Rengaa vendaam -4
ரெங்கா வேண்டாம் -4
இந்த கிளி ஜோசிய விவகாரத்தை 3 பதிவுகளோடு
நிறுத்தியிருந்தேன். நண்பர் டாக்டர் வெங்கடராம ஐயங்கார் சுவாமி முதல் பதிவின் நாளிலேயே
ஒரு சந்தேகத்தை கிளப்பியிருந்தார்
என்னது வெங்கடராம ஐயங்காரா? என்று
தஞ்சை மற்றும் வடமண்டல வைணவர்கள் வியப்பு தெரிவிக்கக்கூடும் . ஆம் சந்தேகமே இல்லாமல் சாட்சாத் வெங்கடராம ஐயங்கார்
என்பது தான் அவரது இயற்பெயர் -எனவே பதற்றம் வேண்டாம் அவர் நெல்லை மாவட்ட வைணவர்.. இந்த
வைணவர் எழுப்பிய வினா இதுவே.
இந்தக்கதையில் ரெங்கசாமி, மைதிலி
, சந்தானம் என்று ஒரே ஐயங்கார் நாமகரணம் இருக்க, இதில் கோமதி எப்படி? ஒருவேளை அந்தப்பெண்மணி
சங்கரன் கோயில் பகுதியை சார்ந்தவரோ? என்று சிறு விளக்கமும் வழங்கியிருந்தார். அண்ணா அடிப்படையை அசைத்தார்
எனில் மிகை அல்ல. ஆனால் இந்த கோமதி என்ற பெயர் நிச்சயம் ஏதாவது புயலைக்கிளப்பும் என்று
எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்ப்பு வீண் போக வில்லை சரி மேலும் கதைவிட ஒரு வாய்ப்பு
கிடைத்துள்ளது. [கோமதி என்ற பெயர் வைணவ மரபில் பொதுவாக இல்லை ஆனால் சங்கரன்கோயில் பகுதியில்
கோமதி அம்மன்- ஆளும் தெய்வம் என்பதால் சில வைணவர்களும் அந்தப்பெயர் சூட்டிக்கொள்வர்
என்று தோன்றுகிறது ]
இந்த கோமதி வைணவர் அல்ல. ஸ்மார்த்தர். வெங்கடாச்சாரி அந்த நாளில் ஒரு ஷோக்குப்பேர்வழி [தஞ்சை மொழியில்].
படிப்பு என்னவோ அன்றைய SSLC தான் . பாகவதர் கிராப்பு, சில்க் ஜிப்பா , ஜவ்வாது சென்ட் , பளிச் என்ற வேஷ்டி. நல்ல குரல் -பெண்களை --SORRY பெண்ணை . சுமாரான வடிவம் எனினும் சூப்பர் குரலில் மன்மத லீலை யை வென்றார் உண்டோ , மாதரசி உன்னால் முடியுமோடி? என்றுகோயிலில் தீபாராதனை காட்டும் அர்ச்சகர் போல் வலது கையை ஆட்டிக்கொண்டு சைக்கிளில் பெண்ணை துரத்துவார். 2,3.பெண்கள் என்றால் பூனை போல் பதுங்கிப்போய் விடுவார். அப்படித்தான் தனியாக வலம் வந்துகொண்டிருந்த கோமதியை துரத்தி துரத்தி மாதரசி உன்னால் முடியுமோடி ? என்று தேவகானம் பொழிந்தார்.
இவரைத்தவிர வேறு எவரும் V. கோமதியை சீண்டியதில்லை [V =வைத்தியநாத ஐயர் -உள்ளூர் போஸ்ட் மாஸ்டர்
, எனவே விஷயம் வீட்டுக்கு வந்து விடும்]. போஸ்ட் மாஸ்டராவது ஒன்றாவது வெங்கடாச்சாரிக்கு ஹார்மோன் பிடி நன்கு பீடிக்க
கோமாதி யை அனேகமாக வளைத்துவிட்டார் . வீட்டிற்கே போய் இங்கிலிஷ் 'சொல்லித்தருகிறேன்'
என்று நெருக்கம் காட்டினார். ஆனால் அந்தக்கால பையன் அல்லவா உள்ளத்தின் நெருக்கத்தோடு
நிறுத்திக்கொண்டார்.
இந்த சூழலில் வெங்கடாச்சாரியின்
தகப்பனார் சுதர்சனம் நோய்வாய்ப்பட்டார். கோமதி துடித்துப்போய் வெங்கடாச்சாரி வீட்டிற்கே
போய் கல்யாணி மாமிக்கு [Mrs சுதர்சனத்திற்கு ] உதவிகள் செய்து வந்தாள். சுதர்சனம்
உடல்நிலை மோசமானது. கோமதி ஓடோடிப்போய் தனது மாமா ஈஸ்வரனிடம் சொல்லி ஒரு டாக்டரை அழைத்து
வந்தாள் மாமா ஈஸ்வரன் மெடிக்கல் ஷாப் வைத்திருந்தார் எல்லா டாக்டரையும் நன்கு தெரியும்
அவருக்கு.
அந்த வகையில் கோமதி வெங்கடாச்சாரியின்
வீட்டில் ஒரு நபர் போல சமையல் அறை , பூஜை அரை எங்கும் சுதந்திரமாகப்போய் வருவாள். பாதி நேரம் வேறு வீட்டில் கோமதி இருப்பது வைத்தியநாத
ஐயருக்கு பிடிக்கவில்லை. நீ எங்கும் போகக்கூடாது என்று கறாராக கட்டுப்பாடு விதித்தார்.
இதுதான் ஹார்மோனை அதிகரிக்கும் என்ற தகவல் புரியாத அந்தக்கால போஸ்ட்மாஸ்டர். கடை கண்ணி, மார்க்கெட் எங்கும் போகக்கூடாது SSLC பரீட்சை எழுதியாச்சு போதும் வீட்டோடு கிட என்று 144 போட்டுவிட்டார்
போஸ்ட்மாஸ்டர்.
ஒரு நாள் மாலை 4.00 மணிக்கு தகவல்
வந்தது ஸ்ரீ. சுதர்சனம் ஆசார்யன் திருவடிகளை அடைந்தார் [இயற்கை எய்தினார்] என்று.
அப்பாவின் கறார் உத்தரவையும் மீறி
கோமதி ஓடிவிட்டாள் வெங்கடாச்சாரி வீடு நோக்கி.
போஸ்ட் மாஸ்டர் சென்னைக்கு மாற்றல்
உத்தரவுடன் மாலை வீட்டிற்கு வந்தார் , கோமதி வீட்டில் இல்லை .வெகுண்டெழுந்தார் வைத்யநாத
ஐயர் . எங்க அவ?
அந்த ஐயங்கார் மாமா காலமாயிட்டார்னு
தகவல் வந்தது வெங்கடாச்சாரி வீட்டுக்கு போயிருக்கா என்றார் தாயார் பர்வதம் மாமி.
இது நல்லதுக்கு இல்லை , அந்த பையனோட
இவளுக்கு என்ன? கொழுத்து அலையறது? இன்னும் 1/2 மணியில அவ வல்ல அவளை அங்கேயே போய்டச்சொல்லு
, நான் நாளை மறுநாள் சென்னை மந்தைவெளி போஸ்ட் ஆபீஸ்ல ஜாயின் பண்ணனும். முதல்ல நான்
போய் வேலைல சேர்ந்துட்டு வீடு பார்க்கிறேன் நீ அப்புறம் வா. அதுக்கு நடுவுலஒரு 4,
5 நாள் உங்க அப்பா அம்மாவை ப்பாத்துட்டு வா ; ராத்திரி பஸ் ஏறி நீ தஞ்சாவூர் போய் எல்லாரையும்
பார்த்துட்டு வா, என்று மனைவியை அனுப்பி விட்டார். நேரே சுதர்சனம்வீட்டில் போய் துக்கம்
விசாரித்து விட்டு, இப்போது நீ வராவிட்டால் நீ வரவே வேண்டாம் என்று கோமதியை எச்சரித்துவிட்டு
வீட்டிற்கு திரும்பினார். கோமதி எதற்கும் அசர வில்லை வெங்கடாச்சாரி, கல்யாணி இவர்களுடன்
சுதர்சனம் ஐயங்கார் காரியங்களுக்கு உதவி செய்து அங்கேயே இருந்தாள். 20 நாட்கள் கழித்து
வைத்யநாத ஐயர் லெட்டர் போட்டிருந்தார் " கோமதிக்கு -- உன்னை தலைமுழுகி ஆயிற்று
நீ இனி என்னையோ அம்மாவையே பார்க்க வரவேண்டாம் , வரக்கூடாது --- வைத்யநாதன் என்று கையெழுத்து.
இப்படியாக
நிர்பந்தம் ஏற்பட , கோமதி புகுந்து கொண்ட வீடே புகுந்தவீடாயிற்று .
இப்படித்தான் கோமதி -வெங்கடாச்சாரி
இருவரும் மணம் முடித்தனர். பின்னர். வழித்தோன்றல் ரெங்கசாமி படுத்திய பாட்டில், [வைத்யநாத அய்யர் சாபம் போலும்]. வெங்கடாச்சாரி . ஒரு நாள் ராவோடு ராவாக ஓடிப்போய்
பகவதி தீட்சையில் கண் காணாமல் ஆசிரம வாழ்வு நடத்துகிறார். ரெங்கராஜு வந்தால் ஒரு வேளை கோமதி -வெங்கடாச்சாரியை தூரத்தில் இருந்து தரிசிக்கலாம்.
சித்திக்குமா ?
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment