Tuesday, January 21, 2025

LET US PERCEIVE THE SONG -6

 LET US PERCEIVE THE SONG  -6

பாடலை உணர்வோம்  -6

அன்புடையீர்

திரைப்பட பாடல்கள் குறித்து "பாடலை உணர்வோம் " என்ற தலைப்பில் , மிக நுணுக்கமாக ஒவ்வொரு பாடலையும் கூர்ந்து தொடர்ந்து கேளுங்கள் பாடலின் எண்ணற்ற அமைப்புரீதியான விவரங்கள் நம்மை பீடிக்கும் என்றே சொல்லிவருகிறேன்.

சிலர் "இவனுக்கு வேலையில்லை , பொழுது போகாமல் பழைய புராணம் பாடிக்கொண்டு BLOG எழுத வேறு வந்துவிட்டான்" என்று முனகி , முனிவர்கள் போல் சபிப்பதையும் நான் அறிவேன்

எனது ஒரே நிலைப்பாடு நல்ல பாடல்கள் நிலைத்து நிற்பன, பழையன ஆயினும் பொருளும் செறிவும் நிறைந்தவை, எனவே அவற்றை பழைய குப்பைகள் என எண்ணாதீர் அவற்றில் நமது அடிப்படைப்புரிதலுக்கு அப்பாற்பட்ட பல நுணுக்கங்கள் பொதிந்துள்ளன என்று நான் எனது சிற்றறிவிற்கு எட்டிய வரையில் விளக்க முற்படுகிறேன்

அவ்வகையில் சமீபத்தில் ஒரு வீடியோ பதிவைப்பார்த்து, எனது நிலைப்பாட்டிற்கு வலு சேர்ப்பதை உணர்ந்தேன் ஒரு 12ம் வகுப்பு மாணவி, எம்ஜியார் பாடல்களை ஆழ்ந்து அனுபவித்தது மட்டும் அல்ல, அவற்றை ஏன் ரசிக்கிறார், பழைய/ புதிய பாடல்களின் பண்புகள் , இசை அமைப்பில் அடிப்படை வேறுபாடுகள் , கே வி எம், எம் எஸ் வி, என்றெல்லாம் ஆழ்ந்து விளக்குகிறார். இளம் வயதினரும் பழைய பாடல்களை கேட்டு உணர்ந்தால் , அவர்களின் இசை குறித்த கருத்தியல் வியத்தகு முன்னேற்றம் அடைகிறது. இந்த உண்மையை விளக்கும் விடியோவை      இன்றைய போனஸ் ஆக இணைத்துள்ளேன் ; தவறாமல் பாருங்கள், பலமுறை பாருங்கள், சிறுமியின் தேர்ந்த ஞானம் வியப்பளிக்கிறது. தலைமுறை இடை வெளி சூழல்களால் அமைவதை உணரலாம்.

நன்றி   ராமன்

இணைப்பு  : BONUS ON PERCEIVING SONGS https://www.youtube.com/watch?v=uEwINKwQOTg

LET US PERCEIVE THE SONG  -6

பாடலை உணர்வோம்  -6

PAALIRUKKUM PAZHAMIRUKKUM

பாலிருக்கும் பழமிருக்கும்

பாலிருக்கும் பழமிருக்கும் [பாவ மன்னிப்பு -1961] கண்ணதாசன்,   வி-ரா,                        குரல்கள்:  சுசீலா -எம் எஸ் விஸ்வநாதன்

மிகவும் புகழ் பெற்ற பாடல். பாடலை அறிந்த பலரும் அதில் பொதிந்துள்ள எண்ணற்ற நுணுக்கங்கங்களையும், ,தகவலையும், இசையின் வசீகரத்தையும் முற்றாக      உணர்ந்தனரா? நான் அறியேன். ஆனால் ஒன்று அறிவேன்.

பலரும் மேலோட்டமாக பாடலை கேட்கிறோம், நடிகனை ரசிக்கிறோம், அதைவிட சற்று குறைந்த அளவிலேயே நடிகையை [பாடலின் அடிப்படையில்] குறித்த புரிதல்    நிலை கொள்கிறோம். ஏனிந்த நிலை.? 

