Wednesday, August 21, 2024

PICKING UP OTHER LANGUAGES

 PICKING UP   OTHER LANGUAGES

பிற மொழிகளை அறிதல்

பல மொழிகள் உலவும் நாடுகளில்வசிப்போருக்கு, வெவ்வேறு மொழிகள் அறிதல் இயற்கையான வாய்ப்பு ஆகும்.

ஆனால் பலர் இதை ஒரு வாய்ப்பாகவோ, முன்னேற ஒரு வழியாகவோ நினைப்பதில்லை. ஆனால், காலத்தின் தேவையாக எவ்வளவு உயர்கல்வி பெற்று பதவி வகித்தாலும் ஒரு சூழலில் நமது கல்வியின் விளைவாகவே ஒரு வேற்று மொழி கிராமத்தில் பணிபுரிய நேரிடும். உதாரணமாக ஒரு ஸ்பேஸ் டெக்னாலஜி  திட்டத்தில் உயர் பதவி வகிப்பவர் விரிவாக்ககப்பணிக்காக ஆந்திரத்திலோ, கேரளத்திலோ, ஒரிசாவிலோ , குஜராத்திலோ கடலோர கிராமத்தில் ஏவுகணை தளம் அல்லது  சாட்டலைட் ஏவும் நிலையம் அல்லது ஏதோ மரைன் ஸீஸ்மாலஜி போன்ற உயர் தொழில் நுட்ப ஆராய்ச்சிநிலையம் கட்டமைக்க அல்லது இதை போன்ற புதுவகை நிலையங்கள் அமைக்க மனித நடமாட்டம் குறைவான பகுதிகளில் ஒரு 4 -5 பேராக இருந்து செயல் பட நேரிடும்.

அங்கிருக்கும் கிராமவாசி, ஆங்கிலமோ வேறு மொழியோ அறியாதவர். அவர்தான், உங்களுக்கு உதவி செய்யக்கூடியவர். அவரோடு உரையாட அவர் மொழியின் முக்கிய சொற்களையாவது விரைவாக தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையெனில்,  தென் தமிழ்நாட்டின் இளைஞன் போல 10 நாட்களில் அங்கு சாப்பாடு சரியில்லை அல்லது  [இவனுக்கு அங்கு வாழ மொழி தெரியவில்லை என்பதை மறந்து அல்லது மறைத்து] அங்கு யாருக்கும் தமிழ் தெரியவில்லை என்று சொல்லிவிட்டு வேலையை துறந்து  உள்ளூரில் மளிகைக்கடையில் பிழைப்பு நடத்தவேண்டிவரும்..

தாய் மொழியை நேசிக்கும் அதே வேளையில், பிற மொழிகளை கற்க முயன்றால் வாய்ப்புகள் அதிகரிக்கும். மொழிகள்- பலவிதமான வாழ்முறைகளை மறைமுகமாக கற்பிக்கும்   ஆற்றல் பெற்றவை.

நமக்குத்தெரியாதவற்றை விமரிசனம் செய்வது அறியாமையின் வெளிப்பாடு.

இப்போதெல்லாம் மொழிகளை அறிமுகம் செய்ய பல புத்தகங்கள் வந்துவிட்டன. .அவை எழுதப்படிக்க பேச கற்றுத்தருவன . ஆனால் முறையான உச்சரிப்பு அந்தந்த பகுதிகளில் சாதாரண மக்களோடு பழகி, பேசினால் தான் கற்க முடியும். குறைந்த பட்ச பேச்சைத்துவங்க, சில சொற்களையேனும் புத்தக உதவியால் அறிந்து கொள்ளுதல் பெரும் உதவி புரியும் .

சரி, ஆனால் , எந்த மொழியையும் சொல்லாடல் மரபில் அறிய உள்ளூர் மக்கள், குறிப்பாக மளிகைக்கடை, பூ  வியாபாரிகள், வண்டி ஓட்டுவோர் போன்றோர் பேசும் சொற்களை ஆழ்ந்து கவனிக்க , எந்த சூழலில் என்ன சொல்கிறார்கள் என்று ஒவ்வொரு முறையும் முயன்று புரிந்து கொண்டால் விரைவாக சொல்லாடல் தெளிவாகும் .

பிற மொழிகளில் உள்ள வட்டாரவழக்குகளை நம்மால் இனம் காணுதல் இயலாத ஒன்று.  அப்படியே நாம்  மொழி அறிந்தாலும் குறிப்பிட்ட வட்டார முறையில்மட்டுமே  நம்மால் உரையாட முடியும்.

அப்படி நாம் பேசினாலும் பிற வட்டாரத்தினர் நம்மை 'அந்த' வட்டாரத்தினர் போலும் என்று எண்ணுவர். ஒரு போதும் வேற்று மொழி மனிதர் என்பதாக அடையாளப்படுத்த மாட்டார்கள்.

அதனால் என்ன? என்று நினைப்போர், நமக்கு வரக்கூடிய ஆபத்து என்ன என்பதை புரிந்து கொள்ளவில்லை என்பது முக்கியமான ஒன்று. திடீரென்று நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகள் வெடிக்கும்போது, குறிப்பிட்டமொழிபேசும் மக்கள் தாக்கப்படுவதும், சொத்து சூறையாடப்படுவதும், பொது இடங்களில் உள்ளூர் மொழியில் கோஷம்போட சொல்லி சுற்றி வளைத்துக்கொண்டு மிரட்டுவர்.

நாம் ஏதாவது தவறாக கோஷம் போட , சிக்கல் அதிகரிக்கும். நாமும் உள்ளூர் மக்களுடன் இயல்பாக அவர்கள் முறையில்  உரையாடி .பழகிக்கொண்டால் நம்மை, "பிறர்" என்றெண்ணாமல், நமக்கு ஆதரவாக இருப்பர்,- குறிப்பாக மொழிப்பிரச்னை காலங்களில்.

இவை தவிர எங்குசென்றாலும் ஒரு வித தயக்கத்துடனே முணுமுணு த்து [நாம் சொல்வது சரியா என்ற குழப்பத்துடன்] எதையோ ஒப்பேற்றுவதை விட , தெம்பாக பேசுவது எவ்வளவு அங்கீகாரம் பெற்றுத்தரும்?

ஏன் பயந்து நடுங்கி முணுமுணுத்து பிறர் நம் மீது சந்தேகப்பார்வை வைக்க இடம் கொடுக்க வேண்டும்?

அவரவர்க்கு தாய்மொழி உயர்வுதான் , அதனால் பெரும் பெருமைகொண்டு      பழமையானது எனது மொழிதான் என்று வீரவசனம் பேச , வேண்டாத வெறுப்பும், கசப்பும் வேரூன்றி நல்ல நட்புகளை இழக்க நேரிடும். எனவே மொழியறிதல், ஒவ்வொருவருக்கும் ஏதோ வகையில் உதவியும் பாதுகாப்பும் கிடைக்க வழி செய்யும்.

ஆகவே மொழி அறிதல், மனித மேம்பாட்டுக்கு இயல்பாகவே உறுதுணை ஆகும் .

அன்பன் ராமன்

2 comments:

MAKE LEARNING –A PLEASURE -4

   MAKE LEARNING –A PLEASURE -4 Any special activity like sewing, painting, acting, driving, carpentry turns pleasurable if the learner enjo...