Tuesday, September 10, 2024

OLD MOVIE SONGS

 OLD MOVIE SONGS

பழைய திரைப்படப் பாடல்கள்

பழைய திரைப்படப்பாடல்கள் என்ற தலைப்பு சிலரை முகம் கறுக்க வைக்கும், பலரை ஆர்வம் கொள்ளச்செய்யும் முகம் கறுப்போர் தாங்கள் சினிமாவை அருவருப்பாக நினைப்பதாகக்காட்டிக்கொள்பவர்கள். அல்லது அதெல்லாம் ஹொன்னப்பா, ஜீவரத்தினம், வசந்தகோகிலம் , பாகவதர் இவர்களோடு போச்சு சார் என்று சினிமா ஏதோ முடங்கினதாக பேசுவோர். ஏனெனில் பின்னர் நிகழ்வுகளில் இவர்கள் நாட்டம் கொள்ள வில்லை அல்லது வேலை நிமித்தம் வேறு வெகு தொலைவு மாநிலத்தில் குடியேறியவர்கள்.

அவர்களின் பார்வையில்-- பெரிய டைரக்டர் .எல்லிஸ் ஆர் டங்கன் , மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் செருகளத்தூர் சாமா, திறமையின்  மொத்த உருவம் காளி . என்   ரத்தினம் ரேஞ்சுக்கு லேட்டஸ்ட் தகவல் களஞ்சியர்கள்.

சிவாஜி என்றால் மராட்டிய வீரன் என்ற ஞானம் உடையோர். அவர்களை விலக்கிவிட்டுப்பார்த்தால், எஞ்சியோர் வெவ்வேறு வகை மற்றும் நிலைகளில் சினிமாப்பாடல்களை அன்றாட வாழ்வியல் அங்கமாக ஏற்றுக்கொண்டவர்கள்.

 நமது தேவையும் களமும் பாடல்களை ஏற்றுக்கொள்வோர் சார்ந்ததே. எனவே அது குறித்துப்பேசுவோம் 

சினிமாப்பாடல்கள் மிக எளிதில் கேட்பவர் மனதில் இடம்பிடிக்கும் வன்மை கொண்டவை.

நாமாக முயன்று கற்றுக்கொண்டு பாடவேண்டிய எந்த வித பயிற்சியும் தேவைப்படாத  ஒரு எளிய பொழுதுபோக்கு அம்சம் தான் சினிமாப்பாடல்கள். அவற்றிலும் பல உத்திகள், வியக்க வைக்கும் கையாளல்கள்,பிற நுணுக்கங்கள் கருவிகளின் மீட்டல்கள் என வெவ்வேறு நுண் அமைப்புகள் உள்ளன.

ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுதல் நலம் .எவ்வளவு முக்கியக்காட்சி ஆயினும் ஒரு பாடல் ஒலிக்கும் நேரம் சுமார் 3 1/2 நிமிட அளவு தான். அதற்குள், கவிஞன் , இசை அமைப்பாளன் பாடகன், பாடகி, இசைக்கலைஞர்கள்என பலரின் பங்களிப்பும் உரியநேரத்தில், உரிய இடத்தில் சரியாக ஒலி கக வேண்டும். . இல்லையெனில் பாடல் மிக கொடூரமாக ஒலிக்கும்.

இதில் நாம் பெரும்பாலும் கவனிக்கத்தவறும் ஒரு மனித பங்களிப்பு சவுண்ட் என்ஜினீயர் எனும் ஒலிப்பதிவு கலைஞனின் கூர்மையான திறன்.

அது என்ன எனில் வெகு நேர்த்தியாக ஒலியை கூட்டியோ குறைத்தோ சரியான எல்லைக்குள் பாடலைப்பதிவிடுவது தான், கருவிகளை மிக மென்மையாக இசைத்தால் சில நுண் ஒலிகள் சரியாகப்பதிவேறாது . நான் சொல்வது பழைய பாடல்களின் காலகட்டம் குறித்து தான். எனினும் எந்தப்பிழையும் தென்படாத வடிவில் பாடல்களைப்பதிவு செய்த கலைஞர்களின்  பங்களிப்பு பெரிதும் பேசப்பட்ட்டதே இல்லை. அந்த இசை அமைப்பாளர் இந்த  இசை அமைப்பாளர் என்று பெருமை கொள்ளும் எந்த ரசிகனும் சவுண்ட் என்ஜினீயர் என்ற ஒரு ஜீவனின் பங்களிப்பு குறித்து பேசுவதே இல்லை .

