Wednesday, May 13, 2026

LET US PERCEIVE THE SONG 66

 LET US PERCEIVE THE SONG 66             

பாடலை உணர்வோம் –66

மண மேடை மலர்களுடன் தீபம்   ஞான ஒளி  1978 கண்ணதாசன் , எம் எஸ் வி, சுசீலா

இந்தப்பாடலை ஒலிப்பேழையாக கேட்ட அந்தநாளிலேயே பலரும் சொன்னது "எதோ சர்ச் பாடுவாங்க போல தெரியுது " என்ற ஏகோபித்த கருத்து. பாடலில் மாதாகோயில் மணி ஓசையே இல்லை. ஆனாலும் எப்படி இந்த முடிவுக்கு வந்தனர் -செவி வழி உணர்விலேயே என்பதே கேள்வி. எனக்கு தெரிந்த விடை எம் எஸ் வி என்பதே. உடனே நான் ஏதோ சாமரம் வீசுவதாக சிலர் சொல்லலாம் . நான் மாமரம் ஏறவோ , சாமரம் வீசவோ இல்லை.

பாடலின் அமைப்பு என்னும் structure சொட்ட சொட்ட ஒரு தேவாலய அமைப்பில் மற்றும் தேவ லய சிறப்பில் இயங்குவது கேட்டவுடன் நம்மைப்பற்றிக்கொள்கிறதே -அதுதான் எம் எஸ் வி வெளிப்படுத்தும் பாடலின் தன்மை. தேவாலய அமைப்பில் பாடல் என்றால் கோரஸ் வைத்திருப்பாரே ? இல்லையே ஏன் அதுதான் மெல்லிசைமன்னர் காட்சியின் மீது செலுத்தும் அக்கறை.. அவர்கள் இன்ன மதம் சார்ந்தவர்கள் என்ற தகவலை பாடலின் தன்மை வெகு நேர்த்தியாக காட்டுவதுதான் இசை அமைப்பாளரின் ஆளுமைக்கு சான்று. கோரஸ் ஏன் தவிர்த்துள்ளார் எம் எஸ் வி? மிக எளிது , மிக நெருக்கமாக  இருவரிடையே முகிழ்த்த அன்பின் தொகுப்பு இப்பாடல். ஆனால் பெண் மட்டுமே தனது ஆசை/எதிர்பார்ப்பு குறித்து வெகுவாக சிலாகிக்கிறார். ஆண் அவரோடு உலவு கிறார். இது முற்றிலும் ஒரு பெண்ணின் நிலை பேசும் கவிதை. எண்ணற்ற நுணுக்கங்களை சுமந்து நிற்கும் பாடல்.   

தமிழில் அமைந்த பாடல் தான் எனினும், சொல் வரிசையின் அமைப்பு ஆங்கில எழுது மரபில் புனையப்பட்டிருப்பது ஒரு விலகல். ஆனால் பெண் மனது காட்டும் உணர்வுகளையும் எதிர் பார்ப்பின் யதார்த்தங்களையும் பிசகாமல் யாத்துள்ளார் கண்ணதாசன். பாடல் முழுவதும் உணர்வில் இந்தியப்பெண் என்பதையும் மொழி மரபில் ஆங்கிலேயே பண்புகளையும் எழுத்து பேசுவதைக்காண  முடிகிறது.  

நான் சொல்ல விழைவது இதுவே

மண மேடை மலர்களுடன் தீபம்

மங்கையர் கூட்டம் மணக்கோலம்

மாப்பிள்ளை பெண் என்றால் இவர் என்பர்

என்றும் வாழ்க மண மங்கை என்பார்

இது போன்ற ஒரு பல்லவி வேறெங்காவது உண்டா? நான் அறிந்த அளவில் இல்லை. மண மங்கையை பிறர் வாழ்த்தவேண்டும் என்று விழைபவள்  மணவறையில் மனம் லயித்து மேடை, தீபம் ,மலர், மங்கையர் என்று பெருக்கெடுத்த உணர்வில் பாடுவதால் வரிசை மாறி அமைந்து ஆங்கில மரபில் தோற்றம் தருகிறது. இதன் அடிப்படை பெண்ணின் ஊஞ்சலாடும் மன நிலை -அது தான் கவியரசரின் ஆளுமை காட்டும் முத்திரை

நான் இரவில் எரியும் விளக்கு

நீ என் காதல் மணி மாளிகை

நீ பகலில் தெரியும் நிலவு  [எப்படி வரிசை மாறி கவிதை செல்கிறது பாருங்கள் ]

நான் உன் கோவில் பூந்தோராணம்

மணி ஓசை ஒலிக்கும் நம் இல்லம் எங்கும்

மீண்டும் பல்லவி

என் மடியில் விடியும் உறவு

நம் இடையில் மலரும் உறவு

தேகம் தழுவும் மலர்காற்று

மோகம் பரவும் பெரு மூச்சு

நான் பெறுவேன் சுகமே சுகமே

மீண்டும் பல்லவி

என் தனிமை உலகம் இனிமை

என் தாய் வீடும் நினைவில் இல்லை

நான் உறாவில் உனது அடி மை

உன் துணை போல சுகமும் இல்லை

அருள் புரிவான் தேவன் நம் பாதை எங்கும்

மீண்டும் பல்லவி

இப்படி ஒரு பெண் பேசும் மண வாழ்வின் மாட்சிமை இப்பாடல். 

கவி அரசர் இவ்வளவு வேலை காட்டினால் செவி அரசர் [எம் எஸ் வி] சும்மா விடுவாரா ? மனிதர் உனக்காச்சு எனக்காச்சு என்று விளையாடிவிட்டார். 

பாடலை ஹம்மிங்கில் துவங்கியுள்ளார் எம் எஸ்வி; உடனே பல்லவியில் நுழைந்து ஒரு மாறுபட்ட அமைப்பாக ஒவ்வொரு சொல்லாக மண மேடை, மலர்களுடன் தீபம் என்று மெல்ல பாடி பாதி பல்லவியிலேயே ட்யூன் மாறுவதைக்காணலாம் அதாவது முன் பகுதி ஒரு ட்யூன் அமைப்பிலும் பின் பகுதி வேறொரு அமைப்பை பின்பற்றி செல்வது மிக அரிது. ஆனால் இந்தப்பாடலில் அபுபடித்தான்.

சரணத்திலும் இதே போல இருவேறு அமைப்புகளில் ட்யூன் இயங்குவது ஒரு வித்யாசமான அணுகுமுறை, உதாரணமாக 

நான் இரவில் எரியும் விளக்கு

நீ என் காதல் மணி மாளிகை

நீ பகலில் தெரியும் நிலவு 

முதல் வரியும் மூன்றாம் வரியும் ஒரே ட்யூன் அமைப்பில் ஆனால் இரண்டாம் வரி "நீ என் காதல் மணி மாளிகை " முற்றிலும் வேறொரு கதியில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது

ஒன்றாம் வரியில் எதுகை , மூன்றாம் வரியில் மோனை , இடையில் [இரண்டாம் வரியில் வேறொரு அமைப்பில் சொற்கள், ட்யூன் இரண்டுமே பயணிக்க, பாடல் ஒரு மாறுபட்ட இசைக்கோலமாக தவழ்வது வெகு சிறப்பு.

அதே போல

நான் இரவில் எரியும் விளக்கு

நீ என் காதல் மணி மாளிகை

நீ பகலில் தெரியும் நிலவு  [

நான் உன் கோவில் பூந்தோராணம்

மணி ஓசை ஒலிக்கும் நம் இல்லம் எங்கும்

 அடுத்தடுத்த வரிகளின் இசைப்பயணம் வெவ்வேறு வேகம் மற்றும் அசைவுகளுடன் -மிக நுணுக்கமான இசை அமைப்பு.  ஆச்சரியம் யாதெனில் கேட்பவருக்கு லயிப்பு உண்டு, வெறுப்போ எதிர்ப்போ தோன்றாத மெஸ்மெரிஸம் இப்பாடல்.

மேலும் இசைக்கருவிகள் இரவுப்பனியாக மெல்ல இயங்குவது பாடலுக்கு ஒரு தேவ கான நிலையை கொடுத்துள்ளது. பாடலில் டபுள் பாஸ் மற்றும் ட்ரம் இரண்டும் நிழல்போல ட்யூனை பின் தொடரும்  கந்தர்வ கம்பீரம். எம் எஸ் வி ஜமாய்த்திருக்கிறார்.

நுணுக்கமாக பல முறை கேளுங்கள் .கேட்க கேட்க பல அதிசயங்கள் வெளி வரும்.

இதற்கான QFR பதிவும் கீழே உள்ளது. கேட்டு மகிழ்வீர்.

https://www.youtube.com/watch?v=C59Q-Rdm8aM MANA MEDAI  GNAANA OLI

https://www.youtube.com/watch?v=ZCE-5BA4FD8&t=175s QFR

நன்றியுடன்     அன்பன் .

2 comments:

  1. இப்பாடலை ரசித்ததுண்டு.ஆனால் வரிவரியாகத் தெரிந்து கொள்ளவில்லை

    ReplyDelete
  2. Aahaa.. What a song, Prof !! After reading your comments which has brought out a different dimension of this out-of-the-world song, I am listening to the song repeatedly, without knowing how to come out of the 'feel' the song creates in me. Amazing !!
    Can any one on earth even dream of creating such a song !! . NO... Only MSV can.
    Every line has a scale change and as you said the meter for every line is different !! I am just imagining how MSV would have taught PS to sing and how he would have taught instrument pieces to His orchestra !!!
    Iyyo.. Iam going crazy !! Thanks a tonne again, prof. !!

    ReplyDelete

ORCHESTRATION

  ORCHESTRATION [ MSV BRAND]   ஆர்கெஸ்ட்ரேஷன்   [ = ஒலிகளின் கட்டமைப்பு ]       [மெல்லிசை மன்னரின் பாணி   ] ஐயோ இது என்ன புதிய ...