LET US PERCEIVE THE SONG – 15
பாடலை உணர்வோம் -15
வீணை பேசும் [வாழ்வு என் பக்கம் -1976] கண்ணதாசன் , எம் எஸ் விஸ்வநாதன் , குரல்கள்
யேசுதாஸ், பி எஸ் சசிரேகா .
“ஆண் குரல் மென்மை, பெண்
ஹம்மிங் [சசிரேகா] மேன்மை. இவ்வனைத்தையும் பல முறை கேட்டு பாடலை நுணுக்கமாக புரிந்துகொள்ளுங்கள். இது
சாதாரண ஹம்மிங் அல்ல, ஆழ்ந்த பொருள் கொண்டது. என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம். பாடலின் நுணுக்கங்கள் அடுத்த பதிவில்” என தெரிவித்திருந்தேன்.
இவற்றிற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க "எனக்கு வேறு வேலை இல்லையா? "என்று ஜவடால் பேசுவர் என்பதை நான் எப்போதும் அறிவேன். ஆனாலும் அவ்வப்போது இது போன்ற கேள்விகள் மூலம் ஒரு சிலராவது பாடலை பலமுறை கேட்க மாட்டார்களா, பாடலை எப்படி ஊடுருவி புரிந்து கொள்ளவேண்டும் என்பதைக்கூட உணராமல் நான் கேட்டுவிட்டேன் நான் கேட்டுவிட்டேன் என்று கூவித்திரிகின்றனர் . சரி இந்த அணுகுமுறை மாறினால் ஒழிய கவிஞனின் மொழி ஆளுமையும், இசை அமைப்பாளனின் கற்பனை சாம்ராஜ்ஜியம் காட்டும் விஸ்தீரணம் என்னும் டைமென்க்ஷன் விளங்காது; மேலும் ஏதோ வெற்றிப்பாடல் என்பது போல பல வெட்டிப்பாடல்களை சிலாகித்து உளறுவதையும் எப்படி ஏற்க இயலும்?
கவிதை வரிகளை எழுதுவதே பாடலின் கருத்து உணர என்ற நோக்கில் தான். பாடலுக்கு இணைப்பு , இசையின் /நடிப்பின் சிறப்புகளை புரிந்து கொள்வதற்கே.
இங்கே கண் முன்னால் வைத்தால் கூட காண மாட்டேன் எனும் விஸ்வாமித்திரர்கள் போல முகத்தை திருப்பிக்கொள்கிறார்கள் . இப்படி பார முகம் காட்டி வளர்ந்து வாழ்ந்து விட்டவர்களால் எதையும் அதன் சிறப்போடு அனுபவித்து ரசிக்க இயலாது . எல்லாமே 5 நிமிடத்தில் தான் பாட்டு காட்சி , இசை எல்லாம் ஒரே
glance என்ற அளவில் தான். அவ்வளவு ஏன் ? டி வி நிகழ்ச்சியில் கூட 5 நிமிட த்திற்கு மேல் ரிமோட் பயன்படுத்தப்பட்டு டெல்லி , மும்பை, காஷ்மீர் , ஆப்பிரிக்கா என்று சஞ்சரித்து கண்டது என்ன? ரிமோட் வேலை செய்கிறது என புரிந்து கொண்டதைத்தவிர -என்ன தெரிந்து கொண்டோம். எனவே தான் பாடலை உணர்வோம் என்ற தலைப்பில் நல்ல பாடல்களை விவாதிக்கிறோம்.
இந்தப்பாடல் ["வீணை பேசும்"-1976] நான் கேட்டதே இல்லை என்று நேற்று 19-03-25 சொன்னவர்கள் அநேகம் .அதாவது 49 ஆண்டுகள் கழிந்த பின்னர்.
இந்தப்பாடல் வானொலியில் பிரபலம்
.நான் சொன்னது இதுதான் நல்ல பாடல் என்று எடுத்து சொல்ல வேண்டிய நிலை .
அவ்வளவு ஏன், ஒவ்வொரு QFR பதிவிலும் சுபஸ்ரீ அவர்களும் இதையே தான் உணர்த்திவருகிறார்.
சரி- பாடலுக்கு வருவோம்.
வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை க்கண்டு
தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று
நாணம் ஒரு வகை கலையின் சுகம்
மௌனம் ஒரு வகை மொழியின் பதம்
பல்லவியில் கவிஞர் காட்டிய செழுமை
உயிரில்லாத வீணை பேசும்,உருவமில்லாத தென்றலும் பேசும்
, உயிர் உருவம் இரண்டும் உள்ள உனக்கு என்ன குறை ? என்று தெம்பூட்டல்.
பல்லவியின் பின் பகுதி
நாணம் ஒரு வகை கலையின் சுகம்
மௌனம் ஒரு வகை மொழியின் பதம்
உனது நாணம் கூட சுவையான செய்தி தரும், உனது மௌனம் கூட
பிரத்தியேக மொழியில் ஒலிக்கும் சொல் என்று அவளது மௌனத்தை ஒரு சிறப்பாக எடுத்து பேசுகிறான்.
பெண் மெளனமாக இருக்கிறாள். இங்கே இசை அமைப்பாளரின் விளக்கம் பெண் குரல் ஹம்மிங்
வடிவில் . நாயகனின் கருத்தை ஆமோதிக்கும் வகையில்
ஹ் ம் ஹ் ம் ஹும் ஹு ஹூ ஹு ஹும் என பெண் ரீங்கரிக்கிறாள்.
அதாவது நாயகனுடன் மனதளவில் உடன் படுகிறாள்
இதன் பின்னர் பாடலில் தொடர்ந்து பெண்ணின் ஹம்மிங் இடம் பெறுகிறது . எவ்வளவு நுணுக்கமாக உணர்வை இசையின் எல்லைக்குள் நிறுவுகின்றனர்.
மேலும் ஒவ்வொரு முறை பல்லவியோ சரணமோ இடம் பெரும் தருணங்களில் இயல்பான நாணம் /அச்சம் கலந்த கலவையாக நாயகி லக்ஷ்மி , அவளை [புரிந்து கொண்டவனாக ] விட்டுப்பிடிக்கும்
நாயகன் முத்துராமன் இருவரும் மென்மையான உணர்வுகாட்டி சோபிக்கிறார்கள்.
பல்லவிக்கு உயிர்கொடுத்த நாணம் மௌனம் காட்டி லட்சுமி விலகிப்போக , நீ எங்கே போய் விடுவாய் என்று நாயகன் இருந்த இடத்திலிருந்தே பாடி இருவரும் நெருங்க , மெல்ல தன்னை விடுவித்துக்கொண்டு விலகி ஓட, நாயகன் அவளை பற்றி இழுக்க , மெல்ல நெருங்கி, விலகி நெருங்கி என்று செய்வதறியாமல் நாயகி தடுமாறுவதான காட்சி அமைப்பு .
தீபம் எப்போது பேசும் கண்ணே
தோன்றும் தெய்வத்தின் முன்னே
தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
தீபம் சொல்லாதோ கண்ணே
தீபம் எப்போது பேசும் கண்ணே [பெண்ணே எப்போது உணர்வை வெளிப்படுத்துவாய்?]
தோன்றும் தெய்வத்தின் முன்னே [என்னை காணும்போது -என்கிறான்]
தன்னை தீபமாக நினைப்பதை நாணத்துடன் ரசிக்கிறார் பெண்--கூர்ந்து கவனியுங்கள்.ஆண் -பெண்
நெருக்கம் அது தோற்றுவிக்கும் மகிழ்வும் மனப்போராட்டமும் பாடல் உணர்த்துவதை போல வேறு
உத்திகளால் விளக்குவது கடினம். . மேலும் [இந்தப்போராட்டம்] தொடர்கிறது
“காதல் தருவது ரதியின் கதை , கண்ணில் வருவது கவிதைக் கலை” என்று பாடி முகத்தருகில் நெருங்கி அவள் காதில் அவன் கிசுகிசுக்க , அவள் வெட்கம் கொண்டு ஓடி படுக்கையில் அமர ஹம்மிங்கில் எம் எஸ் வியின் கற்பனை வெளிப்பட இப்போது ஊ ஹூம் ஹ்ம் ஹ்ம் [வேண்டாம்] முத்தமிட வேண்டாம் என்றுணர்த்த வாய் மீது ஆள்காட்டி
விரல் வைத்து நாயகி ஊ ஹூம் ஊ ஹூம் என்று ஹம்மிங் . இப்படித்தான் பாடலுக்கு சுவை கூட்டுவது அன்றைய உத்தி.. இனி பேசிக்கொண்டிருக்க நேரமில்லை என்பதாக “தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே , நெஞ்சில் தாலாட்டு
கண்ணே” என்று நாயகன் பாடி அவள்
மடியில் சாய்கிறான் , இப்போது ஹம்மிங் ஹ்ம் ஹ்ம் ஹ்ம் என்று ஆமோதிக்க , அவன் ஆஅ ஆ ஆ
அ ஹா என்று சேர்ந்து ஒலி த்து பாடல் நிறைவாகிறது.
இசை ஊமைப்பெண்ணுக்கு இசைந்து அமைதியாக மென் கருவிகள் மற்றும் தாளம் அமைந்து எப்போது
கேட்டாலும் நம்மை கட்டிப்போடுவதை எனது அனுபவமாகவே
சொல்கிறேன் 1975 இறுதியில் துவங்கி இன்று
2025 [அரை நூற்றாண்டு காலம்] இப்பாடல் என் மனதில் வாழ்கிறது. ஆண் குரல் மெல்ல வருடும்
நாதம் எனில் பெண் ஹம்மிங் மயிலிறகு கொண்டு தடவும் நேர்த்தி, வீணை , பிற நரம்புக்கருவிகள்
எதுவும் அதிராமல் ஒலிப்பது மற்றும் பாடல் பல்லவிக்கு திரும்பாமலே ஹம்மிங் குரல்களில்
சங்கமித்து சுத்தமான துணி நீரில் மூழ்குவது போல
அடங்குவது வளமான /வலுவான கற்பனை. . . இது போன்ற பாடல்களை உருவாக்கும் ஆளுமைகள்
இந்நாளில் எங்கே?
மீண்டும் கேளுங்கள் Bing
Videos
பின்னர் பிறிதொரு பாடலுடன் சந்திப்போம்
நன்றி அன்பன் ராமன் .
Ahaa. aRbudhappAdalukku athi aRpudhamAna Ayvum, viLakkamum.
ReplyDeleteAbAram prof.
அந்த "அநேகம்"களில் அடியேனும் ஐக்கியம். நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கோட்டை விட்டுவிட்டு இப்போ, அந்தக்"கோட்டை"யைப் பிடிக்க இந்தத் "தளபதி"யின் பின் அணிவகுப்போம்.
ReplyDeleteஆஹா நைசாக 'தலைவலி ' என்பதை தளபதி என்றுசொல்லிவிட்டால் போயிற்று என்ற உத்தியா ? நாங்க ஏமாற மாட்டம் ல .
ReplyDeleteநான் முதலில் என்னவென்று எழுதவேண்டுமென்று நினைத்தேனோ அதை தளபதியே சொல்லிவிட்டார்😁😄
ReplyDeleteகோட்டை விட்டதை கோட்டையில் பிடிக்கஎன்று சொல்லாமல் , கோட்டையைப்பிடிக்க என்று திரிக்கும் போதே தெரிந்துவிட்டது -இது நல்லதற்கு அல்ல என்று அதனால் தான் நாங்க ஏமாற மாட்டம் ல என்று தெளிவாக சொல்லியுள்ளேன்.
ReplyDelete