LET US PERCEIVE THE SONG -46
பாடலை உணர்வோம் -46
Can
we ever forget? மறக்க இயலுமா?
முன்னுரை
என்னது முன்னுரையா, என்று கலங்க வேண்டாம்.
எனது இந்த BLOG பயணத்தில் ஒரு சிறு விலகல். ஆம், நான் திரு எம் எஸ் விஸ்வநாதனின் பரம ரசிகன் என்பதை பலரும் அறிவர், திரு எம் எஸ் வி உள்பட. . ஆயினும் ஒரு குறிப்பிட்ட இசை அமைப்பை ப்பற்றி பின்னோக்கி பயணித்த பொழுது , இந்தப்பாடல் என்னை அசைய முடியாமல் கட்டிப்போட்டது எனில் மிகை அல்ல.
இதில் கவிதை நயம் சொல் நளினம் குரலின் வசீகரம், தர்க்க வாதத்தின் புலமை, சொற்கட்டுகளின் மனம் மயக்கும் பீடிப்பு, அனைத்தையும் தாண்டி நீர்ப்பிரவாகத்தின் சுழலாய் சுழன்று நம்மை ஆட்கொள்ளும் சோகம் இழையும் பாவம் , இதற்கு துணை நின்ற இசைக்கருவிகளின் மௌன கீதம் இவை கடந்து காட்சியில் அமைந்த சிறப்பான ஆளுமைகளின் நாகரீக வெளிப்பாடு. இத்துணை செல்வங்களை உள்ளடக்கிய பெட்டகம் தான் இப்பாடல்
1965 ல் க்ரிஷ்ணன்கோயில் வெங்கடாச்சலம் மஹாதேவன் என்ற கே வி மஹாதேவன் இசை அமைப்பில் மலர்ந்த கண்ணதாசனின் கவிதை, பி சுசீலாவின் பிசிரற்ற இழைக்குரலின் மஹோன்னதம் மிளிர்ந்து "இதய கமலம்" படத்திற்கு பெரும் முகவரியாய் அமைந்த 'உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல ' என்ற பாடல்.
அந்நாளைய ஈஸ்ட்மன் வண்ணப்படம்
இது ஒரு சாதாரண திரைப்பாடல் அல்ல. பின் ?
நாயகனின் மனத்திரையில் அவனது அன்பிற்கு பாத்திரமானவள் நிழலுருவாக வந்து பாடுவதாக அமைந்த காட்சி, கவிஞனின் சொல்லாட்சி, இசையின் மாட்சி குரலின் உணர்வுப்பூர்வ வெளிப்பாடு , எனவே அடக்கிவைக்கப்பட்டிருந்த ஒலிகள் , எனினும் சுநாதமாய் ஒலித்த ஜாலம் கலந்த ஒரு படைப்பு.
அன்பர்களுக்கு ஒரு தகவல்
அந்நாளில் என்னது இது கே வி எம் அவர்களின் இசை அமைப்பிலா? என்று கண்ணைக்கசக்கிகொண்டு தூக்கத்திலிருந்து விழித்தது போல பிரமித்தவர்கள் அநேகர்.
இது கிட்டத்தட்ட அந்நாளைய எம் எஸ் வியின் டச் எனப்படும் முத்திரைகள் குறிப்பாக இசைக்கருவிகள் தொகுப்பில் மற்றும் மீட்டலில் அனைத்துமே மேற்கத்திய வகை அமைப்பில் [arrangement ] [மேளத்தை மெல்லத்தட்டு மாமா என்ற பாடல் தவிர ]. அதிலும் இந்தக்குறிப்பிட்ட பாடல், படத்தின் விளம்பரதாரர் என்னும் அளவிற்கு உச்சம் தொட்டது.
பல்லவி
உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்ல ...........ல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
கண்ணதாசனின் இந்தக்கவிதை யில் ஒரு சிறப்பை காணலாம். ஆங்கில மொழியமைப்பில்
"OXYMORON " என்றொரு வழக்கு உண்டு. அதாவது ஒரு வாசகத்தின் பகுதிகள் ஒன்றை ஒன்று மீறுவது அல்லது எதிரிடை பொருள் தருவது OXYMORON எனப்படும். இந்த பாடல் நெடுகிலும் சரணங்கள் எல்லாமே OXYMORON வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முரண் நமது புலன்களுக்கு எட்டாமலே ஏமாற்றிக்கொண்டிருப்பது விந்தையிலும் விந்தை.
நாயகி தன்னையும், நாயகனையும் வெவ்வேறு பொருட்களாக அடையாளப்படுத்துகிறாள் ஆனால் சரணத்தின் இறுதியில் 'நீயும் நானும் வேறல்ல ' என்று தங்களின் வேறுபாடற்ற தன்மையை உணர்த்துகிறாள். நான் அறிந்தவரை, இதுபோன்ற விளக்கம் வேறு பாடலில் இருப்பதாக உணரவில்லை.
'காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் ' காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல '
'காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் ' இந்த சொல்வரிசை என்னை மிகவும் உருக்கி ஏதோ ஓர் வெறுமையை சுட்டிக்காட்டுகிறது இதை இரண்டாம் சரணமாக வைத்துள்ளார் கவிஞர்
ஆனால் முதல் சரணத்தில் 'இங்கு நீயொரு பாதி நானொரு பாதி , யார் பிரிந்தாலும் வேதனை மீதி என்பதை வேதனை பாதி என்று விளக்கம் தந்துள்ளார்
ஒரு கோயில் இல்லாமல் தீபமும் இல்லை , தீபமில்லாமல் கோயிலும் இல்லை ,
நீ அந்தக்கோயில், நான் அந்த தீபம் , தீபத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல [பல்லவி]
எந்தன் மேனியில் உன்னை பிள்ளையைப்போலே நான் வாரி அணைத்தேன் ஆசையினாலே ' நீ தருவாயோ நான் தருவேனோ ' யார் தந்த போதும் , 'நீயும் நானும் வேறல்ல '
என்று மீண்டும் பாடுகிறாள் பெண் .
அவ்வப்போது பல்லவி அதே குழைவும் ஏக்கமும் மேலிட தவழ்கிறது..
'நீயும் நானும் வேறல்ல’என்று ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் இருப்பதும்
மாறு
பட்ட
யாப்பு
இந்தப்பாடல் ஒரு முறைகேட்டால் போதும் நம்மை ஊழ்வினைப்போல துரத்திக்கொண்டே வரும் காதுகளில் ரீங்கரித்து..
பாடலின் பலம் அற்புதமாக தவழும் சொல் ஊர்வலம் , வெகு நேர்த்தியாக பல்லவியிலும் சரி சரணங்களிலும் சரி ஏக்கத்தின் தொடர்ச்சியும் , ஏற்ற இறக்கங்கள் வெளிப்படும் இடங்கள் அனைத்திலும் பொருளை ஆழமாக உணர்த்துவதை காணலாம் .
கண்ணல்ல என்று நிதானித்து பாடுவதும், வேறல்ல என்று பாடும் வேற ......ல்ல அ அ என்று நிறைவுறும் சரணங்களிலும் சுசீலா விஸ்வரூபம் காட்டியுள்ளார்.
ஒளிப்பதிவை சொல்லாமல் விட்டால் எப்படி? திரு கே எஸ் பிரசாத்
பாடலில் நிழல் உருவங்களாக 2 கே ஆர் விஜயா வெவ்வேறு வண்ண உடையில் கம்பியூட்டர் இல்லாத 1965 ம் ஆண்டில் அதுவும் நடனமாடிக்கொண்டே இங்கும் அங்கும் உலவுவதை எப்படி பதிவிட்டனர். இதல்லவோ டெக்னாலஜி ?
இசை அமைப்பாளரின் [கே வி எம் ] ஆளுமை பாடல் நடை, நிதானப்போக்கு , துல்லிய உணர்வுவெளிப்பட பாட வைத்திருப்பது மற்றும் ஆர்கெஸ்டரேஷன் என்னும் கருவிகளின் கையாளல், பாடல் முழுவதிலும் கம்பீர வெளிப்பாடாக அமைந்துள்ளதை சொல்லலாம்.
4-5 இசைக்கருவிகள் சேர்ந்து கட்டமைத்த மென் இசை, சிதார் / வயலின்கள் , குழல், அக்கார்டியன் மற்றும் டபுள் பாஸ் . ஆனால் குழல் பல வகைகளில் இருப்பதை QFR இணைப்பில் திரு சிவா அவர்களின் .பங்களிப்பில் காணலாம்
QFR தரும் விளக்கம், இசை பாடல் மற்றும் உயர்வகை இசை நம்மை வேறோர் வகையில் ஈர்க்கிறது. இரண்டு இணைப்புகளும் கீழே.
ஏதோ எனது பற்றாக்குறைகளுடன் பாடலை விளக்க முற்பட்டுள்ளேன். குறைகளை மன்னிப்பீர் என்று
நம்பியே இதை பதிவிட்டுள்ளேன்.
https://www.youtube.com/watch?v=Gq3QEOTKLsQ&t=3s unnaikkaanaadha
Subasree’s QFR
https://www.youtube.com/watch?v=rfBr9RCZ7B0 qfr 502
இப்பாடலின் சொல் அழகு, குரலின் நளினம், பாவ மேலீடு , மென் இசை , ஒலிகளின் இயைவான சங்கமம் அனைத்தையும் நன்கு ரசிக்க இந்த ஆடியோ இணைப்பை கேட்டு பயன் பெறுங்கள். 60 ஆண்டு நிறைந்த பாடலில் எவ்வளவு நேர்த்தியான ஓலிப்பதிவு ?நாளெல்லாம் கேட்டு அசைபோட இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=ULQvo-b-_W8
- audio
அன்பன் ராமன்
No comments:
Post a Comment