Friday, September 30, 2022

வாழ்வினிலே ஒரு நாள்

                                                          வாழ்வினிலே ஒரு நாள்

இது என்ன கவிஞனின் பாடல் தலைப்பா அன்றி அரசு ஊழியனின் அன்றாட  

உழலலா , அல்லதுபோராட்டமே  வாழ்க்கை என அமைந்தவர்களின் துயர் சரிதையா?

 கிடைத்த 500/-ரூபாய் ஊதியத்தில் , ஊதியது 40-, [ஆம் பீடிக்குத்தான்], வாடகை 200/- அம்மா கையில் 250/- மிச்சம் 10/- என்று சிகரெட் அட்டையின் பின் புறத்தில் கணக்கு எழுதியவன் அய்யய்யோ முதலாளியின் கடன் 20/-க்கே காசு பத்தாதே என்று வாடினான் குபேரன் . [அவனுக்கு தெரியாது ஆண்டி லேசுப்பட்டவன் அல்லன் , 20/- பிடித்துக்கொண்டு தான் மீதி 480/- , அதுவும் எப்படி -குபேரனின் தாயிடம் தான் 10 தேதி வாக்கில் தருவான்].

விதியை ப்பாருங்கள் குபேரன் ஆண்டியிடம் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் நிலையில் இருக்கும் ஏழை சிறுவன். வயது 12.] தாய்-- தனம் வீட்டு வேலை செய்து உயிரைக்காப்பாற்றிக்கொள்ளும் நிலையில் வாழ்பவள். மிகுந்த கஷ்ட ஜீவனம். இந்நிலையில் ஆண்டியிடம் காலில் விழாத குறையாக கெஞ்சி மகன் குபேரனுக்கு ஒரு வேலையை பிடித்துக்கொடுத்திருக்கிறாள். குபேரனுக்கு படிப்பில் நாட்டம் குறைவு, ஆனால் கணக்கு அவனுக்கு எளிதான பாடம்.

விதி யாரை விட்டது, அவனுக்கு படிப்பைத்தொடரமுடியாத வறுமை. அரசாங்க சலுகைகளை பெற்று படிப்பை த்தொடரலாம் என்றால், ஆங்காங்கே கையூட்டு இல்லாமல் எவனும் கையெழித்திடமாட்டாத பரந்த உள்ளம் கொண்ட மனிதர்கள்.

வேறு வழியில்லை மளிகைக்கடை தான் இது போன்ற சிறார்களுக்கு புகலிடம்.. என்ன பெரிய்ய புகலிடம்? காலை 11 மணிக்கு 1 டீ , மாலை 6 மணிக்கு 1 டீ , வேறு ஒன்றும் தரமாட்டார் முதலாளி   -ஆண்டி எனும் செல்வந்தர் .    குபேரன் ஆண்டியிடம் கை ஏந்தி நிற்கும் ஊழியன்.. ஆண்டியின் அதிகாரம் தூள் பறக்கும். ஏலே அங்க என்னாலே செய்யுத யாவாரத்தப்பாரு என்ற பழக்கத்தின் காரணமாக விரட்டிக்கொண்டு அமர்ந்துகொண்டு போனில் பருப்புவிலை ஏறப்போகுதாமில்லா என்று தகவல் சேகரித்துக்கொண்டு முக்கியமான சரக்கை அமைதியாக பதுக்குவது தனது  தலையாய கடமை. என 'உழைப்பை' நல்கும் மனிதன்.  "யாவாரத்தப்பாரு” என்று குரல் கொடுத்தால்- ‘நான் பேசுவதைக்கேட்காதே’ என்று மறைமுக பொருள்.

குபேரன் ஏழையே அன்றி திருட்டு குணம் இல்லாதவன், சிறுவன் என்பதால் ., ஆண்டியின்  பேச்சில் ஏதோ உள்ளார்ந்த நகைச்சுவை இருப்பதாக உணர்வான் போலும், அவ்வப்போது கீழே குனிந்து சிரிப்பை அடக்கி கொள்வான் [அதாவது அச்சு வெல்லத்தை எலி இழுத்துக்கொண்டு  இழுத்துக்கொண்டு ஓடுகிறது என்பதை கவனிக்காமல்], யாவாரத்தப்பாரு” என்று கடமையாக கத்திக் கொண்டிருக்கும்  ஆண்டி நிச்சயம் நகைச்சுவை வழங்கிக்கொண்டிருப்பதாக குபேரனுக்கு மனதில் தோன்றும்.

