Wednesday, April 30, 2025

DIRECTOR: DADA MIRASI -2

 DIRECTOR:  DADA MIRASI -2

இயக்குனர்: தாதா மிராசி-2

தமிழ் திரைப்பட இசையை பொறுத்தவரை 1964 ம் ஆண்டு ஒரு பெருமை பெற்ற ஆண்டு எனில் சர்வ உண்மை. சுமார் 30 படங்கள் அவ்வாண்டில், எனினும் அநேகமாக அனைத்துப்படங்களிலும் ஏராளமான வெற்றிப்பாடல்கள் , இன்றளவும் மங்காப்புகழுடன் வலம் வரும் ஆக்கங்கக்ள்.. இதென்ன பெரிய சாதனையா என்போர் கவனிக்க : படம் ஒன்றுக்கு 7, 8 பாடல்கள், சிலவற்றில் 10 பாடல்கள், அனைத்திலும் கண்ணதாசன்/ வாலி தனித்தோ அல்லது இருவருமோ பாடல் புனைந்தனர்  , களத்திற்கும் காலத்திற்கும் உற்ற பாடல்கள். எனினும் அலுப்போ சலிப்போ தோன்றாவண்ணம் கவனம் ஈர்த்த பாடல்கள், சொல்லும் சுவையும் கருத்தின் ஆழமும் இன்று அருகி சுருங்கிப்போய் விட்டாலும் , 1964 ன் பாடல்கள் சிரஞ்சீவியாக மார்க்கண்டேயர்களாய்   திகழ்வது ஏன் அல்லது எப்படி ? என்றால்  ஒரே ஒரு காரணம் தான். ஆம் பாடல்கள் சம்பிரதாய சடங்குகளாக இல்லாமல் காட்சிக்கு வலு சேர்க்கும் திறனும் தரமும் கொண்டவை. .

இந்த-- காட்சிக்கு வலு சேர்ப்பது என்பது கூட்டு முயற்சி யாக விளைந்த பலன்கள்.

இயக்குனர் தான் தலைவர் அந்த தலைமையை அனைவரும் ஏற்று மதித்து செயல் படுவர் -இசை அமைப்பாளர்கள்  உட்பட . காட்சிகளின் விவாதம் மணிக்கணக்கில் -இயக்குனர், நடன இயக்குனர், கவிஞர் இசை அமைப்பாளர் , தேவைப்பட்டால் தயாரிப்பாளரின் வழிகாட்டுதலும் கேட்டு பெறப்படும், ஏனெனில் பொருளாதார நெருக்கடிகளை புறந்தள்ளிவிட்டு கையை சுட்டுக்கொண்டு அவதிப்படும் இக்கால வழக்கம் அந்நாளில் இல்லை. அனைவருக்கும் மிகுந்த அக்கறை உண்டு , தயாரிப்புகள் தொடர்ந்தால் தான் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்வு. எனவே பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றை கிழிக்க எவரும் துணிய மாட்டார்கள். இன்று வாத்து , வயிறு, முட்டை அனைத்தையும் சிதைத்து ஒரே படத்தில் நடித்து உயர்ந்துவிடத்துடிக்கிறார்கள் அதன் விளைவே நினைவில் நிற்காத பாடல்களும் படங்களும். இவை பற்றி இப்போது என்ன என்கிறீர்களா? நெடிதுயர்ந்த ஆல  விருட்சங்களுக்கும், பிறக்கும்முன் இறக்கும் குறைப்பிரசவங்களுக்கும் வேறுபாடு என்பது நல்ல ஆரோக்கிய  ஆக்கங்களுக்கும், பிழைக்கவே வழி இல்லாத நோஞ்சான்களுக்கும் உள்ள   அதே வேறு பாடு தான் [balanced diet Vs malnutrition] எனில் மிகை இல்லை   

