Sunday, December 29, 2024

ANGER AND EGO- 5

 ANGER AND EGO- 5

கொந்தளிப்பும் அகம்பாவமும்-5

குறை களைதல் என்பது ஆயுட்கால தேவை மட்டும் அல்ல, அது பல தருணங்களில் அன்றாட தேவை என்ற அடிப்படையை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளுதல் மிக மிக அவசியம். ஆங் , எனக்கு எல்லாம் தெரியும் என்பது சில குறிப்பிட்ட செயலுக்கு வேண்டுமானால் பொருந்தக்கூடும். எவ்வளவு உயர் நிலை வகிப்பவர் ஆயினும் பிறர் உதவியை நாட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகக்கூடும். உதாரணமாக --சென்ற ஆண்டில் சென்னை [பெரு நகரம்] பெரும் மழை வெள்ளத்தை எதிர்கொண்டது.  பல குடியிருப்புகளில் பாம்புகள் நுழைந்து விட , செய்வதறியாது பதறி குழம்பி அஞ்சி நடுங்கிய "எனக்கு எல்லாம் தெரியும் வகையினர் " ஆங்கிலத்தில் HELTER SKELTER என்ற வர்ணனைக்கேற்ப பின்னங்கால் பிடரியில் பட ஓடி அலைந்த வைபவங்கள் எத்துணை? எல்லாம் தெரியும் என்ற ஈகோ தந்த இறுமாப்பு, காற்றில் கரைந்தது ஏன்.? சூழ்நிலை வரும் போது,  நாம் எல்லாம் அறிந்ததாக நினைத்தது வெறும் வெற்று 'ஜம்பம்' என்று வெளிச்சம் போடும். அவ்வளவு ஏன், நீர் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்து பலரையும் படகுகளில் ஏற்றி அழைத்துச்சென்றனரே, எல்லாம் தெரிந்தவர்கள் சொந்த முயற்சிகளில் படகை செலுத்தி தங்களையும் உறவினர்களையும் விரைந்து பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச்செல்ல ஏன் முயலவில்லை? ஆக "எல்லாம் தெரிந்துள்ளேன்" என்ற நிலைப்பாடு ஒரு சிலஅலுவலக நடை முறைகளுக்கு சரியாக இருக்கலாம். படகையும், பாம்பையும் கையாள உரியவர் வரவேண்டும்இன்றேல், உறியில் தொங்க வேண்டியதுதான்.  

சரி, எனக்கு எல்லாம் தெரியும் என்ற நிலைப்பாடு ஏன் வருகிறது?. சாதாரண நாட்களில் எல்லாம் இயல்பு நிலையில் பயணிக்கும் போது , அவரவர் வகிக்கும் பதவிகளில் மேலாண்மை செலுத்துவதை [பதவி தந்த அதிகாரம் என்பதையே மறந்துவிட்டு] தனது விரல் மற்றும் விழி அசைவுக்கு அனைவரும் அடங்கி ஒடுங்கி விட்டதாக ஒரு மாயையில் பதவி வகிப்போர் , பள்ளி கல்லூரிகளில் குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு முன்னரே மனனம் செய்திருந்த விடையை எழுதி அதிக மதிப்பெண் பெற்று 'தானே அறிவுலக பிரதிநிதி' என்று [மாணவ /மாணவியர்] தமக்கு தாமே சான்றிதழ் வழங்கிக்குதூகலிக்க , அதனை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் பெற்றோரும் உற்றோரும் உவகையின் உச்சத்தில் கூத்தாட , சூழ்நிலை மாறும்போது படும் பாட்டினை என்னென்று விவரிப்பது?  ஈகோ என்னும் அகம்பாவம் கண்ணை மறைக்கும் என்றொருபொதுவான  புரிதல் உண்டு.ஆனால் புரிந்து கொண்டுள்ளது யாதெனில் , ஈகோ கண்ணை மட்டுமல்ல , தொடு உணர்வு தவிர பிற புலன்களை கிட்டத்தட்ட numb எனும் உணர்வற்ற நிலைக்கு தள்ளிவிடும். எனவே, ஒவ்வொரு சிறு முன்னேற்றம் /அல்லது வெற்றிப்படியில் கால் பதிக்கும் போதும், எத்துணையோ பேர் எனக்கு முன்னர் இந்தப்படிகளை கடந்து மேலும் பல படிநிலைகளை இயல்பாகக்கடந்து முன்னேறியுள்ளனர், எனவே கோடி மக்களில் ஒரு கோடியில் தான் நான் இருக்கிறேன் என்று அவ்வப்போது நினைவு படுத்திக்கொண்டால் ஈகோ தலை விரித்து ஆடி, நம்மை குடைசாய்த்துவிடாது. .

 ஈகோ ஒழிக்கப்பட வேண்டுமா?   .

ஈகோ வை ஒழிக்க வேண்டாம், அதனை ஒழிக்க முயற்சித்தால், நகம், முடி போன்றே விரைந்து வளரும்.

ஆம்-- கறிவேப்பிலை வெட்ட வெட்ட வளரும் என்பது போல ஈகோ வும் செயல் படும். அப்படியானால் நீ என்ன சொல்கிறாய் / சொல்ல வருகிறாய் என்று கேட்கத்தோன்றும் அல்லவா? ஒவ்வொரு தனி நபர் முன்னேற்றத்திற்கும் ஈகோ மிகவும் அவசியம். அது கொடுக்கும் உந்துதலில் முன்னேற்ற முயற்சிகள் தொடரும்..

