Thursday, October 19, 2023

CINE DIRECTION/ DIRECTOR 12

 CINE DIRECTION/ DIRECTOR 12

திரை இயக்கம் / இயக்குனர்  12

திரைத்துறையில் இயக்குனர் என்ற பொறுப்புக்கு வேண்டிய அங்கீகாரத்துக்கு வித்திட்டவை சமூகப்படங்களே புராண /சரித்திர படங்களின் கதைகள் கிட்டத்தட்ட கர்ணபரம்பரை அந்தஸ்து உடையன, என்ன கதை என்று எவரும் படம் பார்க்க விழைவதில்லை; மாறாக, காட்சிகளின் கம்பீரம், ஆடை அணிகலன்கள், நடனம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களே பொதுமக்களுக்கு ஈர்ப்பு. இவற்றில் ஆர்ட் டைரக்டர் , காஸ்ட்யூமர் , ஒப்பனைக்கலைஞர்கள் போன்றவரின் ஆளுமை மேலோங்கி பிற தொழில்நுட்பாளர்கள் பின்னிலை [back seat ] அலுவலர்கள் ஆயினர். ஒரு சிலதந்திரக்காட்சிகளுக்காக ஒளிப்பதிவாளர்கள் மேன்மை பெற்றதும் உண்டு. பழைய படங்களில் தந்திரக்காட்சிகள் என்றே அறிவித்து கலைஞரின் பெயர் இடம் பெறும்.  பாபு பாய் மிஸ்திரி, ரவி காந்த் நகாய்ச் போன்றன . இவ்விருவரும் அகில  இந்திய பெருமை மிக்கவர்கள் தமிழிலும் பணியாற்றி உள்ளனர். கடோத்கஜன் ஜீபூம்பா போன்ற உருவங்கள் பன்மடங்கு வளர்வதும், சுருங்கி கொசுவாக மாறி அந்தப்புரமென்ன எந்தப்புரத்திலும் நுழைந்து மிரட்டும் பராக்கிரமங்களை அமைத்தவர்கள் திரு பாபுபாய் மிஸ்திரி மற்றும் ரவிகாந்த் நகாய்ச்.  மிரட்டவும் ஈர்க்கவும் காமெரா வேலை முக்கியத்துவம் பெற்று சில ஜாம்பவான்கள் தோன்றி,  தென்னிந்தியா வின் ஸ்டூடியோக்களில் . அவரவர் காட்டிய உத்திகளால் ஈர்க்கப்பட்டு சில இயக்குனர்கள் இவர்களுடன் கூட்டணி அமைத்தனர். இப்படியாக ஆஸ்தானம் தகர்ந்து புதிய சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் சென்னையெங்கும் உருவாயின, அவற்றில் சில உப்புமா கம்பெனிகள்.

உப்புமா கம்பெனிகள் என்று ஏளனம் செய்தாலும் , இந்த உப்புமாக்களில் சிலவை யாவது குறைந்த பட்ஜெட் தயாரிப்புகளுக்கு முயற்சி மேற்கொள்ளப்போய் , சினிமா ஒரு எளிமையை நோக்கி பயணித்தது என்பதும் உண்மை. சில புதிய தயாரிப்பாளர்கள் திறமை மிக்க புதியவர்களை களப்படுத்தக்கூடிய ஆரோக்கியமான சூழல் தோன்றியது. சினிமாத்துறையில் இயங்கிவந்த தனிமனித திறமையாளர்கள் கூட்டாக இணைந்து நல்ல படங்களை வெளியிட்டதும், ஆஸ்தான அமைப்புகளை அசைத்துப்பார்த்து வெற்றியும் ஈட்ட உதவியது. இவ்வாறாக கதை வசனகர்த்தாக்கள், ஒளிப்பதிவாளர்கள், பாடலாசிரியர்கள், இசை அமைப்பாளர்கள் என்று பல துறைகளிலும் freelancers எனும் சுதந்திர எண்ணம் பரவ ஆரம்பித்தது.. இப்போது அனைவருக்கும் தத்தம் திறமையினை மேம்படுத்தி நிரூபிக்க வேண்டிய நிலை தோன்றி, திறமைசாலிகளை தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள ஒவ்வொரு துறையிலும் நியாயமான கடும் போட்டி தோன்றியது. இசைத்துறையில், ஜி. ராமநாதன் , எஸ் வி வெங்கட்ராமன் , சி ஆர் சுப்பாராமன்,எஸ் எம் சுப்பையா நாயுடு, கே வி மஹாதேவன், ராஜேஸ்வர ராவ், சலபபதி ராவ், ஆதி நாராயண ராவ், என ஓர் பட்டாளம்; பாடகர்களில், திருச்சி லோகநாதன்,    டி  ஆர்   மஹாலிங்கம், சுந்தரம், கண்டசாலா, எம் ராஜா, சீர்காழி கோவிந்தராஜன் டி எம்  சௌந்தரராஜன் , எல் ராகவன் , எஸ் சி கிருஷ்ணன் என்று ஒரு பட்டாளம், பாடகிகளில், யு ஆர் ஜீவரத்தினம், எம் எல் வசந்தகுமாரி, பி கோமளா, பி லீலா , ஜிக்கி [ஜி. க்ரிஷ்ணவேணியின் சுருக்கம் ஜிக்கி அதாவது ஜி.கி ], ஜமுனாராணி, எம் எஸ் ராஜேஸ்வரி, பி.சுசீலா , எஸ் ஜானகி என்று ஏராளமான பெண்குரல்கள், பின்னாளில் கேவி மகாதேவனின் கண்டுபிடிப்பு  எல் ஆர் ஈஸ்வரி [ லூர்து ராஜேஸ்வரி , எம். ராஜேஸ்வரி என்று ஒரு சீனியர் இருந்ததால் LRE என பெயர் உருவானது]]

