Monday, October 9, 2023

THE KITE FLYER

 THE KITE FLYER

பட்டம் விட்ட சிறுவன்

ஆம் இன்று ஒரு சிறுவன் முறையான வளர்ச்சிபெற்று, அவன் உயர்ந்தது மட்டும் அல்ல அவனது உழைப்பினால் எட்டிய புகழ், மகத்தானதுஎன்ற சூழலைப்பார்ப்போம். இதன் உள்ளார்ந்த தகவல்கள் சிந்திக்கும் மாந்தர்க்கு அருமருந்து . கல்விபயில்வோர் மனதில் உள்வாங்கிக்கொள்ள பல நிகழ்வுகள் வலு சேர்க்கின்றன.

கிராமத்து குடும்பம் , வறுமையே மூலதனம் எனவே பெரிய பள்ளிகள் அவனுக்கு எட்டாக்கனி.ஆனால் கல்வியின் மாட்சிமை தன்னை உணர்ந்தான் , தன்னையும் , தன்  நிலைதன்னையும் புரிந்தவன்..பலரையும் போல, தாயின் மீது பாசமும் தந்தைமீது பெரும் மரியாதையும் காட்டியவன். அதனால் பள்ளி நேரம் தவிர்த்த பிற சந்தர்ப்பங்களில் தந்தையுடன் விவசாய வேலைகள் [களைஎடுத்தல், நீர் பாய்ச்சுதல்] கூலிக்கு தோட்ட வேலை செய்தல் என வாழ்ந்த சிறுவன்.

இவற்றிற்கு உதவியாக இருப்பதனால் வீட்டின் எதிரே அமைந்த பள்ளியிலேயே பயின்றான். அவனுக்குஆங்கிலம், பிற மொழிகளில் நாட்டம் அதிகம் இல்லை எனினும் கணக்கு, அறிவியல் பாடங்களில் சிறப்பான ஈடுபாடு கொண்டிருந்தான். விடுமுறை நாட்களில் கோடை காலத்தில் வயல் வெளிகள் கட்டாந்தரையாக இருக்க மாலையில் பட்டம் விடுவார்களாம்.

.பட்டம் வாங்க வோ, ஏன் நூல் வாங்கவோ காசில்லாத ஏழ்மை. அதனால் பிரம்மாண்டமான பட்டம் தானே தயாரித்து பறக்க விடுவானாம், பட்டம் விடும் போட்டியில். ஆனால் நூல் வேண்டுமே? அதற்கு, கற்றாழை நார்களை மெலிய நூலாக முறுக்கி பயன் படுத்தி பட்டம் விட்டு மகிழ்ந்தவன் இந்த சிறுவன்.

பள்ளி இறுதித்தேர்வில் மிக சிறப்பான மதிப்பெண்கள் பெற்று அந்த கிராமத்தின் முக்கிய மனிதன் ஆனான். நண்பர்கள் அவனை கல்லூரியில் படிக்க சொல்லி வற்புறுத்த , கிராமத்தின் அருகில் உள்ள நாகர்கோயிலில் கல்லூரிக்கு சென்றான். வேறு வெளியூருக்கு சென்றால் தகப்பனுக்கு உதவி செய்ய முடியாது -இது தான் நிலை.. பியூசி யில் நல்ல மதிப்பெண்கள் பெற்றான் [ட்யூஷன் கோச்சிங் எதுவுமின்றி]. பேராசிரியர்கள் மகிழ்ந்து பாராட்டினர்.

பலரும் அவனை எஞ்சினீரிங் படி என்றனர். மிகுந்த ஆர்வம் கொண்டான். தந்தையிடம் அதுவரை அதிகம் பேசாத அவன், [வாய் திக்கும் தந்தை கோபிப்பார் என்ற பயம்] எஞ்சினீரிங் படிக்க வேண்டும்    என்று சொல்ல அவரோ கலங்கினார். அக்கம்பக்கத்தில் விசாரித்ததில், "அதற்கெல்லாம் நிறைய பணம் வேண்டும் உன்னால் முடியாதய்யா என்றனர் விவரமறிந்தோர். தந்தையின் நிலை அது.