இவ்வளவு விளக்கமும் விசனமும் சொல்ல விழைவது காலப்போக்கில் சினிமா ஒரு பெரும் வியாபாரமாக பெருகியது ஆனால் நடிகை நடிகையர் கண்ட பொருளாதார வளர்ச்சியும் , தயாரிப்பாளர் கண்ட வீழ்ச்சியும்  ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக அமைந்தன; கதையில் நடிப்பில் , இயக்கத்தில் ,பாடல்களில், இருந்த பழைய வலிமை தொலைந்தது. பெரும் பொருட்செலவில்  வந்த படங்கள் எதிலாவது பேசும் படி ஏதும் உண்டா ? எனக்கு தெரியவில்லை. இந்த சூழலில்

உன்னை ஒன்று கேட்பேன் [புதிய பறவை -1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி சுசீலா

 

திடீரென்று ஒரு பெண்ணை இப்போது பாடுவார் என்று அறிவித்த நிலையில் அந்த பெண் பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல் . அதுவும் கப்பலில் பயணிப்போர் குதூகலிக்கும் சூழல் . மாட்டிக்கொண்டுவிட்ட பெண் தனது இயலாமையை வெளிப்படுத்த "உன்னை ஒன்று கேட்பேன் , உண்மை சொல்ல  வேண்டும் , என்னைப்பாட ச்சொன்னால் என்ன பாட த்தோன்றும்" என்று வினா தொடுத்துப்பாடுகிறாள். கப்பல் என்பதால் மேற்கத்திய இசை கொடிகட்டி பறக்கிறது . அந்நாளில் மேற்கத்திய இசைக்கூறுகளை அறிந்த பலரும் இவ்வளவு நுணுக்கமான இசையா என்று சிலாகித்ததை இன்றும் நினைத்துப்பார்க்கிறேன். இசையை நன்கு கவனியுங்கள் பியானோவை அடிநாதமாகக்கொண்டு கிளம்பும் துடிப்பான பாவம் , சுசீலாவின் நேர்த்தியான அலைபோன்ற .குரல் சஞ்சாரம் . குரலுடன் பயணித்த ஒரே கருவி ட்ரம் மட்டுமே [நோயல் க்ராண்ட் அவர்களின் இறகு வருடல் [FEATHER  TOUCH ] வாசிப்பு . எம் எஸ் வியின் PET போங்கோ இடை இசையில் மட்டுமே வருவது  , இப்பாடலில் அவர் குரலின் நேர்த்திக்கு கொடுத்த முன்னுரிமை என்பதை இங்கே பதிவிடுகிறேன். தொடர்ந்து வரும் கருவிகள் முதலில் ட்ரம்பெட் , பியானோ, கிட்டார் போங்கோ இடை இசையாக , சாரிசாரியாக ஆண்களும் பெண்களும் பின்னிப்பின்னி ஆடினாலும் கோரஸ் [குரல்கூட்டம்] இல்லாதது மற்றுமோர் விலகல் எம் எஸ் வியின் பார்முலா விலிருந்து, அதுவும் பாடும் குரலை முன்னிறுத்த தான். அடுத்த தொகுப்பில் சாக்ஸபோன் , பியானோ, மாண்டலின் போங்கோ அதிர்வு என்று இசை மழை பொழிந்த பாடல்.. கேட்டு மகிழ இணைப்பு    

Unnai ondru ketpen https://www.youtube.com/watch?v=ONHG8_zF9K0 puthiya 1964 ps

'உன்னை ஒன்று கேட்பேன்'    பாடலை INDIA GLITZ  நிகழ்ச்சியில் இசைக்குழுவின் பங்களிப்பாக ஜெயஸ்ரீ பாட ரசிகர் கள்  மகிழ நீங்களும் மகிழ்வீர் . இணைப்பு இதோ

011 Unnai Ondru Ketpen 2019 jayasri

இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பழைய நடிகை சௌகார் ஜானகி அவர்களின் பழையநினைவுகளை அவரே விவரிக்க கண்டு/கேட்டு  மகிழ்வீர்

032 SPEECH Sowkar Janaki Speech Saree sowcar

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து [புதிய பறவை-1964] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி சுசீலா

இப்பாடலுக்கும், இதன் இசைக்கும் இருக்கும் வசீகரம் சொல்லி மாளாது. இப்பாடலை, முணுமுணுக்காதவர்கள் அன்றைய தலைமுறையில் எவரும் இலர்.

