Tuesday, May 6, 2025

LET US PERCEIVE THE SONG-- 21

 LET US PERCEIVE THE SONG-- 21

பாடலை உணர்வோம் -21

PAATTU VARUM NAAN AANAIYITTAL VAALI MSV TMS PS

நமது இன்றைய தேர்வு ஒரு ஆழ்ந்த சிந்தனைக்குரிய அமைப்பு கொண்ட திரைப்படப் பாடல். என்னது திரைப் படப்பாடலுக்கு ஆழ்ந்த சிந்தனையா என்று சிலர் ஏளனம் செய்யக்கூடும் ஏனெனில் அவர்கள் மனநிலையில் திரை தகவல்கள் என்றாலே வெறுத்து ஒதுக்க வேண்டிய அவலங்கள் என்றே நீண்டநெடுங்காலமாக ஒரு நிலைப்பாட்டிலேயே வளர்ந்து வாழ்ந்து இன்னமும் எதையும் விவாதித்து விளங்கிக்கொள்ள அவர்கள் தயாரில்லை. ஏன் எனில் நான்  பிடித்த  முயலுக்கு மூன்றே கால்கள் என்று முயலையே பிடிக்காமல் பேசும் இனத்தவர் தான் இவர்கள்.

இப்படி ஏகடீயம் .பேசி விமரிசிக்கப்பட்ட நபர் தான் திரு ரெங்கராஜன் என்ற பாடலாசிரியர் வாலி. இன்றைய நமது விவாதப்பொருள் கவிஞர் வாலி வடித்த பாடல் மற்றும் அதற்கு தொடர்புடைய பிற ஆய்வுக்கருத்துகள்.

"பாட்டு வரும் -- பா....ட்டு   வரும் "-நான் ஆணையிட்டால் -1966 , வாலி, எம் ஸ் விஸ்வநாதன் , குரல்கள் டி எம் எஸ் , பி சுசீலா

இது ஒரு காதல் பாடல், எனினும் ஒவ்வொரு சொல்லும் சுவையும் நேர்த்தியாக செதுக்கப்பட்ட சிற்பம் போன்ற பொருத்தமான உரு எனில் சந்தேகம் இல்லை. இயல்பான ஓட்டத்தில் பயணிக்கும் சொற்கள் அவற்றை துரத்தி மகிழும் ஒலிக்கலவை எனும் இசை .       

பேசப்பேச வாய் அடைத்துப்போகவைக்கும் கம்பீர நளினம் இப்பாடல்.

பாடலின் துவக்கமே ஒரு ஆணித்தர பிரகடனமாக வெளிப்படுகிறது. ஆம்

"பாட்டு வரும் , பா --------ட்டு வரும் "  என்று ஆண்  துவக்க

பெண் : 'என்ன"

ஆண்  : பாட்டு வரும் , பா --------ட்டு வரும் , பெண்: உ ஹூம்

ஆண் "உன்னைப்பார்த்துக்கொண்டிருந்தால் பாட்டு வரும், அதை பூங்குயில் கூட்டங் கள் கேட்டு  வரும்"

பெண் : பாட்டு வரும்   ஆண்: அஹாங்

பெண் "அதைகேட்டுக்கொண்டிருந்தால் --- ஆட்டம் வரும் அந்த ஆட்டத்தில் பொன் மயில் கூட்டம் வரும். இப்போது தபாலாவின் நளின அதிர்வு விஷேசமாக ஒலிக்க 

மீண்டும் பல்லவி

பல்லவியின்  பரிமாற்றத்திலேயே ஒருவரை ஒருவர்  வியப்பதும் விழிமலங்க விழிப்பதுமாக காட்சி நகர்கிறது. இவ்வாறு துவங்கிய  சொல் ஊடல் சற்று அமைதிகொண்டதும்  இசையின் ஆதிக்கம் துவங்கக்காணலாம்

அதுவும்  கம்பீரமான பளிச் என்ற  கிட்டார் மீட்டலில் [மிகவும் காதருகில் ஒலித்து முறுக்கேற்றும் வாசிப்பு. கடினமான காலப்பிரமாத்தில் ஒலிக்கும் கார்ட்ஸ் [CHORDS] அமைப்பில் ; மிகச்சிறந்த guitarist களுக்கு மட்டுமே கைவரக்கூடிய விரைவு. லாவகம் மற்றும் துல்லியம் மூன்றும் ஒருங்கிணைந்த மீட்டல் [கோல்டன் கிட்டார் பிலிப் அவர்களின் நுணுக்கமான மீட்டல்] , அன்றைய கிட்டார் ஆர்வலர்கள் இந்த "நோட் களை " வாசித்தே தீருவது என வேள்வி கொண்டிருந்தனர் எனில் அந்த வாசிப்பின் ஆளுமை அத்தகையது என புரிந்து கொள்ளலாம்.. இப்படி அந்த கிட்டார் ஒலி அகலப் பறந்து காற்றில் வியாபிக்க நிழல்போல் சற்று அடங்கி தொடர்ந்து மென்மையாய் வந்த அக்காடியன் இறுதியில்,  சர சர என ஒலித்து அடங்க , பெண் குரலில் பல்லவி நிறையும் போது இதோ நான் இருக்கிறேன் என மென்மையாக அதிரும் தபலா ஏற்படுத்தும் புதிய ஒலி த்தாக்கம் கேட்டுதான் உணர இயலும் , எழுதி விளக்குதல் எளிதன்று. பாடல் அடுத்த நிலைக்கு புகைபோல் பரவி முன்னேற என்று பாடல் நெடுகிலும் கவிஞன், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் இயைந்து இயங்கி இப்பாடல் காட்டும் பன்முகங்களே பல எனில் மிகை இல்லை

