ADAMANCY
அடம் பிடித்தல்
முற்பிறவியில் பாவம் செய்திருந்தால் 25- 28 வயதிற்குள் இந்த தலைப்பு உங்களை பல வகையிலும் பிடித்து உலுக்கி நிலை குலைய செய்திருக்கும். இதனை வாழ்வியல் அனுபவமாக உணர்ந்தவர்கள் இட்ட பெயர் தான் பிராரத்வம். விடைசொல்லியேஆகவேண்டிய வினைப்பயன்/ ஊழ்வினை ] என்ன முயன்றாலும் விட்டு விலக முடியாத துயர் எனில் அது 'அடம் பிடித்தல் ' தான்.
தனி ஒருவனாக தேருக்கு 'வடம் பிடிப்பதை விட கொடூரம்' இந்த அடம் பிடித்தல் கொடூரத்தில் மாட்டுவது தான் .. தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று உண்டென்றால் அது என்னைப்பொறுத்தவரை 'அடம் பிடித்தல்' தான்.
ஏன் எனில் அடம் பிடித்தல் என்பதில்
பல்வேறு அமைப்புகள்/அவதாரங்கள் பரிமாணங்கள் மற்றும் எதிர்கொள்ளவொண்ணா தீவிரங்கள் உண்டு.
மகப்பேறு போல் எப்போது வேண்டுமானாலும் [இரவு, பகல். காலை , மாலை, நண் பகல் நள்ளிரவு, திருமண வீடு , ரயில்/ பஸ் நிலையம், திரை அரங்கு என அனைத்துலக வியாபகம் மற்றும் ஞாபகம் கொண்டது .
திடீரென வெடித்துக்கிளம்பி பெரும்பாலும் "இப்பவே இப்பவே "என்ற ஓலத்துடன் துவங்கும். என்ன எது என்று தெளிவாக சொல்லாமலேயே "இப்பவே இப்பவே " என்று அந்த வட்டாரத்தையே கலக்கும். இந்த களேபரத்தில் அவமானம் கொள்வது இளம் பெற்றோர்கள் தான்.
நையப்புடைத்துவிட கையும் மனமும் துடிக்கும். பொதுவெளியில் 'சார் அடிக்காதீங்க 'என்றுபுதியதாய் முளைத்த திடீர் மைத்துனர்கள் நமக்கு அறிவுரை சொல்லும் அவலம் நேர்ந்துவிடப்போகிறதே என்று சமூக அந்தஸ்துக்கு குந்தகம் விளையாமல் காத்துக்கொள்ள கையை மடக்கிக்கொண்டு காத்திருக்க, இப்பவே இப்பவே இப்பவே இப்பவே " என்று ஏலம் போல கூவிக்கொண்டிருக்க, தகப்பன் பல்லை இருகக்கடித்துக்கொண்டு
"வீட்டுக்கு வா உன்னை என்ன பண்றேன் பாரு "என்று கருவிக்கொண்டிருக்க , தாயார் யாருக்கும் தெரியாமல் அழுத்தமாக அடி வயிறு இடுப்பு சந்திப்பில் 45-70 டிகிரி கோணத்தில் வலுவாக திருக பே பே என்று பையன் அலற ,
“சத்தம் சத்தம் சத்தம் மூச்” என்று முதுகில் சாத்த பையன் விழிக்க இப்பவே இப்பவேனு ராகம் பாடினாயே அதான் இப்பவே சாத்துப்படி என்பார் தாயார். ஆனால் இந்த விசும்பல் சிறிது நேரம் தான். மீண்டும் 'இப்பவே இப்பவே' தொடங்க வெகு நேரம் ஆகாது.
அடம் பிடித்தல் என்பது சும்மா சாதாரண வேலையா ? ஒன்றரைஅடி — 2அடி உயர உருவம் ஊரைக்கூட்டுவது எவ்வளவு திட்டமிடல் நிறைந்தது தெரியுமா? இதில் ஒரு வினோதம் , பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளை விட 'அடம் பிடிப்பது' சற்று குறைவு. ஆனால் வேறுவைகையான அழிச்சாட்டியம் செய்வதில் தேர்ந்தவர்கள் .
திட்டமிடல் நிறைந்தது என்று எதைக்குறிப்பிடுகிறேன் என்றால் , எப்போது வேலையை ஆரம்பிப்பது [இப்பவே இப்பவே ஓலம் ] என்று துல்யமாக அறிவர். எப்போது துவங்கினால் எளிதில் கைகூடும் என்று முக்கிய விருந்தினர் முன்னிலையில் முயற்சி துவங்கும்.
விருந்தினர் நமக்கு உற்றவர் எனில் அவரே [அவர்களே] குறுக்கிட்டு அப்புறமா வாங்கித்தருவார் என்று இப்பவே இப்பவே தீயை அப்போதே அணைத்துவிடுவார்கள் . வேறுவகை புதிய திருமண வழி உறவு எனில், தகப்பன்-- வா வாங்கித்தருகிறேன் என்று பையனை வெராண்டா பகுதிக்கு அழைத்து சென்று நடுமண்டையில் 'நறுக் 'என்று இறுகமூடிய விரல்களால் "ணங் ணங்" என்று குட்டி , பையனுக்கு கண்கள் குளமாகும்; ஏதாவது வாயை திறந்தால் 'தெரியும் சேதி' என்று பொது எச்சரிக்கை கொடுத்து தெருவில் போய் விளையாடு என்று பையனுக்கு வேண்டாத நேரத்தில் துரத்தி விடுவர்.
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment