Wednesday, February 12, 2025

COUSINS

 COUSINS

சகோதர உறவு முறை

[ RAGUNATHANS வேண்டுகோளுக்கிணங்க பதிவிடப்படுகிறது ]

உங்களுக்கு தலை சுற்றி மயக்கம் ஆத்திரம் கோபம், கடுப்பு, வெறுப்பு இன்னோரன்ன பிற மன நிலை வேண்டுமா?

தொடர்ந்து படியுங்கள் இந்த உறவு முறைகளை..

ஆனால் ஒன்று, இந்தக்குழப்பங்களில் இந்தியர்கள் எளிதாக தப்பிவிட்டனர். சிக்கி சீரழிந்து பிறரையும் வெறுப்பேற்றிய பெருமை ஆங்கிலேயர்களுக்கு வாய்த்த   சிறப்பு.

போதுமய்யா ,சொல்ல வேண்டியதை சீக்கிரம் சொல் , நீட்டி முழக்காதே என்றொருவர் புலம்புகிறார்.  .

சுவாமி, அவசரப்படாதீர்கள், வேகமாகபடித்துவிடலாம் என்று ஏதாவது செய்யப்போக ஆம்புலன்ஸ் சேவையை நாட வேண்டி வந்துவிடும். எனவே எப்போதும் போல் அப்படி இப்படி-- பட்டும் படாமலும் மேலோட்டமாகப்படித்து தப்பித்துக்கொள்வோமே அந்த உத்தி இந்த தகவல் தொகுப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இது என்னய்யா பெரிய விஷயமா ?

கஸின் [cousin] என்றால் தெரியாதோ? என்று கொந்தளித்துக்கொண்டுள்ளார் ஒரு பெங்களூர் வாசி.

அய்யா --உங்களுக்கு தெரியாத ஏதாவது எனக்கு மட்டும் தெரிந்துவிடுமா என்ன? ஒரு வேளை இவன் மாட்டிக்கொண்டு தவிக்கட்டும் என்று இந்த தலைப்பை கொடுத்திருக்கிறர்கள் போலும்.அப்படி என்னை மாட்டி விடலாம் எனில், நீங்களும் மாட்டிக்கொண்டு படாத பாடு படுவீர்கள்; உங்களை எளிதாக விட்டுவிடுவேனா? ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், ஆசிரியன் அறுப்பதென்று தீர்மானித்துவிட்டால் கத்தியின்றி ரத்தம் இன்றி சத்தம் போடும் த்ராணியின்றி நீங்கள் கீழே சாய்வீர்கள் [அதாவது சாய்க்கப்படுவீர்கள்] எனவே அச்சம் உங்களுக்குத்தான்.  சரி, தொடர்வோம்.

cousin என்ற சொல் ஆங்கில மரபில் வரும் சொல்; கஸின் என்ற சொல் ஜீனியாலஜி [ஜீனியாஜி=பரம்பரைகுறித்தஆய்வு], என்னும் குடும்பச்சித்திரத்தில் புழங்குவது அதாவது ஐரோப்பிய சமூக அமைப்பில் அனைத்து  உறவுமுறைகளுக்கும் நேரடி சொற்கள் இல்லை.

நமது தாய் மொழியில் சகோதர சகோதரிகளை உடன் பிறப்புகள் --சக உதிரர்கள்  [ஒரே ரத்தம் கொண்டவர் ] . என்கிறோம் ஆங்கிலத்தில் brother, sister   என்பார்கள். இவர்கள்,  ஒரே தாயின் குழந்தைகள்.

இந்திய மொழிகளில் அண்ணன், தம்பி அக்கா, தங்கை என்று ஒற்றை சொல்லில் விளக்கும் உறவு முறைகளைக்கூட நேரடியாக குறிப்பிடாமல் ஆங்கிலத்தில்  elder brother , younger brother , elder sister , younger sister என்று அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. ஏனென்றால், அது ஒரு தளர் சமுதாய அமைப்பு. அதில், பெற்றோர் /குழந்தைகள் தாண்டிய உறவுகளை அழைக்கும் பெயர்கள் மிகவும் நெருடலானவை. .

 நமது மொழியில் uncle என்று மாமனை aunt என்று அத்தையை அழைப்போம். ஆங்கில மொழி மரபில் தெருவில் போகும் பெரியவர்கள் கூட uncle / aunt  தான்.

போகட்டும் சித்தப்பா பெரியப்பா, சிலவகை உறவுகள் [அத்திம்பேர், அம்மாஞ்சி, அத்தங்கா] இவற்றுக்கு சரியான ஆங்கிலச்சொல் கேட்டால் OXFORD PhD  in ENGLISH  ஆனாலும் பதில் சொல்ல முடியாது.. கேட்டால், அவற்றிற்கான சொற்கள் இல்லை என்பான். அம்மாஞ்சி எனில் அப்பாவி அல்லது ஏதுமறியாதவன் என்னும் அளவிற்கு தாழ்த்திவிட்டோம். உண்மையில் அவர் அம்மான் சேய் [மாமாவின் குழந்தை/ மகன்] எப்படி சிதைத்துவிட்டோம் சொல்லையும் கவுரவத்தையும்?

[இங்கிலாந்தில் அத்தை அத்திம்பேர் உறவுகளே கிடையாதா?  என்று குமுறி ஆவதென்ன?] அத்தை அத்திம்பேர், மாமா, மாமி எல்லாமே அங்கிள், ஆண்ட் என்றே சொல்வர். அதாவது ஆங்கில மரபில்,  உறவு களில் ஒரு எல்லை கடந்து இருப்போர்  விசேஷ பெயரிட்டு அழைக்கப்படுவது இல்லை.

இந்த இடியாப்ப சிக்கலை ப்பாருங்கள்  

அத்தையோட பெரிய நாத்தனாருடைய ஓர்ப்படியின் ஓன்றுவிட்ட சித்தப்பாவின் சம்மந்திக்கு அடுத்தவாரம் சதாபிஷேகம் - இதை பிசகாமல் ஆங்கிலத்தில் சொல்லிப்பாரு ங்கள்; புரியும் வெள்ளைக்காரன் கூட்டம் கூடி தின்று திவால் ஆக மாட்டான். என்ற தத்துவம் 

அவன் பெரியப்பா வகையறையாவே அதிகப்படியாக நினைப்பவன். எனவே சகோதரர்கள், மற்றும் சமதையான சித்தப்பா பெரியப்பா குழந்தைகள் " siblings " என்பர்,  இதில்  பெற்றோரின் சகோதரர்களின் குழந்தைகள் cousins என்று பொதுவாக அழைக்கப்படுகின்றனர்.

இப்போது ஒரு சிறு உணர்த்துதல். நம்மவர்கள் பெரும்பாலானோர் cousin brother  /cousin sister  என்று தவறாக அடையாளப்படுத்துகிறோம். ஏனெனில் Brother /Sister -ஒரே தாயின் குழந்தைகள் . Cousins  என்போர் வெவ்வேறு தாய்மார்களின் குழந்தைகள். எனவே  cousin brother  /cousin sister  இவை தவறான சொல்லாட்சி வகைகள் . கிட்டத்தட்ட OXYMORON வகையை சேர்ந்தது எனலாம்.. மொழி மரபு தெரிவிப்பது யாதெனில் அதுபோன்ற ஒருவரை அறிமுகப்படுத்த meet my cousin - He is Mr .சுந்தரம் - meet my cousin Ms Santhi என்றுதான் சொல்லவேண்டு[மா]ம் .   என் மீது கோபம் கொள்ளாதீர்கள்- ஆங்கில மரபில் கஸின் என்ற சொல் பொதுவானது. எனவே, எடுத்த எடுப்பில் பாலின அடையாளம் சொல்லாமல், இரண்டாம் பகுதியில் ஹீ என்றோ ஷீ என்றோ அல்லது மிஸ்டர் / மிஸ் /மிஸஸ் எனக்குறிப்பிட்டு பெயரை சொல்லி அறிமுகப்படுத்த வேண்டும் என்றே வலியுறுத்துகின்றனர்.

எவன் என்ன சொன்னால் எனக்கென்ன? என்று திரியும் தான்தோன்றிகளை திருத்த முடியாது.

முறையான மரபினைப்பின் பற்றி மொழியை பயன்படுத்த விழைவோர் இக்கருத்துகளை நன்கு புரிந்து கொள்வீர்.  இது மரபு.                                                                           

 மேலும் கஸின் பற்றி  பிற தகவல்கல்ளை காண்போம்.

நன்றி அன்பன் ராமன் 

COUSINS -2

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -30

 L ET US PERCEIVE THE SONG -30            பாடலை உணர்வோம் -30   ஜில் என்று காற்று வந்ததோ [ நில் கவனி காதலி -1969 ] வாலி , எம் எ...