COLLECTIVE SURVIVAL- AN INCONGRUITY
கூடிப்பிழைத்தல் -பொருத்தமற்றது
சென்ற பதிவில் கூடிப்பிழைக்கின்றனர் என்று வாதிட்டு விட்டு இப்போது "கூடிப்பிழைத்தல் அரிது " என்று ஏன் மாற்றி பேசுகிறீர் என்றெவரேனும் கேட்டால் எனது விளக்கம் இதுவே.
பல அலுவலக பணிகள்/ தொழிற்சங்க
நிகழ்வுகளில் எவ்வளவு தான் கூடிக்குலாவினாலும் பெரும் பாலும் தத்தம் பணி என்று
வரும்பொழுது அவரவர் தான் செய்ய வேண்டும். ஒரு சில அலுவகப்பணிகளில் கோப்பினை வேறொருவரிடம் கொடுத்து , கருத்துகளைப்பெற்று
அவர் தரும் ஆலோசனை அடிப்படையில் கோப்பினை முடித்துவைக்கலாம்.
அடுத்தவர் ஆலோசனை தேடிப்பெறுவதாக அறியப்பட்டாலே அந்த நபர் வேலைக்கு பொருத்தமற்றவர் என்று விமரிசனம் எழும் . குறிப்பாக ஆசிரியப்பணியில் தனி நபர் தான் வகுப்புகளையும் பாடத்திட்டங்களை யும் கையாள வேண்டிவரும். பாதி செயலில் அவ்வப்போது கருத்தறிந்து வந்து போதிக்க இயலாது.. அவரவர் திறன் அடிப்படையில் அரங்கேறுவதே ஆசிரியப்பணி..
ஆசிரியப்பணியில் கூடிப்பிழைத்தல் என்பது நடவாத செயல். ஆகவே தனி நபர் அறிவும்
திறமையும் களப்படுத்தப் படுவது ஆசிரியப்பணியில் தான் என்றே அறுதியிட்டுக்கூறலாம்.
ஆகவே ஒவ்வொரு ஆசிரியனின்
செயல் திறனும் அவரவர் கல்விநிலையங்களில் பரவலாக தெளிவாக அறியப்பட்ட ஒன்றே.
இதனாலேயே வல்லமை பெற்ற ஆசிரியர்களை பற்றி அனைத்து பயில்வோரும் ரசிப்பது அன்றாட
நிகழ்வு.
சில பழைய சம்பவங்கள்
மனதில் நிழலாடுகின்றன . 1970 களில் ஏன் 2000 களில் கூட சில
குறிப்பிட்ட விரிவுரையாளர்கள் அவர்களது வகுப்புகளில் சண்டமாருதமெனமுழங்குவதை அவ்வழியே செல்லும் மாணவ
மாணவியர் கதவுக்கு வெளியே, ஜன்னல் அருகே
நின்று ரசித்துக்கேட்டு இன்புற்று மனமில்லாமல் அகன்று செல்வது அன்றாட நிகழ்வு.
அவ்வகை லெக்சரர்கள்
கேண்டீன் பக்கம் போனால் கூட வெவ்வேறு துறை சார்ந்த மாணவ/மாணவியர் கூட மிகுந்த
ஆச்சரிய /ஆர்வ / /மரியாதையுடன் பவ்யமாக எழுந்து நின்று தங்களின் உவகையை வெளிப்படுத்தவர். இது
போன்ற சமூக அங்கீகாரங்களால் ஈர்க்கப்பட்டு கல்லூரி ஆசிரியப்பணியை தேர்வு செய்த
இளையோர் அநேகம்.
அந்நாளில் கல்லூரி
ஆசிரியர் சம்பளம் வெகு குறைவு ஆனால் அப்பணியின் கம்பீரம் வெகு அதிகம். அதிலும் மொழிவல்லமை கொண்டோர் ஆசிரியர்களாக
எட்டிய உயரம் , அசாதாரணமானது.
இன்றும் கூட தன்னால்
இயன்ற அளவு கவனம் செலுத்தி கற்பிக்கும் ஆசிரியர்/ ஆசிரியைகள் மாணவ மாணவியர் தம்
நன்மதிப்பைப்பெறுகிறார்கள். ஏனையோர்க்குறித்து
பேசாதிருத்தல் நலம்..
ஆசிரியப்பணி தனி நபர்
திறன் சார்ந்தது.
ஒரு நிறுவனத்தில் அல்லது
ஒரு துறையில் 3, 4 ஆசிரியர்கள் திறமையானவர்கள் என்றே
அறியப்பட்டாலும் ஒவ்வொரு ஆசிரியரும் தனித்தனியே தான் திறமையை
வெளிப்படுத்துகின்றனர். அவ்வாறு செயல் படுவோரில் எந்த இருவரை ஒப்பீடு செய்தாலும்
இருவருக்குமிடையே எண்ணற்ற வேறுபாடுகள் புலப்படுகின்றனவே .
எந்த இருவரும் பேசும்
முறை , சொல்லாட்சி , வேகம்,, நளினம் ,கம்பீரம் மற்றும்
அணுகுமுறை என்று ஒவ்வொன்றிலும் வேறுபட்டு மாறுபட்டு இயங்கினாலும் சிறப்பான
திறமையாளர் என்றே அறியப்படுகின்றனர். ஆகவே, ஆசிரியப்பணி
இந்தப்பாதையில் , இந்த வேகத்தில், இந்த முறையில் தான் பயணிக்க வேண்டும் என்று வரையறைகளோ கட்டுப்பாடுகளோ
இல்லாதது.
எனவே ஒவ்வொரு ஆசிரியரும்
தனக்கு என்று வடிவமைத்து க்கொண்ட செயல்களின் முறைமைகளைக்கொண்டே தனது பங்கை அளிக்கிறார்.
எனவே காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி
என்பது போல் எல்லையில்லா சுதந்திரம்
கொண்டு இயங்குதலே ஆசிரியப்பணி,. கும்மி , கோலாட்டம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு
கூடி இயங்குதல் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத் தர உதவும்; ஆசிரியப் பணி தனி
நபர் பங்களிப்பில் பலருக்கும் உதவுவது இங்கு கூடிப்பிழைத்தல் என்பது போதித்தல்
பணிக்கு உதவாது. .
நன்றி
அன்பன் ராமன்