Sunday, December 28, 2025

THE POT -A GLOBAL DELIGHT-2

 THE POT -A GLOBAL  DELIGHT-2

பூமியை வலம் வரும் மண் பாண்டம் -2

கடம் தயாரிப்பில் திரு ரமேஷ் குடும்பம் 4 வது தலை முறை என்று முன்பே தெரிவித்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக கடம் தயாரிப்பில் உள்ள பல நிலைகள் குறித்து தகவல் தருகிறார் திரு ரமேஷ் அவர்கள்.

ரமேஷின் தந்தை திரு கேசவன்  தமிழக அரசின் விருது பெற்றவர் அவரது தாய்,திருமதி மீனாட்சி கேசவன் இந்திய அரசின் ஜனாதிபதி விருது பெற்று மானாமதுரை மண்ணுக்கே பெருமை சேர்த்துள்ளனர். பார்க்க வெறும் பானை போல்,தோன்றும் கடம் எவ்வளவு கவனமாக உருவாக்கப்படுகிறது என்பதை பார்ப்போம்.

கடம் தயாரிப்பில் சுமார் 5 வகை மண் [சில 6 வகை] கொண்டு உருவாக்கப்படுகிறது. இவை மானாமதுரை வட்டாரத்திலேயே பெறப்பட்டாலும் ஒரு சிவப்பு நிற மண் தமிழகத்தின் தென் மேற்கு பகுதியின் தென் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டு மேல் வண்ண பூச்சாக பயன் படுகிறது. கடத்தில் எந்த பகுதியும் ரசாயன க்கலவையோ , மிருக உடல் பகுதியோ இல்லாமல் முற்றிலும் மண் , மண், மண் என்றே தோற்றுவிக்கப்படுகிறது..

அவை:  மானாமதுரைப்பகுதியில் உள்ள ஏரிகளில் [சுமார் 8 கி,மி வட்டாரத்தில்] இருந்து பெறப்படும் மண் [1] நல்ல அடர் பழுப்பு உள்ளது.  2 ] சுந்தர கானக மண் இது கடினமானது, வெப்பம் தாங்கும் இயல்புடையது 3] கைகளத்தூர் மண்  4] குரு மங்கலம் பகுதி மண் சிவந்த நிறம் கொண்டது.5] ஒரு வகை களி சற்று வெண்மை நிறம் கொண்டது   6]மானாமதுரை பகுதியின் வைகை ஆற்று படுகை மணல் ரவை போன்ற தன்மையுடன் இரும்பு தாதுவும் கொண்டது. கடத்தின் உலோக ஒலி க்கு   இந்த வைகைமணலே  ஆதாரம். இந்த மண்களின் முறையான விகித கலவையே கடத்தின் உறுதி, ஒலி இரண்டையும் உறுதி செய்வது.

வேறு பல முக்கிய விவரங்கள் வருமாறு

அனைத்து மண் வகைகளும் வெய்யிலில் காய வைத்து நன்கு உலர்ந்த பின்னர் செயல் பாட்டுக்கு வரும்

முக்கிய பகுதி மண் வகை ஒன்று [1]சுத்தப்படுத்திய பின்  நன்கு நீரில் [மழை நீரில்]  24 மணி நேரம் ஊறவைத்து பின்னர் , காலால் மிதித்துகுழைத்து தயார் ஆகிறது. இப்போதெல்லாம் உருளைகள் வழியே ஈர மண்ணை செலுத்தி பிசைகிறார்கள். இதே போல் வெவ்வேறு மண் வகைகளை நன்கு கலந்து பெரிய ஈர மண்  குவியல்  உருவாக்குகின்றனர். ஆனாலும் அவ்வப்போது பிசைத்து பிசைந்து குழைத்து அப்பள மாவு போல் நைசாக குழைக் கின்றனர். .தேவையான மண் திரள் ஒன்றை எடுத்து சுழலும் தளத்தின் மீது வைத்து அழுத்தி தேவையான அழுத்தமும் அணைப்பும் கொடுத்து பானை உருவாக்குகிறார் திரு ரமேஷ்.

பானையின் அளவு சுவர் கனம், வாய்  விட்டம் இவை கடத்தின் நாத தன்மைகளை தீர்மானிப்பவை.  

இப்படி பானை தயார் ஆனதும் சுழலும் பானையின் அடியில் நூல் அல்லது கம்பி கொண்டுஅறுத்து பானையை தாய் மண்ணில் இருந்து பிரித்து எடுக்கிறார்கள். . இதை நிழலில் காய வைக்கிறார்கள் . பின்னர் சிறிய கரண்டி போன்ற கட்டையால் தட்டி தட்டி மண்ணின் கனம் மற்றும் உருவ அமைப்பையும் நிலைப்படுத்துகிறார்கள் சுமார் 2000 முறை தட்டி தட்டி உறுதியாக்குகின்றனர். விதவிதமான மரக்கரண்டிகளால் தட்டி உருவாக்க 15-18 நாட்கள் ஆகும். இப்படி உருவான பானைகளை சுட்டு கெட்டி படுத்தி னங் ங் ணங் டிக்கி டிக்கி போன்ற ஒலிகளை எழுப்ப தயார் செய்கின்றனர்.. 

பின்னர் தான் பானைக்கு மேக்க ப்   . சில சிவப்பு, சில பழுப்பு, சில இளம் சிவப்பு, சில மஞ்சள் வண்ணம் பெறுகின்றன. எதுவாயினும் ரசாயனமோ பெயிண்ட்டோ கிடையாது. ஒவ்வொன்றும் விசேஷ மண்ணை மழை நீரில் குழைத்து வண்ணம் உருவாகிறது.. அவற்றை பானையில் பூசி நிறம் தருகிறார்கள் ஒவ்வொரு முறையும் சுமார் 10-12 பானைகள் [ஒரே வகை அமைப்பில்] உருவாக்குவர். இப்படி எப்போதும் 100-150 பானைகள் கச்சேரிக்கு தயார் நிலையில் இருக்கின்றன. ஒரு   சிறிய பக்க வாத்தியம் இப்போது முதன்மை வாத்தியமாக முற்றிலும் கடக்கச்சேரிகளே  நிகழ்த்தும் நிலைக்கு உயர்ந்துள்ளது. எனினும் மனிதர்களின் ஆழ்ந்த முனைப்பின்றி கடம் உருவாகுமா? ? சிந்திப்பீர்                        

  https://www.youtube.com/watch?v=oWy0RHz-Xzk ghatam Ramesh

https://www.youtube.com/watch?v=6FX4ZiUSNGs  ghatam -2

https://www.youtube.com/watch?v=T_xLRZXfA_I ghatam 3

நன்றி

அன்பன் ராமன்

********************************************************************************

No comments:

Post a Comment

THE POT -A GLOBAL DELIGHT-2

  THE POT -A GLOBAL   D ELIGHT-2 பூமியை வலம் வரும் மண் பாண்டம் -2 கடம் தயாரிப்பில் திரு ரமேஷ் குடும்பம் 4 வது தலை முறை என்று ...