Saturday, August 2, 2025

UNABLE TO UNDERSTAND ANYTHING -4

 UNABLE TO UNDERSTAND ANYTHING -4

ஒன்றும் புரியவில்லை -4

LEARNING [ BASICS-3]

அறிதல் [அடிப்படை-3]

எந்த அறிதலுக்கும்  அடிப்படை"புரிதல் "  என்று புரிந்துகொண்டால் ஒழிய ஆசிரியப்பணியில் திறமையும் மாணவர் கடமையில் சரியான முன்னெடுப்பு அமைதல்  எட்டாக்கனிகளே. ஆம் நமது செயல்பாடுகள் புரிதலை மையப்படுத்தாமல் "மார்க்" என்னும் உதவாத குறியீடு ஒன்றே இலக்கு என்று இருக்கும் வரை 'நல்ல மார்க்' 'நிறைந்த மார்க் '.என்று உவகைகொள்ளலாமே அன்றி பெருமை கொள்ள இயலாது. இது போன்ற "ஊதுகாமாலை மார்க் " களை வாங்கிக்குவித்த பலர் பின்னாளில் சாதித்தது என்னவெனில் " அந்த நாளில் ஸ்கூல் பஸ்ட் , ஜில்லா பஸ்ட், பின்னாளில் burst என்று பழம் பெருமை பேசலாம்.

செயல் திறன் மேம்பட புரிதல் மேம்பட வேண்டும். புரிதலை நோக்கி பயணிக்க விழைவோர் "மார்க்"கை துரத்திக்கொண்டு அலைய முடியாது. இது தான் ஆசிரியர்களும் மாணவர்களும் தங்களை முறையாக கட்டமைத்துக்கொள்ள உதவும் உண்மையான அடிப்படை.

புரிந்து கொள்ள மாணவன் முயல்வதும் புரிய வைக்க ஆசிரியன் முனைவதும் தான் ஆசான் -சீடன் உறவின் அடிப்படை. இது முற்றிலும் மனம் சார்ந்த வேள்வி [உடல் சார்ந்த ஈர்ப்பு அல்ல]  இந்த சந்திப்பில் கற்பவன் -கற்பிப்பவன் [ள் ] என்பதே தொடர்பு .

கற்பவன் மனதினுள் கற்பிப்பவன்[ள்] 'காற்றுபோல்' நுழையும் கலை தனை ஆழமாக அறிந்துவைத்திருத்தல் என்பது மாபெரும் வெற்றிக்கு வித்திடும். கவிஞர் வாலி சொல்வார் "எந்த வேர்வைக்கும் [வியர்வைக்கும்] ஒருநாள் வேர்  வைக்கும்" . இதனை அனைவருமே வாழ்வியல் சூத்திரமென கடைப்பிடித்தால், வெற்றி நிச்சயம் என்பதோடு, தோல்விக்கு வாய்ப்பே இல்லை என்பதே உண்மை.   

இதில் வேர்வை என்பது 'உழைப்பின் குறியீடு '. உழைத்தவனுக்கு வெகுமதி வெற்றியே. இதில் உழைப்பு என்பதன் பரிமாணங்கள் யாவை என்பதை உணர்வோம்

1 ஆசிரியனின் தேவை      புரிய வைத்தல்                    

2  மாணவனின் தேவை  புரிந்து கொள்ளுதல்          இதனை ஈடேற்றுதல் எங்ஙனம் ?

ஆசிரியர் தம்   தேவைகள்

1 எதையும் முற்றாகப்புரிந்துகொள்ளுதல்  2 முறையான வரிசை ப் படுத்துதல்  3 நிதானமாக விளக்குதல் 4 ஆழமாக விவாதித்தல் 5 அனைத்தையும் ஒட்டுமொத்தமாக சொல்லி விளங்க வைத்தல் இதை எப்படி அணுகுவது? இவற்றில் 4, 5 என்ற இடத்தில இருப்பன கல்லூரிகளு க்கும் பல்கலைகளுக்கும் அதிகம் தேவை.

எதையும் முற்றாகப்புரிந்துகொள்ளுதல் 

பயில்வதும் பயிற்றுவிப்பதும் ஒன்றை ஒன்று சார்ந்தே இயங்குவது.

 இதை மாற்ற முடியாது. சரியாகப்பயிலாத ஆசிரியன் முறையாக பயிற்றுவிக்க இயலாது ;அது போன்றே சரியாக பயிற்றுவிக்கப்படாமல் ஒருவர் பயில்வது எளிதன்று. அதாவது பயிலுதல் என்பது 'புரிந்துகொள்ளுதல்' ன்றே பொருள் காண்க .