தமிழ்த்திரையை பொறுத்த வரை, நீண்ட நாட்களாக ஒரு பிம்பம் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. படத்தை சுமப்பவனே நடிகன் தான் எனும் அளவிற்கு ஹீரோ ஒர்ஷிப் எனும் துதி பாடும் போக்கு வேரூன்றி அது இப்போது 3ம் தலைமுறை கலைஞர்களுக்கும் விரிவடைந்துள்ளது. இன்றளவும் இந்த நிலை நடிகைகளுக்கு ஏற்படவில்லை. இந்த நிலை விளக்கவொண்ணாபுதிர்

நடிகைகளை வெறும் காட்சிப்பொருளாக அங்கீகரித்துளோம் வெகு ஆழ்ந்த நடிப்பில் கொடி கட்டிய   சாவித்ரி நீங்கலாக ஏனையோர் அந்த உயரம் தொட்டதாக நான் அறியவில்லை.. ஏனைய தொழில்நுட்பாளர்கள், ஸ்டுடியோ ஊழியர்,  ஒலி -ஒளி நிர்வகிப்போர் பெயர்களைக்கூட தெரிந்துகொள்ள விழைவதில்லை. ஆனால் காமெடி எனும் பெயரில் உளறிக்கொண்டு திரியும் நபர்களுக்குக்கூட ரசிகர் மன்றம் பாராட்டு விழா மாலை மரியாதை எல்லாம் உண்டு

பின் வரும் பெயர்கள் யாவர்? எஸ். ரெங்கநாதன், சர்தூல் சிங் சேத்தி, ராமசாமி , சிவராம், பீதாம்பரம், ஹரிபாபு ,       சூர்யகுமார், பிலிப், சேகர்,  கங்கா, செல்வராஜ் வேணு, பாலு , எஸ் எஸ் லால், ஆனந்தன் , அருணாச்சலம், சாரிசெல்லையா, முருகப்பன்   என்று வெகு நீண்ட  பட்டியல்  உள்ளது. இவை தவிர பரணி, GH  RAO என்ற பெரிய ஆதரவுக்குழு தமிழ் சினிமாவில் உண்டு. .அதைப்பற்றி நமக்கென்ன? 

மிஞ்சி மிஞ்சிப் போனால் சிவாஜி பாட்டு எம் ஜி யார் பாட்டு    என்று நடிகரை பாட்டுக்குத்தலைவன் ஆக்கி மகிழும் கூட்டம், அதிலும் அந்த நபரை பெயர் கூட சொல்லாமல் தலைவர் பாட்டு என்று போற்றி மகிழும் நிலையும் இங்கு தான். இசை அமைப்பாளர் என்ன செய்கிறார் என்பதே அறியாமல் ஏதேதோ பேசித்திரியும் கும்பல்கள் ஏராளம்.. இத்துணையும் ஏன் என்கிறீர்களா? வரும் பாடலுக்கு இந்தக்கண்ணோட்டத்தில் விளக்கம் தந்தால் தான் பாடலை நாம் எப்படி ஓரப்பார்வையும் கோரப்பார்வையும் பார்க்கிறோம் என புலப்படும்

இதுவும் ஒரு தலையாக துவங்கி பின்னர் இரு மன தொடர்பாக விரிவு பெறும் காதல் காட்சிதான். ஒரு பாடலில் இவ்வளவு பாவங்களா? சொல்லில், கண்ணில் , முக பாவத்தில், உடல் மொழியில் என போட்டி போட்டு நடித்துள்ளனர் சிவாஜியும், தேவிகா வும்

சில இடங்களில் தேவிகாவின் கண்ணில் 1000 உணர்வுகள், ஏக்கங்கள், மற்றும் நேர்த்தியான உடல் மொழி. ஒரு கட்டத்த்தில் நாயகனை தொட விழையும் மனம் , ஆனால் நாணம் தடுக்க கையை விலக்கிக்கொள்வதாக ஒரு முத்திரை. முறையாக பயன் படுத்தியிருந்தால் தேவிகா மிகு ந்த உச்சம் தொட்டிருப்பார் வெறும் கண் மொழியிலேயே என்பது புரிகிறது. பல இடங்களில் சிவாஜி கணேசனுக்கு சற்றும் குறையாத முகபாவம் காட்டியுள்ளார் தேவிகா. ஊன்றி ப்பாருங்கள்

