Thursday, March 6, 2025

VAISHNAVITES and LANGUAGE

 VAISHNAVITES and LANGUAGE      

வைணவர்களும் மொழியும்

தமிழகத்தில் பொதுவாக பிராமணர் குடும்பங்களில் நிகழும் உரையாடல்களை கேலிப்பொருளாக்க, விமரிசித்து பொதுவெளியில் [திரைப்படங்கள் உட்பட] சித்தரிப்பது வெகு சகஜம். அதில் வியத்தகு அம்சம் யாதெனில், அதை பிராமணர்கள் ஒரு பொருட்டாகவே கொள்வதில்லை. அதை விளக்க முற்படுவது நேர விரயம் என்றே கடந்து போகிறார்கள். நியாயமாகப்பார்த்தால் ஒவ்வொரு சமுதாயமும் தமக்கென சில உரையாடல் நடைமுறை வைத்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட மாவட்ட சொல்லாடல்கள் தனித்துவம் வாய்ந்தவை [சென்னை தமிழ் உள்பட].  இவற்றை விமரிசித்தால் விபரீத விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும்  மற்றும் பெரும் பொருட்சேதம் விளைவிக்கப்படும் என்று உணர்ந்து அவை எதையும் பேசவோ விமரிசிக்கவோ எவரும்    முயல்வதில்லை. அதுவல்ல; நமது இன்றைய பதிவின் அடிப்படை..

 நான் அறிந்தவரை, பிராமணர்கள் இயன்ற அளவு நல்ல சொற்களை அன்றாட இல்லற மொழியாக கையாண்டு கடைப்பிடிக்கின்றனர். இதில் நிகழும் உச்சரிப்பு மாற்றங்கள் பெரும் பிழைகள் போல சித்தரிக்கப்பட்டு, அதை தங்களின் சாதக சூழலுக்கு                பயன்படுத்துகின்றனர்  பிறர் .                                                          மறைமுகமாக பிராமணர்கள் என்று உணர்த்த "அவாள்" என்று கிண்டலாக சொல்கின்றனர். பார்க்கப்போனால், நெல்லை பகுதியில் பலரும் பிறரை குறிப்பிட 'அவாள்' என்றே சொல்வது வட்டார வழக்கு. அதை ஏன் பேசுவதில்லை?  . குமரி , நெல்லை, மதுரை கோவை, முகவை , செட்டிநாடு தஞ்சை என ஒவ்வொரு பகுதியிலும் சொற்களே தனித்துவம் கொண்டவை. இவை எல்லாம் பேசுபொருட்கள் அல்ல, ஏனெனில் சில நிகழ்வுகளுக்கு மட்டும் அரசியல் ஆசி உண்டு -அவ்வளவே.

இன்றைய பதிவில் வைணவர்கள் மேற்கொள்ளும் உறையாடல் சொற்கள், அவற்றின் பொருள் [மறைந்துள்ள] கலப்பு இல்லாத தமிழ் இவை குறித்து காண்போம்.

கவனம் மிக்க சொற்கள்::                                                  வைணவர்கள் மனிதர்களை இறைவடிவம் என்றே பார்த்து உரையாடக்காணலாம் எதிர்ப்பட்டவரை நலமா / சௌக்கியமா என்பது பொதுவெளியில் பலர் பேசக் காணலாம்.                                           மரபு வழுவாத வைணவர்கள் ஒருவரை நலம் கேட்க -.   .   சொல்வது  " திருமேனி பாங்கா"?  தூய தமிழ். 

அடுத்து, வீட்டிற்கு வாருங்கள் என்றழைக்க " அடியேன் திருமாளிகைக்கு எழுந்தருள வேண்டும்". வீடு சிறிய 3 அறை  இல்லம் எனினும் இறைவன்இருக்கும்  இடம்  என்பதாக 'திருமாளிகை ' என்று அழைப்பர்.

நீர் /மோர் / பானம் சாப்பிட என்று உணர்த்த "தாக சாந்திக்கு" ? [தாகம் தணிக்க] என்பர் .    அதாவது  மொழியில் எதிராளிக்கு உயர் நிலை அளிக்கும் சொல்லாடல் அன்றாட வைணவ நடை முறை.

புழங்கும் தண்ணீரை சிறப்பு சொற்களால் குறிப்பிடுவதும் வைணவ மரபில் அன்றாடம் காணலாம், கை கால் கழுவும் நீரை தண்ணீர் அல்லது ஜலம்  என்று சொல்வர்; பருகும் நீர் தூய்மை ஆனது மற்றும் மனிதன் இறைவனின் அம்சம் என்பதை கடைப்பிடிக்க "தீர்த்தம்" கொண்டுவரட்டுமா? என்பர். சாப்பிடும் பந்திகளில் கூட "தீர்த்தம்" என்றே குறிப்பிடப்படும் . வழக்கம் போல் உச்சரிப்பில் பிறழ்ந்து "தேர்த்தம்"  என்று அநேகர் சொல்வதுண்டு.

இதைவிடவும் தீவிர நடைமுறைசமையல் கட்டு, ‘[kitchen]’ என்ற சொற்களை தவிர்த்து " திரு மடப்பள்ளி" என்றே மரபு வழுவாத வைணவர்கள் இன்றும் குறிப்பிடக்காணலாம்.[அதாவது இறைவனுக்கு உணவு தயாரிக்கும் இடம் என்று "திருமடப்பள்ளி " என்பது மிக சாதாரணம்] . இல்லங்களில் உணவு தயார் ஆனதும் அன்றாடம் இறைவனை ஆராதித்து முறைப்படி உணவினை இறைவனுக்கு அளித்து பின்னரே பிறர் புசிப்பர். அதாவது இறைவனை ஆராதித்து அவருக்கு  அமுது படைத்து   பின்னரே உண்பர். அந்த நிகழ்வு திரு ஆராதனம் [திருவாராதனம் ] என்பர். ஒவ்வொரு செயலையும் இறைவனோடு இணைத்து செய்வதால் 'திரு' என்ற சொல்லே முதலில் இடம் பெறும். உங்கள் பெயர்  என்பதற்கு பதில் "சுவாமி திருநாமம்? "   என்பர்.  உணவுப்பண்டங்களுக்கும் கூட உன்னத இடம் கொடுத்து பெயரிடுவது வைணவ  மரபு.       

  இறைவனுக்கு உணவினை படைத்தாயிற்றா? அல்லது நைவேத்தியம் செய்தாயிற்றா என்பதற்கு பதி லாக  

பெருமாளுக்கு "அமுது செய்வித்தாயிற்றா " /இறைவன் அமுது செய்ய பண்ணி ஆயிற்றா ? என்றே கேட்பர்

 தென் தமிழகத்தில் இந்த சொல்லாடல் மருவி "அம்சே தாயிற்றா ? அல்லது அம்சே பண்ணியாச்சா ?என்கின்றனர் இறைவன் அமுது செய்தாயிற்றா என்று கேட்க வேண்டியது மருவி மருங்கி கிடக்கிறது. .

சாப்பிட இலை போடலாமா ? என்பதை    'இலை சேர்க்கலாமா' என்பர் [போடலாமா என்றால்] தரக்குறைவான மொழி என்று அதை விடுத்து 'சேர்க்கலாமா " என்பர்.  அதுவே தான் உணவுப்பொருட்களுக்கும் .

சாதம் என்பதை 'பிரசாதம் " என்பர். [இறைவன் தந்த உணவு என்று பொருள்.] காய்கறி வகை உணவு களை கரி அமுது [கரியமுது  அதுவும் மருவி கரமது, கரமீது என்று வட்டார திரிபுகள் உலவுகின்றன].

 தெளிந்த அடர்த்தி குறைந்த சாறு [ரசம் ] போன்ற திரவம் -பொது மொழியில் ரசம் என்ற தயாரிப்பிற்கு உன்னத ஏற்றம் கொடுத்து வைணவ மரபில் சாற்றமுது என அழைக்கின்றனர். அதுவும் மருவி சாத்தமுது , சாத்துமுது , இன்னும் சாத்தும்து என்றெல்லாம் வெவ்வேறு நாமகரணங்கள் பெற்றுள்ளன. அதுபோன்றே இனிப்பு [பாயசம்] கண்ணன் [குழந்தை] விரும்புவது என்று கண்ணமுது என்றும் திருக்கண்ணமுது என்றும் சொல்கின்றனர். அதுவும் மருவி அவசரமாக திருக்கம்ணது என்று சொல்வோரும் உண்டு.

இறுதியாக உணவுக்குப்பின் வெற்றிலை பாக்கு -கௌரவமாக தாம்பூலம் தரித்தல் என்பர்.        அதில் இடம் பெரும்  "சுண்ணாம்பு"  என்ற சொல்லை தவிர்ப்பர்.

வாயில் வெற்றிலை பாக்கு அடைத்துக்கொண்டு சுண்ணாம்பு கேட்டால் தவறாக ஒலிக்கும். எனவே மூன்றாவது பொருள் [1 வெற்றிலை, 2 பாக்கு 3 சுண்ணாம்பு] மூன்றாவது அல்லது மூணாவது கொண்டுவா என்பர். அதுவும் மருவி மூணாது என்று உலவுகிறது.                                                                                                    

விடைபெறுவோரை, சிரம் தாழ்த்தி கரம் கூப்பி " அடியேன்" என்று வழி அனுப்புவர் வைணவ மரபினர்   இப்படி தமிழ் ஒவ்வொரு செயலிலும் பின்னிப்பிணைந்தது தான் வைணவ மரபு. வாழ்வியல்

வாய்ப்புக்கு நன்றி                                  அன்பன் ராமன்

No comments:

Post a Comment

SWEET FLAG

  SWEET FLAG   Acorus calamus [Tam: vasambu ]  A herb that grows to about 2 feet and has prominent leaves   Vacha ( Acorus calamus  L...