Tuesday, December 5, 2023

CINE MUSIC SOFT MELODIES

 CINE MUSIC      SOFT MELODIES

மென்மையான பாடல்கள்

ஒரு இசைப்புரட்சியின் துவக்கம் என்று பெயரிடும் அனைத்து கட்டமைப்புககும் தகுதியுடைய சிறப்புகள் கொண்ட படம்  "பாவ மன்னிப்பு". பாவ மன்னிப்பு ஒரு மைல் கல்., ஆம் தமிழ் திரை இசையை "பா  "க்கு முன் "பா " க்கு பின் என்று பிரிக்கலாம். அதாவது பாடல் வடிவம், கவிதை நயம், இசையின் ஆளுமை  கருவிகளின் எண்ணிக்கை, ஒருங்கிணைப்பு என்று தமிழ்த்திரை ப்பாடல்களை மாறுபட்ட புதிய யுகத்துக்குள் அழைத்து வந்த பெருமை கொண்டது. அது இந்த படத்திற்கும், இசை அமைப்பாளர்களுக்கும் மாபெரும் மகுடம் சூட்டி, திரை இசையின் தாக்கம் மிக வலுவானது என்பதை ஐயம் திரிபற பறைசாற்றிய பெட்டகம். பாடல் களை  ரசிக்கவே  கூட்டம் கூடியது என்பதே இசை ஏற்படுத்திய தாக்கம் மற்றும் இசை அமைப்பிற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி, வழங்கிய இசையின் வசீகரமென்று உணர வெகு காலம் ஆகவில்லை. 

அக்காலத்திய ஒரு தகவலின் படி, இந்தப்பாடலை எப்போதோ எழுதி வைத்திருந்தார் கண்ணதாசன். அது  ஏன், எனில் அவரது நண்பருடன், கடலைப்பொட்டலம் வாங்கி தின்றுவிட்டு அந்த காகிதத்தில் இருந்த ஒரு பாடலைக்காட்டிய நண்பர்

 "இது போல் ஒரு பாடலையோ நீ எழுதுவாயா ? என்று கேட்க, அதன் தாக்கமாக விளைந்ததுதான்-- 'அத்தான் என்னத்தான் ' -என்ற பாடல்.  அதற்கு வித்திட்ட பாடல் பசிக்கொடுமையை நொந்து கொண்டு எழுதிய பாடல்                               "    கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான், குடிக்கத்தான் கற்பித்தானா" என்று துவங்கும் . இதை கவிஞர் கண்ணதாசன் அன்றைய முன்னணி இசை அமைப்பாளரர்களிடம் கொடுத்து இசை அமைத்துத்தர கேட்டுக்கொண்டாராம்.. பாடல் சிறப்பை கவிதை உணர்த்துகிறது , ஆனால் எந்த தாள கட்டுக்கும்   அடங்கி வர வில்லை எனவே இசை அமைக்க முடியாது என்று அன்றைய இசை அமைப்பு  தலைகள்  கை விரித்துவிட்டனராம்

இப்படியே அந்தப்பாடல் உறங்கிக்கொண்டிருக்க, ஒரு நாள் கவிஞர் --விஸ்வநாதனிடம்,  "டேய் என்னிடம் ஒரு நல்ல பாடல் இருக்கிறது ஆனால் அது தாளத்திற்கு ஒத்து வரவில்லை என்று எல்லாரும் சொல்லிவிட்டனர் , நீ ட்யூன் போட்டு தாடா என்றாராம். என்ன கவிஞரே வம்பிழுக்கிறீரா? பெரியவர்கள் முடியாது என்று சொன்ன பாடலை நான் மட்டும் என் செய்ய முடியும் , ஆளை விடுங்க என்றாராம் எம் எஸ் வி.

டேய் எனக்கு தெரியும்டா நீ எப்படியாவது ட்யூன் போட்டுருவடா; இது இந்தப்படத்திற்கும் இடத்திற்கும்  பொருத்தமா இருக்குடா -கொஞ்சம் ட்ரை பண்ணுடா என்றாராம் கவிஞர்.

பாடலை வாங்கிப்பார்த்த எம் எஸ் வி, பாடல் மிக மென்மையான நயம் அமைந்தது என்பதாக உணர்ந்து அதற்காக தீவிரமாக யோசித்து கொண்டிருக்க, ஒருநாள் குளித்துக்கொண்டிருந்த எம் எஸ் வி யின் கையிலிருந்த சொம்பு  கீழே நழுவி நீருடன் உருண்டு கணங் கணங் கணங் என ஒலி எழுப்ப அந்த நோட் வரிசையை உடனே ஈரத்துணியுடன் ஓடிவந்து ஹார்மோனியத்தில் வாசித்து டேப்பில் பதிவு செய்து அந்த ஒலிக்கோர்வையை மெருகேற்றி இந்தப்பாடலில் பயன் படுத்தியதாக ஒரு தகவல் அந்நாளில் உலவியது.இதன் உண்மை த்தன்மையை  உறுதி செய்ய வேறு ஆதாரங்கள் இல்லை. எனினும் பாடலில்சில பகுதிகளில் வரும் இசை, இந்த சம்பவம் உண்மையாய் இருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது. மேலும் பாடலின் அமைப்பையும் பாடிய சுசீலாவின் சிறப்பான பங்களிப்பையும் கண்டு தன்னை பறி கொடுத்த இசைக்குயில் லதா மங்கேஷ்கர், AVM நிறுவனத்திரிடம் கேட்டு ஒரு 16MM பிரதியை பெற்றுக்கொண்டதுடன் , இது போன்ற  பாடல்கள் எனக்கு பாட கிடைக்குமானால், நான் மெட்றாஸிலே தங்கி விடுவேன் என்று சொன்னதாக தகவல்.. 

அத்தான் என் அத்தான் [பாவ மன்னிப்பு -1961

இரு நங்கையர் காதல் வயப்பட்டு கிளி யை ஒரு கருவியாக வைத்து சந்தித்து உள்ளுணர்வை பகிர்வதாக காட்சி. வசன உரையுடன் துவங்க, சாவித்ரி பேச அவ்வப்போது தேவிகா வினா எழுப்ப என்று படரும் காட்சி.  கிளியை [சதன்] குரல் எழுப்ப வைத்து துவக்கமே அனாயாசம் 1961ல்.                                                 பாடலை கள த்திற்கு வழுக்கி--- கொண்டுவரும் வயலின்களின் மயக்கும் ஊர்வு-சொல்ல வார்த்தையில்லை 

ஒரே பாடலில் இரு நடிகைகளும் [சாவித்ரி-தேவிகா]  தங்களுக்கான காதலனை எண்ணி மயங்கிக்கொண்டிருப்பது அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது தனி சிறப்பு.

தாள கட்டுக்குள் அடங்கவில்லையா ? என்று சொல்லாமல் சொல்லி தாளத்தை மிகமென்மையான கட்டுக்குள் அடக்கியுள்ளார் எம் எஸ் வி - அதுவே பாடலை மேலும்   மென்மையாக்கி, அக்கார்டியன்ஒலியில் வெளிப்படும் ஒலி தான்சொம்பின் ஒலியோ [0.55 முதல்] என்ன வாசிப்பு.   அது வேறு    அதீத ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. பழைய பாடல்களும் படங்களும் ஏன் ரீங்கரித்துக்கொண்டே இருக்கின்றன? என்போரே, பெண்களின் ஆடைகள் முற்றாக உடலை போர்த்தி இருப்பதுவும், முகம்மட்டுமே தெளிவாக காட்டப்படுவதும், விழி உருட்டல் உதட்டின் முறுவல், சட்டென பளிச்சிட்டு மறையும் நாணம் என அனைத்தையும், சரியான கோணங்களில் செய்யப்பட்டுள்ள பதிவு என அனைத்தும்காரணிகள். பாடல் இன்றளவும் இளமை குன்றாமல் தவழ்வது எம் எஸ் வி இசையின் அக்மார்க் முத்திரை

. கண்டும் கேட்டும் ரசிக்க இணைப்பு

Athan EnnathaanWith Dialogue - YouTube—Savithri –Devika voices prelude to song

https://www.youtube.com/watch?v=J6a8_HC7gz4 aththaan en aththaan

2 பாலிருக்கும் பழமிருக்கும் [ பாவ மன்னிப்பு -1961] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , குரல்கள் பி சுசீலா, எம் எஸ் விஸ்வநாதன்

இதைப்பாடல் என்பதா, காவியம் என்பதா /அமுத கானமா/ கந்தர்வ இசையா/ மனித வடிவில் தேவலோக காட்சியா எப்படி வருணித்தாலும், நமது வர்ணனை ஏழ்மையில் தத்தளிக்கும் என்பதே நிதர்சனம்.

நம்மால் முடியாது என்றுணர்ந்தபின்னும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் குறைய மறுக்கிறதே -என்ன செய்ய?  சரி, முயன்று பார்ப்போம்.                        இந்தப்பாடலுக்கும் கிளி தான் துவக்கப்புள்ளி.  பின்னர் அனைத்துமே காதல் பள்ளி.

கண்ணதாசனுக்கு ஒரு ரசிகர் வட்டம் எப்போதும் "இந்த மனிதன் பெண்ணை வர்ணிப்பதற்கு சற்றும் குறையாமல் பெண் உணர்வுகளை மிகத்துல்யமாக சொற்களில் அள்ளித்தெளிப்பது இந்தக்கவியின் தனிச்சிறப்பு" என்று காலங்காலமாக கூறி வந்திருக்கிறது. அந்த கணிப்பு, --எள்ளளவும் பிழை இல்லாதது என்று, அற்புதமாக இந்தப்பாடலில் விரவிக்கிடைப்பதைக்காணலாம். 

கவி அரசனின் சொல்லாட்சிக்கு வலுசேர்த்த இசையின் நர்த்தனம் இந்தப்பாடலை வேறு களத்திற்கு வெகு எளிதாக உயர்த்தி உள்ளதை என்னென்று விளக்குவது. என் போன்ற இசை ஞானசூன்யங்கள் விஸ்வநாதனை  வியக்கத்தான் முடியும் விளக்க முடியாது.

பாடலுக்கு நான் இணைத்திருக்கும் வசதி கொண்டு வண்ணத்தில்                                        [வண்ணமேற்றப்பட்ட] பதிப்பில் மிகுந்த கவனத்துடன் பாடலை கேளுங்கள். எந்த உயரத்தில் இருந்த தமிழ்ப்பட பாடலும், இசையும் இப்போது இருக்கும் நிலையென்ன என்ற ஆதங்கம்  விலக்க வொண்ணாதது. சிவாஜி கணேசன் தனக்குவமை இல்லா  நடிகன் அவரை விஞ்சவோ வீழ்த்தவோ இன்று வரை      நான் /நாம் அறிந்ததில்லை, ஆனால் அவருக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கும் நங்கை  தேவிகா என்ன சளைத்தவரா. இல்லவே இல்லை பாருங்கள் அவர் கண்களின் சாம்ராஜ்யம் இந்தப்பாடல் முழுவதும . என்ன கண்கள், ஈர்த்திழுக்கும் வசீகரப்பார்வை, அங்குலம் அங்குலமாக சிவாஜியை கண்ணில் உறிஞ்சிய பெண்ணின் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்திய பாவங்கள் , கண்டும் கேட்டும் ரசிக்கலாம் எழுதி மீள முடியாது. 

பாடலில் தத்ரூபமாக சுசீலா தேவிகாவை குரலில் வரித்து மற்றும் வழித்து கொண்டுவந்துள்ளார் என்று உணர்த்துகிறார். அந்தக்காதலின் வலிமையில் வீழ்ந்த நாயகன், ஹம்மிங் என்ற மௌனமொழியில் உணர்வுகளை வழிமொழிந்து ஆமோதிப்பது அன்றைய புதுமை.     காட்சியில் நாயகன் சிவாஜி , பாடலில் நாயகன் இசையிலும் ஹம்மிங் குரலிலும் விஸ்வநாதன் -ஆம் அவர் தான் ஹம்மிங் வழங்கி உள்ளார்   ஆழ்ந்த உணர்வுகளின் வெளிப்பாடு . இறுதியில் எம் எஸ் வி சுசீலா இருவரும் பாட பாடல் நிறைவுறும் தருணத்தில் தேவிகா ஒரு வைரமென திகழ்கிறார் . இவற்றை வேறொரு கோணத்தில் விமரிசகர் சுபஸ்ரீ அவர்கள் QFR பதிவில் தெரிவித்துள்ளார் . அந்த இணைப்பையும் பாருங்கள். தணிக்கை குழுவினரின் ஆதிக்கத்தையும் மீறி  சாதித்த பாடல்.

 நன்கு ரசியுங்கள் . எனது எழுத்தில் பிழை இருப்பின், மன்னிப்பீர். 

https://www.google.com/search?newwindow=1&sca_esv=587361146&sxsrf=AM9HkKmdpqLfT7z8oJTShviS1jJy5sjjUA:1701560260857&q=%E0%A4%AA%E0%A4%BE%E0%A4%B5%E0%A4%BE+%E0%A4%AE%E0%A4%82%E0%A4%A8%E0%A4%BF%E0%A4%AA%E0%A5%8D%E0%A4%AA%E0%A5%82+paalirukkum&stick=H  USE THE COLOURED LINK

https://www.youtube.com/watch?v=UDpSVUaeido QFR

இதை ஒரு தனிப்பதிவாக வெளியிட காரணங்கள், வாசகர்க்கு நன்கு புரியும். மீண்டும்,வேறு பதிப்பில் சந்திப்போம்.

 நன்றி

அன்பன் ராமன் 

2 comments:

  1. குற்றம் என்ன செய்தீர் கொற்றவரே மன்னிப்பு கேட்க?
    இதுபோல பாடல் களை. எங்களுக்கு நினைவு படுத்தியதற்கு நன்றி மன்னவரே.
    கண்ணதாசன. போல் இனி ஒரு கவிஞன் ஜகத்தினில் பிறக்கப்போவதில்லை

    ReplyDelete
  2. சரித்திரம் படைத்த பாடல்கள் பற்றிய எழுத்து அபாரம், ப்ரொபசர். விசுவைப்போல் ஒரு இசையமைப்பாளரும் இனி ஜென்மஜென்மத்துக்கும் பிறக்கப்போவதில்லை. அப்படிப் பிறந்தாலும் அது விசுவின் மறு பிறப்பாகத்தான் இருக்க முடியும்.

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...