ஒளிப்பதிவாளர்களில் ஆஸ்தானங்கள் -எல்லப்பா, கமல் கோஷ்  [ஜெமினி] , பிரசாத் [விஜயா வாகினி], , மார்கஸ் பார்ட்லே என் பாலகிருஷ்ணன்[ விஜயாவில் இருந்து பின்னர் வெளியேறினர்],  தம்பு வின்சென்ட் , சுந்தரம், நிமாய் கோஷ் [அனைவரும் ஜெமினி அல்லது விஜயாவில் உருவானவர்கள்] இவ்வாறு ஒரு பெரும் ஆளுமைகள் இயங்கத்துவங்கிய நிலையில் மாறுபட்ட கதை , சுவையான வசனம் என்ற தேவைகளுக்கு நல்ல கதை வசன கர்த்தாக்கள் கண்டெடுக்கப்பட்டு, சோலை மலை,ஆரூர் தாஸ், ஸ்ரீதர், கே எஸ் கோபாலகிருஷ்ணன், போன்றோர் 1960களில்கொடிகட்டிப்பறந்தனர். அதே சமயம் பி ஆர் பந்துலு , நாகி ரெட்டி போன்றோர் சுதந்திர போராட்ட வரலாறுகளை மையப்படுத்தி படங்கள் தயாரிக்க ஆர்ட் டைரக்டர்கள் பலர் உருவாயினர். இப்போது நுணுக்கமான உணர்வுகள் கொண்ட தமிழ்த்திரை அற்புதங்கள் பல களம் கண்டன, கல்யாண பரிசு,பாவ மன்னிப்பு , நெஞ்சில் ஓர் ஆலயம் , பாச மலர்,போலீஸ் காரன் மகள், பாலும் பழமும்  என்று யதார்த்த குடும்பக்கதைகள் தமிழ்த்திரையை திரும்பிப்பார்க்க வைத்தன. சிலவற்றில் நடிப்பும், சிலவற்றில் இயக்குனரின் மேலாண்மையும் தலை தூக்கி நின்றன,

இந்த சூழலில் தான் இயல்பான கதைகளை வெற்றி நோக்கி, செலுத்த , சில காட்சி அமைப்புகளும், பூட மாக உணர்த்துதல்  என்ற உத்தி டைரக்டர் என்பவரின் மனோ தர்மம் ஆனது. ஆரம்ப நிலைகளில் படத்தில் யாராவது, இறந்து விட்டால் 10 நிமிடம் பிணக்காட்சி, ஓலம் ஒப்பாரி , இதற்கென்றே மூக்கைசிந்தும் பாடல் என்று வெறுப்பு வரும் அளவுக்கு காட்சி நீண்டுகொண்டே போகும். அதே தகவலை 10 வினாடிகளில் கோலமிடாத வாயில், கூடத்தில் படத்திற்கு மாலை, வெள்ளைப்புடவை கைம்பெண் என்று முடித்து இயக்குனர் இருப்பதை தெரிவித்தனர். மேலும் சில காட்சி உத்திகளும் இதை தெரிவிக்க, இயக்கம் ஒரு புதிய பரிமாணத்தை நோக்கி பயணித்தது. குருவி இல்லாத வெற்று குருவிக்கூடு, இயக்கம் நின்றுவிட்ட கடிகாரம், காய்ந்து உதிர்ந்த மரம் என்று சில குறியீடுகள் என்று சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை செம்மையாக பயன்படுத்த வல்ல இயக்குனர்கள் உருவாயினர்.

வளரும்

அன்பன் ராமன் 

2 comments:

  1. ஜகன் மோகினி படத்தில அடுப்புக்குள
    காலை.நீட்டி விறகாக. காட்டும் காட்சிமறக்கமுடியுமா

    ReplyDelete
  2. தந்திர காட்சிகளுக்கென்று பெயரெடுத்தவர் விட்டலாச்சார்யா. இப்பொழுது கு மட்டும் அளவு வருகின்ற கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு இவர் படங்கள் தான் அஸ்திவாரம் என்று சொல்லலாம்

    ReplyDelete

SALEM SUNDARI- 53

SALEM SUNDARI- 53 5  நாட்களுக்கு பின் மாடசாமிகாலை 9.45 க்கு வந்துவிட்டார் பின்னர் ஒவ்வொருவராக வர கடைசியில் 9.57 க்கு சுப்பு ரெத்த...