைகளை அரங்கேற்றலாம்.

சென்ற பதிப்பில் நான் தெரிவித்திருந்த 'தயாரிப்பு" தகவலுக்கு வருகிறேன். 1. விரிவான கட்டுரையாக ஒரு பாடப்பகுதிக்கு நீங்கள் உருவாக்கி இருக்கும் தகவல்களை பலமுறை படியுங்கள். மீண்டும் மீண்டும் சொல்லிப்பாருங்கள். எங்கெங்கே தடுமாற்றம் நிகழ்கிறதோ அந்த பகுதி [கருத்து] முறையாக உள்வாங்கப்படவில்லை என்ற அறிகுறி தான் தடுமாற்றம். அது போன்ற 'இடர்' பகுதிகளை அவற்றிற்கு முன் இருக்கும் பகுதிமற்றும் , பின் இருக்கும் தொடரும் தகவல் இரண்டுடனும்  பொருத்தி இப்போது மொத்தமாக அம்மூன்றையும் சொல்லிப்பாருங்கள். இடர் நீங்கிவிடும்.

சரி எனக்கு வேறு வேலையே இல்லையா ? நான் என்ன சிறுவனா இப்படி பாடம் ஒப்பிக்க ? என்று குமுறாதீர்கள். மனிதவள மேம்பாடு என்பது மேம்போக்கான கல்வி அல்ல. இப்படி ஒரு பகுதியை நீங்கள் அடிக்கடி ஒத்திகை போல் பார்த்துவர, நீங்கள் நன்றாக பொருள் உணர்ந்த நிலையை அடைவீர்கள். இதை மொத்தமாகத்தான் செய்து நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில்லை. குறைந்தது ஒரு வகுப்பிற்கான தகவல் +15% என்ற அளவில் தயாராகுங்கள்.

இவ்வாறு நீங்கள் உருவாக்கிய தகவல் தொகுப்பு இது என்பதால் உங்களின் புரிதல் மற்றும் பரிச்சயம் [familiarity] வெகு சிறப்பாக இருக்கும்.. இதை வைத்துக்கொண்டு, ஒரு முழு பக்க அளவில் இருக்கும் தகவல்களை சிறுகுறிப்புகளாக பிரித்து இரண்டு சிறு சிறு சதுர சீட்டுகளில் கிரமமாக எழுதி , அவற்றை வரிசை எண் வைத்து உங்கள் கையேடாக தயாரியுங்கள்.. இதுதான் நீங்கள் வகுப்பறைக்குள் எடுத்துச்செல்லும் உதவி.

 புத்தகப்பொதிகளையம், நீண்ட நோட் புத்தகங்களையும் சுமந்து, வகுப்பறைக்குள் நுழையாதீர்கள். அதுவே உங்களை முறையான தயாரிப்பின்றி வகுப்பறைக்கு வரும் ஆசிரியர் என்ற எண்ணத்தை விதைக்கும். பலர் இந்த அறிவுரைகளை ஏற்பதில்லை மாறாக வேலையற்ற வேலை என்று உதாசீனம் செய்கின்றார்கள்.

வகுப்பறையுயில் புத்தகத்தை திறக்கும் செயல், வீட்டில் பொழுதைக்கழித்துவிட்டுஇங்கு வந்து தேடுகிறான் பார்என்று மாணாக்கர்களை அவச்சொல் பேச வைக்கும்.. எனவே, எவ்வளவு உயர் கருத்தாயினும் அப்புத்தகத்தை சுமக்காதீர்கள்,

அந்த கருத்துகளை உங்களின் மனது சுமக்கட்டும்; உடல் சோர்வு மற்றும் இழிவான கருத்து விளைவிக்கும் அவலங்கள் முற்றாக தவிர்க்கப்படும். மேலும், பெரிய அச்சுறுத்தும் புத்தகங்கள், நோட் புத்தகங்கள் இன்றி வகுப்பை சந்திக்கும் ஆசிரியர் , முற்றாக மற்றும் வசமாக தயார் நிலை பெற்றுள்ளார் என்ற எண்ணம் வகுப்பு துவங்கும் முன்னரே பயில்வோர் மனங்களில் நுழையும்.

இவர் என்னதான் சொல்கிறார்?  என்ற ஆர்வம், நிச்சயம் எழும். ஆசிரியர் புத்தகம் பார்த்தால் அது என்ன புத்தகம் என்ற அளவில் தான் மாணாக்கர்கள் கவனம் செலுத்துவர். நாமும் அதே புத்தகத்தை பழையபுத்தகக்கடையில் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைப்பர்.

கருத்துகள் அனைத்தும், வாய்வழியாக வெளிப்படும் போது ஒரு ஈர்ப்பும் அச்சமும் ஒருசேர பயில்வோரைப்பற்றும். அவர்களால் உங்களை புறக்கணிக்க இயலாது.

முறையாக முனைந்து கற்றதை பேசும்போது வேறு வகை அணுகுமுறைகளில் இல்லாத authenticity எனும் நம்பகத்தன்மை பன்மடங்கு அதிகரிக்கும்.. இவை அனைத்தும் கல்லூரி மற்றும் பல்கலை நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பள்ளியில் கூட புத்தகம்//நோட்ஸ் இவை இன்றி வகுப்பில் பே-சுங்கள் , கிடைக்கும் வரவேற்பை பாருங்கள். இவை ஒவ்வொன்றும், ஆசிரியனின் தொழில் திறமைகளை உணர மாணவர்களுக்கு வாய்ப்பாக அமையும். பின்னாளில் நாமும் இதுபோல் செயல்படவேண்டும் என்ற வேட்கையை உள்ளூர பயில்வோர் மனங்களில் விதைக்கும்

நம்பகத்தன்மையை [Authenticity] வலுப்படுத்தும் செயல்கள் / பிற முக்கிய செயல் பாடுகள் குறித்து விரிவாக பேசுவோம்

தொடரும்

அன்பன் ராமன் .

No comments:

Post a Comment

SALEM SUNDARI- 53

SALEM SUNDARI- 53 5  நாட்களுக்கு பின் மாடசாமிகாலை 9.45 க்கு வந்துவிட்டார் பின்னர் ஒவ்வொருவராக வர கடைசியில் 9.57 க்கு சுப்பு ரெத்த...