Tuesday, January 7, 2025

LET US PERCEIVE THE SONG-4

 LET US PERCEIVE THE SONG-4 

பாடலை உணர்வோம்  - 4

ORU NAL IRAVIL -- 2

"ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை- 2

ஒரு நாள் இரவில் [பணத்தோட்டம் -1963] கண்ணதாசன் , வி-ரா, பி சுசீலா. orunaal iravil kan urakkam pidikkavillai song... - YouTube

 மீண்டும் ஒரு கவியரசர் கற்பனையில் உதித்த பாடல். காதலன் தன் கண்ணில் படாமல் இருப்பதை நினைத்து ஏங்கி தவிக்கும் ஒருத்தியின் விரகதாபப்பாடல். 

எனவே ஏராளமான மன உளைச்சல்களை  கொட்டும் பெண் மனம்..

கவியரசர் குறித்த ஒரு கருத்து யாதெனில் அவரைப்போல் பெண்/ பெண் மனம்/ பெண் உணர்வு / பெண்களின் இயல்பான தவிப்பு போன்ற மனோ நுணுக்கங்களை அறிந்த எவரை விடவும்  , கவியரசர் அவ்வகை உணர்வுகளை பாடலில் வெளிப்படுத்துவதை ஒரு கலையாகவே பயின்றிருந்தார். வெறெந்தக்கவிஞரையும் விட கண்ணதாசன் வழங்கியுள்ள பெண் உணர்வுப்பாடல்கள் எண்ணற்றவை. எனவே மன ரீதியாகவும் அவர் ஒரு பெண்கள் ஸ்பெஷலிஸ்ட் எனில் தவறல்ல.

கண்ணில் பாடாத காதலனின் ஏக்கம் பெண்ணை பேச வைத்தால்? அவள் என்ன சொல்வாள்? காதலனை விட்டுக்கொடுக்காமல் முட்டுக்கொடுத்து காப்பாற்றுவாள் அல்லவா? அதை இப்பாடலில் வெகு நேர்த்தியாக தொடுத்து பெண் குரலாக ஒலித்துள்ளார்-திரு கண்ணதாசன் அவர்கள்

காதல் வயப்பட்டவளுக்கு தூக்கம் வருமா -வராது தூங்காமல் கண்ணைக்கொட்டியபடி எட்டியதூரம் வரை பார்த்தாலும் "அவனை" காணவில்லை. அதுவே பல்லவியாய் அமைய

 "ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை --வருவான் கண்ணன் என நினைத்தேன் -மறக்கவில்லை [அது என்ன மறக்கவில்லை? திரும்ப திரும்ப நினைத்தாள் என்பதை ஒற்றை சொல்லில் [மறக்கவில்லை என] உணர்த்தியுள்ளார் கவிஞர்..

சரணம்

திருநாள் தேடி தோழியர் கூடி சென்றார் -திரும்பவில்லை. தினை யும் பனையாய் வளர்ந்தே இரு விழிகள் அரும்பவில்லை   [தோழியருடன் செல்லாமல் "அவன்" வருவானோ என்று வீட்டில் தங்கி விட்டு அவர்களும் இப்போது வரவில்லை என துயர்கொள்ளும் டிபிகல் காதல் பீடித்த மனம். நீண்ட நேரம் ஆனதை கடுகினும் சிறிய தினை வளர்ந்து பெரிய பனங்காய் போல் ஆனதாக ஏக்கம் கொள்கிறாள். இவ்வகை ஏக்கம்-- தன்னை குறித்தே சிந்திப்பதால் வேறெதுவும் மனதில் தங்காமல் நேரம் போவதை குறித்தே மனம் கவலை கொள்ளும் என்று வெகு அழகாக கவிஞர் உணர்த்துகிறார் ]    .

சரணம்

இரவில் உலவும் திருடன் அவன் என்றான் என்று 'அவன்' சொன்னதை நினைவு கொண்டு பாடி பின்னர் 'இவள் ' சொன்னதாக

திருடாமல் ஒரு நாளும் காதல் இல்லை என்றேன் , என பாடிவிட்டு பின்னர் மீண்டும் பாடும் போது 'திருடாது ஒருநாளும் காதல்இல்லை  என்றேன் என சமாதானம் சொல்கிறாள் [ இது கவிஞனின் சொல் விளையாட்டு, மனம் திருடுவதே அல்லது திருடப்படுவதே காதல் .என்று   'திருடாது ஒருநாளும் காதல்இல்லை ' என்று வலியுறுத்துகிறார் இந்த 20 ம் நூற்ராண்டுக்கவிஞன்.

தன்னிலை விளக்கமாக பெண் தொடர்கிறார் இதயம் அவன் பால் தந்தேன் என் இறைவன் திருடவில்லை என்று காதலனுக்கு நற்சான்று வழங்கி அவன் திருடன் இல்லை என தனக்கே சமாதானம் தேடும் பெண் மனம் என பயணித்த ஆழமான பாடல்  பாடலை நீங்களும் ஆழ்ந்து அமிழ்ந்து கேளுங்கள் , பிற விளக்கங்கள்

கேட்பதற்கு எளிதென தோன்றும் இப்பாடலை அதன் அமைப்போ அழகோ குறையாமல் பாட முயன்றால் தமிழில் பலரும் சொல்லும் "தாவு தீந்துடும் " நிலை என்றால் என்ன என்று விளங்கும்.இது போன்ற 'நீயா நானா வகை சொல்லும் இசையும் மோதிப்பார்த்து 'draw 'ஆனாபாடல்கள்  பலவற்றுள் இப்பாடலும் நிச்சயம் இடம் பெறும். ஏன் எனில்  அவ்வளவு மென்மையான ஏற்ற இறக்கங்கங்களுடன் பாடல் பயணிக்கிறது. ஆனால் எந்த ஏற்ற இற க்கமும்  , அழகு நிமித்தம் செய்யப்படவில்லை ;மாறாக பாவத்தின் தேவைக்கே இவ்வளவு அலங்காரமும்  செய்யப்பட்டுள்ளது என்பதை யோசித்துப்பார்த்தால், ஒவ்வொரு பாடலையும் சொல்லாலும் , பாடும் நாணம் கொண்டும் நேர்த்தியாக செதுக்கி  உள்ளனர். இசை அறிந்த பலரும் சொல்வது "எம் எஸ் வி அவர்கள் எந்த உயரத்திற்கு  போனாலும் 'பறவைபோல்' மிக எளிதாக தொடக்கப்புள்ளிக்கு இயல்பாக, சொல்லுக்கும், நம் செவிக்கும் வலிக்காமல் வந்து சேரும் அழகினை ஒரு கலையாகவே நிறுவியவர். இசையில் அதுபோன்ற நுணுக்கங்கங்களை வெகு நேர்த்தியாக வடிவமைத்ததனாலேயே அவரின் பாடல்கள் ஜீவன் மட்டும் அல்ல  ஆரோக்கியமும் குன்றாமல்  சிரஞ்சீவிகளாக வலம் வருகின்றன. இந்த ஏற்ற இறக்க செயல் குறித்து இப்பதிவில் நான் இணைத்துள்ள தொடர்பில் திரு செல்லோ சேகர் [குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் புதல்வர்] தரும் செயல் விளக்க வீடியோ வை ஆழ்ந்து கவனித்துக்கேளுங்கள். அவர் போன்ற இசை விற்பன்னர்கள் தரும் விளக்கங்கள் ஏன் எம் எஸ் வி யின் உயரத்தை பலரால் தொட இயலவில்லை என்பது விளங்கும். பாடலில் பல்லவி மொத்தம் 6 இடங்களில் பாடப்படுகிறது.. சோகத்தின் சுமையோடு பாடப்படுவதால் பாடல் ஊர்ந்து செல்வதாக தோன்றும். வருவான் கண்------ணன்  என்று ஏக்கத்தை சுமந்து கொண்டு ட்யூன் குழைவதையும் அதை சுசீலா அவர்கள் வெகு நேர்த்தியாக குரலில் பிரதிபலித்திருப்பதும் உண்மையிலேயே அதீத நுணுக்கத்தின் வெளிப்பாடு.  ஆனாலும் ஆங்காங்கே உணர்ச்சி யின் உந்துதலால்   சில சொற்கள் வேகமும் உயரமும் தொடக்காணலாம்;

