Wednesday, October 18, 2023

CINE MUSIC- 11 STRATEGIES -8

 CINE MUSIC- 11 STRATEGIES -8

திரை இசை – 11, உத்திகள் -8

திரை இசை தனக்கென்று ஒரு பன்முகத்தன்மை கொண்ட உருவத்தை பெற்றதற்கு, காலப்போக்கில் இசை அமைப்பாளர்கள் நடைமுறைப்படுத்திய சில செயல் விலகல்கள் [deviations in working style ]முக்கிய காரணங்கள் ஆனதும் நம்மால் உணர முடிகிறது.  விலகல் என்று எதைக்குறிப்பிடுகிறோம் ? பொதுவாக ஒரு பாடலை  பதிவிட முதலில் மெட்டு உருவாக்கி, நல்ல பயிற்சி கொடுத்து , பின்னர் கருவிகளை எங்கெங்கே இசைப்பது என திட்டமிட்டு, அதன்படி செயல்படுத்துவது அன்றைய நடை முறை. அதற்கான பொதுவான அமைப்பு 1] கருவிகள் ஒலிக்கும் 2] பாடலின்  பல்லவி துவங்கும் 3] பல்லவிக்கேற்ற தாளம் அரங்கேறும் ;அதனால் தான் பாடலை அடி ஒற்றியே தாளம் தொடரும் 4]. தாளவாத்திய கருவிகள் மாறி ஒலிக்கும் 5] மீண்டும் பாடல் பல்லவியிலோ /சரணத்திலோ துவங்கும் 6] இடை இசையில் முந்தைய இசைக்கருவிகளோ/ முற்றிலும் புதிய ஒலிகளுடன் வேறு கருவிகளோ இசைக்க மீண்டும் சரணம் பாடப்படும்.

அதாவது குரலை த்தொடர்வது தாளம் என்பது அடிப்படை அமைப்பு . இந்த அமைப்பை பழமையான பாரம்பரியத்திலேயே மாற்றி அமைத்த நிகழ்வு தான் நாதஸ்வர இசை என்னும் மங்கள வாத்திய கச்சேரி. நாதஸ்வரம் துவங்கும் முன் தவில் பட பட பட என்று அதிர, பின்னரே நாதஸ்வரம் ஒலிக்கும் . இப்போது தாளம் முந்திக்கொண்டுவிட்டதே என்று யாராவது கவலை கொண்டதுண்டா. இது போல கர்நாடக இசைக்கச்சேரியில் மிருதங்க வித்துவான் தட்டினால், அவனுக்கு வேலை போய்விடும்,அப்புறம் மார்கழி மாத பஜனைக்கோஷ்டியில் சேர வேண்டியது தான்.இந்த மாதிரியான கட்டுப்பாடுகளை தகர்த்து , செவியை ஆட்கொண்டவர்கள் தான் திரை இசை அமைப்பாளர்கள்.   

அந்த வகையில் முற்றிலும் புதிய கட்டமைப்புகளை தோற்று வித்து , மிகப்பெரும் ஒலிசாம்ராஜ்யத்தை மிதக்க விட்டவர் எம் எஸ் வி என்று பரவலாக அறியப்பட்ட  மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவரது பூதாகார இசை ஆளுமைகளில் சிலவற்றைப்பார்ப்போம்.

1 "ஒரு பெண்ணைப்பார்த்து நிலாவைப்பார்த்தேன்" [தெய்வத்தாய் -1963] வாலி, வி, ரா -டி .எம் எஸ் .

பாடல் ஒரு வித்யாசமான காட்சி அமைப்பில் துவங்க, ச்டு ட் டக் சிட்டாக்  சிட்டுடக்கு சட்டாக்   என்று ட்ரம் அதிர [Noel Grant ], விட்டேனா பார் என்று போங்கோ வில் ஒலி  வெடித்துச்சிதற [.கோபாலகிருஷ்ணன்] துவக்கமே தாளம் தான். பின்னர் தான்,  டி எம் எஸ் துவங்குகிறார். அந்த எம் ஜி ஆர் 50 வயதை நெருங்கிக்கொண்டிருந்தார் -நம்ப முடிகிறதா, உடையும் எடையும் அளவாக இருக்க ஆடுவதற்கு கேட்பானேன்? . பாடலின் சொற்கோவைகள் அந்தக்காலத்தில் புதுமை, எனவே ஒவ்வொரு வரிக்கும் பின்னிசை கொடுத்து ஒரு இசை மழையைப்பொழிந்திருக்கிறார் எம் எஸ் வி. திடீரென்று இது போல ஒரு திருவிழா க்கோல இசையை வாரி வழங்கி பாடலும் படமும் உச்சம் தொட்ட நிகழ்வுகள் அநேகம். பாடல் திடீரென்று முடிந்துவிட்டதாக ஏக்கம் கொள்ளும் வினாடியில் மீண்டும் போங்கோ -ட்ரம் போட்டி துள்ளல் ஜாமாய்க்கிறது ஒலி யின் நர்த்தனம் இணைப்பு இதோ

https://www.dailymotion.com/video/x952zk oru pennaippaartthu

 