ஆண்: இதயம் என்றொரு ஏடெடுத்தேன் அதில் எத்தனையோ நான் எழுதி வைத்தேன் என்று உணர்ச்சிப்பரவாகமாய்ப்பாடி , தொடர்ந்து

எழுதியதெல்லாம் உன்புகழ் பாடும் எனக்கது போதும், வேறென்ன  வேண்டும் .. பாட்டு வரும் என்று ஆண்  குரல்  மீண்டும் பல்லவியை எட்டும் இடம் வெகு நேர்த்தியாக பாடப் பட்டுள்ளது [டி எம் எஸ் ].

இடை இசையில் துள்ளலும் துடிப்பும் மேலோங்கி நிற்க முக்கியகாரணம் கருவிகளின் ஒலி வெகு துல்லியம்அதிலும் கிட்டார் அக்காடியன், கொத்தாக குழையும் வயலின்கள் ஒருபுறம், தொடர்ந்து அலையென வரும் குழல் மற்றும் மென் அதிர்வுடன் ட்ரிபிள் காங்கோ என நேர்த்தியான இசைக்குழைவில் பெண் குரல் வழியே வெளிப்படும் சரணம்

காதல் என்றொரு சிலை வடித்தேன் அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்    

சிறை எடுத்தாலும்  காதலன் நீயே

பாவலன் தானே , காரண ம் நானே               என்று குழைந்து மீண்டும்.... “பாட்டு வரும்

தொடர்ந்து வரும் இடை இசையில் மிளிர்ந்து மின்னுவது அக்காடியனின் சித்துவிளையாட்டும் சிலிர்ப்பும். தொடர்ந்து ஒலிக்கும் வயலின்களின் நெளிந்துவளைந்த பயணத்தை சுமக்கும் காங்கோ ஒலி மெல்ல அமிழ ஆண் குரலி ல் அடுத்த சரணம்

மனம் எனும் ஓடையில் நீந்தி வந்தேன்

அதில் மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன்  

[இந்நிலையில் பெண் குரல் இணைகிறது ]

பெண்: மூடிய கைகளில் இருப்பவள் நானே

இறைவனை நேரில்   வரவழைத்தேனே ... பாட்டு வரும்

 என பாடி அஹ ஹா அஹ ஹாஹா என குரலில் மெல்ல முடங்க கொத்தாக வயலின்கள் அதே அஹ ஹா ஸ்வரங்களை விரைந்து இசைத்து பாடலை நிறைவு செய்துவிட , நாம்  குளிர்ந்த பூங்காவில் இருந்து , வெயிலில்  வெளியே வந்த உணர்வுடன் வேறு களத்தை காண்கிறோம்.

இப்பாடல் அநேக பாடல்களில் இருந்து மாறுபட்ட ஒரு சிறப்பு அமைப்பு எனில் ஐயம் இல்லை.

முதல் சொல் தொடங்கியதும் நாயகி "என்ன" என்று வினவ பின்னர் "ஓஹோ" என்று உணர்வால் ஒன்று படுவதை கவனித்துப்பாருங்கள். ஒப்பனைக்கலைஞர் சரோஜாதேவிக்கு கண்களை பெரிதாக்கி காட்டிய உத்தி மை எழுதி சிலர் குரிவால் என்றும் வேறு சிலர் குருவி வால் என்றும் சிலாகிக்கும் மேல் நோக்கி வளைந்த மைக்கீற்று செய்துள்ள ஜாலம் இது. பிறிதொரு தருணத்திலும் கண்கள் வட்ட விழியென மிளிரக்காணலாம். இவ்வுத்திகளில் ஒளிப்பதிவாளரின் ஆலோசனையும் இருந்திருக்கும். [TEAM WORK என புரிந்து கொள்ளலாம் ]      

இவை ஒரு புறம் இருக்க நாயகன் நாயகி இருவரும் ஒருவருக்கு ஒருவர் "என்ன", ஓஹோ, உஹ்ம் என்றெல்லாம் பதில் சொல்வது  அநேகமாக உணர்வை மேம்படுத்த இசை அமைப்பாளர் கையில் எடுத்த சிறிய ஆனால் வலிமையான உத்தியாக இருக்கலாம்.

