RENGAA VENDAAM -3
ரெங்கா வேண்டாம்...
3
கிளி கீச்சிட்டால் முழு உத்தரவு என்று பெரும் நம்பிக்கை ரெங்கராஜூவுக்கு. உடனே பகவதிக்கு நன்றியும் வணக்கமும் சொன்னான்.
கிளி சுற்றி சுற்றி வந்ததே ஒழிய சீட்டை எடுக்கவில்லை, ரெங்கராஜு முறைத்தான் கிளியை.
கிளி திரும்பி முறைத்தது -அ போடா என்பதைபோபோல. ரெங்கராஜூவுக்கு புரிந்தது கிளிக்கு பகவதி உத்தரவு இல்லை .
சரிம்மா நீ போ என்றான் கிளி போகாமல் முறைத்தது. ஓ என்று நினைவு வந்தவனாக 2 நெல் மணிகள் ஒரு பொட்டுக்கடலை தந்தான் வாங்கி தின்று விட்டு ஒய்யாரமாக நடந்து கூண்டுக்குள் சென்றது.
சரி இனி ஆண்களின் நிலையை தான் பார்க்க வேண்டும் என்று புரிந்து கொண்டு அடுத்த கூண்டை திறந்து விட்டு
ரெங்கராஜு பாடினான்
எங்கும் நிறைந்த எங்கள் தெய்வம் ரெங்கநாதனின் பேர்கொண்ட எங்க அண்ணன் ரெங்கசாமி என்ற பேர் ராசிக்கு ஒரு சீட்டை எடுத்து தாப்பா விபீஷணா என்றான்.
தன்னை தான் கூப்பிடுகிறான் என்று வெளியே வந்த விபீஷணன் ஒரு முறை சுற்றி கூண்டின் மேல் அமர்ந்து விட்டு கீழே இறங்கி ,
ம ள ம ள ம ள என்று 7 , 8 சீட்டுகளை உருவிக்கீழே போட்டுவிட்டு ஒரு சீட்டை கொண்டுவந்து ரெங்கராஜுவின் கையில் வைத்துவிட்டு, நெல்மணிகள் பொட்டுக்கடலை வாங்கி தின்று விட்டு கூண்டிற்குள் போய் ஒதுங்கிக்கொண்டது.
ரெங்கராஜு சீட்டை கையில் வைத்துக்கொண்டு -பாடினான்
பெரிய பெருமாள் பெயர் கொண்ட ரெங்கசாமிக்கு நல்ல சேதி சொல்லப்பா என்று சீட்டைப்பிரித்தான்
மகாபாரதத்தில் எத்தனை பேர் இருந்தாலும் எத்தன் துரியோதனன் அவனுக்கு எத்தன் கண்ணன் ரெண்டு பேரும் வந்துட்டீங்க புரியுது ,
“ரெங்கசாமி கேட்டுக்க ,
பகவதி சொல்லுது”
“இவன் சண்டைக்கு அலையுறான், எதிரணியில் கிஷ்ணன் இவனும் என்ன போராடினாலும் கிஷ்ணன் இவன் பரம்பரையையே கவுத்துருவான்.
அதுனால பெரியவங்க சொல் கேட்டு அடங்கி ஒடுங்கி நட , இல்ல ஒடுங்கிப் போய் நடக்க முடியாம முடமாகிப்போவியாம் பகவதிக்கு சொல்லுது., ஏன்னா நீ பகவதி அருள்பெற்ற சந்தானத்தை சும்மா திட்டுறியாம்.
அவன் தான் குல விளக்கு அது தெரியாம அதுல மார்க்கு இதுல மார்க்குனு பேசுறியாம் . அவனுக்கு கல்விக்கண் திறக்க இன்னும் 4 வருஷம் ஆவுமாம். பொறுமையா இருந்தா நல்லது. இப்படித்தான் அப்பா பேச்சு கேக்காம தொல்லை பண்ணி அவரு வீட்டை துறந்து போதுமடா னு விலகிப்போய் பகவதியின் தலைமை சீடராய் ஒரு ராசாங்கமே நடத்தறாரு. உங்கம்மா அவர நெனச்சு வருந்துது .
அவரு இருப்பிடம் சொல்லக்கூடாதுனு குருவும் சொன்னாங்க பகவதியும் சொல்லுது .
ஒருநாள் உத்தரவு வரும் தாயீ அப்ப நானே குரு கிட்ட கூட்டிக்கிட்டு போறேன் .
எட்ட நின்னு குறைய சொன்ன உடனே குரு வழி காட்டுவார்,.வேற குடும்ப சமாச்சாரம் பேசாதீங்க .
எல்லா தீர்வும் கேக்காமலே கிடைக்கும்”.
தம்பி என்று சந்தானத்தை அழைத்து அமர வைத்து ஏதோ சில முத்திரைகளை காட்டினான் ,
கூண்டிலிருந்து விபீஷணனை திறந்து விட்டான் விபீஷணன் ஓடி வந்து சந்தானத்தின் தோளில் அமர்ந்து கொண்டது . என்னமோ சொல்லி நெற்றியில் குங்குமம் வைத்தான் ரெங்கராஜு. தம்பி
ஒரு 4 மணி நேரத்துக்கு இந்த குங்குமத்தை கலைக்காதே என்று அவனை கை கூப்பி வணங்கி சொன்னான் தம்பி க்கு பகவதி அருள் இருக்குது .
எந்த குறையும் வராது . அதுனால
"ரெங்கா வேணாம்” [உன் ஆத்திரம்] என்று சொல்லி ,
தனது உடமைகளை முறையாக எடுத்துக்கொண்டு வரேன் தாயீ என்று கை கூப்பி நின்றான்.
எவ்வளவு குடுக்கணும் என்று தாயும் மகனும் கேட்க
இது எங்க குரு இல்லம் ,
அங்க குறி சொல்றதே பாக்கியம் யாருக்கு கிடைக்கும் இதெல்லாம் ? என்று கிளம்பி திண்ணையை விட்டு கீழே இறங்கினான்.
ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு போகலாமே என்றார் கோமதி.
இல்ல தாயீ இன்னக்கி பௌர்ணமி முழு விரதம் ;அதுனால தான் காலை 4 மணிக்கே பகவதி உத்தரவு சொல்லி அங்க போய் 8 மணிக்குள்ள குறி சொல்ல சொல்லிஅனுப்பிச்சாங்க . வேற காசு பணம் , வஸ்திரம் எதுவும் வேண்டாம்.
சரி - ஏதாவது காபி டீ ,- கோமதி.
இல்ல தாயீ விரதம் , நாளைக்கு தான் விரதம் விடுவேன் அப்ப நாளைக்கு வந்து சாப்பிடலாமே -கோமதி.
சரி தாயீ -
ஆனா குறி சொன்ன இடத்துல தான் உக்கார்ந்து சாப்பிடணும் . அதுனால திண்ணையை கழுவிராதீங்க. நாளைக்கு வர்ரேன் என்று விடை பெற்றான் ரெங்கராஜு.
போகும் முன் மீண்டும் "ரெங்கா வேண்டாம்” பையனை ஒன்னும் சொல்லாத -இது பகவதி உத்தரவு. என்று விடை பெற்றான். ரெங்கசாமி மிரண்டான்.
தாயார் தனது கணவன் பெரும் சித்தர் போல் இருக்கிறாராமே என்று வியப்பும் மலைப்பும் கொண்டாள் . சந்தானம் இனம் புரியாத சுறுசுறுப்பு அடைந்தான்.
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment