Tuesday, December 2, 2025

LET US PERCEIVE THE SONG -49

LET US PERCEIVE THE SONG -49

பாடலை உணர்வோம் -49

ஒரு நாள் இரவில் [பணத்தோட்டம் -1983] கண்ணதாசன் ,விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி சுசீலா

இது ஒரு சினிமாப்பாடல் என்ற கூட்டிற்குள் அடங்காத/அடக்கவியலாத பெரும் வியாபகமும் பெருமையும் கொண்டது . அதாவது திரைப்பாடல் ஒரு காவிய நிலையைத்தொட்டுவிடுமா என்றெல்லாம் பேசினாலும் சம கால படைப்பியலில் திரைப்படப்பாடல்களும் கவனத்திற்குரியவையே என்ற நிலைக்கு உயர்ந்திருந்த 1960களின் நிலையில் கவனம் செலுத்தினால் நான் சொல்லுவது புரியும். அந்த நிலையை எட்டிட என்ன தகுதிகள் இருந்தன என்றாய்ந்தால்  சில அமைப்புகள் வெளிப்படும்

சொற்களின் எளிமை அன்றைய சமகால சமூக சூழலைத்தழுவி இருந்ததைக்காணலாம். காட்சியில் ஒருத்தி மட்டுமே இருப்பது இயல்பான காதல்வயப்பட்டவளின் நிலை.  [இன்றுபோல் பேரூந்துநிலைய கூட்டத்தில் கும்பலாக இருபாலர் வரிசை கட்டி ஆடும் நிலை அப்போதைய படங்களில் அறவே இல்லை. புடவை அணிந்த பெண் [இப்போது அந்த உடைக்கு மாமியார்க்காரி என்று பொருள்] அன்று புடவை வயிறுவரை மூடிய ஜாக்கெட் அணிந்தவள் தான் நாயகி. அப்படிப்பட்டவள் , காதலனைக்காணாமல் பரிதவிப்பதும் , தோழியர் வேறெங்கோ போய்விட இவள் வீட்டில் இருந்தபடியே 'தன்னவனை' எண்ணிப்பாடுகிறாள்.

இந்த அமைப்பை கவிதையில் வடித்த கண்ணதாசன், சொல்லில் எளிமையும் கருத்தில் வலிமையையும், சூழலின் ஆழத்தையும் மிக நேர்த்தியாக பேசும் பாங்கினை என்னவென்பது?.

பெண்ணின் மன ஓட்டத்தை, கண்ணதாசன் சொன்னது போல் சொன்னவர் ஓரிருவரே.

ஆம், பெண் உணர்வை பெண்ணுக்கே புரியவைக்கும் வித்தகர் அவர்.

பெண் மன ஓட்டத்தை அவர் எப்படி துவங்கியுள்ளார் பாருங்கள்..

ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை

வருவான் கண்ணன் என நினைத்தேன் மறக்கவில்லை . இந்த விவரம் தான் பல்லவி. மனதில் எண்ணம் நிறைந்திருக்க உறக்கம் வராதென்பது தானே உளவியல் உண்மை .அதை 2 வரி களில்    9 சொற் களில் விளக்கி,  பெண் ஏன் தவிக்கிறாள் என்று உணர்த்தியுள்ளார்

தனது தனிமையை விளக்க

திருநாள் தேடி தோழியர் கூடி சென்றார் திரும்பவில்லை

தினையும் பனை யாய் வளர்ந்தே  இரு விழிகள் அரும்பவில்லை 

காலம் வளர்ந்துகொண்டே செல்கிறது [தினை பனை ] என்ற உருவ வேறுபாடு காலம் மிகவும் கடந்துவிட்டதகாக உணர்த்துவது.

அவன் யார் என்பதை

இரவில் உலவும் திருடன் அவன் என்றான்   ஆனால் இவள் விளக்கம் தருகிறாள்

திருடாது ஒரு நாளும் காதல் இல்லை என்றேன்  . இது கவிஞனின் அதிரடிக்கு விளக்கம் [மனம் திருடப்படுவது தானே காதல்? எனவே திருடாமல் [திருடாது] ஒருநாளும்  காதல் இல்லை என்கிறாள் பெண். அதாவது அவன் திருடன் இல்லை என்று நிறுவுகிறாள் .