மிக எளிய சொற்கள் அனால் ஆழ்ந்த பாவங்கள், அனைத்தும் சுசீலாவின் குரலில். மென்மேலும் கேட்கத்தூண்டும் பாடல். ஒருவர் பாட , இருவர் நடித்த காட்சி  துல்லியமான ஒலிப்பதிவில் நம்மை ஆட்கொள்ளும் கவிதை . கேட்டு மகிழ இணைப்பு இதோ   

chittukuruvi

https://www.youtube.com/watch?v=ONHG8_zF9K0 puthiya 1964 ps

BONUS VIEO

https://www.youtube.com/watch?v=tQbo2X-pCik GS MANI

நன்றி

அன்பன் ராமன்

Tuesday, April 29, 2025

LET US PERCEIVE THE SONG- 20

 LET US PERCEIVE THE SONG- 20

பாடலை உணர்வோம் -20

இளமை கொலுவிருக்கும் [ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் - 1965] கண்ணதாசன் , விஸ்வநாதன் -ராமமூர்த்தி

பி பி சீனிவாஸ்  மற்றும் பி சுசீலா இருவரும் தனித்தனியே பாடுவது படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் டூயட் வகை பாடல் அல்ல. .

இந்த உத்தியில் பல கருத்துகள் பொதிந்துள்ளன..

அடிப்படையாக ஒரு பெண், ஆண்  ஒருவனது  செயல்களை பிசகாமல் கவனித்து அவன் செய்வதை இவளும் செய்கிறாள்.  இது அவளின் காதல் வயப்பட்ட தன்மையை , குறிப்பால் உணர்த்துகிறது. படத்தில் வேறு, டூயட் பாடல்கள் உண்டு. ஆனால் இதுவே [இப்பாடலே]  ஆரம்பம் .

சரி ஒருவன் பாடியதை வேறொருத்தி பாடுவது ஏன்? அதுதான் கவிஞர் கண்ணதாசன் கையில் எடுத்த கவிதை என்னும் ஆயுதம். அதாவது ஒரு ஆத்மார்த்தமான கவிதை. இந்த உத்தி தான் அவளுக்குள் கிளர்ந்த காதலுக்கு வித்து . எந்த பெண்ணும் ஒரு ஆண் என்பவனை ஆண் என்பதற்காக வயப்படுவது இல்லை. ஆனால் அவனிடம் ஏதோ ஒரு பண்பு, ஈர்ப்பு கொண்டதாக அமைந்துவிட்டால் -யானை க்கும் அடி சறுக்கும் என்ற சூழலுக்குள் பெண் இழுத்துவரப்படுவாள்.

இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கத்தோன்றும்.. அதாவது ஆண் பாடிய   அதே சொற்களை பெண் பாடுவது ஏன்?. கவிஞனின் சொல் விளையாட்டில் எந்த இடத்திலும் இது ஆணின் உணர்வு என்றோ, இது பெண்ணின் உணர்வு என்றோ வகைப்படுத்த இயலாத அளவில் 'பாலினக்கவர்ச்சி"- என்ற முத்திரை விழாதபடி அதியற்புதமாக பாடலை வடிவமைத்துள்ளார் கண்ணதாசன் ஆக ஆணின் குரலில் வெளிப்பட்ட எந்தக்கருத்தையும் ஏதோ ஒரு ஈர்ப்பினால் பாடுகிறான் என்று எவரும் குறிப்பிட முடியாது.  

அதாவது, அவன் எந்தப்பெண்ணையும் வர்ணித்துப்பாடவில்லை. மாறாக பெண் என்பவள் மதிப்பில்லாப்பொக்கிஷம் என்பதை வெவ்வேறு அலகுகளால்  [units of [e]valuation]  விளக்கிப்பாடுகிறான். . அதை விவாதப்பொருளாக்கி, வெறுத்து ஒதுக்க எவருக்குமே மனம் வராது; அப்படி இருக்க அந்த மதிப்பீடுகளை பெண் அப்படியே ஏற்றுக்கொண்டுவிட அவள் அதே அமைப்பில் பாடுகிறாள். ஆண் ஒருவனின் பெண்ணினம் குறித்த சீரிய பார்வையே ஒரு பெண்ணை.  அவனிடம் மயக்கம் கொள்ள செய்வதை ஒரே பாடல் மூலம் விளக்கியுள்ளனர் படக்குழுவினர்.

அது ஒரு மாறுபட்ட ஆனால்   கௌரவமான முயற்சி என்பதை மறுப்பதற்கில்லை.

சரி, அந்தப்பாடலில் அப்படி என்ன தான் இருக்கிறது? அதுதான் சுவாரசியம்

பெண்ணின் அங்கங்கள் எதையும் குறிப்பிடாமல் பெண்ணின் பண்புகளை மட்டுமே வியந்து போற்றும் நாயகன் என்பதை முதலில் ஆண் பாட, அதை கவனித்த பெண் பின்னர் வீட்டில் பாடுகிறாள். 

இளமை இனிமை, இயற்கை இவை என்னதான் நிறைவாக இருந்தாலும் "பெண்' என்ற அந்த படைப்பு இல்லை எனில் சுகம் என்ற நிலை இல்லை என்று வர்ணிக்கிறார் கவிஞர். இயற்கையின் அமைப்பில் 'பெண்' அளிக்கும் பங்கு மகத்தானது என்பதை நிறுவிட, அவளே தாரம் மற்றும் தாய் எனவே அணைப்பதும் அணைப்ப்பில் கட்டுருவதும் அவளே என்று முதல் மகோன்னதம் முதல் சரணத்தில்.காண்கிறோம்.

சரணத்தின் அடுத்த பகுதியில் கவிஞர்கள் பாடல் புனையவும்,    கலைஞர்கள், , இளைஞர்கள் அனைவரும் எதிர்நோக்குவது "பெண்" எனும் இயற்கையின் சீதன பரிசு என்று 'பெண்" ஒரு சீதனம் என்கிறார் கவிஞர்

எந்த சீதனுமும், பெண்ணுக்கு இணை ஆகாது என்று வலுவாக பேசுகிறார் கவியரசர். அதாவது பொன், பொருள் எதுவும் பெண்ணைப்போல் அன்பு வார்த்தை பேசுமா அல்லது பெண்ணை மணப்பது போல் அவற்றிற்கு மாலையிட்டு மகிழ்ந்திட முடியுமா என்று பெண் ஒரு உயர் சீதனம் என்கிறார்.கண்ணதாசன்.

செல்வம் இன்று தேடி வரும், நாளை ஓடிவிடும் ஆயின் எந்த செல்வமும் மலர்ந்த அன்புடன் ஒருவனுக்கு உணவு தருமா [பெண் என்ற சீதனம் மிக உயர்ந்தது என உணர்த்தும் இடம்], இவ்வனைத்தையும் கடந்து எந்த செல்வமும் பெண் அளிக்கும் அன்பு அரவணைப்பு இனிமை இவற்றை தராது என்று ஆண் வாயிலாகப்பாட , பெண் அவனின் உயர்ந்த பண்பினால் ஈர்க்கப்படுவதை இப்பாடல் காட்டுகிறது. ஏனெனில் இதே சொற்களை அவள் இம்மியும் மாறாமல் அதே மெட்டு எனும் ராக அமைப்பில் பாடுவது இவ்வனைத்தையும் நமக்கு வலியுறுத்துகிறது.

இசை அமைப்பாளர் செய்தது என்ன?

இசை அமைப்பாளர் பாடலை நன்கு உள்  வாங்காமல் இசை அமைப்பையே துவங்க மாட்டார்கள் . எனவே அதன் வெளிப்பாடாகவே  ஆண் குரல் [pbs ] , பெண் குரல் [சுசீலா] இரண்டையும் ஒரே மெட்டில் பாட வைத்துள்ளார்.

அது ஏன் ?

ஆம் பெண் வேறொருவர் பாடுவதை திரும்பப்பாடுகிறார் எனவே ராக மாற்றத்திற்கு வழி இல்லை மாற்றினால் மன ஈர்ப்பில் கற்றுக்கொண்ட பாடல் என்பது பொய்த்துவிடும். [எவ்வளவு ஆழ்ந்த கவனம் பாடல் உருவாக்கத்தில்?]

எனினும் இருவரின் [ஆண் /பெண் ] ஹம்மிங்கிலும்     வேறுபாடு நிறையவே உள்ளது. ஆண் ஹம்மிங் வேறு வகை அமைப்பிலும் பெண் ஹம்மிங் மற்றொரு அமைப்பிலும் உள்ளன.

பெண் குரலை விட ஆன் குரல் பாடலுக்கு இசைக்கருவிகள், அவற்றின் ஒலி அதிகம் [வெளிப்புறக்காட்சி]

பெண் குரலுக்கு கருவிகள் குறைவு, ஒலியும் குறைவே [உட்புற காட்சி]

ஆண் குரலுக்கு ஹார்ப் ,மாண்டொலின் , குழல், கிட்டார் , மற்றும் போங்கோ கலந்து நெடுகிலும் ஒலிக்க கேட்கலாம் . பெண் குரல் பாடலுக்கு துவக்கம் குழல் பின்னர் வயலின் மண்டலின், குழல் மற்றும் போங்கோ உதவியில் பயணிக்கிறது இவ்வாறு மாறுபட்ட கருவிகள் எனினும், இரண்டும் ஒரே அமைப்பாக தென்படுவது தான் இசை அமைப்பின் சூட்சுமம் .

எனவே பாடல்களை மேம்போக்காக இல்லாமல் ஆழ்ந்து கேட்டு உணர்ந்தால் எண்ணற்ற நுணுக்கங்கள் புலப்படும். கேட்டு ரசியுங்கள்

https://www.youtube.com/watch?v=bH1CV9hgopY PBS

https://www.facebook.com/watch/?v=397230396403772 PS

நன்றி    அன்பன் ராமன்

Monday, April 28, 2025

RENGA VENDAAM -6

 RENGA VENDAAM -6

ரெங்கா வேண்டாம்-6

காலை  9.40 , இப்போது ரெங்கராஜு  வேறொரு  கோலத்தில்,  நீண்ட பாகவதர் கிராப் கழுத்தில் காவி துண்டு, கையில் கிளிக்கூண்டு சகிதம்

அம்மணி என்று குரல் கொடுக்க , மைதிலி வாயில் அருகில் பிரசன்னம் கையில் வாழை இலையுடன். அந்த இலையை திண்ணையில்  இட வந்தாள் . பொறுங்க தாயீ , கோல மாவு கொண்டாங்க [கல்லு மாவு ஆவாது , அரிசிமாவு தான் வேணும்] ;

எங்க வீட்டுல எப்பவுமே அரிசி மாவு தான் என்றாள் மைதிலி.

கோதுமை மாவு .கேசரி பௌடர் , இதெல்லாம் கேக்கபோறானுக என்றான் ரெங்கசாமி. [கடுப்பில் உச்சத்தில் இருந்த ரெங்கராஜு , வேண்டாம் ரெங்கா என்று உரத்த குரலில் சொல்ல , மைதிலி "கொஞ்சம் சும்மா இருங்களேன் " என்றாள் .

இந்த திருடனுக்கு காது ரொம்ப தீர்க்கம் முணுமுணுத்தாகூட  வேண்டாம் ரெங்கா வேண்டாம் ரெங்கா னு ஒரே புலம்பல் . இன்னும் ஒரு வினாடி பார்த்திருந்தால் கூட மைதிலியின் கோபப்பார்வையில் ரெங்க சாமி பஸ்பம் ஆகி இருப்பான் -அவ்வளவு கோபம் மைதிலிக்கு.. பல்லைக்கடித்துக்கொண்டு கோல  மாவு  சட்டியுடன் திண்ணையில் எற , ரெங்கராஜு , தாயீ கோலம் நான் போட்டுக்கறேன் என்று சொல்லிக்கொண்டே  கிளிக்கூண்டை திணையில் வைத்தான். மைதிலி , கோலம் நானே போடறே னே என்றாள் . இல்ல தாயீ இது பகவதி ஆவாஹன கோலம் என்றான் ரெங்கராஜு.. மைதிலி, கோமதி, சந்தானம் அனைவரும் மிரட்சியுடன் பார்க்க , சட்டென்று திண்ணையில் ஏறி தெற்கு வடக்காக நமஸ்கரித்து விட்டு மேல் துண்டால் திண்ணையை சுத்தம் செய்து விட்டு , தம்பி வாங்க என்று சந்தானத்தை அழைத்து, 3 சிட்டிகை கோலமாவை எடுத்து என் கையில் வைய் ங்க என்றான்.

சந்தானம் விழித்தான் ; சாமி சிட்டிகைன்னா , 2 விரல் இடையில எவ்வளவு வருமோ அது தான் அப்படி 3 தடவை வைங்க என்றான் . சந்தானம் அவ்வாறே செய்ய அத்துடன், தேவையான மாவை கையில் எடுத்துக்கொண்டு    உரத்த குரலில்  பகவதி நாமாவளி பாடிக்கொண்டே கோலமிட்டான் ரெங்கராஜு 

சதுர கட்டத்தில் நடுவே மாவிலையுடன்பூரண கும்பம் , வெளியே பக்கத்துக்கு 4 வீதம் மொத்தம் 16 கட்டங்கள் , 12 ராசிகள், 4 எல்லை தெய்வங்கள் வரைந்து விட்டு , எல்லாம் சாமி கும்பிட தயாரா  இருங்க

கோலத்துல சாமி வந்துச்சுன்னா -நம்ம பாக்கியம் என்று சொல்லிக்கொண்டே பகவதி உச்சாடனம் செய்துமுடிவில் ஹு ச்  ஜக்கம்மா என்று கையில் இருந்த மஞ்சள் தூளை ஒரு அரைப்பிடி நடுக்கோலத்தில் வீச

குபீரென்று ஜ்வாலை கிளம்பி 50 வினாடி நர்த்தனம் செய்ய அதில் வீணை மீட்டும் தேவியின் உருவம் , அனைவரும் திகைக்க சந்தானம் கல் போல் இறுகி அசைவற்று நின்றான். அனைவரும் வணங்கி இதென்ன நம்ம வீட்டு திண்ணையில்  பகவதியா என்று பரவசப்பட,              கோமதி அம்மாள்உங்களுக்கு கோடி புண்யம் பகவதி தரிசனம் உங்களால கை  கூடியது”. என்று தழு தழுத்தாள்.

அம்மணி, நம்ம அய்யாவும் இருந்தாங்களேபாக்கலியா? என்றார் ரெங்கராஜு .

நான் பாத்தேன் பகவதி கூட ஒரு மாமா இருந்தார் என்றான் சந்தானம்.

தொடரும்

அன்பன் ராமன்

KING and KING -3

  KING and KING -3                             அரசரும் மன்னரும் -3 இந்த பதிவில் வரும் விளக்கங்களும் பாடல்களும் பெரும் ஆளுமைகளு...