TEACHER IMAGE- AN ENDOWMENT-4
ஆசிரியர் பிம்பம்-- ஒரு மூலதனம் [சொத்து]-4
மீண்டும் சொல்கிறேன் , ஆசிரிய பிம்பம் என்பது ஆசிரியன் தன்னைப்பற்றி தானே பெருமைகொள்ளும் கற்பனை வடிவம் அல்ல. மாறாக அவரது சீடர்கள் [ஆணோ/ பெண்ணோ] தனித்தோ /கூட்டாகவோ அவ்வாசிரியர் குறித்த கிட்டத்தட்ட பகிரும் ஒருமித்த மதிப்பீடே உண்மையான "ஆசிரிய பிம்பம்" . இதைப்புரிந்து கொண்டால் மற்றும் இதற்கு முக்கியத்துவம் தர எண்ணும் எந்த ஆசிரியரும் தனது பிம்பம் எப்படி அமைய வேண்டும் என்பதை எளிதில் உணர்ந்து அதன் முக்கிய அங்கங்கள் எதிலும் குறைபாடு இன்றி தன்னை அமைத்துக்கொள்வார் .அவ்வங்கங்களில், 3 ம் புறக்கணிக்க வொண்ணாதது
1 பயிற்று வித்தல் சார்ந்த அறிவும் ஆற்றலும் [Knowledge Ensemble and Dissemination]
2 வகுப்பறை சார்ந்த அணுகுமுறைகள் [ Performance -strategies ]
3 தனி மனித செயல்கள் [Personal profile/ Social image ]
இவற்றில் முதல் அங்கம் குறித்து பலமுறை விரிவாக பேசி இருக்கிறோம்.
2 வது அங்கம் ஆசிரியர் உண்மையிலேயே எப்படி செயல் படுகிறார் என்ற கழுகுப்பார்வை எப்போதும் அவர்மீது படர்வதை ஒவ்வொரு ஆசிரியரும் [தன் பெயர் என்ன என்பதுபோல ] மனதில் கொள்ளவேண்டும்.
இதன் ஒரு வேடிக்கை விளக்கமாக பல புகழ்பெற்ற ஆசிரியர்கள் குறிப்பிடுவது யாதெனில் "என்னய்யா பெரிய ஆசிரியர் பிழைப்பு , ஒரு அவசரத்துக்கூட மரத்திற்குப்பின்னால் சிறுநீர்கழிக்க முடியாது" வேறு யாருக்காவது இந்த தண்டனை உண்டா? .
அதன் பொருள் யாதெனில் எவ்வளவு நியாயம் நம் செயலில் இருந்தாலும் அதை செயல் படுத்தும் சுதந்திரம் சமுதாய அளவுகோல்கள் விதிகளுக்கு கட்டுப்பட்டவையே என்பது தான்.
இதே கட்டுப்பாடு சில திரையரங்குகளுக்கு போவதற்கு கூட அனுசரிக்கப்படுகிறது. நீ ஏதோ கற்பனையாக சொல்கிறாய் என்று நினைப்போர் நன்கு சிந்தியுங்கள் . பொது வெளியில் வேறு பலருக்கும் வாய்க்கும் உரிமை ஆசிரியருக்கு அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. அவரின் செயல் பாடுகள் அனைத்தும் ஒழுக்கம் என்னும் அளவுகோலின் வழியே ஏற்புடையதாக அமைதல் வேண்டும்..
பிறர்போல், கொச்சை மொழி பேசுதல், உச்ச நிலை கோபத்தில் கூட தகாத சொற்கள் பேசுதல் முற்றாக தவிர்த்து பேசும் செயல் முறையை கடைப்பிடிக்க வேண்டும்.
ஒரு நகைச்சுவைக்குக்கூட வாய் தவறி 'கெ ட்ட' வார்த்தைகள் உதிர்தல் மிகவும் கடுமையாக விமரிசிக்கப்படும். . மேலும் இதனால் ஆசிரியர் இந்த பணிக்கு தகுதி அற்றவர் என்னும் நிலைக்கு அவமானம் கொள்ள வேண்டி வரும் .