அடுத்த சரணத்தில் என் இதயம் அவன்பால் நான் கொடுத்தேன்

என் இறைவன் திருடவில்லை. என அவனை இறை நிலைக்கு உயர்த்துவதுடன் நான் தான் இதயத்தை     பறி  கொடுத்தேன் [அவன் திருடவில்லையாம் -எப்படி நியாயம் தேடுகிறாள் பாருங்கள் ]. கவிஞன் முற்றாக பெண் பண்புகளை கொண்டே, ஏக்கத்தின் தாக்கத்தை தூக்கத்தை தொலைத்ததை வைத்து பல்லவியிலேயே கதையை சொல்லிவிட்டார்.  இதுவரை சொன்னது கவிஞன்  தந்த ஆக்கம் .

இசை அமைப்பாளர் சும்மா விடுவாரா?

அவர் பங்குக்கு பாடும் குரலை செதுக்கி முறுக்கி பாவத்தை பிழிந்து விரகதாபத்தை குழையக்கூழைய வெளிப்படுத்தி அதற்கான இசைக்கூறுகளை நேர்த்தியாகத்தொடுத்து எப்போது கேட்டாலும் கற்பனையின் அதீத வலிமையை பறைசாற்றும் வடிவம் கொடுத்துள்ளார. எப்படி?

பல்லவியின் சொற்கள் நிதானமாக நீட்டி [ ரு நா .... ள்  இர ..வில் கண் உற ..க்கம் பிடி ..க்கவில்லை

வரு ...வான் கண் ... ன் என நினைத்தேன் நடக்...கவில்லை - நினைத்தேன் என்பது இயல்பாக னால் பிற சொற்கள் இடைவெளிகொடுத்துப்பாட --ஏக்கத்தின் தாக்கம் வெளிப்படுகிறது [இது பல்லவியில்]

 

இடை இசையில் குழல் வயலின்கள், வீணை என்று நீரோடைபோல் பயணிக்க உள்மன ஏக்கத்தை சரோட் இசையில் ஒரு ஏக்கம்நிறைந்த செறிவுடன் சரிந்து இழைய சரணத்தை தொடுகிறது

சரணத்தில் ஆர்வமும் எதிர்பாப்பும் தோன்றும் விதமாக தோழியர் கூடி திருநாள் தேடி என விரைந்துபாடி

சென்றார் என்று சென்று திரும்பவில்லை என்று வலியுடன் பாடி அவளின் தனிமையை கட்டமைத்த இசை அமைப்பு, மனமும் சோர்வுற்றதால் 'தினையும் பனையாய் வளர்ந்தே என்று சிறு ஏமாற்றத்துடன் பாடி

இரு விழிகள் அரும்பவில்லை என்று  தூக்கத்தை தொலைத்த நிலையை சோகமாக ப்பாடவைத்துள்ளார் திரு எம் எஸ் வி அவர்கள்.

மீண்டும் பல்லவி அதே உணர்வுகளுடன் கடந்தபின் அடுத்த சரணம்

இர ..வில் உல வு ..ம் திருடன்  அவன் என்  றான்

திரு ..டா ,து ஒரு நா..ளு ..ம் கா ...தல் இல்லை என்றேன் என்று அவளின் நிலைப்பாட்டை ஆணித்தரமாக ட்யூன் சொல்ல , தொடர்ந்து

என் இத   யம் அவன் பால் நான் கொடுத்தேன்  என்று பாடி

என் இறைவன் திருடவில்லை என்று வேகமாக சான்றிதழ் படிக்கிறாள். மீண்டும் மீண்டும் பல்லவி பாடப்பட்டு விரகத்தின் வீரியம் வெளிப்பட அற்புதமாக அமைந்த பாடும் முறை மற்றும் சோகம் இழையோடும் சாரோட மீட்டல் என 62 ஆண்டுகளுக்குப்பின்னும் இன்றும் பேசப்படும் ஒரு கம்பீரம் இப்பாடல. இணைப்பு கீழே

https://www.youtube.com/watch?v=8FEQNVH2AJo

ORU NAAL IRAVIL PANATHOYTTAM 1963 KD V R  PS

இதே பாடலை QFR  பதிவில் விரிவாக சிலாகித்துள்ளார் சுபஸ்ரீ  அவர்கள். கேட்டு ரசிக்க, இணைப்பு இதோ.

https://www.youtube.com/watch?v=3YWd1zEv4jM qfr 651 oru naal ravil PANATHOTTAM 1963 KD V R PS

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -49

LET US PERCEIVE THE SONG -49 பாடலை உணர்வோம் -49 ஒரு நாள் இரவில் [ பணத்தோட்டம் -1983] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி சு...