Sunday, August 24, 2025

UNABLE TO UNDERSTAND ANYTHING -7

 UNABLE TO UNDERSTAND ANYTHING -7                                    

ஒன்றும் புரியவில்லை -7

LEARNING [ BASICS -6]

அறிதல் [அடிப்படை-6]

ஆசிரியரின் பிற செயல் தேவைகள்

4 ஆழமாக விவாதித்தல்

இந்த சொல்லைக்கேட்டதும் பல ஆசிரியர்கள் முற்றிலும் வெறுப்படைந்து ஏதேதோ பேசுவார்கள். அதாவது விவாதித்தால் போதாதா -ஆழமாக என்ன விவாதிக்கவேண்டியிருக்கிறது? என்று இவர்கள் அனைத்தையும் முறையாகக் கற்பித்துவிட்டதைப்போல பிறரை ஏளனப்பார்வை பார்ப்பதையும், எங்களுக்கு தெரியாதாக்கும் என்று கரைகண்டவர் போல் பேசுவதையும் பல தருணங்களில் பார்த்து வியந்ததை விட விசனித்த சம்பவங்கள் அநேகம்.

ஆம், அவர்களுக்கு “ஆழ்ந்து உணர்ந்து கற்பியுங்கள் என்று சொன்னாலே வேப்பங்காயை கடித்துவிட்ட கசப்பு மேலிடுகிறது. அதாவது ஏனோ தானோ என்று எதையோ சொல்லிவிட்டு ஓடிவிடவேண்டும்.

 பாடத்திட்டத்தை [syllabus] நிறைவு செய்தாயிற்று என்று ஒவ்வொரு ஆண்டும் முடித்துவிட வேண்டும் அதற்கு மேல் உடல் வருத்த வேண்டியதில்லை.  வகுப்பறை களில் சுமார் 20-25 நிமிடங்கள் மேலோட்டமாக விளக்கிவிட்டு, எஞ்சிய நேரத்தில் நோட்ஸ் எழுதிக்கொள்ளுங்கள் என்று டிக்டேஷன் வகுப்பு போல் 'பழைய' நோட்ஸ் ஒன்றினை வழங்கிவிட்டு -பாடம் நடத்தியாயிற்று என்று பேருவகை கொள்கின்றார்.

இதுதான் இன்றய கல்லூரி காட்சி. வெகு சிலரே ஆழ்ந்து கற்பிக்க எண்ணுவோர். ஏனெனில் ஆழ்ந்து கற்பிக்க , ஆசிரியன் ஆழ்ந்து பல தகவல்களை திரட்ட வேண்டும். அவற்றை புத்தகங்களைக்கடந்து ஆய்வு நூல்கள் [journals] கருத்தரங்கு விவாத தொகுப்புகள்[ seminar / symposia bullettins ],   ஆண்டுத்தொகுப்புகள் [Annual Reviews] போன்ற அறிய தகவல்களை திரட்டி , வரிசைப்படுத்தி, கருத்துகளை எளிமைப்படுத்தி, உரிய பாடப்பகுதிகளில் அதிகப்படி தகவலாக போதித்து வந்தால் , மாணவர்கள் போட்டித்தேர்வுகள், நேர்காணல் சூழல்களில் அதிகம் தயக்கமின்றி பிறரோடு போட்டியிட   பேருதவி செய்யும். இவனைத்துமே இன்றைய தேர்வுக்கல்ல, எதிர்கால நலன் கருதியே.

எனில் ஆசிரியன் பழைய பஞ்சாங்கம் படிக்காமல், வருங்கால தேவைகள் எவ்வாறு இருக்கும் என்பதை உணர வைத்தால், வாழ்வியல் சூழலில் போட்டிகளை எதிர்கொள்வதில் குழப்பமோ தயக்கமோ இல்லாமல், தெளிந்த மன நிலையும் விரிவான பார்வையும் கொண்டு சமுதாய அரங்கில் பிரவேசிக்க இயலும். குறிப்பாக பட்டமேற்கல்வி நிலையில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் இவற்றை அடிப்படை தேவையாக எண்ணி செயலாற்றுதல் நலம்.

ஏனெனில்                           

 பட்ட மேற்படிப்பிற்கு பின்னர், வகுப்பறைகளில் போதித்தல் என்பது M.Phil /Ph.D  நிலைகளில் நீண்ட நெடிய விவாதங்கள் நிகழ்வதில்லை. எனவே ஒரு விவாதப்பொருளை அணுகுதல், அதன் பழைய/ புதிய/ இன்றைய நிலை என மாறிக்கொண்டே இருக்கும் சூழலை சந்திக்க எந்தவகை ஆய்வுத்தொகுப்புகள் பயன்படும் என்பதை தெளிவாக விளக்குவதன் மூலம் PG நிலையில் பயிற்றுவிக்கும் ஆசிரியர், பலருக்கும் கலங்கரை விளக்கமாக இயங்குபவர் என்பதற்காகவேனும் ஆசிரியர்கள் ஆழ்ந்து விவாதிக்கும் கலைதனையும், சிறப்புச்சொல்லாடல்களையும் உபயோகித்து முறையாக கற்பிக்க வேண்டியது அவசியம்.

அவர் இப்படி செய்யவில்லை, இவர் அப்படி செய்யவில்லை என்று நொண்டி சமாதானம் பேசிக்கொண்டிராமல் நான் என் அளவில் நன்கு கடமையாற்றுவேன் என்று உறுதி மேற்கொண்டால், கல்வித்தரம் மேம்படும் ஆசிரியரின் பங்கு உயர்கல்வியில் மகத்தானது என்ற புரிதலும் வலுப்பெறும். எந்த வெற்றியும், மந்திரத்தில் விழும் மாங்காய் அல்ல; அது கடும் உழைப்பின் பலனாய் விளையும் கனியே என்பதை உணர்வோம். 

வகுப்பறைகளில், [PG நிலை உட்பட] எவரும் REFERENCE குறித்து பேசுவதே இல்லை-- என்பது மிகவும் வருத்தம் தரும் சூழ்நிலை என்பதை உணர்கிறேன்/ உணர்த்துகிறேன்.

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TURKEY BERRY -2

  TURKEY BERRY -2 Solanum torvum [Tam: Sundaikkaai] -2 Fresh fruits of Solanum torvum [Sundaikkaai] [per 100 gm] are reported to contain  ...