என்னய்யா குழப்புகிறீர் என்போர் கவனிக்க.-- ஈகோ அவசியம் -அதாவது ஊறுகாய் போன்றது -அளவோடு இருக்க வேண்டும். ஊறுகாயையே தின்று உயிர் வாழ முடியுமா? ஊறுகாய் இன்றி தயிர் சாதம்/ மோர் சாதம் போன்ற வகை உணவுகளை இயல்பாக விழுங்க முடியுமா?    அது போன்றதே ஈகோவின் பங்களிப்பும் அளவும் இருக்க வேண்டும்.

அதாவது "என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை , என்னால் மட்டுமே முடியும் என்பது ஈகோ.

தன்னம்பிக்கையை வேரூன்றச்செய்வது வேறு, ஈகோவை விரிவாக்கிக்கொள்ளுதல் வேறு. இவ்விரண்டு நிலைகளையும் சரியாக புரிந்து கொள்ளாமல் தோன்றுவது தான் தடுமாற்றம்.

சரி என்னதான் செய்வது என்ற ஒரு போராட்ட நிலை தோன்றி விட்டதல்லவா? இந்த நிலை களையப்பட வேண்டும். அதற்கான அடிப்படை , தேவைப்படும்போது அணுகுமுறைகளை திருத்தி அமைத்துக்கொள்ளும் செயல் ஞானம்  [practical wisdom] அது ஒரு நாளிலோ , குறுகிய காலத்திலோ ஏற்படுத்திக்கொள்ள இயலாது ;ஏனெனில் ஈகோ வயப்பட்ட மனம் எந்த செயல் மாற்ற அணுகுமுறையையும் வேரூன்ற அனுமதிக்காது. மாறாக உள்மன விதண்டாவாதங்களை கிளப்பிவிட்டு, எனது தற்போதைய நிலைப்பாடே சரி   என தனக்குத்தானே சமாதானம் கொள்ளத்தூண்டும். இன்னும் சொல்லப்போனால் ஈகோ வின் துவக்கமே உள்மன ஆதிக்கத்தினால் அடையும் விஸ்வரூப வளர்ச்சி தான் என்பதை புரிந்து கொள்ளுதல் நலம். இந்த உள்மன விஸ்வரூப ஆதிக்கம் தோன்றுவது சூழ்நிலை தரும் ஊக்கமும் உற்சாகமுமே என்று ஆணிவேரை பிடித்தல் நன்மை பயக்கும்.. ஈகோ தோன்றுவது நான் பிறரை விட மேலானவன்  என்ற ஒரு கற்பனை நம்முள் ஏற்படுவதும் அதை, சுற்றியுள்ள மக்கள் மனிதனை ஊக்குவிப்பதாக எண்ணிக்கொண்டு , மென்மேலும் கற்பனை புகழாரங்களை சூட்டுவதால் ஈகோவுக்கு வீழ்ந்தவன்[ள்]  பிறரை காயப்படுத்த தயங்காதது மட்டும் இன்றி அதுபோன்ற பிறரை அவமானப்படுத்தும் செயலில் இறங்க தயார் நிலையில் இருப்பவன்[ள்].. தகுதிக்கு மீறிய மார்க் பெற்ற குழந்தைகளை கவனித்தால் இந்த உண்மை புரியும். அக்குழந்தைக்கு சற்றும் குறைவில்லாத ஈகோ அதன் பெற்றோருக்கு தோன்றுவது ஒரு சமூகக்கேடு என்றே தோன்றுகிறது. SELF ASSESSMENT என்ற தன் திறன் மதிப்பீடு செய்ய தெரியாத மாந்தர் மாயைக்கு வீழ்ந்து ஒரு வித மதுபோதையில் திளைத்து, குழந்தை என்பதை மறந்து தலைவன் போல் தூக்கிவைத்துக்கொண்டாட --குடும்பமே ஈகோவின் தவப்புதல்வர் போல் உருமாறி பிறரின் வெறுப்பை எளிதில் தோற்றுவிக்கின்றனர். இவர்கள் சிறிய தோல்வியில் துவண்டு கருகுவது ஈகோ இவர்களுக்குத்தரும் வெகுமதி..

ஒரு நபரை கட்டுப்படுத்தத்தவறிய நிலைப்பாடு அனைவரையும் அவமானம்கொள்ள வைக்கும். அனுதாபம் மறைந்து, பிறர் உள்ளூர உங்களின் வீழ்ச்சியை ரசிப்பார்கள் என்று புரிந்து கொள்வீர்.

இந்நிலை மாற்றிட என்ன வழி. ?

அது என்ன- அவ்வளவு எளிதா?  அதன் வேர்களைப்புரிந்து கொள்வது அவசியம்.

 அதற்கான செயல் முறைகளை, பின்னர் காண்போம்.

நன்றி

அன்பன் ராமன்

1 comment:

SWEET FLAG

  SWEET FLAG   Acorus calamus [Tam: vasambu ]  A herb that grows to about 2 feet and has prominent leaves   Vacha ( Acorus calamus  L...