இக்காலத்தில் +2 /அதற்கு மேல் உள்ள படிநிலைகளில், இருபாலர் பயில்கின்றனர் .ஆகவே ஆசிரியர் மிகுந்த எச்சகரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டியுள்ளது.
1971 ல் நடந்த, ஒரு கோடைபயிற்சி பள்ளி நினைவுக்கு வருகிறது.
ஒரு பேராசிரியர் பெனாரஸ் பல்கலை யில் இருந்து [BIO-CHEMISTRY] சிறப்பு பயிற்சி- ஆளராக வந்திருந்தார்.
முதல் வகுப்பில் நுழைந்தவர் அதிர்ச்சி உற்றவர் போல் பயிற்சி பட்டறையில் இடது பகுதியில் இருந்த அனைத்து பெண் ஆசிரியைகளையும் , வலது பகுதிக்கு மாறி அமரவும் ஆண் ஆசிரியர்கள் இடது பகுதிக்கு மாறி அமரவும் கேட்டுக்கொண்டார்.
ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மிகுந்த தயக்கத்துடன் சொன்னார் " ஒரு விபத்தின் காரணமாக எனது இடது கண் இமை அவ்வப்போது துடித்து மூடும் . அது பெண்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தும் இதனால் நான் சொல்வதை கவனிக்காமல் என் மீது வெறுப்பு கொள்வர்.
இந்த விமரிசனம் ஆண் /பெண் என்றே துவங்கும். எனவே இடது பகுதியில் ஆண்கள் இருந்தால் தவறாக நினைக்க தோன்றாது. இறைவன் கருணையால் எனது வலது கண்ணில் இந்த நிலை இல்லை , நான் பிழைத்தேன் என்றார். அப்போது என் வயது 24+ , அதே போல் அந்த பயிற்சி வகுப்பில் அநேக பெண்களும் இளம் வயதினர் எனவே பேராசிரியர் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்து கொண்டு வகுப்பை நடத்தினார்.
இதை ஏன் சொல்கிறேன் எனில், இருபாலர் தொடர்பான செயல்பாடுகளில் ஆண்கள் மிகுந்த தற்காப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டியுள்ளது.
அவ்வப்போது பயில வரும் பெண்கள் இன்னல்களுக்கு ஆட்படுவது கேட்கவே வேதனை தருகிறது. ஏனெனில் பயில்வோர் /பயிலவருவோர் நம் குழந்தைகள் ; எனவே மிகுந்த மனக்கட்டுப்பாடு ஒன்று தான் ஆசிரியர் பிம்பம் காக்கவும் சமூக அங்கீகாரம் பெறவும் உதவிடும் .
சந்தர்ப்ப சூழல்களால் அவப்பெயர் ஏற்பட்டுவிட்டால் தொடர்ந்தும் அவ்வாசிரியர் ஒருவித சந்தேக ப்பார்வைக்குள்ளாவார் என்பது என்ன கொடுமை?.
எனவே தான் ஆசிரிய பிம்பம் சந்தேகத்தின் நிழல் கூட பாதிக்காத அளவிற்கு மிக வலுவானதாக கட்டமைக்கப்பட்ட வேண்டும் . இதை நான் மீண்டும் மீண்டும் சொல்வதானால் சிலருக்கு என் மீது வருத்தம், ஏன் கோபம் கூட எழலாம்; ஆனால் என் கருத்தின் வலிமை தொழில்சார்ந்த . தேவைகளுக்கு மிகப்பெரிய அரண் என உணர்ந்தால் மரியாதைக்குரிய ஆசிரியர் என்ற சமூக அங்கீகாரம் நம்மைத்தேடி வரும் . இன்னும் வெவ்வேறு முன்னேற்பாடுகள் செய்துகொள்ள ஆசிரியரின் முழு கவனமும் சிறப்பான பணி நோக்கியே பயணிக்கும் .சிந்திப்போம்
நன்றி
அன்பன் ராமன் .
No comments:
Post a Comment