இந்த மனிதன் தூங்கவே மாட்டார் போலிருக்கிறதே என்று குபேரன் நினைப்பதுண்டு . இரவு 10.00 மணி வரை கடை,     கடையை ப்பூட்டிய பின் பூட்டை இழு இழு என்று இழுத்து திருப்தியடையும் போது 10.15 ஆகிவிடும். காலைல நேரத்துலயே வந்திரு குபேரா என்று சொல்லி அவர் அகன்ற பின் தான் குபேரனுக்கு வீட்டை நினைக்க முடியும். உடல் அசதியில் சாப்பாடு வேண்டாம் போல தோன்றும்; அம்மா விடமாட்டாள் , அவளுக்காக 4 கவளம் விழுங்கி விட்டு படுத்தால் 5.00 மணி வரை அயர்ந்து தூங்குவான். மீண்டும் ஒவ்வொரு நாளும் யாவாரத்த ப்பாரு என்ற ஒரே வசனம், டீ காலை -11, மாலை 6.00 , இடையில் காற்று அல்லது பொட்டுக்கடலை முதலாளிக்கு த்தெரியாமல் [எலியின் வேட்டை முதலாளிக்கு அப்பாற்பட்டது இதைத்தடுக்க ஆண்டிஅல்ல ஆண்டவனே நினைத்தால் தான் உண்டு] அத்தனை கட்டுப்பாடுகளும் குபேரனுக்குத்தான் , எலிக்கு அல்ல , எலிக்கு போனது போகத்தான் 'யாவாரத்துக்கு', எலி ATM ல் திருடும் இந்தக்கால  இனத்தவர்கள் போன்றது, , 1 மாதம் போன பின் தான் தெரியும் எவ்வளவு போயிருக்கிறது என்று. எல்லா ஆடிட்டிங்கும் ஆண்டியே தான் , 2 கிலோ வெல்லத்தை தின்னுபுட்டு என்னலே நிக்குத என்று ஆண்டி கொந்தளிப்பார். பாவம் குபேரன் உண்மையைப்பேசினால் வேலை போனாலும் போய் விடும்  [நாம் என்ன எலியா இரவு பகல் பசியின்றி தின்று தீர்க்க] என்று தன் நிலை உணர்ந்து அமைதி காப்பான்.                 

                  ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பதை மாற்றி   ஊருக்கு இளைத்தவன் மளிகைக்கடை குபேரன் என்று வைத்து விடலாம் , அவ்வளவு ஏச்சும் பேச்சும் குபேரனுக்கு.            

வயிறு வளர்ப்பது அவ்வளவு எளிதல்ல என்பது குபேரனுக்கு தெரியும், அவனை விட ஆண்டிக்கு சிறப்பாக தெரியும்; எனவே ஆண்டியின் மமதைக்கு அடி பணிந்த குபேரன் என்பதே உண்மை. கடும் உழைப்பில் விளைந்த உடலுடன் குபேரன் ஆண்டியின் சேவகனாக இந்த 4 ஆண்டுகளில் விளைந்து நிற்கிறான்.

ஆண்டிக்கு பணம் குவிந்தது, மனமோ சிறுத்து கருத்து நோய்வாய்ப்பட்டு கேவல நிலையில் இருக்கிறது. இப்போதெல்லாம் வங்கியில் பணம் செலுத்தும் பணியும் குபேரன் தலையில். 5 காசுக்கு க்கூட  குந்தகம் இல்லாத நேர்மையாளனாய் -வாலிபன் குபேரன் கடையையும் கவனித்துக்கொள்ள , ஆண்டி பொருட்களை பதுக்கி கொள்ளை லாபம் தேடுகிற சராசரி மனிதன்.

குபேரன் சம்பளம் 650/- நேர்மையில் இம்மியும் குறையாத குபேரன்.. இனியும் மாற மாட்டான். காலை 10.00 மணிக்கு ஆண்டி பருப்பு மூட்டைகளை பதுக்க இடம் தேடி அலைகிறான். எங்கும் சரியான பதில் இல்லை. சோர்ந்து உட்கார்ந்தவனிடம் ,முதலாளி ஒரு 1000/- ரூவா கடன் தாங்க, மாசா மாசம் சம்பள த்துல பிடிச்சுக்குங்க என்ற குபேரனிடம்,   போடா "யாவரத்தப்பாரு " என்று கர்ஜிக்க,  குபேரன் மனம் நொந்து தாயாரை எந்த டாக்டரிடம் கூட்டி செல்வது என்ற கவலையில் உறைந்தான்.

ஆண்டிக்கு ,  12. 30 மணிக்கு   வீட்டிலிருந்து போன் " வாங்க நல்ல கோழி மசாலா சுட சுட சாப்பிட்டிட்டு போங்க என்ற மனைவியின் அழைப்பு. கோழியின் ஆசையில் கீழே இறங்கிய ஆண்டி , “ஆங்” என்று வாயிற் படியில் உக்கார்ந்து நெஞ்சு வலிக்குது என்றான். எதிர் வரிசை டாக்டர் சுகவனம் ஓடி வந்து பார்த்து விட்டு  1 வாரம் முழு ரெஸ்ட் ; ரோஸ்ட், நெய், வறுவல், இதெல்லாம் மறந்துடுங்க என்று காரில் வீட்டில் விட்டு விட்டு போய்விட்டார்.                       

டைனிங் டேபிளி ல் இருந்த செத்த கோழி ஆண்டியை பார்த்து சிரித்தது. .

இரவு கடையைப்பூட்டி சாவியைக்கொண்டு வந்த குபேரனிடம், ஏய் ஒரு பத்து நாளுக்கு கடையை பாத்துக்க என்ற ஆண்டியை--- கை  கூப்பி குபேரன் சொன்னான் "இல்லேங்க, நான் கடையை திறக்க மாட்டேன்,. ஒரு 1000 /- ரூவாய்க்கு யோக்கியதை இல்லாத நான் உங்க சொத்தை பாத்துக்கிறதா? முடியாதுங்க. நான் மூட்டை தூக்கி பிழைச்சுக்குவேன் நீங்க உடம்ப நல்ல பாத்துக்குங்க -இந்தாங்க 4217/- ரூவா . இப்ப கடை பூட்டுற வரை யாவாரம் ஆன  தொகை, 

இதென்னடா சாக்கு மூட்டை .?  அய்யா, வித்தது போக 61/2 கிலோ வெல்லம் இருக்குதுங்க. கடையில எலி நடமாட்டம் அதிகம் ; அதுனால கொண்டாந்துட்டேன் , இல்லைனா நான் தூக்கிட்டுப்போய்ட்டேன் நெனைக்க நேரும் . அந்தபொல்லாப்பு எனக்கு வேணாங்க அய்யா.  நான் வரேன் என்று முதலாளிக்கும், அவர்  மனைவிக்கும் கும்பிடு போட்டு விட்டு  தன்மானத்துடன் வெளியேறினான்.

பணம் படைத்திருந்தாலும் இவன் ஆண்டி  ஏழ்மையிலும் அவன் குபேரன்

பேரா . ராமன்

1 comment:

  1. ஆண்டிக்குத்தெரியாது குபேரன் கடையில் வெல்லம் மட்டும் தான் எடுத்துத்தின்னுரான் என்று. முந்திரியும் பேரீச்சம்பழமும் எவ்வளவு குபேரன் வயிற்றுக குள் போனதோ! நெஞ்சுவலி குபேரனுக்குத்தான் வந்திருக்கணும்.
    சம்பளத்துக்குமேல சாப்பிட்டிருப்பான் போல.ஆண்டிகடை குபேரன் கடையை போண்டியாக்கிடுவான் போல.
    வெங்கட்ராமன்

    ReplyDelete

SRIRANGAPATNA

  SRIRANGAPATNA Curiously, the name has no association with either Srirangam of Tamilnadu or Patna of Bihar; in its own right –it is Srira...