அதைவிடக்கொடுமை இந்த பாடல் அந்த நடிகனின் பாடல், இந்த நடிகனின் பாடல் என உவகை கொள்ளும் ரசிகன். என்னவோ அந்த நடிகன் பாடல் இயற்றி இசை அமைத்துப்பாடி பாடலைப்பதிவிட்டு நடித்தது போல் கூத்தாடுவார்கள். அந்தக்குறிப்பிட்ட நபர் திரையில் காட்டும் அசைவுகளின் பின்னே "எதிலும் இயங்கும் இயக்கம் நானே" போன்ற டான்ஸ் மாஸ்டர், ஸ்டண்ட் மாஸ்டர், டூப் கலைஞர்கள், இயக்குனர் இவர்களுக்கு இல்லாத பெருமை அரிதாரம் பூசியவன் தட்டிச்செல்வது மாபெரும்கொடுமை. என்ன செய்வது?

இது ஒரு வியாதி. ஆம் அலுவலங்களில் எவனோ உழைக்க, மேலதிகாரி பதக்கமும் பதவி உயர்வும் பெறுவது அன்றாட நிகழ்வு.

 அது போன்றதே, இந்த நடிகர்களை கொண்டாடும் செயலும்.. பல நடிகர்களின் வாழ்வின் ஏற்றத்திற்கு, பாடல்கள் தந்த ஆதரவு மகத்தானது.   

இந்த "முயற்சி ஓரிடம், புகழ்ச்சி வேறிடம்" நிகழ்வு , கூட்டு முயற்சி களங்கள் அனைத்திலும் அன்றாட நிகழ்வு. திருமண விருந்துகளில் வயிறுமுட்ட தின்று விட்டு கேட்டரிங் காண்ட்ராக்டர் சுப்பு ராமன் அல்லது  வேதராமன்  என்பவருக்கு பாராட்டு குவியும் , வாயில் வெற்றிலையை குதப்பிக்கொண்டு ஒரு பெரியவர் "ழாமன் அஜூத்த மே மாஷம் என் தங்கைபேத்திக்கு பூஷூதழ் [பூச்சூட்டல் ] விழுப்புரத்துல வந்ஜு [வந்து]]கேட்டரிங் பண்ணித்தருவீரா ஓய் என்று பலமான பர் வரும்.. சுப்புராமன்/வேதராமன்  ஏய் என்று கத்துவார்கள் ஆனால் உள்ளே ரசம் மாஸ்டர், குழம்பு மாஸ்டர் ,பட்சணம் எக்ஸ்பர்ட் பாச்சார்தி [பார்த்தசாரதி] என்று பலரின் உழைப்பு; பாராட்டு கான்டராக்ட் எடுத்த நபருக்கு --இது தான் உலகம் . சினிமாப்பாடலும் கிட்டத்தட்ட அது போன்றதே ஆனாலும் உண்மை உழைப்பாளரை விட நடிகனுக்கும்,  நடிகைக்கும் பாடலுக்கும் நடனத்துக்கும்  பாராட்டு என்று பாலாபிஷேக ரசிகர்கள் குதூகலிப்பதைப்பார்த்தால் இவ்வளவு ஏமாளிகள்  இன்னமும் உலவுவதை என்னென்று சொல்ல? இவ்வனைத்தையும் தாண்டித்தான் திரைப்படப்பாடல்கள் பொதுமக்கள் மனங்களில் கம்பீரமாக கொலுவீற்றிருக்கின்றன எனில் மிகை அல்ல . அவற்றின் பல்வேறு பண்புகளை அலசுவோம்.

தொடரும்

அன்பன் ராமன்

1 comment:

  1. முற்றிலும் உண்மை.
    திறமைசாலிகள் திரைமறைவில் வாடுகிறார்கள்.
    எங்கும் எதிலும் நடிப்பவர்களுக்கு பாலபிக்ஷேகம்.

    ReplyDelete

COMPETENCE - IS IT A GIFT?

  COMPETENCE - IS IT A GIFT? Too much has been said and heard of it, but little has been understood by the learner-stage youth. There is a...