TEACHER BEYOND YOUR IMAGE- 11
ஆசிரியர்- உங்கள் பிம்பத்தை தாண்டி-11
ஒரு ஆசிரியர் பல ஆதாரங்களில் இருந்து சொந்த முயற்சியில் தொகுத்த விவரங்கள் மிகவும் தெளிவாகவும் -ஒரு வித உரிமையுடைய பொருளாகவும் [rightful authorship] மதிப்பு பெறும்; மேலும் புதிய தகவல்கள் உரிய இடங்களில் இணைத்து மென் மேலும் மெருகேற்ற
up-dated அந்தஸ்து அடையும். இதனால், ஆசிரியர் தெளிவுடன் பாடப்பகுதிகளை அணுகுதல் எளிதாகும். பயில்வோர்- அதுபோன்ற ஆசிரியர்களின் வகுப்புகளை வெகுவாக ரசித்து எதிர்நோக்குவர். எனவே அந்த நீண்ட தொகுப்பை பல முறை படித்து வர எண்ணமும் விவாதிக்கும் திறனும் வலுப்பெற்று எப்போதுவேண்டுமானாலும் ஆசிரியர் களம் காண தயார் நிலையில் இருக்கும் மனோதைரியம் அதிகரிக்கும். இவ்வனைத்தும் வீட்டில்/அறையில் தன்னை கட்டமைத்துக்கொள்ள உதவும்.
வகுப்பறைக்கு, சிறு குறிப்பு கையில் இருந்தால் போதும்.
சிறு குறிப்பு வெறும் நினைவூட்டுக்கருவியாக அனைவரிடமும் அங்கீகாரம் பெறும். புத்தகங்களும் நெடிய கட்டுரை தாங்கிய நூல்களும், வகுப்பறைக்கு சுமந்து செல்லுதல், ஆசிரியருக்கு புரிதல் குறைவு என்ற விமரிசனத்துக்கு வித்திடும். எனவே, வகுப்புகளுக்கு சிறு குறிப்புகள் போதும்.
செயல் முறை
வகுப்பு துவங்குமுன், கரும்பலகையில் உங்களது சிறுகுறிப்பில் உள்ள தலைப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக ஒரு ஓரத்தில் எழுதி , பயில்வோரை குறித்துக்கொள்ள சொல்லுங்கள்.
இது ரெடி ரெக்கனர் [READY
RECKONER] போன்றது.
ஒவ்வொரு தலைப்பையும் விரிவாக விளக்கி பேசும்போது பயில்வோர் குறித்துக்கொள்ளட்டும்.இந்த முறையில் நீங்கள் இயங்கும் போது, நோட்டைப்பார்த்து படிக்கிறார் என்ற விமரிசனம் எழாது. எதையும் மறந்துவிடும் அபாயமோ அவலமோ இல்லை, ஏனெனில் கரும்பலகை குறிப்பு அவ்வப்போது நினைவூட்ட நீங்கள் பேசிக்கொண்டே கருத்துகளை பதிவிட , பயில்வோர் மிகுந்த கவனம் கொண்டு கற்பர்.
ஒவ்வொரு சிறுகுறிப்பு நிறைவானதும் அதில் டிக் செய்து, முடிந்தவை யாவை என்று பட்டியலிடப்படுவதும் நிகழும். இந்த அணுகுமுறை மாணவர்களை -ஒரு பாடப்பகுதியை எவ்வாறு அணுக வேண்டும் என்ற செயல் முறையை உணர்த்திக்கொண்டே வரும்.
அதாவது ஆர்வம் மிகுந்த பயில்வோர் தங்களை அறியாமல் ஆசிரியப்பணிக்கான சரியான அணுகுமுறைகளை மெல்ல உள்வாங்குவர். பின்னாளில் ஆசிரியப்பணியில் அவர்களால் வெகுவாக சோபிக்க இயலும்.
மேலும் சில செயல் முறைகள்
சிறப்பான அணுகுமுறைகளை வகுத்துக்கொண்ட ஆசிரியர், செயல்படுவதிலும் காட்டும் முனைப்பே அவரின் ஆசிரிய ஆளுமையை வெளிப்படுத்தும்.. செயல் படுவதில் தொய்வு விழுந்தால் , நீங்கள் எவ்வளவு ஆழ்ந்து அறிந்துவைத்திருப்பினும் எவருக்கும் நன்மை பயக்காது.
உண்மை யாதெனில் செயல்பாடு தான் ஒருவரின் ஆழ்ந்த புரிதலுக்கு சாட்சியம் . எனவே நன்கு தயாரித்த உணவை முறையாக பரிமாறுவதற்கு ஒப்பானது தான் பயின்றதை பயில்விப்பதும்.. இவ்விரு நிலைகளிலும்[ பயிலுதல்/ பயிற்றுவித்தல்] சுணக்கம் ஏற்படின் அனைத்து முன்னெடுப்புகளும் வீண் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுதல் நலம் .