தயவு செய்து, எந்தப்பாடலையும் ஏனோ தானோ என்று   கேட்காதீர்கள். நடிகரை நினைத்துக்கொண்டு பாடலை அணுகாதீர்கள். ஒவ்வொரு பாடலுக்குள்ளும் எண்ணற்றோரின் உழைப்பு உண்டு. எனவே சொல் , பாடும் முறை, ஏற்ற க்கம், விடப்பட்ட இடை வெளி , இசைக்கூறுகள் ஒலிகள், தாளங்கள் ஒவ்வொன்றாக அலசுங்கள், பாடல்களின் தரம் பளிச் என்று புலப்படும்

இப்பாடலின் இசையில் மென்மையும் மேன்மையும்   கைகோர்த்து மெல்ல முன்னேறுவது அதற்கு முன் தமிழ்த்திரை கண்டிராத மாறுபட்ட அணுகுமுறை. எந்தக்கருவியும் அளவுக்கு மீறி ஒலி க்காமல் மென்மை காட்டியுள்ளதை தொடர்ந்து காணலாம். சரி பாடலின் பிற கூறுகள் எவை ?

இந்தக்காட்சியின் மாட்சிமைக்கு பாடல் தந்த வலிமையை , இசையும்  தந்தது என்பதே பொருத்தம் . காட்சி வந்ததும் பாடல் வந்ததா , பாடல் வந்ததும் காட்சி வந்ததா [கொடி அசைந்ததும் காற்று வந்ததா பாடல் போல் ] ஒரு சூழல் தான் திரையில்

பல்லவியின் தகவலுக்கு காட்சி அமைக்கப்பட்டதாக உணருகிறேன். காதல் வயப்பட்ட பெண் எதையாவது சொல்லிக்கொண்டு நாயகனைத்தேடி வருவது இயற்கைதான். அந்த உத்தியில் பாடலை பிணைத்துள்ளனர். வளர்க்கும் கிளி பால் பழம் எதுவும் சாப்பிடவில்லை என்று நாயகன் சொல்லிவிட்டு என்ன னு தெரியல என்றதும் இவள் நான் சொல்லட்டுமா என்று

"பாலிக்கும் பழம் இருக்கும் பசி இருக்காது , பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது , தூக்கம் வராது , என்று துவக்க காட்சி உணர்வு பூர்வமாக அரங்கேறுகிறது .

இப்பாடலின் முக்கிய பகுதிகள் பல்லவி 4 முறை +3 சரணங்கள். மூன்றிலும் பெண் மன தடுமாற்ற நிலை [காதல் விளைவிக்கும் தாக்கம்] கவியரசின் சொற்களை. எப்படி விளக்குவது. கேட்டு ரசிப்பது எளிது. 

சரணம்

நாலு வகை குணம் இருக்கும் ஆசை விடாது , நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது   என்று சரணதுவக்க, வியப்போடு நாயகன் ஒவ்வொரு சொல்லுக்கும் வாய் திறவாமல் ஹம்மிங் வழியே பாராட்டுவது போல் சொல்ல பாடல் ஒரு புதிய அணுகுமுறையை கடைப்பிடித்ததாக அந்நாளைய விமரிசனம்..

இந்தப்பாடலில் பல நிகழ்வுகள் அந்நாளில் வியப்புடன் பேசப்பட்டது. 1. அடிப்படையில் பெண் பாடுவதாக வே கவிஞர் எழுதியுள்ளார் என்று திடமாக நம்பலாம் ;ஏனெனில் எந்த கவிஞரும் 'ஆண்'பங்கிற்கு ஹம்மிங் எழுதமாட்டார். அப்படியானால், ஹம்மிங்?

அது ஒரு ஸ்வாரஸ்யமான நிகழ்வு. ஒத்திகையில் எம் எஸ் வி தன்னை மறந்த நிலையில் பாலிருக்கும் என்றதும் ஹுஹும்  பழமிருக்கும் .  ஹுஹும் என்று மென் குரலில் பாட, சுற்றி இருந்தவர்கள், இந்த ஹம்மிங் நல்லா  இருக்கு ரெக்கார்ட் இப்படியே ஹம்மிங் கொடுத்துடுங்க சார் என்று சொல்ல சவுண்ட் எஞ்சினீயர் அதையே சொல்ல, அப்படிதான் இந்த ஹம்மிங் இடம் பெற்றது என்று ஒரு தகவல் உண்டு. போகட்டும்.

