Monday, April 14, 2025

ADAMANCY -2

 ADAMANCY -2

அடம் பிடித்தல் -2

தெருவில் போய் விளையாடு என்று பையனுக்கு வேண்டாத நேரத்தில் துரத்தி விடுவர்.

மறுநாள் காலை தாயார்/அக்கா பையனை பள்ளிக்கு அனுப்ப தலை வாரிவிட , ஆ ஆ , வலிக்கிறது என்பான் பையன். தலையில் என்ன என்று பார்ப்பார்கள் ஒன்றும் தென்படாது [குட்டு அப்படி . -நல்ல நடு மண்டையில் ].  இதுபோல் ஒருதரம் பட்டவன் 'இப்பவே இப்பவே ' வேலையை தாயாரிடம் அல்லது தாயார் இருக்கும்போது மட்டுமே துவக்குவான். 

இரண்டு சகோதரர்கள் எனில் ஒருவன் நல்லவன் போல் நடிக்க இன்னொருவன் அந்த தினத்திற்கு 'இப்பவே இப்பவே' கூப்பாடுக்கு அஸ்திவாரம் போடுவான் . இருவரும் சேர்ந்து ஏதாவது செய்தால் தாக்குதல் வெகு வீரியமாக இருக்கும். ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்து வாங்க முயலுவதும் தனித்தனியாகத்தான் 

இல்லையேல் அடுத்தவனின் கணக்கு/ஆங்கிலம் மார்க்கு குறைவுக்கு இருவருக்கும் செமத்தியாக கிடைக்கும்  வேறென்ன ? அடியும், அறையும் தான் ; எலும்புக்கூடாக இருக்கும் தகப்பன் இவ்வளவு வலுவாக அடி ஜமாய்க்கிறாரே என்று மனைவி ஆச்சரியம் கொள்வாள்; இந்த வாரம் டாக்டரிடம் போய் இவருக்கு டானிக் வாங்கணும் னு நினைத்தேன் . ஐய்யய்யோ   வேண்டவே வேண்டாம் அப்புறம் டானிக்கை வேறு   சாப்பிட்டுவிட்டு எனக்கு 4 போட்டார்னா -யாரால இருக்கு , நாலும் கிடக்க நடுவுல அடி வாங்க முடியாது என்று டானிக் பிளான் கை விடப்படும்.

இதெல்லாம் உண்மையா ? அல்லது நீ ஏதாவது அள்ளி விடுகிறாயா என்று யோசிக்கிறீர்களா? பெயர்களும் சம்பவங்களும் குறிப்பிடப்படாமலேயே முறையான விளக்கம் தருவதிலிருந்தே புரிந்திருக்குமே இவை பல நிகழ்வுகளை கவனித்து உள்வாங்கி தெரிவிக்கப்படுகிறது என்று. இதில் எதுவும் நிகழாத வெற்று கற்பனை அல்ல , மாறாக பல அனுபவ சந்தர்ப்பங்களில் உணர்ந்ததை சொல்லுகிறேன் . 

அப்படி ஓர் சம்பவம் சுமார் 50 ஆண்டுகள் முன்னம் ‘குமுதம்' வார இதழில் தெரிவிக்கப்பட்டிருந்த நிகழ்வு. மதுரை/ விருதுநகரில் இருந்து நெல்லை நோக்கி சென்ற பஸ் ஒன்றில் பெற்றோருடன் பயணித்த சிறுவன் ,சுமார் 30 நிமிட பயணத்திற்கு பின் 'ஓ ' என்று உரத்த குரலில் வீறிட்டு அலற பஸ் சில்  பயணித்தவர்கள் அவனை சமாதானம் செய்ய என்னஎன்னவோ முயன்றும் , போராடியும் மிரட்டியும் அதட்டியும் அவன் மசியவே இல்லை . மென்மேலும் உரத்த குரலில் அலற  ட்ரைவர் பஸ் ஸை நிறுத்திவிட்டு அவனருகில் வந்து 'தம்பி என்னப்பா வேணும்? 'என கேட்க முடியாது முடியாது ஒண்ணு ஒண்ணா வாங்கித்தா ஒண்ணு ஒண்ணாவாங்கித்தா  ஒண்ணு ஒண்ணாவாங்கித்தா  ஒண்ணு ஒண்ணா வாங்கித்தா ஒண்ணு ஒண்ணா வாங்கித்தா என்று அலற ட்ரைவர் பயந்து போய்,  ஒண்ணு ஒண்ணா னு கேட்கிறான் ஏதாவது 15 -20 பொருள்களை கேட்கிறான் போலும் என்று அவர் நமக்கேன் வம்பு என்று பஸ் ஸை மீண்டும் இயக்கப்போய்விட்டார். இப்போது பையன் மிக வீரியமாக . ஒண்ணு ஒண்ணாவாங்கித்தா  ஒண்ணு ஒண்ணா வாங்கித்தா ஒண்ணு ஒண்ணா வாங்கித்தா என்று அலற, பஸ் பயணிகள் கண்டக்டரிடம் இந்த 3 பேரையும் இறக்கி விட்டுருங்க எங்களால பயணம் பண்ண முடியல என்று தகராறு  செய்ய , கண்டக்டர் பாவம் சார் ரோட்டுல இறக்கிவிட்டா  எப்பிடி ? இப்ப சாத்தூர் வரும் அங்க இறக்கி விட்டா வேற பஸ் ல போயிருவாங்க என்று நிலைமையை கட்டுப்படுத்தி,பயணிகள் அமைதி ஆயினர். ஆனால் பையன் தீவிரமாக அலறிக்கொண்டே ஒண்ணு ஒண்ணாவாங்கித்தா  வாங்கித்தா  என்று இடைவிடாது அடம் பிடித்துக்கொண்டே இருக்க  , வண்டி இடது புறம் திரும்பி சாத்தூர் பஸ் ஸ்டாண்டில் நுழைய "இதோ ஒண்ணொண்ணா ஐயா இதோ ஒண்ணொண்ணா என்று சிரித்துக்கொண்டே பையன் கையை  காட்ட அங்கே பட்சண கடையில்  கோபுரம் போல் குவிந்திருந்த காராசேவு குவியல்.. தகப்பனார் ஒரு பொட்டலம் காராசேவு வாங்கி வர பையன் ஈரக்கண்ணுடன் ஈ என்று சிரிக்க , பிறகு தான் புரிந்தது காராசேவு குச்சி குச்சியாக தனித்தனி யாக ஒன்றோடொன்று ஒட்டாமல் இருப்பதால் அதற்கு ஒண்ணு ஒண்ணா என்று இவன் ஒரு பெயர் வைத்திருக்கிறான். இப்போது புரிகிறதா எப்படி அடம் பிடித்து உயிரை வாங்குவார்கள் சிறுவர்கள் என்று?  அடம் என்பது சமாளிக்கக்கூடிய எளிய நிகழ்வு அல்ல.

நன்றி அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TURKEY BERRY -2

  TURKEY BERRY -2 Solanum torvum [Tam: Sundaikkaai] -2 Fresh fruits of Solanum torvum [Sundaikkaai] [per 100 gm] are reported to contain  ...