இவனுக்கோ எஞ்சினீரிங் பயில ஆர்வம். தந்தை என்னால் ஆகாது என்றார் . உச்ச கட்ட கோபம் வந்து வீட்டிலேயே உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கி அதில் 1 வாரம் விடாப்பிடியாக இருந்தான். 7ம் நாள் தந்தை நீ பி.எஸ் சி படி என்றார் இவனோ முடியாது என்று குரங்குப்பிடியாக நின்றான். நீ ஒரு வருடம் பி.எஸ் சி படி  அடுத்த வருடம் பணம் சேர்த்து எஞ்சினீரிங்கில் சேர்த்து விடுகிறேன் என்றார் தந்தை. சரி என்று ஒப்புக்கொண்டு பி.எஸ் சி கணிதம் சேர்ந்தான்.

மிகுந்த ஆர்வம் கொண்டு பயின்றான். ஒரு ஆண்டுக்குப்பின், எஞ்சினீரிங் எண்ணமே தலை தூக்காது தொடர்ந்து கணிதம் பயின்றான் வகுப்பில் முதல் மாணவன் அவனே. பேராசிரியர்கள் அவனை நன்கு ஊக்கு வித்தனர்.

மூன்றாண்டு படிப்பும் முடிந்து மிகச்சிறந்த மதிப்பெண் வாங்கியிருந்தவருக்கு மேலே என்ன படிக்கலாம் என்ற குழப்ப நிலையில் பேராசிரியர் ஒருவர் பி.டெக் பயில அறிவுரைத்தார். பி.டெக் சென்னையில் பின்னர் பெங்களூரில் எம்.டெக் ஆகச்சிறந்த முதல் மாணவனாக பரிமளிக்க இவர் ஏரோநாட்டிக்ஸ் / ஏரோநாட்டிக்கல் எஞ்சினீரிங் பயில ஆர்வம் கொண்டிருந்தார். இங்கும் ஒரு பேராசிரியர் இவரது திறமைகளை இனம் கண்டு, நீ ஸ்பேஸ் சயின்ஸ் தொடர்பான துறையில் சாதனை புரியலாம் என்று என்று அறிவுறுத்த மும்பை யில் ஸ்பேஸ் துறையில் முனைவர் பட்டம் [Ph.D]  பெற்றார்.

திறமை வேறு செல்வம் வேறு, உழைப்புக்கு நிகர் வேறில்லை. மிக அற்புதமாக முன்னேறினான் இந்த கிராமத்து மனிதன்.

தொடரும்

அன்பன்   ராமன்  

4 comments:

  1. இது கிட்டத்தட்ட அப்துல்கலாம் வாழ்க்கை குறிப்பு மாதிரி தெரிகிறது. கதை/கட்டுரையின் நிகழ்வுகள் ஒரு நீரோட்டம் போல் தங்கு தடையின்றி செல்கிறது.

    ReplyDelete
  2. ஐயா மாடபூசி இலக்குமணன் அவர்களே நேரடியாக கருத்தை blog படிவத்திலேயே வெளியிட்டமைக்கு நன்றி .

    ReplyDelete
  3. நான் அப்துல்கலாமையும் அண்ணாமலையையும் நினைத்தேன்
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  4. அன்புடையீர்

    ஒருவர் கலாம் என்கிறார் ; இன்னொருவர் கலாம்+ அண்ணாமலை என்கிறார். ஒன்று புரிகிறது மேலிடம் பிடித்தவர்கள் கடுமையான உழைப்பை முதலீடு செய்தனர் என்று. நன்றி

    ReplyDelete

Of KINGS AND CABBAGES

  Of KINGS AND CABBAGES கோஸ் / முட்டை கோஸ் In response to the previous blog post of mine on “Curry leaf” my revered friend Dr. KANNA...