2   பார்த்த ஞாபகம் இல்லையோ  -புதிய பறவை [ 1964] கண்ணதாசன் , விஸ்வ -ராம மூர்த்தி பி.சுசீலா.

 முற்றிலும் கவிஞரின் முத்திரை -ஆம் கதை யை  பாடலில் சொல்லி நியாயப்படுத்தும் உத்தி. ஒரு அப்பாவி போல் தெரியும் வேடம் சிவாஜி கணேசனுக்கு. காட்சியில் சிகரெட் புகை பேச பாடல் துவங்குகிறது. அதிர்ச்சி தரப்போகும் சம்பவம் என்பதாலோ என்னவோ, படபடக்கும்  போங்கோ வில் பாடலில் அதிர்வு தான் துவக்கமே. அற்புதமான பாடல் 1964 ன் எண்ணற்ற பாடல்களில் இதுவும் ஒரு புரட்சி அந்நாளில் .  இணைப்பு இதோ https://www.google.com/search?q=partha+gnyabagam+illaiyo+video+song+download&newwindow=1&sca_esv=573727491&sxsrf=AM9HkKmUOqYIeBR9bDBeCY2fhQ_w

3 கண்ணன் எனும் மன்னன் பேரை [வெண்ணிற ஆடை -1965] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி , சுசீலா

இது ஒரு மார்க்கண்டேய வடிவமைப்பு என்றும் இளமை குன்றாத ஆக்கம் ஆக்கியோர் அநேகரும்  மறைந்தாலும் , ஆக்கம் மட்டும் ஊக்கம் குன்றாமல் தவழும் உன்னதம். பாடலை சொல்லவா?  இசையை சொல்லவா?  நடனத்தையா? காட்சியின் ஆழத்தையா?  எதைச்சொல்ல? இது ஒரு இசை சுரங்கம் இசை அமைப்பின் பல நுணுக்கங்களால்  உருவான உன்னதம் துவங்குவதென்னவோ ஜூம் ஜூம் ஜஜ்ஜாக்கு ஜஜாக்கு என்று அதிரும் ட்ரம்மின தாள ஒளியில். கண்ணன் பாடல் ஆயிற்றே குழல் இல்லாமலா? பாடலில் அதிகம் ஒலிப்பது ம் குழல்தான்.

கொடைக்கானலில் அமைந்துள்ள, golf links ஆடுகளத்தில் விரிந்து பரந்த புல்வெளி இந்தப்பாடலுக்கெனவே பிறந்த களம் போல் அமைய துள்ளி ஆடும் பாடல் பல்லவியிலியே பயணிப்பது தனிச்சிறப்பு. 3 முறைக்கு பாடியபின் துவங்கும் சரணம் எங்கும் எதிலும் குழலின் வசீகர ஒலி மற்றும் ட்ரம் தாளத்தில் உலா வர போங்கோவும் நளினமாக ஒலிக்க,  ஒரு மென்மையும் மேன்மையும் நிறைந்த பாடல். இது.  என்றும் நிற்கும் வசீகரம் நிறைந்தது.

இணைப்பு இதோ  https://www.dailymotion.com/video/xxx6hp

4 ராஜாவின் பார்வை -அன்பே வா [1966] வாலி, எம் எஸ் விஸ்வநாதன் டி எம் எஸ், பி. சுசீலா

இது ஒரு கந்தர்வ வகை இசைக்கோலம். . தனிமை கண்ட விஸ்வநாதன் சிறிது தொய்வுக்குபின் [நல்ல படம் இல்லாமல்] எம் ஜி ஆர் சரோஜாதேவி இணைக்கு வண்ணத்தில் வி எம் தயாரிப்பு. வி எம் நிறுவனத்தில் முதன்முதலில் எம் ஜி ஆர் பங்கேற்ற படம் . இது ஒரு பிரம்மாண்ட கனவுக்காட்சி என்றதும் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு பின்னி எடுத்து நான் இங்கு தான் இருக்கிறேன் என்று  எம் எஸ் வி அதிரடி காட்டிய படம் .அதுவும் இந்தப்பாடல் கற்பனையில் அடங்காத உத்திகளை கையில் எடுத்து மாபெரும் பரிமாணம் கொண்ட பாடல் [விஸ்வரூபத்தின்  விஸ்வரூபம் .]