பல்லவி, இடைஇசை, சரணம்1, இடையிசை, சரணம்2 இடையிசை, சரணம் 3 என்ற அமைப்பையும் கவனியுங்கள்.   நீ என்ன சொல்கிறாய்?,என்று திகைக்காதீர்கள். முதல் முறை ஒலித்தபல்லவி, அடுத்தடுத்து வரும் சரணம் நிறைவடைந்த விநாடியிலேயே  பாட்டு வரும் என்று பல்லவியைப்பிடித்துவிடுவதை கவனியுங்கள்.

இசை அமைப்பில் இது ஒரு வினோத அமைப்பு.

என்ன வினோதம் என்றால் ஒவ்வொரு சரணத்தையும் பல்லவியின் நீட்சியாகவே கையாண்டுள்ளார் மெல்லிசைமன்னர். பாமர மொழியில் சொல்வதானால், பல்லவியின் உணர்வை சுமந்து சரணம் வருவதால் மீண்டும் இடை வெளி அல்லது இடையிசை இல்லாமலேயே , சரணம் பல்லவியுடன் வெகு இயல்பாக இணையும் முறையில் இரண்டினையும் ஒரு நேர்கோட்டில் வைத்துப்பின்னியுள்ளார் எம் எஸ் வி , இதுதான் மெல்லிசையின் அதீத கற்பனைக்கு சான்று விளக்கம் எல்லாம்.. பல்லவி -இடை இசை -சரணம் -இடையிசை -பல்லவி -இடையிசை -சரணம் என்பது சம்பிரதாய அணுகுமுறை.

சம்பிரதாயத்தை நேர்த்தியாக வளைப்பது தான் மெல்லிசை என்பதற்கு இப்பாடல் ஒரு வலுவான உதாரணம். இதன் உள்ளார்ந்த பொருள் என்ன ? பல்லவியோ , சரணமோ, ஆணோ , பெண்ணோ, இடைஇசையோ அனைத்தும் பேதமின்றி பயணித்தால் தான் முட்டல்  மோதல்   இல்லாமல் பாடல் விண்ணில் மிதக்கும் காற்றாடியென உலவ நாம் மண்ணில் உலவ நம்மை பாடலுடன் இணைப்பதுதான் இசை .

நமது உணர்வுகள் எந்த அளவிற்கு பாடலுடன் பிணையுமோ அதுவே பாடலின் வெற்றியின் குறியீடு. அந்தவகையில் இது ஒரு சிறப்பான பாடல். சொல் தரும் பொருள் தான் சுவை, அச்சுவை மேம்பட உதவுவதே பொருத்தமான ராகநடை அல்லது பாடப்படும் முறை.. சிறிதும் முரண் இல்லாமல் குரல்கள் பயணிக்க இசை தரும் மேடையும், தாள ஒலிகளின் நடையும் கம்பளம் விரிக்க எளிதாக பயணிக்க வழி வகுப்பவர் தான் இசை அமைப்பாளர்..

அவ்வகையில், இப்பாடலில் எம் எஸ் வியின் பங்களிப்பு வெகு சிறப்பு. அன்றைய சூழலில் அவருக்கு இருந்த இன்னல்கள் அதிகம். ஆயினும் மெல்லிசை என்னும் ஒரு மாறுபட்ட பாதை வகுத்து தமிழில் ஆர்கெஸ்ட்ரேஷன் என்னும் கருவிகளின் இசைத்தொகுப்பை நடைமுறைப்படுத்திய முன்னோடி அவரே அதை இப்பாடலில் வெகுவாகக்காணலாம்.

இப்பாடலில் குறைந்தது 4 தாள நடைகள் உள்ளன சிலர் 5 என்கின்றனர். அவை எதையும் நம் போன்றவர்கள் எளிதில் உணரவே இயலாது.அலாதியான ஒலிகளைத்தரும் கருவிகளையும் பயன்படுத்தி பாடலை உயர்நிலைக்கு மேம்படுத்தியுள்ள இசை அமைப்பை கூர்ந்து கவனியுங்கள். இன்னும் ஏராளமான நயங்கள் புதைந்துள்ள பாடல் இது என்று திடமாக நம்பலாம் .

பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=muVecZdc8KE  

இதே பாடலை QFR குழுவினரின் விளக்கத்துடன் கேளுங்கள்

QFR EPISODE 337

இதே பாடலை மேடை நிகழ்ச்சியில் அனந்து-- ஜானகி குரல்களில் கேட்க

https://www.google.com/search?q=+PATTU+VARUM+STAGE+SONG&newwindow=1&sca_esv=1dda3acef72a6239&sxsrf=AHTn8zqqPcrw1nXjWRui430nz3lFh0FdYg%3A1746362986930&ei=amIXaPHAONyMseMPi6DKyQU&ved=0ahUKEwjxnfCL7YmNAxVcRmwGHQuQMlkQ4dUDCBA&oq=+PATTU+VARUM+STAGE+SONG&gs

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

GINGER

  GINGER Ginger has a global value for its utility as a spice and also as a medicinal supplement in alleviating digestive disorders, slugg...