உதாரணமாக தோழியர் கூடி திருநாள் தேடி என்ற பகுதி வேகம் கொண்டு பாடப்படுவதைக்காணலாம். ;சென்றார் திரும்பவில்லை என்பது நீட்டி இழுத்து பாடப்படுவதையும் காணலாம் . சென்றா ... ... ர் திரும்பவில்ல் லைஐ ஐ என்று நேரம் போய்க்கொண்டிருப்பதை பாடும் விதத்தில் இயல்பாகவும் எளிதாகவும் வெளிப்படுத்திய இசை அமைப்பாளர் எவ்வளவு கற்பனைகளை கொட்டி யுள்ளார்.

இதே ஏக்கத்தின் தாக்கம் மீண்டும் தினை ...யும்         பனை ................யாய் வளர்ந்தே எனும் இடத்திலும் தூக்கம் தொலைத்த ஏக்கத்தை   அப்பட்டமாக வெளிப்படுத்தும் ட்யூன். சோகம் இழையோடும் தருணங்கள் மேலும் வலுப்பெற தொடர்ந்து அழுகுரலாக சரோட் ஒலிக்க மேலும் சோகம் கவ்விக்கொள்ள, பாடலின் தாக்கம் அதிகரிக்கிறது.   இவை மட்டும் அல்ல, 'திருடா----------து ஒரு நா--------ளும் என்று 'அடித்துச்சொல்லும்' பாங்கினை ட்யூனில் புதைத்த எம்எ ஸ் வி அதீத  கற்பனைக்கு ஆசான் என்று மீண்டும் நிலைப்படுத்திய வித்தகர் அன்றோ? இப்படி பாடல் முழுவதிலும் சொல்லும் / சொல்லப்படும் ராக நளினமும் இனி வருங்காலங்களில் தேடினாலும் தட்டுப்படாத பழைய பொக்கிஷங்கள் . இவ்வனைத்தும் இசை அறியாத எனது புரிதல் தரும் உணர்வுகள். இரவின் உணர்வு மிகுந்த பாடல் என்பதாலோ என்னவோ, துவக்கத்தில் ஒலிக்கும் மாண்டலின் /பாடல் முழுவதிலும் வியாபித்துள்ள தபலா வும் மிக மென்மையாக கையாளப்பட்டுள்ள வித்தகம் கவிதைக்கு தரப்படும் உயர் பீடம் என்று உணர்த்துவதையும் கவனியுங்கள். 

திரு செல்லோ சேகர் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் இப்பாடல் பற்றிய சில பண்புகளை விளக்கியிருக்கிறார் . நன்கு கவனியுங்கள் இசை அமைத்தல் பணி , மிகுந்த நெருடலான பொறுப்பு என்பது விளங்கும்

 

https://www.youtube.com/watch?v=Yef8T_UHepw cello sekar onmsv works

இதே பாடலை சுபஸ்ரீ அவர்களின் விளக்கமும் , பாடுவோரின் முயற்சியையும் இசைக்கருவிகளின் பங்களிப்பையும் கவனித்து மகிழ இணைப்பு இதோ.

QUARANTINE FROM REALITY | ORU NAAL IRAVIL | PANATHOTTAM | Episode 651

யூட்யூப் இணைப்பில் ரசிகர் ஒருவர் இப்பாடல் பற்றி பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்

இந்த மென்மை சுசிலா அவர்களால் மட்டுமே முடியும். என்னவொரு ஆத்மார்த்தமான ஈர்ப்பு. கண்ணை மூடிக்கொண்டு கேட்டுக்கொண்டே மோட்சம் அடைய வேண்டும். ரசனையின் உச்சம் செல்லச்செல்ல அது சாத்தியமாக்கும் சக்தி இந்த பாடலுக்கு உண்டு.

 பிற பாடல்கள் பின்னர்

நன்றி

அன்பன் ராமன்

2 comments:

  1. ஆஹா..அருமையான, என் மனம் எப்போதும் கேட்க ஏங்கும் பாடல். நன்றி புரபசர்.

    ReplyDelete
  2. இப்பாடல் பற்றி என் மன வெளிப்பாட்டு ஆடியோவை முடிந்தால் இங்கே பதிவிடவும். நன்றி. ராம்கி.

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...