Tuesday, June 11, 2024

FRAUDULENT GUYS-3

 FRAUDULENT GUYS-3    

ஏமாற்றுப்பேர்வழிகள் -3

மனோ தத்துவம் பயிலாமலேயே அதன் செயல் நுணுக்கங்களை நேர்த்தியாக பயன் படுத்தும் நுட்பம் அறிந்தவர்கள் ஏமாற்றுப்பேர்வழிகள்.

எந்த நிலையிலும் பதற்றமோ, குழப்பமோ இன்றி பேசும் கலை அறிந்தவர்கள். இதன் வலுவான ஆதாரம் எது எனில் அரசியல் பேர்வழிகளைப்பாருங்கள் , எதையும் துடைத்து விட்டுப்போகும் மனம் கொண்டவர்கள். ஆனால் நீதி மன்றமோ எந்த அமைப்போ என்ன கண்டனம் சொன்னாலும் , வெவ்வேறு வடிவங்களில் ஊழலும், கூழைக்கும்பிடும் அவர்களின் பிழைக்கும் உத்திகள். தொடர்ந்து ஏமாற்றுவதை மறவாமல் செய்யும் மாபெரும் ஆளுமைகள்.

பிற அளவுகளில் ஏமாற்றுபவர்கள் நம்முடன் அன்றாடம் பயணிப்பவர்கள். தெருவில், பேருந்து நிறுத்தத்தில் , கூட்டம் கூடும் கோயில் வளாகங்களில் , இந்நாளில் மால் எனும் பெரும் வியாபார கட்டிடங்களில் என்று எங்கும் உலவும் நபர்கள் இந்த ஏமாற்றுப்பேர்வழிகள் 

.ஏமாந்துகொண்டே இருப்போ மே  தவிர அவர்களை இனம் காண இன்னின்ன அடையாளங்கள் என்று நாம்  யோசிப்பதில்லை. அவர்களில் சில வகையினரை இப்போது பார்ப்போம்.

நான் ஒரு வகையினரை அறிவேன். இவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் உலவுவர்.

பரபரப்பான காய்கறி மார்க்கெட் சந்தை அல்லது கோயில் உற்சவங்களில் வீதி உலா நேரங்களில் இவர்கள் வெகு எளிதில் கூட்டத்தில் புகுந்து செயல்படுவார்கள்

ஆனால் திருட மாட்டார்கள்.

இவர்கள் வேறு வகை நாடக பாணியை கையில் எடுப்பார்கள். ஒருவரை பார்த்ததும் அவர் இன்ன சமுதாயத்தை சேர்ந்தவர் என்று துல்லியமாக புரிந்து கொண்டு அதற்குரிய மொழிக்குறியீடுகளை சிறப்பாக கையாள்வர்

உதாரணத்திற்கு சில ; களம் : மதுரை

சிக்கியவன் பிராமணன் எனில்

அண்ணா !! !! என்ன பாக்காமயே போறேள் ? நாந்தான்னா [அல்லது நான்தான் அண்ணா ] என்று தனது பெயரை சொல்லாமலேயே பேசிக்கொண்டே கூடவே வருவான் . நேத்து மத்தியானம் சாப்பிட்டது அப்புறம் சாப்பிடல 2 இட்லி சாப்பிட்டா கூ போதும் என்று கையை நீட்டுவான். சந்தேகக்கண் கொண்டு நீங்கள் பார்த்தால்

என்னண்ணா --நீங்க எஸ் எஸ் காலனி தானே ?

இல்லை இல்லை

சாரி நான் தான் தப்பா  சொல்றேன் -டீவீ எஸ் நகர் தானே -நான் உங்காத்துக்கு வந்துருக்கேன் என்று கூசாமல் புளுகுவான்..

நீங்கள் Rs10/- தந்ததும் சாப்பிட்டு விட்டுட்டு வரேன் அண்ணா என்று ஓடுவான்.

அதைவிட வேகமாக ஓடவேண்டும்  என்றால் நாம் சொல்லவேண்டியது

என்னோடு வா --இட்டிலி வாங்கி தருகிறேன்

ஒரே வினாடியில் சிட்டாய் பறப்பான். அவனுக்கு தேவை பீடியோ/சிகரெட்டோ /பாட்டிலோ .அதைச்சொன்னால் யாரும் காசு தரமாட்டார்கள் . எனவே பசி என நாடகம்

இதற்கு ஏற்ப நெற்றியில் விபூதி குங்குமம் . இந்த விபூதி குங்குமம் ஒரு சர்வ சமுதாய கேடயம். 

 செட்டியார் , ஐயர் , முதலியார் ,நாடார் எவராயினும் இந்த வேஷம் பயன் படும்  அவர்களுக்கேற்ற மொழியை அவிழ்த்து விடுவான் .

சிக்கியவர் செட்டியார் எனில்

எப்ப வந்தீய ?

எங்கேருந்து ?

அம்மளுக்கு காரைக்குடி தேன் , என்னப்பு இப்பிடி மறந்துட்டீய , கதிரேசன் நல்லாருக்கானா ?

கதிரேசனா ?

அதாங்க சோனா மானா

ஆங் நல்லாருக்கியன்                அவன எப்பிடி ?

நான் கல்லுக்கட்டிங்க ,

சரித்தேன்  

இப்போது பசி நாடகம் .

வாங்க போவோம் இப்ப சோனா மானா  ஊட்டுக்குதேன் போய்க்கிட்ருக்கியன் என்றதும் சிதறி ஓடுவான்.

இதுபோல அன்றாடம் 3, 4 பேர் ஏமாற 40 ரூபாய் வரை தேத்திவிடுவான் .

இன்னொரு வகை

அம்மா இந்த சைக்கிளை வெச்சுக்கிட்டு ஒரு 200/-ரூவா தாங்க ; என் பொண்டாட்டிக்கு இடுப்பு வலி வந்திருச்சாம், இப்பத்தான் போன் வந்துச்சு என்பான். போய் ஆட்டோவுல ஆசுபத்திரிக்கு போவணும் , நாளைக்கு 200/- ரூவாயை தந்துட்டு சைக்கிளை எடுத்துக்குறேன் என்பான். மனம் இறங்கிய மாமியிடம்  200/-வாங்கியவன் போனவன் போனாண்டி தான்.

ஏன் என்றல், யார் வீட்டிலோ திருடிய சைக்கிள் அது.

பிறிதொரு வகை

அம்மா வெண்ணை கொண்டாந்திருக்கேன் என்று அழைப்பான்.

வெண்ணை எல்லாம் வேண்டாம் , நேத்திக்கு தான் நெய் வாங்கி இருக்கு .

இல்ல --சார் தான் வெண்ணை குடுக்க சொன்னாரு.

எந்த சார்

உங்கவீட்டு சார் தான்

எங்க வீட்டு சாரா ?

ஆமாங்க காலேஜுல தானே வேல பாக்குறாரு உங்க சார் என்பான்.

ஆமாம்

-அவரைத்தான் சொல்றேன் நானும், என்பான் வந்தவன்.

சரிம்மா நான் அவரை காலேஜுல பாத்து கேட்டுக்கறேன் .காலேஜுல எங்க போனா பாக்கலாம்

மாமி- பயோடெக்னாலஜி டிபாட்மென்ட்.

அதுனா எனக்கு வாயில நுளையாது . கோவிச்சுக்காம ஒரு சீட்டுல  சார் பேரு, டிப்பாட்மென்ட்  எளுதிக்குடுங்க என்று எழுதி  வாங்கிக்கொண்டு கிளம்புவான் .

குறிப்பிட்ட விலாசத்தில் போய் சார் 2 கிலோ துவரம் பருப்பு கொடுத்திருக்கேன் சார் .

எங்கே

உங்க வீட்டுல தான் சார் . 300/- ரூவா உங்க கிட்ட வாங்கிக்க சொன்னாங்க.

யாரு

உங்க வீட்டுக்காரம்மா தான் .

இதோ பாருங்க, அம்மா வே உங்க அட்ரஸ் எளுதி கொடுத்திருக்காங்க.

மனைவியின் கை எழுத்துதான் என்று தெரிந்ததும் கையில் இல்லாவிட்டாலும் இரண்டொருவரிடம் திரட்டி கொடுத்து விடுவார் அந்த ஆசிரியர்.

இது போல சிறப்பாக ஏமாற்றுவர்.

 வீட்டில் வெண்ணை என்றான் இப்போது துவரம் பருப்பு என்கிறான்.

ஏன்? -- நெய் வாங்கியாயிற்று என்று, மாமி சொல்லிவிட்டார். எனவே --வெண்ணை விற்க முடியாது.

துவரம் பருப்பு என்று ஏமாற்றி பணம் வாங்கிவிட்டான் .

வளரும்

அன்பன் ராமன் 

No comments:

Post a Comment

SALEM SUNDARI -26

SALEM SUNDARI -26 சேலம் சுந்தரி -26 மாலை 5.05 மெல்ல அலுவல் முடிந்து கீழிறங்கி முன் வாயில் வழியே சுந்தரி   வெளியேறி ராமசாமி - ம...