Thursday, October 5, 2023

CINE DIRECTION,DIRECTOR-10

 CINE DIRECTION,DIRECTOR-10

திரை இயக்கம், இயக்குனர் -10

காலப்போக்கில் சரித்திர புராணப்படங்களிலிருந்து மெல்ல விலகி, சுதந்திரப்போராட்ட உணர்வுகளை மையப்படுத்தி / மேம்படுத்தி படங்கள் வரத்துவங்கின. அவற்றில் போராட்ட தியாகிகள், காந்தி, நேரு, திலகர் என்று அடையாளப்படுத்திக்கொண்டே பாரதி பாடல்களை படத்துக்கு 40வீதம் பாடி பேராதரவைப்பெற்றனர் . வளமான குரல் வாய்த்தோருக்கு, வாழ்வும் வளமானது. இயக்குனர்களுக்கு மிக அமைதியான சூழல்; பாடிக்கொண்டே நடிக்க வேண்டியது, இடை இடையே சுவாமி, தேவி நாதா என்று புள்ளிமானை சாட்சியாக வைத்துக்கொண்டு காதல் காட்சிகளில் தரையைப்பார்த்துக்கொண்டு உன் சௌந்தர்ய யௌவனம் சந்திர பிம்பம் என்று சில்பா தலை நடிகர் சொல்ல, ஒரே ஓட்டமாக மானுடன் நாயகி ஓட ப்ரேமைக்காட்சி வெகு ஜோர் என்று விளம்பரம், கோபால் பல்பொடி நிறத்தில் நோட்டீஸ் வீட்டுக்கு வீடு விநியோகம்.

  இன்றே இப்படம் கடைசி என்று ஒலிபெருக்கியில் அலறி கூட்டம் சேர்த்து, வெறும் சுத்த சங்கீதத்தைக்கொண்டே படங்கள் வந்தன, ஆனால் இயக்கம் என்பது 'நம்மால் முடியாது " என்று நம்மவர் அலறி ஓட நட்கர்னி களும், நஹாதா களும், டங்கன், பீங்கன் என்று மேல் நாட்டு வெள்ளைத்தோல் இயக்குனர்கள் இங்கே கோலோச்சினர் .      

 பிறரை ப்பார்த்து சப்பாத்தி செய்ய கற்றுக்கொண்ட நம்மவர்கள், டங்கன், பீங்கன்,நஹாதா  நட்கர்னி வகையறாக்களை வேடிக்கை பார்த்து , பின்னர் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு இயக்குனர் ஆயினர். அவர்கள் அந்த இடம் பிடிக்க மிக வலுவான காரணம் அவர்கள் படத்தயாரிப்பு முதலாளிகள். பெரும்பாலோனோர் ஏதோஒரு ஸ்டுடியோ வைத்து படம் தயாரித்தவர்கள்; எனவே, எளிதில் இயக்குனர் ஆகி சுதந்திர தாகம் விலகாமல் படங்களை சுட்டுத்தள்ளினர். திடீரென்று வசன காலம் மலர்ந்து அடுக்குமொழி வசனம் எழுதி அதை ஒரு அரசியல் உத்தியாக்கி, சிலர் பெரும் புகழ் சேர்த்த வரலாறு அனைவரும் அறிந்ததே   

களம் மாறிய காலம் அது. தொண்டை வெடித்துச்சிதறும் உச்சமும், உக்கிரமும் வெளிப்பட ஆக்ரோஷமான வசனம் பேசி நடிப்பதே நடிப்பு என்ற நடிப்பை முதலீடாக்கி வசனகர்த்தாக்கள் கல்லா கட்டினார். உ க்கும், நாங்க மட்டும்  என்ன சோப்ளா ங்கிகளா என்று சில பெண்களும் வீர வசனம் முழங்க, தொண்டை கிழிய தலைவிரி கோலமாக நடிக்க, ரசிகர்கள் மூக்கை சிந்தியபடி காட்சிக்குக்காட்சி கூட்டம் அலை மோத நடிப்பு என்பது உரத்த குரலில் வசனம் பேசுவது என்ற இலக்கணம் நிறுவப்பட்டது. இதற்கொரு பின்னணி காரணம் அன்றைய திரை நடிகர்கள் நாடகத்துறையில் இருந்து திரைக்கு வந்தவர்கள்;மைக் இல்லாமல் கூட்டத்தினருக்கு புரியும் படி வசனம் பேசி நடித்தவர்கள் . [நம்பாதவர்கள் சமீப காலம் வரை திரு வி கே ராமசாமி யின் நடிப்பை நினைவு கூறுங்கள் ].

1955 க்குப்பிறகு சமூக இல்லற வகைக்கதைகள் களம் காணத்துவங்கின. இப்போது ஆவேசமான வசனங்கள் இயற்கைமரணம் அடையத்துவங்கின; ஆயினும் இலக்கணத்தமிழ் இல்லற வாழ்விலும் தொடர்ந்தது ஆனால் சுவாமி --நாதா , பிரியசகியே போன்ற சொற்கள் அகன்று எங்கிருந்தோ "அத்தான் " கள ம் கண்டது  அதற்கு இணையான பெண்பால் பெயர் இல்லாமலே பெரும்பாலும் "அன்பே" அந்தஇடத்தை பிடித்துக்கொண்டது இதனால் தாய் , தமக்கை, தங்கை இவர்கள் "அன்பே" என்று அழைக்கமுடியாத ஒரு வினோத நிலையை சினிமா இலக்கணம் உருவாக்கிவிட்டது. நாதா என்ற காதலன் உறவுக்கு இணையாக "நாதீ" என்றொரு சொல் காமெடியாக உருவானது [உபயம்: சித்ராலயா கோபு].

இது போன்ற கதைவசன மாற்றங்கள் சினிமாவை வேறொரு திசைக்கு இட்டுச்செல்ல, மாறுபட்ட சிந்தனையாளர்கள் இயக்குனர்கள் ஆனார்கள் இதனால் பிற கலைநுணுக்கத்துறைகள், வேறு அவதாரம் பூண்டன.  கமெரா தந்திரக்காட்சி இந்திர லோகம் என்ற நிலையில் இருந்து சென்னை சென்ட்ரல், எழும்பூர், LIC கட்டிடம் இவற்றை கதாநாயகன்/நாயகி TRUNK பெட்டியுடன் சென்னைக்கு வந்து விட்டதை அறிவித்தன. காட்சி மாறி, திருச்சி மலைக்கோட்டை அல்லது மீனாக்ஷி அம்மன் கோயில் நான் மாடக்கூடல் கா ட்சி 10 வினாடிகள் தோன்றி எந்த ஊர் என்று அமைதியாக அறிவித்தது   பெரும் புரட்சி அந்நாளில்; ஏனெனில் அதற்குமுன்னர் ஒரு சிறு பலகையில், திருச்சி/ மதுரை /திருச்செந்தூர், திருநெல்வேலி என்று எழுதி கைகாட்டிபோல்சைதாப்பேட்டையில் நட்டு வைத்து ஊர் எது என்று நம்ப வைத்தனர். இந்த செயல்மாற்றங்களின் பின்னால் இருந்த ஆளுமையே டைரக்டர் என்னும் இயக்குனர்

அவர்களின் பார்வை வேறு பாதையில் பயணிக்க, முகவெட்டு, ஏற்புடைய காமரா கோணங்கள்., ஒளி அமைப்புகள் , மென்மையான கண் அசைவுகள் , காதல் சொட்டும் உதடு முறுவலிப்பு என மிக நுண்ணிய வித்தைகளை விந்தைகளாக களப்படுத்தினர், இதனால் டைரக்டர்களுக்கு  தேவை, அங்கீகாரம் , ஊதியம் எல்லாம் உயர்ந்து , சினிமாவை காட்சி ஊடகமாக பயன்படுத்த வல்லமை கொண்டவர்கள் வெகுவாக உயர்ந்தனர்.

இந்த உத்தியை சிறப்பாக பயன் படுத்த செம்மையான ஒளிப்பதிவாளர்கள் குறித்த தேடலும் தேவையும் அதிகரித்து, குறைந்த பேச்சு, நளினமான காட்சி அமைப்புக்கு க்ளோசப் , கம்பீர ஒளி அமைப்பு , என நாடகத்தனம் குறைந்து, காட்சிகள் பேசத்துவங்கின. அதனால் டைரக்டர்கள்  பற்றி பிறர் /ரசிகர் பேசத்துவங்கினர்.   இதுதான் டைரக்டர் என்னும் ஆளுமைக்கு அடித்தளம் அமைத்த சூழல்.

தொடரு ம்

அன்பன் ராமன்

1 comment:

  1. Not only Director’s skill but also the skill of camera man is required
    for the success of a film.
    KVenkataraman

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...