 பாடல் நெடுகிலும் சொற்களுக்கு ஏற்ற விடையளிப்பாக ஹம்மிங்கில் பதில் சொல்லி, ஒரு புதிய வகை டூயட் ஆக இந்தப்பாடல் பதிவாகி, மிகுந்த வரவேற்பை பெற்றது. இப் பாடலை பலமுறை கேட்ட பின் நான் புரிந்து கொண்டது -- ஹம்மிங் இல்லாமல் இப்பாடலை இந்த அளவு ரசிக்க இயலுமா?

 அதே போல பெண் பாத்திரம் இவ்வளவு ஆழ்ந்த நுணுக்கங்களை 'கண் மொழியாக' தெரிவிக்காது போயிருந்தால், பாடலின் அருமை பெருமைகள் முற்றாக புதையுண்டு வந்த சுவடு தெரியாமல் மறைந்திருக்கும். அதன் பின்னர் இசையாவது, கவிதையாவது? மொத்தத்தில் நமது ரசனையின் விரிவாக்கத்திற்கும், பெரும் வாய்ப்பு பறி போயிருக்கும்.எனவே பழைய பாடல் என்றெண்ணாமல் கூர்ந்து கவனித்தால், கவிஞனும் இசை அமைப்பாளனும் நல்ல புரிதலோடு பயணித்ததால், பாடல்களின் தரமும் திறனும் வெகுவாக மேம்பட்டன என உணரமுடிகிறது . சரி, மேலே தொடருங்கள்.  

கவிஞன் காட்டிய நளினம்

ஒரு பெண் காதலனை சந்திக்க வந்தாள் . பேச்சை துவங்குவது எப்படி ? இது தானே மாற்றுப்பாலின மனங்களின் சஞ்சலமாக இருக்கும்.  வாய்த்தது வாய்ப்பு . கையில் கிளிக்கூண்டுடன் 'அவன்'.

கிளி என்ன சொல்லுது ? என்று உரையாடலுக்குள் 'அவள்' நுழைய ,

'அவன் ' ஒன்னும் சொல்லல , பால் பழம் எதுவும் சாப்பிடல , என்னனு தெரியல

'அவள்' -தெரியலையா ? சொல்லட்டுமா என்று துவங்கி

அவனின் மிக அருகில் குனிந்து கொண்டு,

'பாலிருக்கும் பழம் இருக்கும் , பசி இருக்காது ,பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது,' என்று

தான் மனரீதியாக [காதலின் பிடியில்] படும் நிலையை உணர்த்துகிறாள்.

இது அவளின் மன நிலை என்பதை சுருக்கமாக உணர வைக்கிறார் கவிஞர் சரண வரிகளில்

நாலு வகை குணம் இருக்கும் ஆசை விடாது,

நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது'  [இயற்கையாக அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு]  எவ்வளவு இருந்தாலும் ஆசை விடாது [ ஆசை என்பது கண் வழியே ஏற்படுவது ] கண்ணில் தெரியாத மனத்தின் கட்டுப்பாட்டை , கண்ணில் தெரியும் ஈர்ப்பு மெல்ல எல்லை கடக்க உந்தும் . இது ஒரு ஆழ்ந்த உளவியல் நிகழ்வு.     

இதைசரணத்தின் முதல் வரியிலேயே  பளிச் என்று பட்டை தீட்டி உள்ளார் கண்ணதாசன் .

பெண் மன ஈர்ப்புகளையும் ஈடுபாடுகளையும் மழைஎனப்பொழியும் கவி அன்றோ அவர்?

ஒவ்வொரு பாடலுக்கும் முகவரி பல்லவி தான் , அதனை திரும்ப திரும்ப ஒலிப்பது இசை என்னும் கலையின் அடிப்படை அணுகுமுறை

திரைப்படப்பாடல்களில்  'சரணம்' வலுவானது . பல தருணங்களில் உட்கருத்தை ஏற்றுக்கொண்டு சரணம் சரணம் என்று நம்மை சரணடைய வைத்துவிடும் சரண விளக்கங்கள்.

 இப்பாடல் அந்த வகையிலும் மிக எளிதாக உச்சம் தொட்டது.

பாடலின் பிற அமைப்புகள் அடுத்த பதிவில்

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -6

  LET US PERCEIVE THE SONG   -6 பாடலை உணர்வோம்   -6 அன்புடையீர் திரைப்பட பாடல்கள் குறித்து " பாடலை உணர்வோம் " என்ற ...