புரிதல் இன்றி பயிலுதல் என்பது சாத்தியமில்லை. ஏனைய வகை படிப்பு பட்டம் இவை அனைத்தும் புற அலங்காரங்களே அன்றி வேறில்லை. எந்த உயர் பட்டம் பெற்றிருப்பினும்   புரிதல் இல்லையேல் பலன் இல்லை. செயல்

திறனை மேம்படுத்த இயலாத பட்டங்கள் 'தம்பட்டங்களே'.  எனவே ஆசிரியன் முதலில் தனது புரிதலை வளப்படுத்திக்கொண்டு , விளக்க முற்பட்டால் பெரிதும் வெற்றி அடைய தவும்.

வெற்றி கண்ட ஆசிரியர்கள் . சிறப்பாக விளக்கும் திறன் கொண்டோர் என்பதை மறுப்பதற்கில்லை .அவர்கள் சிறப்பாக விளக்கும் திறனை எவ்வாறு அடைந்தனர் / அடைந்திருக்கக்கூடும்? --எனில் -புரிதல் என்ற புள்ளிக்குத்தான் வர இயலும். 

புரிதலுக்காகன முயற்சிகள் .

ஒரே பொருளை தொடர்ந்து மீண்டும் மீண்டும் படித்துவந்தால் மெல்ல மெல்ல புரியத் தொடங்கும் . எனவே ஒவ்வொரு வகுப்பின் தேவைக்கும் முன்கூட்டியே ஆசிரியர் தன்னை தயார் படுத்திக்கொள்ள முற்பட்டால், காலபோக்கில் முன்கூட்டியே முனைப்பு காட்டும் திறனும் விரைவாக ப்புரிந்துகொள்ளும் திறனும் மேம்படும்.

புரிதலை விரிவாக்க பலவகை உயர் கல்வி நூல்களை தொடர்ந்து படித்து வருதல் நன்று.

அவை வெவ்வேறு கோணங்களில் இருந்து கருத்துகளை விளக்குவதால் ஒரு பொருளின் பல்வேறு அமைப்புகள் [dimensions ] நன்கு புலனாகும். எனவே தான் பல நூல்களை தேடிப்பயிலும்  எவருக்கும் பல் பொருள் குறித்த விரிவான பார்வை அமைந்துள்ளதை உணரலாம் .

இது தான் கண்டது கற்க பண்டிதன் ஆவான் என்ற முதுமொழியின் விளக்கம் ] 'கண்டதுகற்க' என்பது அவன் கண்ட எதையும் கற்க என பொருள் படும்  சிலர் குறிப்புகளை தொகுப்பார்கள். சிலர் வாசகங்கங்களை தொகுத்து அவற்றினுந் மூலம் விளக்குவர். வேறு சிலர் வாசகங்ககிளை மனனம்செய்து ஒப்புவித்து பெரும் பாராட்டுகளைப்பெறுவர். .

எதுவாயினும் அவர்களை எழுதிவைத்ததை படிக்காமல் , மனதில் இருந்து பேசுவதால் அந்தக கருத்துகள்       பெரு ம் வரவேற்பை  பெற்று  பலரையும் ஈர்க்கும் திறன் படைத்து விளங்குவன.

எழுதியதைப்பார்த்து வகுப்பறைகளில்  படிக்கவில்லை எனினும் , பயின்றவற்ரை எழுதி எழுதி  பார்ப்பது, நினைவாற்றலை மேம்படுத்தி, புரிதலை விரிவாக்கும் , எனவே சிலர் எழுதிப்பார்த்து நினைவாற்றலை வளப்படுத்திக்கொள்வர். இவ்வாறு ஆசிரியர் முனைப்புடன் செயல் பட்டால் , மாணவர்கள் அவ்வகை ஆசிரியரின் திறன்களை வியந்து போற்றி , அவ்வழிநடக்க முனைவர். இதுவே சிறந்த முன் மாதிரி என்பதற்கான விளக்கம் ., இவற்றை முறையாக கடை பிடித்தால் , அவ்வாசிரியருக்கு மிகுந்த பெருமையும் கௌரவமும் தேடி வந்து சேரும் . பிற செயலமைப்புகள் குறித்து பின்னர் விவாதிப்போம்.

நன்றி

அன்பன் ராமன்

 

No comments:

Post a Comment

UNABLE TO UNDERSTAND ANYTHING -4

  UNABLE TO UNDERSTAND ANYTHING -4 ஒன்றும் புரியவில்லை -4 LEARNING [ BASICS-3] அறிதல் [ அடிப்படை-3 ] எந்த அறிதலுக்கும்   அடிப்பட...