சுசீலா மெல்ல     என்று கனவின் வலையை விரிக்க வெண் புரவி தலையை அசைத்து கிளம்ப ஒய்ங் ப்ளங் சிக் ப்ளங் சிக் என்று தாள ஒலியை பின்னுக்குத்தள்ளி கம்பீரமாகமாகக்கிளம்பிய குளம்பொலி [ வேறென்ன கொட்டாங்குச்சிகளின் லயம் மாறாத மோதல் மற்றும் சிறு மூங்கில் குழல்கள் சமதளத்தில் மாறி மாறி செங்குத்தாக தட்டப்பட   ஜோடிக்குதிரைகளின் கால் ஒலி என பட்டையைக்கிளப்ப, கனவு கனவு தான் என்று சொல்ல தோன்றுகிறது. இப்பாடலின் முற்பகுதியில் தேவலோக விண்மீன்களாக பின்புலத்தில் ஜொலிக்கும் நட்சத்திரம் போன்ற புள்ளிகள், காட்சியின் பின்பகுதியில்  இயக்கப்பட்ட cellophane கண்ணாடிக்காகிதங்கள்; அவை வெவ்வேறு வண்ணம் உடையன , அவை  மேலும் கீழும் இழுக்கப்பட்டு அவற்றின் மாறும் வண்ணங்களும், அந்த கசங்கியபுள்ளிகள் நட்சத்திரமென மிளிர்வதும் ஒளிப்பதிவாளர் [மாருதி ராவ்] வழங்கிய தேவலோக பிம்பம்.

பாடலில்இடையிடையே ஒலிக்கும்   மணி ஓசை வெண்கல பானைகளில் கரண்டியால் தட்டி எழுப்பிய ஒலி: மற்றும் இளம் சிறார்களின் கோரஸ் இந்தப்பாடலை குதிரை பூட்டிய சாரியட்டுடன் பறக்க விட்ட இசை சாம்ராஜ்யம். தாள ஒலிகளில் இருக்கும் வகைகளை பின்னிக்கலந்து வடிவெடுத்தபாடல். ஆர்கெஸ்டரேஷன் என்னும் இடை இசை சாமராஜ்யத்தை எப்போதோ                  எம் எஸ் வி கட்டமைத்துவிட்டார்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஆர்கெஸ்ட்ரேஷன் உருவானது என்று சிலர் பிதற்றும் போது சிரிப்பும் கோபமும் பீறிடுகிறது. இப்பாடலுக்கும்,        பிற எம் எஸ் வி யின் அனைத்து பாடல்களிலும் அமைந்த ஆர்கெஸ்டரேஷன்அனைத்தும்,கலைஞர்களின் நேரடி வாசிப்பில் விளைந்த ஒலிகள், அவை கம்ப்யூட்டர் அல்லது சிந்தசைசர் கொண்டு ஒலித்த நாதங்கள் அல்ல, அதனால் அவை உயிரோட்ட இசை என்று அழைக்கிறோம். ரசியுங்கள் . இணைப்பு இதோ https://www.google.com/search?q=raajaavin+paarvai+video+song+download&newwindow=1&sca_esv=573727491&sxsrf=AM9HkKn_cf0Zkkm1aEatjlJOgkONXjjeNA%3A1

மீண்டும் தொடர்வோம்                              அன்பன் ராமன்

3 comments:

  1. Enjoyed this exceptional article with a nice discription along with the link for the song.

    ReplyDelete
  2. Excellent series on the greatness of MSV music and songs with apt examples. Look forward to more on this. Worth making a digital or audio book at the end for future generation.

    ReplyDelete
  3. ரசிப்பதில் மனம் சென்றதால் வர்ணனைக்கு வார்த்தைகள் வரவில்லை. (திரை இசை)

    ReplyDelete

SALEM SUNDARI- 53

SALEM SUNDARI- 53 5  நாட்களுக்கு பின் மாடசாமிகாலை 9.45 க்கு வந்துவிட்டார் பின்னர் ஒவ்வொருவராக வர கடைசியில் 9.57 க்கு சுப்பு ரெத்த...