Monday, October 16, 2023

THE KITE FLYER-2

 THE KITE FLYER-2

பட்டம் விட்ட சிறுவன்-2

கிராமத்தில் பட்டம் விடுவதில் தேர்ச்சி பெற்ற சிறுவன் , பின்னாளில் மிகப்பெரும் கல்விநிலையங்களில் கால் பதித்தது மாத்திரம் அல்லாமல் முத்திரையும் பதித்தார். பெரிதும் புகழ் பெற்ற கல்விக்கூடங்களில் நுழைந்து , நவநாகரீக மாணவர் மத்தியில் சிறிதும் சஞ்சலப்படாமல் வேங்கையெனப்பாய்ந்து முன்னேற்றம் கண்ட வரலாறு நமக்கு ஏராளமான படிப்பினைகளை தருகிறது. நாம் தான் நமது புலன்களை சரியாகப்பயன் படுத்தி மனிதரில் எத்துணை வகை கம்பீரங்கள் /சாதனைகள் மற்றும் விடா முயற்சி என்று புரிந்துகொள்ளவேண்டிய கொட்டிக்கிடக்கும் வியப்புகள். சரி இந்த சிறுவன் பட்டம் விட்டது ஒரு பழைய நிகழ்வு; அதே சிறுவன் இளமைக்காலத்தில் ஏழ்மையை பின்னுக்குத்தள்ளிவிட்டு பட்டங்கள் பெற்றதன்றோ படிப்பினை தரும் மற்றும் முயற்சியின் மாண்பு தனை உயர்த்திப்பிடிக்கும் பாரத மணிக்கொடி..! 

அந்நாளைய சிறுவன் வேறு யாருமல்ல ISRO [இஸ்ரோ ] நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் -திரு. சிவன் அவர்கள் தான்.  பட்டம் விட்டவர் இஸ்ரோ நிறுவனத்தில் பல அற்புதங்கள் நிறைவேற்றும் தலைமைப்பொறுப்பில் பல வியத்தகு திட்டங்களுக்கு வடிவும் தந்து, இந்தியாவின் திறனையும் உலக அரங்கில் உயர்த்தியும் காட்டியவர்,       ஆம் சந்திரயான்-2 நிலவில் தரையிறங்கும் வரை சென்று பின்னர் சந்திரயான் -3 அனைத்து இடர்பாடுகளையும் தகர்த்து கால் பதித்த வரலாற்றுக்கு முன்னோடி அல்லவா? .

ஒரே ராக்கெட்டில் உலகின் பல நிறுவனங்கள் / நாடுகள் கோரிக்கையை நிறைவேற்றி 103 சாட்டிலைட் களை சுமந்து சென்று அவற்றிற்கு உரிய சுற்றுப்பாதை நிலைகளில் நிறுத்திய வல்லமை நமது பெருமையை பறைசாற்றும் நிகழ்வல்லவா? வல்லரசுகள் ஏன் இந்தியாவிடம் தங்களில் சாட்டிலைட் களை மிதக்க விடும்படி வேண்டுகோள் வைக்கின்றன? அவர்களே இதே தேவையை நிறைவேற்ற பன்மடங்கு செலவு ஏற்படும் . தமிழில் சொல்லி அடிப்பது என்றொரு பண்பு பேசப்படுகிறது. இதுவோ அவனவன் சொன்னபடி அவன் சொன்ன இடத்தில் அவனது சட்டி லைட்டை அவன் சொன்ன இடத்தில் ஆணி அடித்தது போல் நிறுத்துவது நிச்சயம் சொல்லி அடிப்பது தான். எவ்வளவு நுண்ணிய  திட்டமிடல் மற்றும் செயல் கட்டுப்பாடு [கண்ட்ரோல்]] தேவைப்படும்.? யோசித்தால் விளங்கும் இதன் மாட்சிமை எளிதில் கடந்து போய்விட இயலாத மகத்தானம் என்று.  ஒரு 25-30 ஆண்டுகளுக்கு முன்னர் கிரையோஜெனிக் என்னும் குளிர்விக்கப் பட்ட எரிபொருள் தொழில் நுட்பத்தை தராமல் ஏமாற்றிய 'முன்னேறிய' நாடுகள் கனவிலும் கருதாத உயரங்களைத்தொட்டுக்காட்டி இன்று ஒரு பெரும் தொழில்நுட்ப ராட்சதன் நிலையை இந்திய கல்வி திட்டங்களிலேயே பயின்றவர்கள் கட்டமைத்தனர் [ஒரு சிலர் மேலை நாட்டுக்கல்விப்பயன் அடைந்தவர்கள் இருக்கக்கூடும்] எனினும் நம்மவர் முயன்று முன்னெடுத்ததால் பிறநாட்டவர் நம்மீது மதிப்பும், கோபமும் கொள்ள வழி வகுத்தது. பல முறை 'சொல்லி அடித்த சாட்டிலைட் தொழில் நுட்பம் இதில் எதுவும் தற்செயல் நிகழ்வல்ல என்று வெளிச்சம் போட்டு காட்டி இப்போது இந்திய அறிவியல் பற்றி பேசவோ விமரிசிக்கவோ அஞ்சுகிறார்கள்.

சரி, திரு சிவன் அவர்களின் வாழ்வில், நாம் தெரிந்து கொள்ளவேண்டிய நுணுக்கமான அம்சங்கள் விரவிக்கிடக்கின்றன. அவை அனைத்துமே நான் அவ்வப்போது வலியுறுத்திவரும் செயல் முறைகளுக்கு வலு சேர்ப்பது எனக்கு ஊக்கத்தையும் மேலும் நுண்ணிய குறியீடுகளை பகிர்ந்து கொள்ள உந்தவும் செய்கிறது. சரி நமது பார்வை எவற்றை ஆழ்ந்து கருத்தில் கொள்ளவேண்டும்?  

கிராமத்து மனிதன் என்று யாரையும் குறைத்து மதிப்பீடு செய்யாதீர்கள்         [ஆய்வு செய்யும் அறிவு வேறு , நகரத்தின் உல்லாச வாழ்வு அறிவைத்தூண்டாது.] சிவன் சொந்த முயற்சியில் பயின்றவர் [ ஆங்கில மீடியம் மற்றும் ட்யூஷன் இல்லாமல் வீட்டு வேலைகளையும் செய்து படித்து முன்னேறியவரே ; செல்லமாக வளர்க்கப்பட்ட குழந்தை அல்ல]; கவனியுங்கள் உயர் கல்விக்கு அவர் எளிதில் கால் பதித்த இடங்கள் MIT , IIT மற்றும் உயராராய்ச்சி மும்பை யில் என்று நகரமே அறியாத வாலிபன் எட்டிய உயரம் சாதாரணமானதா ? தினம் 6 ட்யூஷன் படித்தவெனெல்லாம் சாதித்தது என்ன?  புரிந்து கொண்டு பயின்றால் எந்த உயரமும் வசப்படும் என்பதற்கு திரு சிவனின் வளர்ச்சியே சான்று. ஏழ்மை ஒருசவால் தான் அதற்காக தூக்கில் தொங்கி நிரந்தர விடுதலை என்று நீங்காத துயரை விதைக்கவில்லை. புரிந்துகொண்டவன் போராடி வெற்றி அடைய தயங்க மாட்டான்.

ஆசிரியர் திட்டினார் அவனை அடித்து நொறுக்கு என்று கிளம்பும் அறிவுசால் சான்றோரே, உங்கள் குழந்தை சிறந்த அறிவுச்சுடர் என மலர்ந்து விட்டானா?  சிவன் இப்போதும் முக்கியமான ஆசான்களை உவகையோடு நினைவு கூறுகிறார். [ ஆசிரியர்களே ஒரு கணம் சிந்தியுங்கள் , நம்மில் சிலரை மட்டும் ஏன் தெய்வங்களாக பார்க்கின்றனர்? அவர்களின் பங்களிப்பு மாணவர்களை மேம்படுத்தியுள்ளது என்பதே எழுதப்பப்படாத வாசகம் .அதை ப்புரிந்து கொள்ளாதஆசிரியர்  எவரும்  " " சிறியோனே என்பது நிதர்சனம்]  .

திரு சிவனின் பார்வை மகத்தான மனிதநேயம் கொண்டது. அவர் சொல்வது , ராக்கெட், சாட்டிலைட் இவை எதுவும் நமக்கு தம்பட்டம் அடித்துக்கொள்ள அல்ல, வரிசெலுத்துவோர் பணத்தில் நிறைவேறும் திட்டங்கள் வரிசெலுத்துவோருக்கு உதவ வேண்டும்.இந்தத்தொழில் நுட்பம் இந்தியாவை பொறுத்தவரை  விவசாயம், வானிலை, பேரிடர் மேலாண்மை [DISASTER MANAGEMENT ] துறைகளுக்கு முன்னறிவிப்பும் , எச்சரிக்கையும் தரவே. வேறு நமது ஆதிக்கத்தின் அடையாளங்கள் அல்ல என்கிறார். மற்றுமோர் சம்பவம் வெறும் 3 சாட்டிலைட் களின் தகவல் களை பெற்று 3 ஆண்டுகள்  பலன் பெற 15000 கோடி வாடகையாக கேட்கிறார்கள். அனால் நானே [சிவன் அவர்கள்] 3 சாட்டிலைட்டுகளை மொத்தம் 900 கோடியில் உருவாக்கினேன் என்கிறார். வரிப்பணம் குறித்த ஒரு புரிதல் அடிப்படையில் செயல் பட்டது புலனாகிறது. [ மாத ஊதியம் பெறுவோர் இது போல நிலைப்பாடு கொண்டால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறுமல்லவா?]

அவரது 2 புதல்வர் களில் மூத்தவர் இஸ்ரோ வில் என்ஜினீயர். இரண்டாமவர்   என்ஜினீயரிங் படிக்கமாட்டேன் என்று அனிமேஷன் துறையில் பயின்று, மேலைநாட்டில் நல்ல பதவியில் இருக்கிறார் . அவரை வற்புறுத்தி இதைப்படி அதைப்படி என்னாமல், அவரின் தேர்வுக்கு வாய்ப்பளித்த பெற்றோர் தவறு செய்துவிட்டார்களா என்ன? [எதையும் யார் மீதும் திணிக்காதீர்கள்] இவை அனைத்தும் நமது கண்களை திறக்க வேண்டும் .

                                              இது கதையல்ல நிஜம்                K. Raman

https://www.google.com/search?q=interview+sivan-gopinath+video&newwindow=1&sca_esv=573677790&sxsrf=AM9HkKnt7wbEeBgc4uDELOxpogAu5vIirQ%3A169742181271

2 comments:

  1. திரு.சிவனை சொக்கலிங்கமாகப்
    பாரக்கிறேன்
    வெங்கடராமன

    ReplyDelete
  2. மிகவும் அருமை. நான் கலாம் என்று நினைத்தேன். சிவன் பற்றியது என்று தெரிந்த பொழுது மிகவும் ஆச்சரியமாக வும் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நாட்டுபற்று நாட்டுபற்று என வாய் கிழிய பேசாமல் செயலில் காண்பித்த நிகழ்வு அருமை. இன்னும் இதுபோன்ற பயனுள்ள ஊக்கமளிக்கக்கூடிய தன்னம்பிக்கையை வளர்க்கக் கூடிய பதிவுகளை காண ஆவலாய் உள்ளேன். நன்றி. வணக்கம்.

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...