TEACHER BEYOND YOUR IMAGE-20
ஆசிரியர்- உங்கள் பிம்பத்தை தாண்டி-20
சென்ற பதிவில், சில நடைமுறைகளைப்பற்றி விளக்கியிருந்தேன்.
அதன் தொடர்ச்சியாக, மேலும் சில உத்திகளை புரிந்துகொள்வோம்.
ஒரு படம் வரையும் போது, முக்கியமான பகுதிகளில் என்னென்ன அமைப்புகள் எவ்வாறு
வரையப்படவேண்டும் என விளக்கிக்கொண்டே அல்லது விளக்கிவிட்டு வரைந்தால் விளக்கமுமநுணுக்கமும்
எளிதில் பயில்வோரை மேலும் கவனம் கொள்ளச்செய்யும். இவ்வாறு செய்தபின்னர் இரண்டுமுறை
பேசுங்கள் முதலில் நிதானமாகவும் பின்னர் விரைவாகவும் உயர் ஒலியிலும் பேச, பாடப்பகுதியின்
முக்கியத்துவம் வலுப்பெறும் .
ஒரு போதும் முணுமுணுத்தல் கூடாது. கம்பீர தொனியே, ஆசிரியரின்
தெளிவின் வெளிப்பாடு என்பது எழுதப்படாத .விதி. இல்லையேல் பயில்வோர் விதியே என்று சோகமாக
எதையோ மனதில் நினைத்துக்கொண்டு, உடலால் வகுப்பறையில் அமர்ந்திருப்பர். இது வகுப்பில்
பயில்வோர் இரு கூறாக பிளவுபட்டு ஒருபுறம் கும்பகர்ணன்களும் மறுபுறம் சலசல என்று பேருந்து
நிலையம் போல் பேசிக்கொண்டிருக்க ஆசிரியர் ஒருபுறம் கோயில் அர்ச்சகர் போல் ஏதோ சொல்லிக்கொண்டு
ஒருவரும் ஒருவரையும் பற்றி அக்கறை கொள்ளாமல், கால விரயம் தவறாமல் நடைபெறும். எனவே,
ஒவ்வொரு நிமிடமும் ஆசிரியர் அனைவரையும் நோட்டம் பார்த்தபடி பேசி கவனம் சிதறாமல் இயங்க
வேண்டும்.
கவனச்சிதறல் என்பது மன நிலையின் வெளிப்பாடு. ஏதோ ஒன்றின் மீது கவனம் இருக்கும்
வரை, கவனச்சிதால் தோன்றுவது கிடையாது. எனவே, கவனச்சிதறல் என்பது ஈடுபாடு அல்லது 'முனைப்பு'
என்னும் தீவிர நாட்டம் குறையும்போது இயல்பாகவே தலை தூக்கும்.
அப்படி எனில் ஈடுபாடு குறைவது ஏன்? பயிற்றுவிக்கும் ஆசிரியர் முறையான வரிசையான
முறையில் கருத்துகளை போதிக்கும் போது கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்பு குறைவு. பொதுவாகவே
ஒரு பொருள் குறித்த கருத்து தெளிவாக விளங்கும் வகையில் கற்பிக்கப்படும் நிலையில், புரிந்து
கொள்ளாமல் இருந்துவிட வேண்டும் என எந்த மாணவ/ மாணவி யும் . எண்ணுவதில்லை..
தொடர்ந்தும் அவர்களை தக்க வைத்துக்கொள்ள ஆசிரியர்களின் முன்னெடுப்பு முயற்சிகள்
மிக அவசியம். அதாவது 2 முக்கிய கருத்துகள் விளக்கப்பட்ட பின் , மீண்டும் இதுவரை சொல்லப்பட்டவற்றை மள மள வென
ஆசிரியர் நினைவுபடுத்தப்படுத்த இதுவரை அசட்டையாக இருந்தவர்கள் கூட இப்போது உண்மையான
ஆர்வம் கொண்டு கற்க முயல்வர். இதைத்தான் ஆங்கிலத்தில் 'periodic
/ intermittant recap [இடையிடை நினைவூட்டல்] என்றழைக்கின்றனர். இவ்வகை
நினைவூட்டல் எவரையும் வசீகரித்து ஆசிரியரைப்பின் தொடர வைக்கும். இந்த நினைவூட்டல் பணியை
நிறைவாகச்செய்ய ஆசிரியருக்கு நினைவு வலுவானதாக இருக்கவேண்டும். எனவே அவர் தனது நினைவாற்றலை
வலுவாக கட்டமைத்துக்கொள்ள வேண்டும்.
அதற்கான உத்தி தான் Associational memory [நினைவுத்தொடர்புகள்] எனப்படுவது.
Associational
memory என்பது, ஒரு பொருள் குறித்து பேசும்போது, அதுதொடர்புடைய
வேறுபல பெயர்கள், சம்பவங்கள், நபர்கள் என்று மனத்திரையில் நினைவு கூர்ந்தால், பல்வேறு
தகவல்கள் நமது நினைவு வங்கி [memory bank] இல் இருந்து சீராக வெளிவரும். பெரும்பாலும் இத்தகவல்கள் , தொடர்புடையோரின்
மனங்களில் ஆழமாக இணைந்து கொள்ள, அத்தகைய அன்பர்கள் வெகு எளிதாக பழைய தகவல்களை கோர்வையாக
நினைவு கொள்ள இயலும்.. இதுவே நினைவாற்றல் பயிற்சியின் ஒரு அங்கம்.
நினைவாற்றல் என்பது ஏதோ ஒரு சிலருக்கு வாய்த்த வரப்பிரசாதம் அல்ல. மாறாக எவர்க்கும்
பயன் தரக்கூடியது. ஆனால் ஒன்று- நினைவாற்றல்
என்னும் திறன், பொதுவாக சரியான புரிதலுக்குப்பின் தான் செயலுக்கு வரும் என புரிந்து
கொள்வோம். புரியாத எதுவும் நினைவில் தங்காது.
மாறாக காற்றில் பறந்து வான் வெளியில் நுழைந்து விட்ட கற்பூர மணம் போன்றது. எனவே
புரிதலுக்கு வழி செய்யாமல் போதித்து பலன் இல்லை.
புரிதலுக்கு வழி என்ன?
புரிதலின் அடிப்படையே பொருள் விளங்கிக்கொள்ளுதல் அல்லது செயல்[கணிதம்] விளங்கிக்கொள்ளுதல் . இவற்றை விளங்கிக்கொள்ள 2 நடை முறைகள் . 1 ஒவ்வொன்றையும் குறைந்தது 2 முறையாவது விளக்குதல். . முதல் முறை விளக்கியபின் , உடனே இரண்டாம் முறை விளக்கி -கடமை முடிந்தது என நினைக்காமல் பின் வரும் அணுகுமுறையை முயற்சிக்கலாம் . முதல் விளக்கம் முடிந்ததும் சிலர் குழம்பிய முகத்துடன் விழிப்பார்கள் ; அவர்களை கேள்விகேட்டு என்ன விளங்கவில்லை என்று கேட்டால் பதில் வராது . அப்போது எச்சரிக்கை தொனியில் சொல்லுவது நல்ல பலன் தரும். "இன்னொரு முறை சொல்கிறேன் , தூங்காமல் கவனியுங்கள்" என்று சொல்லுங்கள் . இது ஒரு மனோரீதியான மருந்து , இப்போது நன்கு கவனிப்பார்கள் இது முடிந்ததும் இப்போது அனைத்தையும் விரைவாகச்சொல்லி முடியுங்கள். கவனிக்கவில்லை என்றால் விடமாட்டார் போலிருக்கிறதே என்று உங்கள் போதனையை நன்கு கவனிப்பார்கள்.. சிலர் புரியாமலே புரிந்ததுபோல் தலை அசைப்பார்கள். அவர்களை கேள்வி கேட்டு நாளை விடை சொல் என்று நிபந்தனை விதி யுங்கள்.. அன்று மாலையே உங்களை சந்தித்து விளக்கம் பெறுவர் ; அல்லது மறுநாள் வகுப்புக்கு வரமாட்டார்கள். அது போல் செய்பவர்களை எப்போதும் கேள்வி கேட்கத்தொடங்கினால் , முறையாக கற்பார்கள்.
ஒன்று நமது கடமை ;பாடம் புரியாத எவரையும் உதாசீனமோ கேலியோ செய்யக்கூடாது.. அவர்களையும் கண்காணிக்கிறோம் என்று உணர்ந்தால் , அவர்களும் வழிக்கு வருவர் . என்ன செய்வது ஆசிரியப்பணி பிறர் நலம் சார்ந்தது .
அதை மறவாது செயல் புரிந்தால் வள்ளுவன் வாக்கு போல் 'முயற்சி தன் மெய் வர்த்தக்கூலி தரும்"
பிற தேவைகளை மீண்டும்விவாதிப்போம்
.
நன்றி
அன்பன் ராமன்
"இடையிடை நினைவூட்டல்", "நினைவுத் தொடர்புகள்" -நல்ல அறிவுரைகள்.
ReplyDeleteகும்பகர்ணன், பேரூந்து நிலையம், அர்ச்சகர், வான் வெளியில் கற்பூர வாசனை- பொருத்தமான ஒப்பீடு.