வகுப்பறை செயல் நுணுக்கங்கள்
1 ஒவ்வொரு வகுப்பிலும் முந்தைய பகுதியை 1 நிமிடம் நினைவுபடுத்தி [recapping] மேற்கொண்டு முன்னேற , பயில்வோருக்கு எளிதில் பின்பற்றுதல் ஏதுவாகும் . அதே போல வகுப்பு முடியும் தருவாயில் அன்றைய பகுதியை விரைவாக தொகுத்து சொல்ல [summing up ] அன்றாடம் ரிவிஷன் போல மீண்டும் ஒரு திருப்புதல் நடைபெறும் . இந்த RECAP , SUMMING UP இரண்டும் சற்று வேகமாக பேசப்படவேண்டும், ஏனெனில் அவை புரிந்துகொள்வதற்கு அல்ல, நினைவுபடுத்த மாத்திரமே.இது தேர்ந்த ஆசிரியனின் அணுகுமுறை ;அதை ஈடேற்றும் போது ஆசிரியர் அடுத்தடுத்து நினைவூட்டல் செய்கிறார் எனவே பலமுறை கேட்டுக்கேட்டு கருத்துகளை உள்வாங்குதல் பயில்வோருக்கு எளிதாகும்.
2 எந்தப்பொருளையும் , முதல் முறை சொல்லும் போது . நிதானமாக சொல்லுங்கள் .சொல்லும்போது அனைவரையுமொரு பார்வை பாருங்கள் . சிலர் பேசிக்கொண்டிருப்பார். அது நிகழ்ந்தால் , பேச்சை நிறுத்தாமல், பேசிக்கொண்டிருப்பவரையே பார்த்து 1 நிமிடம் விடாமல் பேசுங்கள். [ஏனையோர் ஏதோ விபரீதம் நிகழப்போகிறதென்று புரிந்து கொள்வர் ] சட்டென்று நீங்கள் பேசுவதை நிறுத்திவிட்டு, இதுவரை தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தவன் ஒருவனை, எழுந்து நிற்கச்சொல்லி இதுவரை என்ன சொன்னேன் ஒரு 10 பாயிண்ட் சொல் என்று அதிருங்கள். நீங்கள் சொன்னது 2 பாயிண்டே ஆனாலும் 10 பாயிண்ட் சொல் என்று மிரட்டினால் , நாம் பல தகவல்களை கவனிக்கவில்லை என்று சஞ்சலம் கொள்வான். நாளை அனைத்தையும் எழுதிக்கொண்டு வா என்று தண்டனையாக சொல்லுங்கள்.இது போல் இரண்டொருவரை தண்டி த்தால் , யாரும் வகுப்பு நேரத்தில் பேச மாட்டார்கள்.
3, சொல்லித்தரும் பகுதியில் வரும் முக்கிய சொற்களை கரும்பலகையில் தெளிவாக தொடரெழுத்துகளில் எழுதுங்கள் [CURSIVE WRITING ]. அப்போது ஸ்பெல்லிங்கை ஊன்றி கவனித்துக்கொள்வர். ஆசிரியர் ஸ்பெல்லிங் சொல்லாமல் கடந்துபோனால் தாறுமாறாக ஸ்பெல்லிங் எழுதி தேர்வில் மதிப்பெண்கள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நடைமுறைகளால் பயில்வோர் எப்போதும் ஆசிரியர் பால் கவனம் செலுத்துவர்.
4 இருபாலர் பயிலும் வகுப்புகளில் அனைவரையும் சமமாக நடத்துங்கள். தவறுக்கு தண்டனையே அன்றி நபருக்கு அல்ல. எனவே ஆண் /பெண் யாராயினும் ஒரே தவறுக்கு ஒரே தண்டனை என்பதே சரி.. ஆசிரியன் நடுநிலை வகிப்பவன் நேர்மையாளன் என்ற நிலைப்பாட்டினை நிறுவ உதவும் .
5 பாடத்திட்டத்தில் படங்கள் இருக்கும் எனில், அவற்றை வரைந்து விளக்குங்கள். புத்தகத்தை பார்த்துக்கொள்- என்று தப்பிச்செல்லாதீர்கள்.
இவை ஒவ்வொன்றும் உங்களின் ஆசிரிய ஆளுமை சார்ந்தது .
அவற்றில் சமரசம் [COMPROMISE] செய்தல் ஆசிரியரின் பெருமைக்கு அழகல்ல. இவற்றை நடைமுறைப்படுத்தி ப்பாருங்கள், பணியின் மகத்துவம் உணர்வீர்.
வளரும்
நன்றி அன்பன் ராமன்
Useful . Could be used as apart of teacher-training module.
ReplyDelete