Tuesday, August 22, 2023

EDUCATION -4

 EDUCATION -4

கல்வி -4

மீண்டும் வலியுறுத்துகிறேன் , familiarity  என்னும் "பரிச்சயம்" தயக்கம் மற்றும் கூச்சம் இரண்டையும் மட்டுப்படுத்தி , ஆர்வம் என்னும் ஒரு ஆழ்மன ஈடுபாட்டைத்தோற்றுவிக்கும்.. குழந்தைகள் எழுத்து அறியும் முன் புத்தகங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்வித்தல் நல்ல பலன் தரும். தற்போது சித்திரங்கள் நிறைந்த வண்ண மயமான புத்தகங்கள் காக்கை மயில் விலங்குகள் அருவி குருவி என்று அச்சிடப்பட்டு ஏராளமாகக்கிடைக்கின்றன. [பெரும்பாலும் பெரியவர்கள் அந்தப்புத்தகங்களில் என்ன இருக்கிறதென்று ஆவல்         கொள்வதை ப்பார்க்கிறோம்].  எளிய புத்தகங்களை வாங்கி வைத்து "அதை எடுக்காதே நீ ஸ்கூல் போன பின்பு படி” என்று சொல்லுங்கள் ;மாட்டேன் நா இப்பவே படிப்பேன் என்று அடம்  பிடித்து அந்தப்புத்தகத்தை ,தலை கீழாகப்பிடித்துக்கொண்டு 

காலை நீட்டி தரையில் அமர்ந்து தனக்குத்தானே பேசிக்கொண்டு வேறெதிலும் ஈர்ப்பு இன்றி இருப்பதுதான் குழந்தையின் ஆர்வத்தை இயல்பாக அதிகரிக்கும் உத்தி. அந்த வயதில் ஒரே புத்தகத்தை தினம் தினம் பார்த்து மகிழ்ந்து குழந்தை குதூகலிக்கும் . இது ஒரு சிறிய முயற்சி , பின்னாளில் புத்தகம் படிக்கும் பேரார்வத்திற்கு வித்திடும். .மேல் நிலைகளை எளிதில் கடக்க நல்ல புத்தகங்கள் படிப்பது இன்றியமையாதது. படி படி என்றால் படிக்க ஆர்வம்தோன்றுவதில்லை.   எதிர்மறையாக சொல்லி கைக்கு எட்டும் இடத்தில் புத்தகத்தை வைத்து விட்டு அகன்று விட்டால் தானே வலியப்போய் புத்தகத்தைக்கைப்பற்றி அதில் என்ன இருக்கிறதென்று தேடிப்பார்க்கும் ;பின்னர் அது என்ன இது என்ன என்று துளைத்து எடுக்கும் . அமைதியாக சொல்லிக்கொடுத்தால் உங்களை அமர வைத்து அழகாகக்கதை சொல்லும் குழந்தைகள்.. அந்த வயதில் நீங்கள் ஒரு முறை சொன்னதை 10 நாள் ஆனாலும்  வரிசை மாறாமல் சொல்லும் திறமையை கவனித்திருக்கிறீர்களா ? அதுதான் இயற்கை தந்த    கொடை   "நினைவாற்றல்" .  ஆர்வம் கொண்டு படித்தால், நினைவாற்றல் - வெகு விரைவாக விஸ்வரூபம் எடுக்கும்.. ஆனால் நம் கனவு மார்க்,மார்க் என்று புலம்பி நினைவாற்றலைக்கொன்று குழிதோண்டிப் புதைத்துவிட்டு , 3ம் வகுப்பு முதல் ட்யூஷன் என்னும் குகைக்குள் தள்ளி பின்னர் கோச்சிங் க்ளாஸ்,  சம்மர் கோச்சிங்,  நீட் பயிற்சி என்று நீட்டி நீட்டி கல்வி என்பது ஒரு கொடூர டிராகுலா என்பதாக மனதில் ஏற்றி அவனுக்கு படிப்பு வரவில்லை என்று வீட்டில் உள்ளவர்களே சான்றிதழ் வழங்கி விட , ஓ நமக்கு படிப்பு வராது என்ற இறுதி முடிவுக்கு வந்து விடுகிறான். மார்க் தேடி அலையும் பெரியவர்கள் குழந்தைகளுக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் விளைவிக்கும் பலத்த சேதம் சொல்லில் அடங்காது. சரி நாம் ஏன் டாக்டரோ எஞ்சினீயரோ   ஆகவில்லை என்று பெற்றோர் தங்களை கேட்டுக்கொண்டதுண்டா ? உடனே எங்க அப்பாவுக்கு அவ்வளவு வருமானம் இல்லை என்று சொல்லும் பெற்றோரே , அவருக்கு வருமானம் தான் இல்லை ஆனால் மானம் இருந்தது ; அன்றைய உயர்கல்வி செலவினங்கள் குறைந்தது ஆனால் ஆழ்ந்து கற்பிக்கும் சமுதாய நோக்குகொண்டிருந்தது . இப்போது கல்விக்கொள்கை யைவிட கல்விக்கொள்ளை கம்பீரமாக பீடு நடை போடுகிறது. உங்களுக்கென்னவோ பெரும் செல்வம் குவிந்து விட்டதைப்போல self financing திட்டத்தில்மெடிக்கல்  காலேஜில் படிக்க வைக்க ஏன் துடிக்கிறீர்கள்? தகுதி திறமை இவற்றைப்புறம்  தள்ளிவிட்டு  பணத்தால் எதையும் செய்துவிடலாம் என்றெண்ணும் கூட்டத்தில் நாமும் ஓர் அங்கம் எனில் மறுக்க முடியுமா? ஒலிம்பிக் பந்தயத்தில் பணம் செலுத்தி வென்றிட முடியுமா ? திறமை வேண்டாமா?  கல்விக்கு நாம் தரும் மரியாதை இவ்வளவு தான் அறிவை வளர்க்காமல் ஆசையை வளர்த்து அறுவடை செய்ய அலைகிறோம்.

கல்வி குறித்த நமது அணுகுமுறைகள் “ஈ அடிச்சான் காபி”    வகையை ச்சார்ந்தது . நமது முறைகளை சீரமைத்துக்கொண்டு குழந்தையின் முழு ஆற்றலையும் மேம்படுத்த என்ன செய்யலாம்?

மேலும் வளரும்

அன்பன் ராமன் 

1 comment:

  1. இளம்வயதில் புத்தகம் படிக்கும் எண்ணம் வளர்ந்தால் பின் நினைவாற்றலை வளர்க்கும் திறனும் வளரும்என்பது உண்மை.
    வெங்கட்ராமன்

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...