Tuesday, May 14, 2024

LAZINESS

LAZINESS

சோம்பேறித்தனம்

ஐயோ , இது என்ன விபரீத செயல் குறித்த விளக்கமா,  விவாதமா ; எதுவாயினும் இது எதற்கு என்று தோன்றும். யாரிடம் எது உளதோ இல்லை யோ , இது [சோம்பேறித்தனம்] சிறிதளவேனும் இயல்பாகவே இருக்கும் . 

இது குறித்த எந்த கருத்தும் முதலில் கணக்கில் கொள்ளவேண்டியது "ஏன் " என்ற கேள்வியே .

ஏன் என்ற கேள்விக்கு உந்துதலாக இருப்பது " இப்போது இல்லையாம் " என்ற செவிவழிச்செய்தியே . 

அது என்னவெனில் நாளை ஒருவர் ஊருக்கு போகிறார் அவரது ஆடைகளை துவைத்து இஸ்திரி செய்ய வேண்டும் என்று எத்தனிக்கும் போது , அவர் இன்று ஊருக்குப்போகவில்லை , அது புதனோ வியாழனோ வாம் என்று யாரோ சொல்ல உடனே அப்பாடா என்று ஓய்வெடுக்க கிளம்புவதே சோம்பேறித்தனத்தின் அடையாளம் .

துவங்கிய வேலையை முடித்துவிட்டு நாளை இஸ்திரி செய்து வாங்கிக்கொண்டால் , இந்த வேலை நிறைவேறிவிடும் அல்லவா?. ஆனால் நமது எண்ணம் ஓய்வெடுப்பதில் காட்டும் ஆர்வம் வேலை செய்வதில் இல்லை என்பதே  சோம்பேறித்தனத்தை வளர்க்க உதவும்  அடித்தளம் 

சோம்பேறித்தனத்தின்  சிறப்பு தன்மை யாதெனில் , எந்த வேலையையும் 'தள்ளிப்போட'  தயார் நிலையில் இருத்தல் மற்றும் எந்த ஒரு சிறு வாய்ப்பையும் நழுவ விடாமல் வேலையை தள்ளிப்போடுதல் , இவ்விரண்டையும் மறவாமல் பின்பற்றுதல் என்பதே.

எப்படியும் நாம் தானே செய்யவேண்டும் , அதை இப்போதே செய்துவிடுவோம் என்று முனைப்புடன் இயங்குதல் சோம்பேறித்தனத்திற்கு எதிரானது.

அப்பாடா இன்றைக்கு இல்லை நாளைக்கு தானே , பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற போக்கே மனம் தளர்ந்து கிடப்பதன் வெளிப்பாடு / அடையாளம்.

மனத்தளர்ச்சி ஏன் ?

பாராட்டு கிடைக்காத எந்த செயலுக்கும் , ஈடுபாடும் நாட்டமும் அந்நியப்பட்டுக்கிடப்பதன் வாயிலாக சோம்பேறித்தனத்தை ஊட்டி வளர்த்து  , வெகுவாக அவற்றை ஊக்குவிப்பன. 

ஒரு சில பணிகளில் இறங்கினாலே பெரும் நேரவிரயம்/பண விரயம் இரண்டையும் எதிர்கொள்ள வேண்டி வரலாம். 

  அத்தகைய பணிகளில் நாட்டம் கொள்ள இயலாமல் அவற்றை தள்ளிப்போடுதல் இயற்கை தானே. ஏனெனில் அது போன்ற செயல்களில் நாம் செலவு செய்துவிட்டு , பின்னர் உரிய ஆவணங்களை தாக்கீது செய்து,  நமக்கு சேர வேண்டிய தொகையை பெற்றுக்கொள்ளுதல் என்பது பலநாள் போராட்டம் என்பதாக அமையக்கூடும்

எனவே நமது பொருளாதாரத்தில் விழும் தொய்வினை  எதிர்கொள்ள மனமில்லாமல், அந்த செயலையே புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். 

ஒரு சில செலவினங்களுக்கு கணக்கு காட்டுதல் எளிதன்று.. குறிப்பாக , வாகன வகை பயணங்களுக்கு பில் /வவுச்சர் [VOUCHER] பெறுவது கடினமான செயல்.. எனவே அவ்வகைப்பணிகள் தள்ளிப்போடப்படுதல் இயல்பாக இயங்குவதுதான்..

ஆமாம் இப்போது இதைச்செய்துவிட்டு பணம் வர 7 , 8 மாத காலம் காத்திருக்க வேண்டுமா ? என்ற கேள்விக்கு நியாயமான விடை யாரால் எளிதில் சொல்ல இயலும்

இது போன்ற அலுவலக நடைமுறைகள் சோர்வையும் மன தளர்ச்சியையும்    வேரூன்ற ச்செய்துவிட, ஊழியர்கள் குறித்து விமர்சனம் செய்தல் சரி அல்ல. 

இந்த மன நிலை சிறுவயதிலேயே துவங்கி விடுகிறது. ஆம் வரும் வெள்ளிக்கிழமை டெஸ்ட் என்று ஆசிரியர் அறிவித்து விட்டு பின்னர் டெஸ்ட் அடுத்த வாரம் தான் என்று மறு  அறிவிப்பு செய்ததும் , படிப்பதையே பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றல்லவா நினைக்கிறோம்

ஆஹா இன்னும் அதிக நாட்கள் நிதானமாக படிக்கலாம் என்பதற்கு பதிலாக அடுத்தவாரம் பார்த்துக்கொள்ளலாம் என்று தான் சோம்பேறித்தனம் நம்மை ஆட்கொள்கிறது.

தமிழில் "வாளாதிருத்தல்" என்ற சொல் உண்டு. அதுதான் எதையும் செய்யாதிருத்தல் -அது தனி சுகமல்லவா ? அந்த சுகம் தரவல்ல ஒரே உத்தி சோம்பேறித்தனம் மட்டுமே..

அது யாரும் சொல்லாமல் பின் தொடரும் நிழல் போல்  நம்மைத்தொடர்வது. அதற்கென்றே இத்திருநாட்டில்  எண்ணற்ற விடுமுறைநாட்கள் சோம்பேறித்தனத்தினை நெய் ஊற்றி வளர்க்கும் பணியை செவ்வனே செய்கின்றன.   

  நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...